'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8


கவிஞர் இரா.அழகர்சாமி

·         வயது: 62
·         கல்வி: 8-ம் வகுப்பு தாண்டாத பள்ளிப்படிப்பு.
·         பிறந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டத்திலுள்ள சித்தவநாயக்கன்பட்டி கிராமம்
·         வாழும் ஊர்: 50 ஆண்டுகளாகச் சென்னை பள்ளிக்கரணை.
·         விருப்பம்: தமிழ், கதை, கவிதை, ஓவியம், வாசிப்பு






கவிஞரை வரவேற்றல்

அற்றமிலா நல்வாழ்வை அகிலம் காண 
... அழகாகச் செந்தமிழில் சந்தத் தோடு
 
சொற்சுவையும் பொருட்சுவையும் சேர்ந்தி னிக்கச்
 
... சுடர்வீச மணம்வீச அனுப வத்தில்
 
நற்றவத்துத் தோய்ந்தரிய கருத்தெ டுத்து
 
... நயக்கவிதை நாட்டுகின்ற அழகர் சாமி
 
பல்சுவைஞர் பண்பினிலே ஓங்கி நிற்கும்
 
... பாவண்ணப் பாணரிவர் வாழ்க வாழ்க!



தமிழ்த்தாய் வாழ்த்து

ஆதிநாள் தொட்டே வாழும்
... அருந்தமிழ் மொழியே உன்னை
ஓதினோர் தாழ்ந்த தில்லை
... உயர்வுடன் வாழ்வார் மண்ணில்
நீதியின் தட்டில் உன்னை
... நிகர்த்தவோர் மொழியும் இல்லை
மேதகு மொழியாம் உன்றன்
... மேன்மையை வணங்கு கின்றேன்!



அவை வணக்கம்

நாடுகள் கடந்தேகும் நாவாய்கள் மத்தியிலே
ஓடுமென நம்பித்தான் ஓடமொன்று கட்டிவந்தேன்
ஆடுகின்ற அலைநடுவே ஆடாமல் ஓடுதற்குக்
கூடுமென அவையோரைக் கும்பிட்டே இறங்குகின்றேன்.

இப்படித்தான் விடியும் (எண்சீர்ச் சந்த விருத்தம்)

காலையிலே நாளிதழைக் கண்டாலே போதும்
... கலவரங்க ளடிதடிகள் கண்முண்ணே விடியும்
சாலையிலே சென்றிடவும் சங்கடமே கூடும்
... சாலையதன் விதிமறந்து சாகசமும் புரிவார்
மூளையிலா மாந்தர்களை முறைவைத்தே விதியும்
... முதுமைக்காய்க் காத்தலின்றி முடிவையுடன் காட்டும்
ஏலாதே இதைத்திருத்த என்றேதான் நாமும்
... இருந்தாலே எந்நாளும் இதுபோல்தான் விடியும்!

பருகிடவும் நீரின்றிப் பரிதவித்த மக்கள்
... பகலெல்லாம் குடமேந்திப் பாதையிலே நிற்பர்
பெருகித்தான் ஓடுதடா பேய்மதுவாம் ஆறும்
... பெண்டுகளின் தாலிகளை அறுக்கவந்த கூற்றாய்
வரித்தொகையை வாயிலிட்டு வாழ்கின்ற கூட்டம்
... வரும்தேர்தல் காட்டுமடா வக்கற்றோர் ஆட்டம்
உரிமைகளைக் கேட்காமல் ஒளிந்தாலே நாமும்
... உள்ளபடி எந்நாளும் உருப்படாது விடியும்!
நாட்டுக்குள் நாசங்கள் நமக்கில்லை என்றே
... நாம்கண்கள் மூடுவதால் நடவாமல் போமா
வீட்டுக்குள் வந்தால்தான் வினையாகும் என்றே
... வீட்டையு(ம்)நாம் தாளிட்டால் விலகித்தான் போமா
காட்டுக்குள் விலங்காக வாழ்ந்தாலும் நன்றே
... கவலைகளே இல்லாமல் காலங்கள் நகரும்
கூட்டுக்குள் புழுவெனவே வாழ்கின்ற எண்ணம்
... கொண்டாலே நாளெல்லாம் கொடுமையுடன் விடியும்!

