'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8

பைந்தமிழ் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்
·         தாயகம் இலங்கை. வாழும் இடம் சுவிட்சர்லாந்து.
·         புலம் பெயர்ந்த சுவிட்சர்லாந்து நாட்டில் தமிழ் மாணவர்களுக்குத் தமிழ்மொழி கற்பிக்கிறார். கவியரங்கம், பட்டிமன்றம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளைத் தயார்செய்து மாணவர்களைக் கொண்டே செய்விக்கிறார்.
·         பைந்தமிழ்ச் செம்மல், நற்றமிழாசான், தமிழ்மணி, புலவர் எனும் பட்டங்களைப் பெற்றவர்,
·         எழுதிய நூல்கள் 3.
1.   எழில்மிகு பூக்கள் (புதுக்கவிதை)
2. உல்லாசப் பறவைகள் (புதுக்கவிதை)
3. அந்தமிழ் அறுபது (மரபு நூல்
கவிஞரை வரவேற்றல்

அழகாய்த் தமிழைக் கற்பிக்கும் 
... ஆற்றல் வாய்ந்த தமிழ்மணியே!
வழங்கா மொழியாய்ப் போகாமல்
 
... வழங்கி வழங்கி மகிழ்வெய்தி
 
முழங்கும் சங்காய் முத்தமிழை
 
... முன்னின்(று) எடுத்துச் செல்வீரே!
 
தழங்கும் அருவி தமிழ்ச்செம்மல்
... தமிழை அள்ளித் தருவீரே!

நிர்மலா அம்மா வருக!
நிலைபெறும் தமிழ்ப்பா தருக!


                         இப்படித்தான் விடியும்

அன்னைத் தமிழை வணங்கி 
... ஆசான் ஆசி பெற்றுக்
கன்னித் தமிழும் போற்றக்
 
... கனிவாய் வீற்றி ருக்கும்
 
அன்புத் தலைமை வணங்கி
... அவையோர் மகிழ நானும்
 
இன்பக் கவிதை ஏந்தி
 
... இங்கு வந்தேன் மகிழ்வாய்

அள்ள அள்ளக் குறையா 
... அன்பில் அகிலம் மலரத்
துள்ளி வினைகள் மறைந்து
 
... துன்பம் விலகி யோட
 
எள்ளி நகைப்போர் வியக்க
 
... இனிமை வாழ்வில் பொங்கக்
 
கள்ள மற்ற மனத்தில்
 
... கனிவு மலர வேண்டும்

நன்மை யாவும் மலர
... நன்றே விடிய வேண்டும்
இன்ன லகன்று மக்கள்
 
... ஏற்றம் என்றும் காண
 
என்னே வாழ்வென் றெண்ணி
... இதயம் போற்றி மகிழக்
 
கன்ன லினிய தமிழும்
... கலக்க மின்றி வளரும்

பஞ்ச மகன்று நாட்டில் 
... பசியும் நீங்கிச் செல்ல
 
நெஞ்சில் மகிழ்வு பொங்க
 
... நேர்மை எங்கும் மிளிரத்
 
தஞ்சம் புகுந்தோர் வாழ்வு
... தரணி சிறக்க மலர
 
வஞ்ச மின்றி யாவர்
 
... மனையும் சிறக்க வேண்டும்

குற்ற மொழிந்து போகக் 
... குடிசை வாழ்வு சிறக்க
அற்றார் பசியும் தீர
 
... அச்சம் நெஞ்சில் நீங்கச்
 
சுற்றம் நெஞ்சம் புகழச்
 
... சுமைகள் தளர்ந்து குறைய
 
வெற்றி குவிந்து வாழ்வில்
 
... மேன்மை யடைய வேண்டும்

என்றன் பாக்கள் எடுத்து ரைக்க
இன்று கொடுத்த இந்த வாய்ப்புக்(கு)
என்றன் நன்றி இனிதே சொல்வன்
அன்னை மொழியின் அவைக்கு நானே!
 

*** *** *** ***

வாழ்த்து

துன்பம் கொன்று தூய வாற்றில்
வென்று வென்று வாழ்க வென்றே
இன்பக் கவிதை ஏந்தி வந்தீர்
நன்று நன்று வாழ்க அம்மே

No comments:

Post a Comment