'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Apr 18, 2021

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

 15. பைந்தமிழ்ச் சுடர்  சோமு சக்தி


பிறப்பு: முகவை (இராமநாதபுரம்) மாவட்டம்

இருப்பிடம்: சென்னை.

பொருளியியல் படித்தவர்.

மொழிபெயர்ப்புப் பணியாற்றுகிறார்.

புதுக்கவிதை தொட்டு, மரபில் புகுந்தவர்.

பைந்தமிழ்ச்சுடர் பட்டம் பெற்றுள்ளார்.


கவிஞர் அழைப்பு


புத்தம் புதிய புதுமைகள் படைக்கும் 

சத்த மற்ற தண்டமிழ்க் கவிஞர்

எதற்கும் துணிந்த இன்றமிழ்க் கவிஞரை

இதமாய்க் கவிபாட இனிதாய் அழைக்கிறேன்


பைந்தமிழ்ச் சுடர் சோமுசக்தி ஐயா வருக 

சொக்கும் கவிதை தருக 


தமிழ் வாழ்த்து


கதவைத் திறந்துவைத்துக் கண்டதைச் சொல்ல

முதலாய்த் தமிழே முயல்வேன் -  மதலைக்

கவிநானும் பாடக் கனிந்தருள்க தாயே

புவிசிறக்க வெந்நாப் புகுந்து !


அவை வாழ்த்து


பாவல ராசானாம் பாரில் வரதரொடு

நாவலர் நிர்மலா நற்றலைமை - பாவளர்ச்

சோலைக் கவியரங்கிற் றோன்று மவையோர்க்குக்

காலை வணக்கமிட்டேன் காண் !


கதவைத்திறந்துவை


கதவைத் திறந்தாற் காற்றும் வரலாம்

அதகளப் புயலும் அதிலே நுழையலாம்

திறக்கும் முன்னே திசைகளிற் பார்த்தால்

திறமாய் நிலையைத் தெரிந்துகை யாளலாம்

எதற்கும் மனத்தி லிருக்கும் கருத்தை

இதமாய்ச் சொல்வேன் ஏற்றா லேற்பீர்!

கதவைத் திறந்ததும் கண்டதைச் சொல்வேன்

உதவ வருவதாய் உரைக்கும் கூட்டம்

களப்பிர ராண்ட காலந் திரும்பவோ !

வளத்தைச் சுரண்டவோ வருகிறார் விழிப்பாய்!   10


வெற்றிட மிதுவா! வேறிட மில்லையா ?

சுற்றியே வருகிறார் சூழ்ச்சிக் கேடே

வந்தாரை வாழ வைத்தாய்!  பெருமையே !

நொந்துநீ வீழவா? நொடித்துப்  போகவா?

மாற்றான் முதல்வனாம் மாரைத் தட்டுவான்

தோற்கடி யவனைச் சூளுரை யேற்றே

தவறினைச் சுட்டித் தலைமை ஏற்பாய்

எவரு முன்னை யெடுத்தாள விடம்கொடாய் !

நல்லனாய் நடிப்பவன் நல்லனு மல்லன்

வல்லனாய் நடிப்பவன் வல்லனு மல்லன்             20


மண்ணின் மொழிக்கு மதிப்பிடம் இல்லை

கண்ணாய் நினைப்போன் கவலை கொளவிலை

உரிமைக் குரல்தர ஒருவனு மிலையேல்

நரியினுங் கேடர் நாட்டுவர் தொல்லை

இன்னும் பேசா திருந்தாற் பயனிலை

முன்னே யெண்ண முடிந்தாற் சிறப்பே

தமிழாற் பிழைப்போர் தரணியில் பலருளர்

தமிழர் பகையே தலைவராய் ஆவதோ

பொறுப்புக் கொண்டாற் புரிந்திதை மாற்றலாம்

அறுத்துக் கொண்டா லாற்றுவோர் யாரோ?           30


காலமும்  இடமுங் கருதியே கூறுவேன்

ஞாலத் தவையீர் நன்றி உமக்கே!


