'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8


01. பைந்தமிழ்ச்செம்மல்
மன்னை வெங்கடேசன்
    பெயர் : மன்னை வெங்கடேசன்
    பணி : மைய அரசு பணி
    பைந்தமிழ்ச்சோலை நிறுவிய காலந்தொட்டு உறுப்பினர். 
    சோலையின் ஆண்டுத்தேர்வில் முதல் 'பைந்தமிழ்ச் செம்மல்'.
    நற்றமிழாசான், ஆசுகவி பட்டங்கள் பெற்றவர். 
    மடக்கு, சிலேடைக் கவிதைகளில் ஆர்வமிக்கவர்.

கவிஞரை வரவேற்றல்
பண்பினில் ஓங்கிய பைந்தமிழ்ச் செம்மலிவர் 
பண்ணையார் நற்றமிழ் மன்னையார் - அண்ணுதற்(கு)
என்றும் இனிய தமிழ்போல் எளியவர்க்கு
நன்றாய் நடக்கும் மடக்கு

வியன்கவி வித்தக வெங்கடேசரே வருக! 
பயன்கவி பைந்தமிழில் தோய்த்துத் தருக!

கவியரங்கக் கவிதை - மன்னை வெங்கடேசன்

வாழ்த்து
அன்னைத் தமிழாள் அடிவணங்கிப் பாப்பலவும்
என்னை எழுதவைத்த இச்சோலைப் பாவலரோ(டு)
ஏனைப் புலவருள ஏர்மிகு நல்லவைக்கும்
மாணப் பெருந்தலைமை வல்லார் தமிழகழ்வர்
அன்னார்க்கும் அன்போடு வாழ்த்து

போயிற் றெல்லாம் என்றுநொந்து
… புலம்பி நிற்கப் பயனுண்டோ
ஆயிற் றெல்லாம் இனிமேலே
… ஆண்ட வன்றான் காப்பென்று
கோயில் வாசல் நிற்பதனால்
… குறைகள் எல்லாம் தீர்ந்திடுமோ
ஏயிங் கேவா என்சொல்கேள்
… இப்ப டித்தான் விடியும்பார்!

நன்மை தீமை என்றாய்ந்தா
… நாமும் வாக்கை அளிக்கின்றோம்
உண்மை உழைப்பைக் கொடுப்பவரை
… ஒதுக்கிப் பணத்தை எதிர்நோக்கும்
தன்மை கொண்டு வாக்களித்தால்
… தகைமை அரசும் கிடைக்காதே
என்றும் நல்ல அரசைத்தேர்
… இப்ப டித்தான் விடியுமன்றோ! 

சாதி வகுப்புத் தரம்பார்த்துத்
… தந்தம் மோரைத் தேர்ந்தெடுத்தல்
தீதென் றறியாப் பேதைமையால்
… சீர ழிந்து போகாதே
நீதி வழுவா நிலைகொண்டு 
… நேர்மை அகத்து வைப்போரை
ஏதும் செய்து தேர்ந்தெடுப்பாய்
… இப்ப டித்தான் விடியுமன்றோ!

அரசை மட்டும் குறைசொல்லா(து)
… அகத்தைத் தொட்டுக் கேட்டுப்பார்
அரசின் செலவில் பொருள்கிட்ட
… ஆவல் கொண்டு நீயலைந்தால்
பெருமை ஏதும் இங்கில்லை
… பிறகு புலம்பிப் பயனில்லை
இரந்து நிற்கும் மனந்தவிர்ப்பாய்
… இப்ப டித்தான் விடியுமன்றோ!

கடின உழைப்பைத் தாராமல்
… கடிதில் வெற்றி வாராதே
கடிதில் வந்த வெற்றியது
… கால முழுதும் நிலைக்காதே
துடிப்பாய் உழைப்பை நீகொட்டிச்
… சோர்வில் லாமல் முயன்றாலே
இடர்க ளெல்லாம் தீருமன்றோ
… இப்ப டித்தான் விடியுமன்றோ!
நன்றி நவிலல்:

விடியல் வேண்டி நிற்போர்க்கு
… விரைந்து வந்து கவிபாட
இடையில் எனக்கும் வாய்ப்பளித்த
… இந்தச் சோலைக் கென்னன்றி
பிடித்தி ருந்தால் மிகநன்றி
… பெருமை யெல்லாம் சோலைக்கே
நடுவில் ஏதும் பிழையிருந்தால்
… நல்ல மனத்தால் பொறுப்பீரே
வணக்கமும் வாழ்த்தும்

உயர்த்துவதோ உழைப்பு நேர்மை 
… உண்மையினை உணர்க வென்றே
அயர்ந்திருப்பார் கால்கள் ஓட
… அழகாக வழியைத் தேட
மயக்கத்தைத் தெளிவிக்க கின்ற
 
… மாமருந்தாய் விளங்கும் பாடல்
 
வயங்கொளியார் மன்னை யாரை
… வணங்குகிறேன் வாழ்த்து கின்றேன்

No comments:

Post a Comment