பெட்டிகளைப் பறிமாறிப் பெரும்பதவி காண்போர்
... பொறுப்புடனே ஆட்சிதனைப் புரிவாரோ சொல்வீர்
சட்டமதைச் சாதகமாய்ச் சரிக்கட்டும் பேர்கள்
... சமுதாயம் வாழ்வோங்கச் சாதகமா செய்வார்
வட்டமிடும் கழுகெனவே வாய்ப்புகளைத் தேடும்
... வல்லூருக் கெந்நாளும் வாய்க்கிரைதான் நாமும்
கெட்டவர்கள் கூடிநின்று கோலோச்சும் போழ்தில்
... கொடுமைகளைச் சுமந்துவரும் கோலமதே விடியும்

நல்லவனைத் தேர்ந்தெடுத்து நாமாளச் செய்வோம்
... நம்தலைவன் இவனென்றே நாட்டுக்குச் சொல்வோம்
புல்லர்களை இனிமேலும் விட்டுவைக்க வேண்டா
... புழுப்போல நசுக்கியே பொய்த்திரையைக் கிழிப்போம்
அல்லவைககள் கூடுவதால் நல்லவைகள் விலகும்
... அவனியிலே குழப்பங்கள் அதனாலே விளையும்
சொல்லுவதைச் சொல்லிவிட்டேன் சோதரரே கேளும்
... சொந்தமூளை தனைவிட்டால் இப்படியே விடியும்!
வாழ்த்து

நாட்டின் நன்னிலை நற்றவக் கொற்றவன் 
நாட்டும் கொடியினில்; நாடுக நல்வழி
 
வாட்டம் களைபவன்; மீட்பவன் தனையென
 
ஊட்டம் தருபவர் வாழிய வாழிய!
 

சோலைக் கவியரங்கம் - 8


. பைந்தமிழ்ப் பாமணி சாமி.சுரேஷ்
• புனைபெயர் - ஆதி கவி
• படிப்பு - முதுகலை வரலாறு
• பணி - நடுவணரசு துறை, பாதுகாப்புப் பிரிவு
• பட்டம் - பைந்தமிழ்ப் பாமணி (பைந்தமிழ்ச் சோலை),
கவியருவி ( தடாகம் கலை இலக்கிய வட்டம், இலங்கை)

*** *** *** ***
கவிஞரை வரவேற்றல்

நீதியொளிர் செங்கோலைக் கையில் தாங்கி 
... நெறிசொல்லி ஆள்கின்ற மன்ன னாக
 
மேதினியை மேன்மைமிகப் படைக்க வேண்டி
 
... வெல்கின்ற ஆற்றலொடு வெல்லம் போன்ற
 
சேதிசொல்லிச் செம்மையாக்க எழுது கோலைத்
 
... தன்கையில் தாங்கியவர் நயமாய்ப் பாடும்
 
ஆதிகவி சாமிசுரே(சு) ஐயா வாழ்க!
 
... அவையதிரும் கவிசொல்லும் அனலே வாழ்க!

சாமிசுரேசு ஐயா வருக
சந்தமிகு கவியின்பம் தருக



தமிழ் வாழ்த்து

இறவாப் புகழுடை எண்ணிலாநன் மாந்தர்
மறவாமல் வந்துதித்த மண்ணில் - நறவென்று
தோன்றிய நற்றமிழின் சொல்லொன்றே சொல்லாகும்
வான்பகையும் வெல்லும் மருந்து.

அவை வாழ்த்து

கரியென்று வந்தாரை வைர மாக்கி
... கல்லென்பார் தன்னையும் சிற்ப மாக்கி
சிரிக்கின்ற பைந்தமிழின் சோலை யன்ன
... சீருள்ள மன்றங்கள் வேறு வுண்டோ
வரிப்புலிகள் மான்களொடு அன்ன புள்ளும்
... வண்டினங்கள் வந்திலங்கும் அழகு சோலை
எரிவிளக்காய் எங்களுக்குத் திசையைக் காட்டும்
... இன்பொழியும் நற்சோலை வாழி வாழி.