வாழ்த்து


அறத்தைப் பேசும் அறிஞர்கள் 

அகத்தில்  நல்லோர் இல்லையென்றார்

திறமாய் நிலையை உணர்ந்துவிட்டால்  

தீர்வும்  கிடைக்கப்  பாரோங்கும்  

குறைகள் யாவும் தீர்ப்பதென்றால்

குணத்தில் சிறந்த தலைமைவேண்டும் 

சிறப்பாய் மிடுக்காய்க் கவிதந்தார் 

சிந்தை மகிழ வாழ்த்துவமே  

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

16.  பைந்தமிழ்ச் சுடர் விசு. இம்மானுவேல், பெங்களூரு


கவிஞர் அழைப்பு

பண்பு நிறைந்த கவிஞரிவர்

    பாக்கள் நாளும் பலதருவார்

எண்ணம் சிந்தும் கருத்துதனை

    எழிலாய்க் கோத்துக் கவிபுனைவார்

கன்னல் மொழியில் கவிபாடக்

    கனிவாய் இங்கே அழைக்கின்றேன்

மன்றம் மகிழும் உம்வரவில்

    மகிழ்வாய் வந்து கூறுங்கள்


இம்மானுவேல் ஐயா வருக!  

இன்றமிழ்த் தேன்தருக!


தமிழ் வணக்கம்

செந்நாப் புலவோர் செழுமிய நாவினில் 

எந்நாளும் குந்திய என்றமிழே – முந்தியென் 

நாவிலுங் கோலோச்சு நன்றாய்ப் பணிகின்றேன் 

ஆவிக்குள் உன்னை அருள் 


தலைவர், அவை வணக்கம்

சோலைக் கவிகளின் சொந்த நடுவரே 

காலைக் குயிலாம் கவிஞரே – மாலை 

தொடுத்தேன் கவிதையில் தோன்றி வணங்கக் 

கொடுத்தேன் குரலினில் கோத்து


கதவைத் திறந்து வை


வழியடைக்கிற பெருந்தடைகளும் வலுவிழந்தினி போகும் 

குழிபறிக்கிற குறுமதியினர் குழப்பியதெலாஞ் சாகும் 

மொழிநலத்தினை விழியெனவுரை முழுநலமதுஞ் சேரும் 

அழிவுறுநிலை யகலவுநிதம் அறிவினிலது சாரும்  (1)


பரவியபிணி இருளினில்நமை படுத்தியதெலாம் போதும் 

வரவினியெது வழிநெடுகவே வருந்திகிலது மீதம் 

தரவுகளெலாம் தனிமனிதனின் தலைசுழற்றவே செய்யும் 

தரணியிலிழி நிலையகற்றிடத் தலைமுறைகளும் உய்யும் (2)


அறையெனுஞ்சிறை யடைபடும்நிலை அலையுறவுடன் நின்றோம்

குறைபலவதன் குவியுணர்வினைக் குளிர்கவிதையால் வென்றோம் 

நிறைவுகளது நிலவிடும்வரை நிகழ்கலைகளு மில்லை 

உறைநிலைகளும் அகன்றிடவரும் உணர்ந்தெழுவதன் எல்லை (3)


மனஞ்சுருங்கினால் விழிபெருகினால் மலர்வனமெங்கே ஈர்க்கும் 

கனவழிவதால் களம்மறுப்பதால் கனலுறைக்குமே யார்க்கும் 

தினந்திருவிழா வெறும்வெளியிலா திகைப்புறுவது நெஞ்சம் 

சினமொதுக்கிய சிலநகைப்புகள் சிதைவறுக்குமே கொஞ்சம் (4)


படிப்பறிவினை நடந்தொருவிடம் பயனுறுவதும் மாறி 

இடித்திழுத்ததே புதிர்க்கிருமிகள் இருப்பிடமதி லேறி 

வடித்தொழித்ததோ வதைத்தழித்ததோ வரைமுறைகளைத் தேய்த்துக்

குடிநிலையினை நெறிமுறையினைக் குதறியேநிலஞ் சாய்த்து (5)


இருள்மடியினில் பலதொழில்களை இழுத்திறக்கிய காலம் 

பொருள்வழிகளின் கதவடைத்ததே பொதுவினிலொரு கோலம் 

மருள்நிலையினில் சிரிப்பொலிகளும் மறைந்திருந்தது தூரம் 

தெருவளைவுகள் வெறுமையில்விழத் தினக்கொடுமைகள் கோரம் (6)


நிலமுழுபவர் தலைமுறையினை நிலைநிறுத்தவே வேண்டும் 

வலம்வருகவே சமத்துவநிலை வழிதிறக்கவே யாண்டும் 

பலவதிர்வுகள் பலியிடும்நிலை பனியகல்வதைப் போன்றே 

நலமுரைத்தினி துயில்முறிக்குமோ நதிப்புனலென நன்றே (7)


