'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8

பைந்தமிழ்ப் பாமணி கவிஞர் இரா.கண்ணன்

கவிஞரை வரவேற்றல்

மண்ணும் விண்ணும் தன்னுள் ஆளக்
கண்ணுங் கருத்தும் கருதும் எண்ணம்
 
பண்ணுக் குள்ளே பொங்கும் எங்கும்
 
கண்ணன் கவிகள் கனியே கனியே

பைந்தமிழ்ப் பாமணி கண்ணன் அவர்களே வருக!
சந்தத் தமிழில் மணிப்பா தருக!

*** *** *** ***

தமிழ் வாழ்த்து (எழுசீர்ச் சந்தவிருத்தம்)

முந்தி வந்த மொழியி லேறு
… மூப்பி லாத இளமையாள்
அந்தி வான நிலவு போல
… அழகு கொஞ்சும் வளமையாள்
எந்தத் திசையும் என்றி லாமல்
… எட்டு மறிவு புகழினாள்
சொந்த மென்றிவ் வுலக மக்கள்
… சொல்லு மன்னை வாழ்கவே

தலைமை வாழ்த்து

அமைதி யாக ஆற்ற லோடு
… மழகு கவிக ளாக்குவார்
அமுது கூட்டி அறிவு செய்து
… மதனி லின்பம் நெய்குவார்
இமைக ளாகப் பனுவ லென்றும்
… ஏற்றி மொழியை வைக்குமே
இமய மாகும் இவரி னன்பில்
… இன்று கைதி யாகினேன்

இப்படித்தான் விடியும் (காவடிச் சிந்து)

அடிமையென்று உணராமல்
அமைதியாக நாமிருந்தால்
அச்ச(ம்)நம துடைமையாக மாறும் - அது
அறிவுதனை மழுங்கடிக்கும் பாரும் - இனி
 

இடிமின்னல் போலெழுந்து
எச்சரிக்கை மணியடிப்போம்
இருள்களைய நம்வாழ்வில் நாளும் - இது
இயக்கமாகும் உடலுயிரைப் போலும்               1




எதிர்காலம் எமதென்று
யாவருக்கும் விடியலென்று
எங்கெங்கும் சங்கநாதம் முழங்கு - நம்
எதிர்நிற்கும் பொன்னுலகை விளங்கு - இனி

அதிகாரம் செய்வோர்கள்
அச்சங்கொண் டோடட்டும்
அதிகாலைச் சூரியனாய்க் கிளம்பு - நாம்
அனல்கக்கும் எரிமலையின் பிழம்பு                2

வருமிடரைப் பொடியாக்கி
வாசலுக்குப் படியாக்கு
வாழையடி வாழையாக வீரம் - நம்மில்
வளர்ந்துவந்து வாழ்வினிலே சேரும் - என்றும்

பெருமையுடை உழவோர்கள்
பெருந்துன்பம் அடைகின்றார்
பேருலகின் நீதிஇதோ பாரும் - மண்ணில்
பிழைகளைய உடனெழுந்து வாரும்                3

ஏற்றமிகு கொள்கையோடு
ஏறுபோலே நடைபோடு
எழுகதிரை எவன்தடுக்க முடியும் - இனி
எதிர்நிற்கும் சூக்குமங்கள் மடியும் – புயல்


காற்றுபோலே சுழன்றடிப்போம்
கனன்றெழுந்து கைகோப்போம்
காலங்கள் கனிந்துவர நொடியும் - இனி
களந்தன்னில் பறக்குஞ்செங் கொடியும்              4

ஆட்டமிடும் ஆளுமையை
அடக்கியாளத் தோழமைகள்
அரிமாவா யெடுத்துவைப்போம் அடியும் - அது
ஆணிவேராய் நமைத்தாங்கும் நொடியும் - நிதம்

பாட்டாளி வருக்கங்கள்
படைதிரண்டு தானெழுந்தால்
பகைகூட்டம் ஓடிவந்து படியும் - இனிப்
பாரெங்கும் இப்படித்தான் விடியும்                  5

*** *** *** ***
வாழ்த்து

சந்தம் கொஞ்சும் சிந்துப் பாவில் 
கந்த கம்போல் கனன்று முழங்கி
 
நந்தம் நிலையை நவின்றார் கண்ணன்
 
செந்த மிழ்போல் செழித்து வாழ்க

No comments:

Post a Comment