'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8


பைந்தமிழ்ச்செம்மல் விவேக்பாரதி
      
கல்லூரி பயிலும் இளம் மரபு கவிஞர். சிறந்த ஆசுகவி.
• பாரதி மீது தீராத பற்றுடைய இளைஞர்.
 
• தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கவிதைகள், கட்டுரைகள் எழுதுபவர்.
• தமிழ் இலக்கியத்திலும் மரபு இலக்கணத்திலும் ஆர்வமுடையவர்.
• வல்லமை, தமிழ்க்குதிர் மின்னிதழ்களில் துணை ஆசிரியராகவும் வடிவமைப்பாளராகவும் உள்ளார்.

பட்டங்கள், விருதுகள் :
o வித்தக இளங்கவி பட்டம் (2015)
o தமிழன்பன் – 80 விருது (2015)
o பைந்தமிழ்ப் பாமணி பட்டம் (2016)
o பைந்தமிழ்ச் செம்மல் பட்டம் (2017)
o ஆசுகவி பட்டம் (2017)

• படைப்புகள்:
o யானைமுகன் ஆன கதை (மின்னூல்)
o முதல் சிறகு
o சுதந்திர தேவி
 
o பாவலர் மா.வரதராசன் பன்மணி மாலை
o ககனத்துளி
o பேசுபொருள் நீயெனக்கு




கவிஞரை வரவேற்றல்

அப்பப்பா என்சொல்வேன் அருந்தமிழக் கவிஞரிவர்
தப்பாமல் பாடுவதில் தனித்திறமை காட்டுபவர்
 
எப்படியோ? யானெண்ணி யிருக்கும்போ தேயறிவு
 
செப்பிவிடும் விவேகத்தால் சேர்ந்துவிடும் பாப்பலவே!

வித்தக இளங்கவி விவேக்பாரதி வருக! 
முத்தான பாக்களை முன்வந்து தருக!

தமிழ் வாழ்த்து

மழலையின் மொழியில் மலரெனக் கவிதை 
... வளரவைத்தாய் நெஞ்சைப் பிளிறவைத்தாய்
 
அழலையென் மொழியில் அமைபெறப் பொருளை
 
... அலரவைத்தாய் அங்குக் கிளரவைத்தாய்
 
உழைப்பிலா மகனை உறுதியாய்ப் பிடித்தே
 
... உரைக்கவைத்தாய் உள்ளம் நிறைக்கவைத்தாய்
 
அழைப்பிலா மழையே அடியவன் உயிரை
 
... அமைத்துவைத்தாய்! வாழி தமிழெனுந்தாய்!

தலைவர் வணக்கம்
ஆழத் தமிழகழ்ந்(து) ஆற்றல் மிகுகவிகள் 
வாழத் தொடுக்கின்ற வல்லவரைச் – சூழ
 
நிகழும் கவியரங்கில் நின்று வணங்கிப்
 
புகழும் உரைப்பேன் புனைந்து!
                     இப்படித்தான் விடியும்....
காதுகளைக் கைப்பேசிக் கனலலைகள் தாம்வந்து 
மோதுகின்ற காலையிலே விழிப்பெய்த நேர்கிறது,
 
மேதினியில் சூரியனும் மெல்லவினி தான்மழுங்கப்
 
பூதமெனக் கைபேசி பூமியினைத் துயிலெழுப்பும்!

இப்படித்தான் விடியுமென இயற்கைத்தாய் சொல்லிவிட்டால், 
எப்படிநாம் வாழ்வதுவோ? எண்ணித்தான் பாருங்கள்!

நெகிழிகளை மண்ணடைத்து நெருக்கடிகள் செய்கின்றீர் 
சகமுழுதும் நீர்மண்ணில் சேரவிடா திருக்கின்றீர்
 
முகமலர்ந்து மண்சிரிக்க முத்துமழை வீழ்ந்ததெலாம்
தகவல்தான் இனியிருக்கும் தரவிருக்கா துணருங்கள்!

இப்படியோர் விடியலதை இயற்கைத்தாய் காட்டிவிட்டால் 
எப்படிநாம் வளர்வதுவோ? ஏடெடுத்துப் படியுங்கள்!

நெரிசலிலும் புகையுடனும் நிறைக்கின்றீர் காற்றலையைப் 
பரிசெனநாம் பூமிக்குப் பகிர்கின்றீர் கொடுவிடத்தை
 
உரிமையென உமக்குமட்டும் உலகமுள தெனநினைத்துத்
 
திரிகின்றீர், மூச்சுக்கே திணறும்நாள் விரைவில்வரும்!

இப்படியோர் விடியலிலே இயற்கைத்தாய் எழுப்பிவிட்டால் 
எப்படித்தான் நீர்நினைப்பீர்? எனக்கேனும் சொல்லுங்கள்!

உயிர்வளர்த்துப் பிறப்புதரும் உன்னதமாம் பெண்ணினத்தை
மையெலெனும் நோயாலே வன்கொடுமை செய்கின்றீர்!
தையலின்றிப் பிறப்பேது? தரணியுந்தான் ஏதினிமேல்
 
புயல்காடாய்ப் புவிமாறும் புல்முளைக்கா இடமாகும்!

இப்படியோர் விடியலுடன் இயற்கைத்தாய் கோபித்தால் 
எப்படிநாம் சிந்திப்போம்? எதிர்வரவை எண்ணுங்கள்!

கற்பனையே இயற்கைத்தாய் கட்டுரைத்த செய்தியெலாம்! 
கற்பனைகள் ஒருநாளில் கண்முன்பு தோன்றிவிட்டால்?
 
அற்புதமாய் நம்முலகம் அணைத்துவைத்த வளமெல்லாம்
 
சொற்பமெனச் சிதையும்நாள் சொன்னபடி வந்துவிட்டால்?

வாழத்தான் இயன்றிடுமோ? வான்கவிதைத் துளிநம்மேல் 
வீழத்தான் திரண்டிடுமோ? வான்பொய்த்தால் மண்ணுக்குள்
 
ஆழத்தான் விதையூன்றி அடுத்தபசி தீர்த்திடுமோ? 
சூழத்தான் நிற்கும்பகை சுற்றாமல் சென்றிடுமோ?

ஒன்றுரைப்பேன் மேதினியீர் உழைத்தல் நமதுபலம்! 
நின்றிருக்கும் வயல்செழுமை நீட்டித்தல் நமதுகடன்!
 
சென்றிருக்கும் திசையெல்லாம் செழிப்பாக்கல் நமதுதொழில்!
 
அன்றிருந்த மண்வாசம் அமைத்தல்பின் இறைவன்வினை!

கூடிநிற்போம் அடுத்துவரும் குவலயத்து மக்களுக்காய்! 
கேடிருக்கும் நிலையகற்றிக் கேணிவெட்டி நீர்கொடுப்போம்!
 
ஓடிருக்கும் வரையினில்தான் உள்முட்டை பலம்பெருக்கும்
 
கூடிருந்தால் தான்மனிதக் குயிலோசை வாழ்ந்திருக்கும்!!

                            வாழ்த்து

செயற்கையன விட்டொழித்துச் செழிப்பாக்கும் இயற்கையினை 
முயற்சியினால் முன்போலே முன்னிறுத்தி வளங்காப்போம்
கயமைகளை வேரறுத்துக் காப்பதுநம் கடமையென
 
இயங்குலகம் நலம்வாழ எடுத்துரைத்தாய் வாழியவே!

No comments:

Post a Comment