தலைமை வாழ்த்து

ஆழ்ந்தறிந்த நல்லறிவால் ஆடா திருக்கின்றார்
வாழ்கின்ற எங்கள் மணி.




அவையடக்கம்

வன்றிறத்து நற்சான்றோர் வாழ்கின்ற இவ்விடத்
தென்துணிவில் வந்தேனோ என்றறியேன் - தன்முனைப்பால்
புன்கவியை என்கவியாய் பூணணிந்து தந்தாலும்
நன்மனத்தார் ஏற்பாரே என்று.

இப்படித்தான் விடியும்

வாயெல்லாந் தமிழென்று பேசி விட்டு
... வளர்க்கின்றார் தம்மொழியை வீட்டி னுள்ளே
சாயாத கோலன்னர் யாமே வென்று
... தாவுகிறார் அங்கிங்கு மந்தி யன்ன
தாயென்றே பிறர்பெண்ணைச் சொல்லி விட்டுத்
... தனியறையில் தணிக்கின்றார் கூட லிட்டுக்
காயென்றும் கனியென்றும் அறிவு கெட்டுக்
... களிக்கின்ற பேர்க்குண்டோ விடுத லையே.

மூவாத தமிழ்மருந்தைக் கொட்டி விட்டு
... மூடரன்ன பிறனஞ்சைப் பிச்சை கேட்டுச்
சாவாத மருந்தென்று சொல்லி விற்கும்
... சழக்கர்கள் பக்கத்தில் நின்று கொண்டு
தேவாதி தேவரெல்லாம் தமிழத் தாயைச்
... சேவாதி செய்வார்கள் என்று சொல்லும்
நாவாயை இழுக்கின்ற அடிமை யாளர்
... நல்லகதி பெறுவதுண்டோ மாநி லத்தில்?
இல்லாத திராவிடத்தை இன்னும் நம்பி
... இருக்கின்ற தமிழ்நிலத்தை அழியச் செய்யும்
பொல்லாத பேர்கள்தாம் பொங்கி வந்து
... பொன்செய்வோம் தமிழ்நிலத்தை என்று சொல்லிக்
கல்லாத எளியோரைக் கவிழ்த்து விட்டுக்
... கரையின்றிக் கொல்கின்றார் நீருங் கூட
அல்லாவும் இயேசுவுடன் கண்ண ரெல்லாம்
... அணிசேர்ந்தும் விடிவில்லை தமிழர்க் கையோ!

உள்ளொன்று புறமொன்று பிரிந்து வாழும்
... ஊனர்கள் ஆனார்கள் தமிழர் கட்சி
நள்ளிரவில் திருடுவதா? கூடா தென்றே
... நண்பகலும் நடுவீட்டில் கன்னம் வைத்தார்
வெள்ளந்தித் தமிழர்களும் விடியும் என்று
... வெகுவிருந்து வைத்தோய்ந்தார் அளிய ரன்னார்
கள்வர்கள் கையிடத்து நாட்டைத் தந்து
... கவலுகின்ற பேர்க்கென்ன புதிய காலை?

இன்னாத பலவற்றை எழுதி யென்ன
... இனிக்கின்ற பலவற்றைப் பாடி யென்ன
நன்னாத பேர்களுக்கா நாடி வந்து
... நயக்கின்ற பொன்விடியல் வந்து சேரும்?
தன்மான உணர்ச்சியினை விற்ற வர்க்குச்
... சன்மானம் தொழும்பரன்றி வேறே யென்ன
நன்மாட எரிவிளக்கும் நிழலே சிந்தும்
... ஞாலத்தில் இருளேதான் விடிய லாமே.
வாழ்த்து

செவியறி வுறவே செறிந்த கருத்தைச் 
சுவைமிக உரைத்த சாமி சுரேசு!
செவிக்குண வில்லாப் பொழுதா? காண்பீர்
 
அவைமகிழ் இன்பம் அறிந்தேன் வாழி!
 