புதுவருடமே மலரெடுத்துவா புகழ்க்கவிதையைத் தீட்டு 

பொதுக்கதவினைத் திறந்திருக்கிறோம் பொலிவதனையே காட்டு 

மதுமயக்கமும் மதிக்கலக்கமும் மனந்துறந்தெழச் செய்வாய் 

இதுவரையினில் களைப்பருளிய இழிநிலைகளைக் கொய்வாய் (8)


நன்றி நவிலல்


எளியோ னெனக்கு மிடமளித்த சோலை 

களிப்பில் திளைக்கிறேன் காண்பீர் – வளிவழி 

நெஞ்சனுப்பி நன்றியால் நேர்கிறேன் மாசிருப்பின் 

கொஞ்சம் பொறுப்பீரே கொண்டு 


வாழ்த்து


வழியடைக்கும்  பெருந்தடைகள் விலகிச் சென்றால்  

    வாழ்வினிலே  பிணியெல்லாம் நீங்கு மென்றார்  

குழிபறிக்கும்  குறுமதியர் செய்த தெல்லாம்

    குழிதோண்டிப் புதைக்கவேண்டு மென்றும்  சொன்னார்

விழிகாணும் குறையெல்லாம் நீங்கிச் சென்றால் 

    விடியல்கள் யாவருக்கும் பிறக்கு மென்றார் 

முழக்கமிட்டுக் கூறியவை  உண்மை தானே 

    முகமலர வாழ்த்துகளைச் சொல்லு வோமே 

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

17.   கவிஞர் சொ.சாந்தி


கவிஞர் அழைப்பு


அன்பில் பண்பு கலந்திருக்கும்

    அறிவில் உயர்வு நிறைந்திருக்கும்

என்றும் முகத்தில் சிரிப்பிருக்கும்

    எதிலும் ஏற்றம் கலந்திருக்கும்

கன்னித் தமிழால் பாட்டியற்றக்

    களிப்பாய் வந்து சேர்ந்தவராம்

இன்பத் தமிழால் அழைக்கின்றேன்

   இனிதே வந்து கவிதருக


கவிஞர் சொ.சாந்தி வருக வருக


கதவைத் திறந்து வை


சுற்றிலு மாயிரம் கதவுக ளிருக்கச்

    சூழ்நிலைக் கைதிகள் நாம்

வெற்றிக் கதவுகள் மூடுகின் றாரே

    வேதனை கூட்டலில் தான்! 1


தட்டத் திறக்கும் கதவில் எல்லாம்

    தாளினை இடுகின்றார் - பலர்

முட்டி மோதிய போராட்டத்தில்

    உயிரினை விடுகின்றார்..! 2


காத்துக் கிடப்பின் கனியும் வீழும்

    நம்பிக் கிடக்கின்றோம்

பூத்து வெடிக்கும் இலவம் கண்டு

    பொத்தெனச் சாய்கின்றோம். ! 3


கல்விக் கதவில் திண்டுக்கல்பூட்டு

    உடைத்திட வாருங்கள்

கல்லணை போடும் கல்விக் குருடனைக்

    கல்லால் அடியுங்கள்..! 4


பச்சை வயலுடன் பக்கக் குழாய்கள்

    பாதகம் தொடர்ந்திடுமோ..?

இச்சைகொண்ட இனிய தொழிலுக்கு

    எண்ணெய்க் கதவுகளோ..? 5


வயலில் பதியும் அயலான் பாதம்

    அறுபட வேண்டாமோ..?

ஆதிக்கக் கதவை அடித்து நொறுக்க

    அறுவடை பிழைக்காதோ..? 6


வேற்று மொழியெனும் இரும்புக் கதவால்

    தமிழும் சிறைப்படுமோ.,?

மாற்று நிலையினை இரும்பினைத் தகர்த்துத்- தமிழ்

    இரிடியம் உடைபடுமோ.? 7


எத்தனை காலம் இத்தனை கொடுமை

    என்றிது விடிந்திடுமோ..?

