'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8


பைந்தமிழ்ச்செம்மல் வள்ளிமுத்து.

    தமிழாசிரியர் 
    பைந்தமிழ்ச் செம்மல், ஆசுகவி, நற்றமிழாசான் எனும் பட்டங்களைப் பெற்றவர்.
    தற்காலக் காளமேகப் புலவர். சிலேடை இவருக்குக் கைவந்த கலை. 'இரட்டுற மொழிதல் நூறு' என்னும் நூலைப் படைத்துள்ளார். இலங்கையிலிருந்து வெளிவரும் ஜீவநதி - 2019 தை மாத இதழில் "இரட்டுற மொழிதல் நூறு" நூல்குறித்துச் ‘சிலேடை மேதாவளி’ என்னும் தலைப்பில் சிறப்புக் கட்டுரை வெளிவந்துள்ளது.
    கற்பனைத் திறன் மிகுந்த இயற்கைக் கவிஞர். கவித்துவத்தை அள்ளிக்கொட்டும் கம்பன்.

கவிஞரை வரவேற்றல்

இரட்டுப் படுமா(று) இனிக்கு மாறு 
முரட்டுத் தனமாய் மிரட்டும் பாக்கள்
புரட்டிப் போடும் புதுமைச் சிந்தை
 
வரமே பெற்றோம் வள்ளி முத்தே

வள்ளி முத்தாரே வருக! 
அள்ளி முத்துப்பா தருக!




தமிழ்வணக்கம்..!
சிந்துமுதல் கங்கைவரை செப்பமாய் வாழ்ந்தமொழி
அந்தம் அறியாத அன்னைமொழி - எந்தம்
உளமகிழ நின்றமொழி..! உள்ளுயிரில் நின்று
களமாடச் செய்தமொழி காப்பு..!

தலைவர் வணக்கம்..!
அமிழ்தத் தமிழ்மொழியில் ஆன்றபா வீயுந்
தமிழகழ்வன் ஐயா தலைமைதனில் நான்பாட
என்ன தவம்செய்தேன். யாதும் அறிகிலேன்
இன்பம் மிகுத்தேன் இதற்கு..!

                    இப்படித்தான் விடியும்..!
     
மரமறுத்தோம் மலையறுத்தோம் காடழித்து வீடுசெய்து
… வனவிலங்கு வாழ்வைத்தான் குலையறுத்தோம்..!
உரம்விதைத்தோம் பயிர்சமைத்தோம் கருவுறாத கனிமரத்தால்
… உலகியலின் இயல்பையெல்லாம் கருவறுத்தோம்
கரங்கொடுத்தோம் அறிவியலை வணிகமாக்கத் தலையசைத்தோம்
… கவினியற்கைத் தலையெழுத்தின் கழுத்தறுத்தோம்...!
வரங்கொடுத்த மணலெடுத்தோம் நதிபரவும் வழிதடுத்தோம்
… வருங்காலத் தலைமுறையின் வாழ்வழித்தோம்..!





(வேறு)
ஆழ்துளைக் கிணறுகள் ஆயிரம் செய்தோம்
… அடிப்படை நிலத்தடி நீரினைக் கொய்தோம்
பாழ்துளைப் பலப்பல விண்ணதில் தோற்றிப்
… பனிபடர் பாறைகள் உருகவும் செய்தோம்
கோள்களைத் தினம்தினம் செலுத்தியே விண்ணைக்
… குப்பையின் கூடமாய் மாற்றினோம் தானே
வாழ்விடம் தொலைத்ததால் விலங்குகள் ஊருள்
… வருவதை தினந்தினம் காணுகின் றோமே..!

(வேறு)
ஒன்றை யொன்று சார்ந்து வாழும் 
… உணவு வலையை அறுத்தோம்
    உனக்கும் எனக்கும் உணவு கிடைக்க
 
     … உலக இயல்பைச் சிதைத்தோம்
கன்றைக் கொன்று காம்பில் பாலைக்
 
… கறக்கவா உன்னால் முடியும்
    காலைக் கதிரோன் பிராய்லர் கோழி
 
    … கூவியா தினமும் விடியும்..!

மண்ணை மலடாய் மாற்றி மகசூல்
 
… கேட்டால் எப்படி விளையும்
    மனைக்குக் கற்கள் வயலில் நட்டால்
 
    … மானிடம் எப்படித் தழையும்...!
உன்னை என்னை உலகில் வாழும்
 
… மனிதன் தன்னைக் காக்க
    உயிர்கள் பறவை விலங்கு புழுக்கள் அனைத்தும்
 
    … கொல்லும் அறிவியல் சமைத்தோம்..!
(வேறு)
பனிபடர் புல்லின் பசுந்தலை சூரியன் தேடும்
… படர்கொடி யாவும் மரங்களைத் தேடியே வாடும்
கனிபல ஈனும் செடிமரம் கொடிகளும் நீங்கும்
… கணினியில் அரிசி விளைக்கவா நம்மால் ஆகும்.!
மனிதனை மனிதன் உயிர்க்கொலை செய்நிலை தோன்றும்
… வளநிலை நீங்கி பாலையாய் பூமியே மாறும்..!
இனிவரும் காலம் இயற்கையை அழித்தல் தொடர்ந்தால்
… இப்படித் தான்விடி யுமுலகில் வெறுமை யாலே.!



வாழ்த்து

இயற்கை அழிந்தால் இனிய வாழ்விலை
செயற்கைச் சேற்றைப் பூசிக் கொள்வதா?
முயன்றால் முடியாச் செயலிவ் வுலகிலை
 
நயந்தீர் நற்சொல் தலைவா வாழிய!


 


No comments:

Post a Comment