சோலைக் கவியரங்கம் - 8


கவிஞர் செல்லையா வாமதேவன்
• பிறப்பிடம் இலங்கை மட்டக்களப்பிலே பெரியகல்லாறு.
• உளநல மருத்துவராக மட்/போதனா வைத்தியசாலையிலே பணிபுரிகின்றார்.
• பதினேழு வயதிற் பாடசாலை மாணவனாயிருக்கும் போதிருந்து கவிதைகள் எழுதிவருகின்றார்.
• ஓசைநயத்தோடு ஆரம்பத்திலிருந்தே எழுதினாலும் கடந்த ஒருவருடமாக யாப்பிலக்கணப் பயிற்சி பெற்றுப் பிழையற மரபு கவிதைகள் எழுதுவதில் பெருவிருப்பம் கொண்டு முனைந்து வருகின்றார்.

*** *** *** ***

கவிஞரை வரவேற்றல்

அருந்தமிழ் ஆவல் தன்னைக் கடத்த 
... அருந்துயர் கடத்தல் எளிதாம் என்ப!
 
விருந்தெனத் தமிழைப் படைக்கும் திறமை
 
... விரும்பிய ஓசை பேசும் வளமை
 
கருத்துகள் பொதுமை புதுமை பொலியக்
 
... கனியெனத் தருவார் கருத்தில் கொள்வோம்
 
மருத்துவர் ஐயா வருக! மணியாய்
 
... வளங்கொழி இன்பக் கவிதை தருக!

ஆதியிற் சிவனார் அருளிய அமுதே
... அந்தமில் செந்தமிழ்த் தாயே!
நீதியின் மொழியே! நிறைமதி யழகே!
... நித்தமுன் தாள்பணி வேனே
மேதினி சிறக்க மேவிடும் அரங்க
... மேதகு தலைவரே வாழ்க!
சேதியை உரைக்கச் செவிவழி நிறைக்கச்
... சேர்ந்தநல் லுறவுகள் வாழ்க!

எப்படி விடியும் என்பதே வேண்டா
... இப்படித் தானது விடியும்
செப்படி வித்தை செய்துமே செல்வம்
... சேர்த்தவர் நாணவே விடியும்
தப்பதே வாழ்வாய்த் தரணியில் வாழ்வார்
... தவநெறி காணவே விடியும்
அப்படி அறமும் அறிவுடன் பணிவும்
... அகனிறை பரிவுடன் விடியும்

பணமது வொன்றே பலமெனக் கொண்டோர்
... பயனெது மின்றியே போவார்
குணமது கொண்டே குலமுறை கண்டோர்
... குதூகலங் கொண்டுமே வாழ்வார்
உணவது தந்த உழவரும் நாளும்
... உழைப்பவர் செல்வராய் ஆவார்
கணவனே தெய்வம் கற்பிரு தரப்புங்
... காணவே தமிழறந் தேர்வார்

கதிர்நிறை வயலும் கனிநிறை தருவும்
... கவிநிறை இயற்கையின் எழிலும்
மதிநிறை விழியும் மனனிறை மகிழ்வும்
... மதுபுகை கேடெனும் ஒளியும்
நிதிநிறை பதியும் நீர்நிறை நதியும்
... நிம்மதி நிறையுனல் லயலும்
துதியிறை கரமுந் துணிவுடன் ஒழுக்கம்
... துலங்கவே கதிரது விரியும்

மண்ணிலே முதியோர் மாசறு சிறுவர்
... மதிக்கவே மிடியது மடியும்
கண்ணெனக் கல்வி கற்றறங் காக்கக்
... காடெனும் போரது முடியும்
பெண்ணவள் பாரிற் பெருவரம் என்று
... பேணியே பாரது விடியும்
வண்டமிழ் பாட வாஞ்சையாய் நன்றி
... வாழ்த்துடன் கவியது நிறையும்.

