'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8


01. கவிமாமணி சேலம் பாலன் ஐயா
    ஈரோடு தமிழ்ச் சங்கப்பேரவை நிறுவனர் மற்றும் தலைவர்
    கவிமாமணி, செந்தமிழ்ச் செயல்மணி, விழா வேந்தர், செந்தமிழ்க் காவலர், தமிழ் முரசு, மரபுகவி அரிமா, இலக்கியக் காவலர், செந்தமிழ்ப் பாச்சுடர், கவியரசர், பொற்றமிழ்ப் பெருமகன், பைந்தமிழ்க்குவை எனப் பல பட்டங்களைப் பெற்றவர்.
    காமராசர் பிள்ளைத்தமிழ், குமரகிரி குமரன் அந்தாதி, மாண்புமிகு மனைவி தியாகி, திருப்பூர் குமரன் தேன்கவி மாலை, வியன் திருக்குறளும் விருத்தப்பா உரையும் எனப் பல படைப்புகளை உருவாக்கியவர்.
    தமிழ்மலர், இதய தாகம், துளி, குந்தர் குரல் எனப் பல்வேறு இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர்
கவிஞரை வரவேற்றல்                                  
நீரோட்டப் பேராற்றல் நெஞ்சில் கொண்டு 
... நெடுந்தமிழை வளர்ப்பதுவே கோளாய்க் கொண்ட
 
ஈரோட்டுத் தமிழ்ச்சங்கப் பேர வையின்
 
... இணையில்லா நிறுவனர்சீர் விளங்க வைக்கும்
 
ஏரோட்டித் தமிழ்நிலத்தைப் பண்ப டுத்தும்
 
... இன்றலைவர் எளிமையொடு பழகு வாரே!
தேரோட்டம் சிறப்பாகும் செந்த மிழ்த்தாய்
 
... செழித்திருப்பாள் சேலத்துப் பாலன் ஐயா!

கவிமா மணியே வருக!
கவிமா மழையைத் தருக!

தமிழ்வணக்கம்

எதுகைக்கும் மோனைக்கும் எப்போதும் தயங்காமல் 
எதுகைக்கு வருகிறதோ இயல்பாக அதைப்போட்டுக்
கவிதையென எழுதுபவர் கணக்கின்றி உளநாளில்
 
கவிதையென மரபினையே கருதுபாலன் தமிழ்வணக்கம்.

தலைமை வணக்கம்

பைந்தமிழ்நற் சோலையின் பாங்கான கவியரங்கின்
செந்தமிழ் நல்லாசான் சீர்தமிழ் அகழ்வனேஉம்
தலைமைக்கே என்வணக்கம் தந்தேன்மகிழ்ந் தேற்பீரே.
நிலைசுவைஞர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வணக்கங்கள்
கவியரங்கக் கவிதை:

இப்படித்தான் விடியவேண்டும் என்கின்ற எண்ணம் 
... எப்போதும் எல்லார்க்கும் இருப்பதுவோ திண்ணம்
 
தப்படிகள் இல்லாமல் நேர்வழியில் சென்றும்
... தான்வெற்றி காணாமல் புலம்புபவர் நிறைய
 
ஒப்பிமனம் ஏற்காமல் விதிஎன்றே மலைக்க
 
... உழலுகின்ற வகைதானோ வாழ்க்கைஎன நினைக்க
 
இப்படித்தான் விடியவேண்டும் என்றெண்ணி நித்தம்
... எண்ணியதைச் செயல்படுத்தி வெல்வதுவே விடியல் .

நல்லபடி வெற்றிபெற வேண்டுமென்றும் முயற்சி 
... நல்வெற்றி பெற்றுவிட்டால் விடிவதுவே மகிழ்ச்சி
 
வெல்லமுடி யாதென்றே எண்ணுவோரும் பயிற்சி
 
... விருப்புடனே தொடர்ந்துசெய கண்டிடுவர் விடிவே
 
நல்லவராய் எல்லாரும் வாழுகின்ற நாடு
 
... நாட்டமின்றி வாழுவதால் சூழ்வதுவோ கேடு
 
எல்லாமே மிகஇருந்தும் இல்லைஇங்கே வளமே
 
... இருப்பவர்க்கே பிறர்பற்றி இல்லையொரு நினைவே

ஒற்றுமையாய் வாழ்ந்திட்டால் உயர்ந்திடுவோம் நாமே
... உள்ளவர்க்கும் உள்ளபடி உண்மைஇது புரியும்
 
ஒற்றுமையே வேண்டுமென உரைப்பவர்க்குள் ளேயும்
 
... ஒற்றுமையே இன்றிநிதம் உறைபவரே அதிகம்
கற்றவர்கள் கல்லாத பேர்களிடம் கையைக்
 
... கட்டிக்கொண் டிருக்குமட்டும் விடிவென்ப தில்லை
 
கற்றவரும் கல்லாரும் பற்றுடனே ஒன்றிக்
... கட்டுப்பாட்டு டன்வாழ்ந்தால் நல்லபடி விடியும்.

தீமைகளே தீரவேண்டும் தேனான வாழ்வு
... திரும்புகிற பக்கமெல்லாம் திகழ்ந்திட்டால் விடிவே
ஊமையான யாருந்தான் இருக்காமல் எந்த
 
... உண்மையையும் நிலைநாட்டும் துணிவெவர்க்கும் வேண்டும்
சாமத்தில் இளமங்கை பொன்அணிகள் பூண்டு
 
... தனியொருத்தி யாய்ப்பயணம் சென்றுவரல் வேண்டும்
ஆமையென ஐம்பொறியை அடக்கித்தான் மனிதர்
 
... ஆயுளுமே வாழ்ந்திட்டால் நாட்டுக்கே விடியல்

வணக்கமும் வாழ்த்தும்
பண்பட்ட யாப்பை மட்டும்
... பாட்டென்று கொண்ட உள்ளத்(து)
எண்ணத்தில் தோய்ந்த திண்மை
... எடுத்துரைக்கும் செந்நா வன்மை
கண்டேன்நான் பாலன் ஐயா
... கவிசெய்த வண்ணம் போற்றித்
தொண்டுள்ளம் வணங்கு வேனே
... தூயவுளம் வாழ்த்து வேனே

No comments:

Post a Comment