'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8


பைந்தமிழ்ச்செம்மல் பரமநாதன் கணேசு
பிறந்த இடம் ஈழம். வாழ்விடம் டென்மார்க்கு.
• சிறுவயதிலிருந்தே கவிதை எழுதுபவர்.
 
• மூன்று மரபு கவி நூல்களை வெளியிட்டுள்ளார்
• பெற்ற பட்டம்: பைந்தமிழ்ச்செம்மல்
• பைந்தமிழ்ச் சோலையின் தமிழ்க்குதிர் மின்னிதழில் ‘புலம்பெயர் நாடும் வாழ்வும்’ என்னும் தலைப்பில் தொடர்கட்டுரை எழுதி வருகிறார்


கவிஞரை வரவேற்றல்

ஈழத்தில் பிறந்தவர்பின் இழந்தாரே தன்னுரிமை 
வாழத்தான் வழியில்லா வகைசெய்தார் சிங்களவர்
ஆழத்தன் உள்ளத்தில் குமுறல்கள் அளப்பரிதே
 
ஆழத்தன் உள்ளத்தில் அருந்தமிழும் அளப்பரிதே

பரமநாதன் ஐயா வருக 
பைந்தமிழ்க் கவிதை தருக

தமிழ் வாழ்த்து

முத்தே! உலகில் முதுமை யிலாப்பெரும்
சொத்தே! உயிரின் சுவையே!என் - முத்தமிழே!
சித்தம் களிக்கும் செழிக்கும் நினையெண்ணில்
தித்திக்கும் நெஞ்சும் திளைத்து
தலைமை வாழ்த்து
பொங்கிப் படைக்கப் புறப்பட்டேன் பாட்டோஒ(டு)
எங்கும் இனிக்கட்டும் என்பொங்கல் - எங்கள்
தமிழகழ்வன் ஏற்ற தலைமைதனை வாழ்த்தி
நிமிர்கின்றேன் நெஞ்சம் நிறைந்து!

அவை வாழ்த்து (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
அவையோரே என்றன் அருந்தமிழ்ப் பாட்டு
சுவைக்கவென வந்த சுவையோரே! கைகூப்பி
வைத்தேன் வணக்கங்கள் நான்

                       இப்படித்தான் விடியும்

எப்படித்தான் விடியுமெனும் ஏக்கத் தோடே
... இரவெல்லாம் தூக்கமின்றித் தூங்கிப் போனேன்
ஒப்பிலாவென் செந்தமிழ்த்தாய் முன்னே வந்தாள்
... உனக்கென்ன கவலையென்று சிரித்தே கேட்டாள்
இப்புவியில் நீயென்று புகழாய் வாழ்வாய்
... என்றேங்கி அழுகின்றேன் என்றேன் நானும்
இப்படித்தான் விடியுமிங்கு மகனே என்றாள்
... இயம்பிட்டாள்! கேட்டதனை நானும் நின்றேன்

கோடியெனக் கொள்ளையிடு வோரின் கைகள்
... கொடையென்று கொடுத்தற்கே நீளும் நேரம்
தேடியள்ளிப் பொருள்சேர்க்கும் ஆசை நெஞ்சுள்
... சீர்நெறிகள் பலநூறு சூழும் நேரம்
வாடியழும் வாழ்விலுள்ளோர் வாழ்வ தற்கு
... வழிவகைகள் உண்டென்று கூறும் நேரம்
நாடியிங்கே அத்தனையும் வந்து சேரும்
... நம்வாழ்க்கை இப்படித்தான் விடியும் என்றாள்

பிறந்திட்ட தமிழரெலாம் கூடி நின்று
... பேசுமொழி தமிழென்று களித்தே யாடி
மறந்திட்ட சொல்லெல்லாம் மீட்டு வந்தே
 
... வாயினிக்கக் கூறிநின்றாம் ஆடும் வேளை
அறம்தழைக்க உழைத்தோர்க்கு மாலை சூட்டி
... அரவணைத்தே அவர்பாதை செல்லும் காலம்
சிறந்தோங்கு தமிழ்வாழ்வும் வந்து சேரும்
... திளைத்திடவே! இப்படித்தான் விடியும் என்றாள்.

விலையில்லாப் பொருள்காட்டி ஏய்க்குங் கூட்டம்
... வீதிகளில் மொய்த்திடாது மாயும் நேரம்
நிலையான ஆட்சியாளர் மன்றில் சூழ்ந்து
... நீதியெனும் அறம்காக்கப் போட்ட சட்டம்
மலைபோலத் தடைவரினும் தூக்கி வீசி
... மனித!நின்மாண்(பு) உயர்ந்தோங்க வுழைக்கும் காலம்
தொலைத்திட்ட பெருமையெலாம் மீளும் அப்போ!
... தூங்கிடுவாய் என்மகனே! விடியும் என்றாள்.

மூத்தமொழி நானென்றி ருக்க இங்கு
... மூலைக்கொரு மொழியென்று பிறந்த தெல்லாம்
வைத்ததுவே சட்டமென வான போதும்
... வையத்தில் உண்மைநிலை எழுந்து நின்று
கூத்தாடும் அவ்வேளை கைகள் கூப்பிக்
... கொண்டாடப் பாரிலுள்ளோர் ஒன்றாய்ச் சேர்வார்
காத்திருப்பாய் காலம்வரும் துயரும் நீங்கிக்
... களித்திடுவாய் கண்ணுறங்கு விடியும் என்றாள்.

*** *** *** ***

வாழ்த்து

செந்தமிழ்த்தாய் முன்வந்து செய்தி சொன்னாள்
... செந்நிலத்துப் பொருள்களெல்லாம் பொதுமை என்றே
 
அந்தமிழே பேசுமொழி என்ப தாகும்
 
... அருந்தமிழர் யாவருமிங்(கு) எழுந்து வெல்வர்
தந்தவழி நீதியினைக் காக்கத் தானே
 
... தவறாது கடைப்பிடிக்கும் காலம் ஒன்று
 
வந்துநிற்கும் உண்மையெலாம் உணர வைக்கும்
 
... வகையாக எடுத்துரைத்தீர் வாழ்க வேந்தே!



No comments:

Post a Comment