வாழ்த்து

அறமும் அறிவும் பணிவும் பரிவும் 
உறவில் கலந்த உயர்ந்த உள்ளம்
 
நிறைந்து விடிய நேயக் கவிதை
 
அறைந்தீர் ஐயா வாழ்க வாழ்க!

சோலைக் கவியரங்கம் - 8

பைந்தமிழ்ப் பாமணி கவிஞர் இரா.கண்ணன்

கவிஞரை வரவேற்றல்

மண்ணும் விண்ணும் தன்னுள் ஆளக்
கண்ணுங் கருத்தும் கருதும் எண்ணம்
 
பண்ணுக் குள்ளே பொங்கும் எங்கும்
 
கண்ணன் கவிகள் கனியே கனியே

பைந்தமிழ்ப் பாமணி கண்ணன் அவர்களே வருக!
சந்தத் தமிழில் மணிப்பா தருக!

*** *** *** ***

தமிழ் வாழ்த்து (எழுசீர்ச் சந்தவிருத்தம்)

முந்தி வந்த மொழியி லேறு
… மூப்பி லாத இளமையாள்
அந்தி வான நிலவு போல
… அழகு கொஞ்சும் வளமையாள்
எந்தத் திசையும் என்றி லாமல்
… எட்டு மறிவு புகழினாள்
சொந்த மென்றிவ் வுலக மக்கள்
… சொல்லு மன்னை வாழ்கவே

தலைமை வாழ்த்து

அமைதி யாக ஆற்ற லோடு
… மழகு கவிக ளாக்குவார்
அமுது கூட்டி அறிவு செய்து
… மதனி லின்பம் நெய்குவார்
இமைக ளாகப் பனுவ லென்றும்
… ஏற்றி மொழியை வைக்குமே
இமய மாகும் இவரி னன்பில்
… இன்று கைதி யாகினேன்

இப்படித்தான் விடியும் (காவடிச் சிந்து)

அடிமையென்று உணராமல்
அமைதியாக நாமிருந்தால்
அச்ச(ம்)நம துடைமையாக மாறும் - அது
அறிவுதனை மழுங்கடிக்கும் பாரும் - இனி
 

இடிமின்னல் போலெழுந்து
எச்சரிக்கை மணியடிப்போம்
இருள்களைய நம்வாழ்வில் நாளும் - இது
இயக்கமாகும் உடலுயிரைப் போலும்               1




எதிர்காலம் எமதென்று
யாவருக்கும் விடியலென்று
எங்கெங்கும் சங்கநாதம் முழங்கு - நம்
எதிர்நிற்கும் பொன்னுலகை விளங்கு - இனி

அதிகாரம் செய்வோர்கள்
அச்சங்கொண் டோடட்டும்
அதிகாலைச் சூரியனாய்க் கிளம்பு - நாம்
அனல்கக்கும் எரிமலையின் பிழம்பு                2

வருமிடரைப் பொடியாக்கி
வாசலுக்குப் படியாக்கு
வாழையடி வாழையாக வீரம் - நம்மில்
வளர்ந்துவந்து வாழ்வினிலே சேரும் - என்றும்

பெருமையுடை உழவோர்கள்
பெருந்துன்பம் அடைகின்றார்
பேருலகின் நீதிஇதோ பாரும் - மண்ணில்
பிழைகளைய உடனெழுந்து வாரும்                3

ஏற்றமிகு கொள்கையோடு
ஏறுபோலே நடைபோடு
எழுகதிரை எவன்தடுக்க முடியும் - இனி
எதிர்நிற்கும் சூக்குமங்கள் மடியும் – புயல்


காற்றுபோலே சுழன்றடிப்போம்
கனன்றெழுந்து கைகோப்போம்
காலங்கள் கனிந்துவர நொடியும் - இனி
களந்தன்னில் பறக்குஞ்செங் கொடியும்              4

ஆட்டமிடும் ஆளுமையை
அடக்கியாளத் தோழமைகள்
அரிமாவா யெடுத்துவைப்போம் அடியும் - அது
ஆணிவேராய் நமைத்தாங்கும் நொடியும் - நிதம்

