'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8


. பைந்தமிழ்ப் பாமணி சாமி.சுரேஷ்
• புனைபெயர் - ஆதி கவி
• படிப்பு - முதுகலை வரலாறு
• பணி - நடுவணரசு துறை, பாதுகாப்புப் பிரிவு
• பட்டம் - பைந்தமிழ்ப் பாமணி (பைந்தமிழ்ச் சோலை),
கவியருவி ( தடாகம் கலை இலக்கிய வட்டம், இலங்கை)

*** *** *** ***
கவிஞரை வரவேற்றல்

நீதியொளிர் செங்கோலைக் கையில் தாங்கி 
... நெறிசொல்லி ஆள்கின்ற மன்ன னாக
 
மேதினியை மேன்மைமிகப் படைக்க வேண்டி
 
... வெல்கின்ற ஆற்றலொடு வெல்லம் போன்ற
 
சேதிசொல்லிச் செம்மையாக்க எழுது கோலைத்
 
... தன்கையில் தாங்கியவர் நயமாய்ப் பாடும்
 
ஆதிகவி சாமிசுரே(சு) ஐயா வாழ்க!
 
... அவையதிரும் கவிசொல்லும் அனலே வாழ்க!

சாமிசுரேசு ஐயா வருக
சந்தமிகு கவியின்பம் தருக



தமிழ் வாழ்த்து

இறவாப் புகழுடை எண்ணிலாநன் மாந்தர்
மறவாமல் வந்துதித்த மண்ணில் - நறவென்று
தோன்றிய நற்றமிழின் சொல்லொன்றே சொல்லாகும்
வான்பகையும் வெல்லும் மருந்து.

அவை வாழ்த்து

கரியென்று வந்தாரை வைர மாக்கி
... கல்லென்பார் தன்னையும் சிற்ப மாக்கி
சிரிக்கின்ற பைந்தமிழின் சோலை யன்ன
... சீருள்ள மன்றங்கள் வேறு வுண்டோ
வரிப்புலிகள் மான்களொடு அன்ன புள்ளும்
... வண்டினங்கள் வந்திலங்கும் அழகு சோலை
எரிவிளக்காய் எங்களுக்குத் திசையைக் காட்டும்
... இன்பொழியும் நற்சோலை வாழி வாழி.

தலைமை வாழ்த்து

ஆழ்ந்தறிந்த நல்லறிவால் ஆடா திருக்கின்றார்
வாழ்கின்ற எங்கள் மணி.




அவையடக்கம்

வன்றிறத்து நற்சான்றோர் வாழ்கின்ற இவ்விடத்
தென்துணிவில் வந்தேனோ என்றறியேன் - தன்முனைப்பால்
புன்கவியை என்கவியாய் பூணணிந்து தந்தாலும்
நன்மனத்தார் ஏற்பாரே என்று.

இப்படித்தான் விடியும்

வாயெல்லாந் தமிழென்று பேசி விட்டு
... வளர்க்கின்றார் தம்மொழியை வீட்டி னுள்ளே
சாயாத கோலன்னர் யாமே வென்று
... தாவுகிறார் அங்கிங்கு மந்தி யன்ன
தாயென்றே பிறர்பெண்ணைச் சொல்லி விட்டுத்
... தனியறையில் தணிக்கின்றார் கூட லிட்டுக்
காயென்றும் கனியென்றும் அறிவு கெட்டுக்
... களிக்கின்ற பேர்க்குண்டோ விடுத லையே.

மூவாத தமிழ்மருந்தைக் கொட்டி விட்டு
... மூடரன்ன பிறனஞ்சைப் பிச்சை கேட்டுச்
சாவாத மருந்தென்று சொல்லி விற்கும்
... சழக்கர்கள் பக்கத்தில் நின்று கொண்டு
தேவாதி தேவரெல்லாம் தமிழத் தாயைச்
... சேவாதி செய்வார்கள் என்று சொல்லும்
நாவாயை இழுக்கின்ற அடிமை யாளர்
... நல்லகதி பெறுவதுண்டோ மாநி லத்தில்?
இல்லாத திராவிடத்தை இன்னும் நம்பி
... இருக்கின்ற தமிழ்நிலத்தை அழியச் செய்யும்
பொல்லாத பேர்கள்தாம் பொங்கி வந்து
... பொன்செய்வோம் தமிழ்நிலத்தை என்று சொல்லிக்
கல்லாத எளியோரைக் கவிழ்த்து விட்டுக்
... கரையின்றிக் கொல்கின்றார் நீருங் கூட
அல்லாவும் இயேசுவுடன் கண்ண ரெல்லாம்
... அணிசேர்ந்தும் விடிவில்லை தமிழர்க் கையோ!

உள்ளொன்று புறமொன்று பிரிந்து வாழும்
... ஊனர்கள் ஆனார்கள் தமிழர் கட்சி
நள்ளிரவில் திருடுவதா? கூடா தென்றே
... நண்பகலும் நடுவீட்டில் கன்னம் வைத்தார்
வெள்ளந்தித் தமிழர்களும் விடியும் என்று
... வெகுவிருந்து வைத்தோய்ந்தார் அளிய ரன்னார்
கள்வர்கள் கையிடத்து நாட்டைத் தந்து
... கவலுகின்ற பேர்க்கென்ன புதிய காலை?

இன்னாத பலவற்றை எழுதி யென்ன
... இனிக்கின்ற பலவற்றைப் பாடி யென்ன
நன்னாத பேர்களுக்கா நாடி வந்து
... நயக்கின்ற பொன்விடியல் வந்து சேரும்?
தன்மான உணர்ச்சியினை விற்ற வர்க்குச்
... சன்மானம் தொழும்பரன்றி வேறே யென்ன
நன்மாட எரிவிளக்கும் நிழலே சிந்தும்
... ஞாலத்தில் இருளேதான் விடிய லாமே.
வாழ்த்து

செவியறி வுறவே செறிந்த கருத்தைச் 
சுவைமிக உரைத்த சாமி சுரேசு!
செவிக்குண வில்லாப் பொழுதா? காண்பீர்
 
அவைமகிழ் இன்பம் அறிந்தேன் வாழி!
 


No comments:

Post a Comment