எத்தர்கள் அழிக்க எழுச்சிகள் வேண்டும்

    இன்றேல் மடிந்திடுவோம். ! 8


கதவைத் திறவாய் என்றே கெஞ்சிட

    சன்னலும் திறக்காது

கையில் எடுப்பாய் கன்னக் கோலாம்

    தைரியம் இழக்காது..! 9


மூடிய கதவுகள் யாவு முடைத்திட

    முயல்வோம் துணிவோடு

விடியல் பெருக்கி வெற்றிகள் எட்ட - வரும்

    வெளிச்சங்கள் நம்மோடு. ! 10


வாழ்த்து


எத்தனை காலம் இத்தனை கொடுமை

    என்றிது விடியுமென்றார்

எத்தரை  அழிக்க எழுச்சிகள் வேண்டும்

    இன்றேல் மடியுமென்றார்

புத்துயிர் பெற்றுப் புதுமைகள் தோன்றப்

    புவியினி ஒளிர்ந்திடுமே

முத்தெனப் பாக்கள் மிளிர்ந்தன இங்கே

    முந்தியே  வாழ்த்துவமே  

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

18. பைந்தமிழ்ச் சுடர் வே.அரவிந்தன்


முதுகலை இயற்பியல் துறை மாணவன்

வசிப்பிடம் : கருமலை (கிருட்டிணகிரி மாவட்டம்)


கவிஞர் அழைப்பு


நற்றமிழ்ப் பாக்கள் நன்றென வடிக்கும் 

    நற்றமிழ்க் கவிஞரிவர் 

பற்பலர் போற்றப் பணிவுடன் நடக்கும் 

    பைந்தமிழ்ச் செல்வரிவர் 

சொற்சுவை சேரக் கவிதைகள் இயற்றிச் 

    சுடரென ஒளிருபவர் 

அற்புதம் நிறைந்த கவியினைத் தரவே 

    அரங்கினுள் அழைக்கின்றேன் 


பைந்தமிழ்ச் சுடர் அரவிந்தன் வருக வருக


தமிழ் வணக்கம்

தித்திக்கும் தீம்பாகே! தீதில்லா மாத்தேனே!

புத்திக்குள் நின்றாளும் பொய்க்காநல் முத்தன்ன

சித்தத் தெளிவே! செழுமைமிகு தாயே!

வித்தைக்குள் செய்வாய் விருந்து.


தலைமை மற்றும் அவை வணக்கம்

பைந்தமிழ்ச் செம்மலம்மை பாதம் பணிந்துநல்

பூந்தமிழால் செய்யுமோர் பொன்வணக்கம் மேவுமவைச்

சான்றோரை ஏற்றியுடன் சாற்றும் வணக்கமாம்

யான்செய் வரியால் அழைத்து.


கதவைத் திறந்து வை

ஓரோட்டை ஓட்டவுடன் ஒன்பதோட்டைப் பிண்டம்

    ஓவென்ற ழுதுருளுமாம் உளதாகக் காட்டப்

பாரோடு சேர்க்கும்நல் பாட்டொன்றைக் கூவிப்

    பாழ்மனமும் அறிந்தேங்கும் பாலுண்டும் ஓயும்

தேரோடு வாழ்வெனினும் திறந்தவாயை மூடச்

    செய்பூட்டும் ஒன்றில்லை செய்வருமிங் கில்லை

காரோடு நீரொப்பக் கரைந்தொழுகிக் கொட்டிக்

    கடல்சேர்ந்தும் சாகும்பின் கடைவான்பு கும்மே..


ஓட்டையிதை அடைக்கத்தான் ஓலைகளும் செய்தார்

    உருவெடுத்தார் செய்தாரோ உத்தமமாய்க் காத்தார்

மூட்டையிதைப் பெருக்கத்தான் மூட்டைகளைச் சேர்த்தார்

    மூளைக்குள் கிடத்துங்கால் முணுமுணுத்து ரித்தார்

காட்டையடைக் காலத்தைக் கணக்கினிலே வைத்தார்

    காலத்தைச் சுட்டியிங்குக் களித்துப்பேர் வைத்தார்

நாட்டிலின்னும் திறக்கவேண்டும் நாளைநாளை இன்னும்

    நலம்வாழ மருந்தோடு நற்கதவுந் தானே...


நாளுக்கோர் உறவாகி நலம்தேடிச் சேரும்

    நல்லுலகில் புதிதொன்றாய் நாடியிங்கே கூடும்.

தாளுமேது வென்றறியாத் தாகக்கூட் டத்தில்

    தகிக்கும்நோய் கூடிவந்து தாம்பங்கு கேட்கும்

தேளுமாகி விடமூட்டும் தேகமொன்றும் பெற்றுத்

    தேடியோடி அமிழ்தில்லை தேசத்தே இன்று

மூளுமித்தி ரைநீக்க முழுமுதலி றையே

    மூடியவிக் கதவையுந்தன் முன்திறப்பா யாமே


நன்றி நவிலல்


செவிமடுத்த சான்றோர்க்குச் செப்பி நகர்ந்தேன்

கவிகேட்டீர் எந்நன்றி காண்.