பாட்டாளி வருக்கங்கள்
படைதிரண்டு தானெழுந்தால்
பகைகூட்டம் ஓடிவந்து படியும் - இனிப்
பாரெங்கும் இப்படித்தான் விடியும்                  5

*** *** *** ***
வாழ்த்து

சந்தம் கொஞ்சும் சிந்துப் பாவில் 
கந்த கம்போல் கனன்று முழங்கி
 
நந்தம் நிலையை நவின்றார் கண்ணன்
 
செந்த மிழ்போல் செழித்து வாழ்க

சோலைக் கவியரங்கம் - 8


பைந்தமிழ்ப் பாமணி
நியாஸ் அசன் மரைக்காயர்

• கணினிப் பொறியாளர்
• தமிழ் ஆர்வலர்
• பைந்தமிழ்ச் சுடர், பைந்தமிழ்ப் பாமணி பட்டம் பெற்றுள்ளார்.
• தினமணி ஈகை மலரில் கட்டுரை எழுதி உள்ளார்.
• சீறாவுக்கு உரை எழுதிய புலவர் காதிரசனா மரைக்காயருக்கு பேரன்.

கவிஞரை வரவேற்றல்

ஆராவல் அகத்தொளியா(து) அப்படியே உருப்பெருகச்
சேராற்றல் உலகமெலாம் சேர்த்துவிடும் நுட்பமென
நீராற்றல் பெற்றவரே நியா(சு)அசன் மரைக்காயர்
பேராவல் தீராமல் பெரும்பாடல் தானிசைப்பார்

நியா(சு)அசன் மரைக்காயர் அவர்களே வருக!
நிகரில்லாப் பெரும்பாடல் தருக!






                      இப்படித்தான் விடியும்
வண்ணப் பாடல்.
சந்தக் குழிப்பு.
தத்தத்தன தத்தத் தனதன 
தத்தத்தன தத்தத் தனதன
 
தத்தத்தன தத்தத் தனதன - தனதானா

இற்றைக்கொரு திட்டத் தலைநிலை
 கொட்டுப்பறை எட்டிப்பரகுவ
 இக்கட்டிலை மக்கட் பகையிலை - பெருநாளும்

 எட்டித்தொட மிச்சப் பொருளிலை
 கற்றுத்தர மெட்டுப் பொதுமறை
 இட்டப்படி சுற்றிப் பெருமழை - தமிழ்நாடு

முற்பட்டொரு புத்தப் புதுமுறை
 பட்டப்பகல் ஒட்டிச் சிலபல
 முத்துக்கலம் முப்பக் கமுமுள - மகிழ்வாக

 முத்துத்துளி பட்டுத் திருமொழி
 கட்டித்தமிழ் ஒட்டிப் பரவொளி
 முற்றத்தொரு அத்திக் கனியென - முழுதாக

நற்றைத்திரு கொட்டித் தருவன
 பச்சைப்பொருள் வெட்டிப் பகிரவும்
 நற்றிக்கென நட்பைத் தொடரவும் - இனிதாக

 நச்சுக்கிலை பச்சைப் பெருவெளி
 பச்சைப்பொருள் வித்துக்(கு) உழவரும்
 நட்பைப்பெற மெச்சப் பகலவன் - ஒளியாக

வெற்றித்திரு மக்கட் பெருவெளி
 சொக்கத்தகு கட்டுக்(கு) இளைஞரும்
 விட்டுச்சில சுற்றிப் பணிவன - பலகாளை

 வித்துக்கென பச்சைப் பெருவன
 பட்டப்பகல் முத்துப் பகலவன் 
 விற்கத்தகு சொத்துக்(கு) உழவரும் - ஒருநாளே

வாழ்த்துரை

குளம்நிறைய நீரெழவும் 
களம்நிறையக் கதிரெழவும்
 
வளம்நிறைய மகிழ்வுறவும்
 
உளம்நிறைய மதிதவழும்
 
நிலையெய்தக் கவிசெய்யும்
 
நியா(சு)அசன் வாழியவே