'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8


பைந்தமிழ்ச் சுடர் சோமு சக்தி

பிறப்பு: முகவை (இராமநாதபுரம்) மாவட்டம், இருப்பிடம் சென்னை.
• பொருளியியல் படித்தவர்.
• மொழிபெயர்ப்பு பணியாற்றுகிறார்.
• புதுக்கவிதை தொட்டு, மரபில் புகுந்தவர்.
• பைந்தமிழ்ச் சுடர் பட்டம் பெற்றுள்ளார்.


கவிஞரை வரவேற்றல்
கெடுப்பார் இலானும் கெடுவான் காலத்(து) 
எடுத்து ரைப்பார் இடித்து ரைப்பார்
 
அடுத்தென் செய்தற்(கு) ஆய தென்று
 
தொடுத்து ரைப்பார் சுடராய்க் கவியே!

சோமுசக்தி ஐயா வருக
சொல்லில் அமிழ்தம் தருக


தமிழ்வாழ்த்து, அவை வாழ்த்து

இப்படித்தான் விடியுமெனு மென்பாவைப் பாட
எப்போதும் தமிழ்த்தாயின் இசைவெனக்கு வேண்டும்
அப்போதும் அவைவணக்கம் அன்புடனே கூறும்
அவையடக்கம் என்னெஞ்சில் அசைபோட வேண்டும் !

தலைமை வாழ்த்து

தமிழகழ்வன் நற்றலைமை தாங்குதை நாளில் 
அமிழ்தினிய பாவணங்கி யாறு

                      இப்படித்தான் விடியும்

இப்படித்தான் மாறுமென எதிர்பார்த்து நின்றாய் !
... எப்படித்தான் மாறியதோ ஏன்விளக்க வில்லை ?
தப்படிதான் தப்புமென்றால் தவறிழைத்தல் சரியோ ?
... தப்புவதே தலைக்குணமோ தலைக்கணமும் சரியா ?
 
முப்பொழுதும் வெற்றிக்காய் முனைப்புடனே முயன்றால்
... முப்பாலும் உரைப்பதுபோல் முந்திநிற்பாய் அவையில் !
செப்படியாய் வித்தையிதைச் சிந்தனையில் கொள்வாய்
... திக்கெட்டும் சிறப்புறவே திசையெல்லாம் வெல்வாய் !

இப்படித்தான் விடியுமென யாருனக்குச் சொன்னார் ?
... எப்படியோ வந்தடைந்தோம் இருக்கட்டும் நன்மை
இப்பொழுதும் தாழ்வில்லை எடுத்தகடன் முடிப்பாய்
... எப்பாடு பட்டாலும் இவ்வுலகைக் காப்பாய் !
உப்பிட்ட மண்ணுக்கே உலைவைக்கும் கூட்டம்
... ஒப்புக்காய் உணர்வூட்டி உனைச்சுரண்ட நாட்டம் !
கொப்புக்குக் கொப்புதாவிக் குரங்குகளே ஆட்டம்
... கொடுமையிதைக் களையாமல் கூவுவதோ குற்றம் !

இப்படித்தான் மாறவேண்டும் என்றுனக்குத் தோன்றின்
... எடுத்துவைப்பாய் மக்கள்முன் எழுச்சியுறல் வேண்டும் !
துப்பாக்கிச் சூடாயெமைத் துவண்டுபோக வைக்கும் ?
... துப்பில்லா ஆட்சியர்க்குத் துணைபோக வைக்கும் ?
தப்பாகாத் தமிழராட்சி தமிழ்நிலத்தில் வேண்டும் !
... தடையிருந்தால் அதையகற்றத் தடந்தோள்கள் வேண்டும் !
மப்புடைய மடையர்களை மாற்றுமாட்சி வேண்டும் !
... மக்களது துயர்துடைப்பாய் மானமுள்ள நெஞ்சே !

நன்றியுரை

இப்படித்தான் விடிகவென என்றோநீர் கேட்டீர் !
எப்போது விடியுமென இப்போதும் கேட்பீர் !
எப்பாடு பட்டாலும் இக்குமுகம் மேவ
இப்போதும் செவிமடுத்தீர் எடுத்துரைப்பேன் நன்றி !

*** *** *** ***
வாழ்த்துரை

பேரிடி முழக்கம் ஒவ்வோர் அடியிலும்; 
ஓரிடி அவற்றுள் விழுந்தால் நமக்குள்
சீரிய சிந்தையோ டெழுவோம் யாமே
காரினி இல்லை சுடரே வாழி!

No comments:

Post a Comment