வாழ்த்து


மனத்தினிலே உள்ளவற்றை அவையின் முன்னால் 

    மளமளென வீறுகொண்டு பொழிந்து விட்டார் 

சினந்தவழ நல்மருந்து மில்லை யென்றார் 

    திரைமறைவில் நடக்கின்ற கூத்தும் சொன்னார் 

வினைத்தூய்மை பெற்றுவிட்டால் நடக்கும் நன்மை 

    விருப்பங்கள் நிறைவேற மனிதம் வாழும்

மனிதங்கள் தூய்மையாக மொழிந்தார் பாக்கள் 

    மகிழ்வுறவே நாமெல்லாம் வாழ்த்து வோமே 

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

கவியரங்க நிறைவு கவிதை

பைந்தமிழ்ச் செம்மல்  நிர்மலா சிவராசசிங்கம்


கதவைத் திறந்துவை


தித்திக்கும் பலகவிகள் கவிஞர் பாடத்  

    தீந்தமிழாள் மகிழ்வுற்று மயங்கி விட்டாள்

அத்தனையும் கண்ணுற்ற ஆசான் உள்ளம் 

    அகமலர்ந்து சொற்களின்றித் தவிப்பில் நின்றார்  

சத்தமிட்டுக் குரலெழுப்பித் தவிப்பைக் கூறச்  

    சான்றோரும் பதைபதைத்து  மௌனித் தாரே

புத்தெழுச்சி தழுவிவந்த பாக்க ளெல்லாம்

    பொன்னாக ஒளிர்ந்துநிற்க மகிழ்வுற் றேனே

     

மனக்கதவைத்  திறப்பதில்லை பலரு மிங்கே 

    மனந்திறந்து சொன்னாலும் கேட்பா ரில்லை 

தினந்தோறும் அதிகரிக்கும் சிக்க லெல்லாம் 

    தீர்ப்பதற்கு வழிகளின்றி அடங்கிப் போகும் 

தனியுரிமை ஆங்காங்குப் பறிக்கும் போது 

    தவிப்புதனில் வாடுவோர்கள் பலரு மிங்கே 

இனியெதற்கு வாழவேண்டு மென்றே மாழ்கி

    ஏக்கத்தில் மடிவோரும் உலகில் உண்டு


இல்லறத்தில் காண்கின்ற குறைக ளெல்லாம் 

   இல்லாளின்  மனக்குறைகள் கேட்கத் தீரும்  

கொல்கின்ற ஐயத்தை வளர்த்தால் துன்பம் 

   குதூகலமும் மறைந்தோடும் வாழ்வில் என்றும் 

நல்லறங்கள் செய்வதற்குச்  செல்வம் வேண்டா 

   நலங்காக்க உதவுகின்ற பண்பு காணும் 

இல்லையென்(று) ஒருபோதும் எண்ண வேண்டா 

   இருப்பதினில் நிறைவுதனைக் கண்டால் போதும்


ஏற்றமுறச்  செயல்யாவும் செய்து விட்டால் 

    இழப்புகளைத் தவிர்த்திடலாம் உலகி லெங்கும் 

போற்றுகின்ற மனத்திடத்தை வளர்த்து விட்டால்

    புதுமைகள் படைப்பவர்கள் பெருகு வாரே

வேற்றுமைகள் மனிதரிடம் காட்ட வேண்டா

    வீண்வம்பு செய்தவரை வீழ்த்த வேண்டா 

மாற்றங்கள் காண்பதற்குத்  துணிந்து நின்றால் 

    மனப்புழுக்கம் என்றெல்லாம் உலகில் உண்டோ


நன்றி


நல்வாய்ப்பை  எனக்களித்த ஆசான் போற்றி 

    நன்றிதனைக்  கூறுகின்றேன் இங்கே நானும் 

சில்லென்ற  தென்றல்போல் தழுவும் பாக்கள்  

    சிந்தைதனை மெல்லென்று தழுவி நிற்கும்        

சொல்லுகிறேன் மனமுவந்து நன்றி தன்னைச்

    சொற்சுவையில் கவிபாடிச் சென்ற தற்கு 

நல்வாழ்த்தை அனைவருக்கும் மகிழ்வாய்த் தந்தேன் 

    நலத்தோடு நெடுங்காலம் வாழ்க வாழ்க!