'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8

01. கவிஞர் குருநாதன் ரமணி

    பலவகை வடிவங்களில் மரபுகவிதைகள் புனைந்து வருபவர்
    மிறைக்கவி ஆய்வரங்கம், சடுதியில் மரபுகவி ஆகிய முகநூற் குழுக்களை நடத்தி வருபவர் 
    சிறுகதைகள், நெடுங்கதைகள் பலவற்றை எழுதியுள்ளார்

கவிஞரை வரவேற்றல்

கவையாகிக் கொம்பாய் ஆகிக் 
... காட்டகத்தே நிற்கும் தேமா
 
சுவையான கனிகள் ஈந்து
 
... துயர்யாவும் நீக்கு தற்போல்
 
சுவையான பாடல் பாடும்
 
... குருநாதன் ரமணி யாரே!
அவையேறி அழகு பாக்கள்
 
... அகங்குளிர எடுத்துச் சொல்வீர்

காப்பு (நேரிசை வெண்பா)
முற்படு வெற்பினில் முத்தமிழ் தீட்டிய
கற்பக வேந்தே களிற்றிறையே! - முற்பட
நின்றென் கவிதையை நேர்செய்தே நானிந்த
மன்றினில் பாட வருள்.



அவையடக்கம் (நேரிசை வெண்பா)
மரபைப் பயிற்றுவிக்கும் மாமணியே! மன்றின்
தரமாள் தமிழகழ்வீர்! என்றன் - சிரந்தாழ்த்தி
நானுமென் பாடலை நல்லோர்முன் கூறுகின்றேன்
ஈனம் பொறுத்தருள் வீர்.

கவியரங்கக் கவிதை: இப்படித்தான் விடியும்! (நேரிசை வெண்பா)

காணும் மலைமகள்-எக் காலத்தில் தோன்றினளோ?
பேணும் உயிர்பலவாம் பேற்றில்-அயி - ராணியுரு!
உப்பிய கொண்டையாய்க் கொண்டல் புடைசூழ
இப்படித் தான்விடியும் இன்று! ...
                        1

[அயிராணி = பார்வதி]

கான்மலர்கள் கட்டவிழ வண்டினங்கள் வாய்திறக்கும்
வான்மலரும் நேரத்தில் மாங்கனிகள் - தேன்கமழும்!
ஒப்பில்லாத் தாவரங்கள் ஊண்மருந்தாய் மானிடர்க்கே
இப்படித் தான்விடியும் இன்று! ...
                        2

காலைப் பொழுதேறக் கால்விரை யும்புழு
ஆல மரத்தடியில் மல்லாரப் - பீலிகைகள்
தப்பாமல் சூழத் தரையில் துடிதுடிக்கும்!
இப்படித் தான்விடியும் இன்று! ...
                        3

வாய்க்காலில் நீர்பாய வாளைகள் துள்ளியெழப்
பாய்கொக்கைக் கண்டே பரபரப்பில் - மாய்ந்துவிழும்!
தப்பித்த திப்போது தப்புமோ எப்போதும்?
இப்படித் தான்விடியும் இன்று! ...
                        4

மாணிக்கத் தொட்டிலொன்று மண்குடிசைத் தூளியொன்(று)
ஆணிப்பொன் பிள்ளைக்(கு) அமுதூண்-இங்(கு) - ஊணில்லை!
அப்பனங்கே செல்வந்தன் அப்பனிங்கே கள்வந்தன்!
இப்படித் தான்விடியும் இன்று! ...
                        5

ஊரில் பெருமனிதர் உள்ளமெலாம் வஞ்சனை
பாரில் அவர்க்கடியார் பல்வகை - வேரியாலை
எப்போதும் கள்ளூட்ட ஏழை நடுத்தெருவில்!
இப்படித் தான்விடியும் இன்று! ...
                        6

[வேரி = கள்]

எம்மதமும் சம்மதமே என்றிருந்தால் இன்றுநாம்
நம்மதம் தூற்றும் நயவஞ்ச - கம்காணோம்!
இப்படியே விட்டுவிட்டால் இல்லைநம் தொன்மையென்றே!
இப்படித் தான்விடியும் இன்று! ...
                        7

அரசியலார் செல்வந்தர் ஆளடியார் ஏழை
முரசொலிக்க மாண்டே முதுகா(டு) - உரைதினம்
எப்படியும் வந்திழியும் என்றாலும் வேற்றுமைகள்!
இப்படித் தான்விடியும் இன்று! ...
                        8
வணக்கமும் வாழ்த்தும்

பாழ்மு றையாய்ப் பண்ப டாத 
வாழ்மு றையின் வேற்று மைகள்
 
மூழ்கி எடுத்த முத்துப் பாக்கள்
வாழ்க ரமணி யாரே வணக்கம்

No comments:

Post a Comment