'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 14, 2019

மழை


கவிஞர்
சரசுவதி ராசேந்திரன்

கடலதன் நீரைக் கதிரவன் கடத்தக்
    கருமுகில் கனமழை தருமே
உடமைகள் தமைக்காத்(து) உயிரினம் பேணி
    உய்யுமே உலகமும் மழையால்
இடரது களையும் இன்பமும் சேர்க்கும்
    இறையினால் பொழிந்திடும் மழையே
கடலினில் அலையும் கயல்களைப் போல
    களிப்பினால் துள்ளுநம் மனமே!

பேருந்துப் பயணம்


கவிஞர்  சரண்ஜா செல்வரெத்னம்
முல்லைத்தீவு, இலங்கை.

தொலைதூரப்
பயணங்களை
எண்ணியே

கனவுகள்
நகர்ந்தாலும்… இன்று
நனவாய்

நீண்ட பயணம்
நிலையில்லா
ரசனைகள்

புல்வெளிகளும்
தரைகளும்
புல்லரிக்கும்
வாடைக் காற்றும்

உதயமாகும் சூரியன்
மரத்திடைவெளிகளில்
கதிர்கள் தெறிக்க

பேருந்து யன்னலில்
பட்டாம் பூச்சி
மோதி விளையாடி

மண்குடில்கள்
மாளிகைகள்
மனத்திற்குள்

கற்பனை
வாத்தியத்தின்
ஓசையில்

கடந்து
சென்றேன்
பயணங்களை.

கீழடியால் பெற்ற கெலிப்பு


கவிஞர் பொன் இனியன்
kuralsindhanai@gmail.com  8015704659

வைகைத் துறைப்பரப்பில் வாய்த்தநம் கீழடியில்
உய்கை யுடைத்தாய் ஒளிர்நா கரிகம்
உலகளந்த வாறாக ஆங்கிருந்த வண்ணம்
நலமுரைக் கின்றதே நன்கு                            1

ஆய்வின் கருத்தோ அறிவார்ந்த தன்முடிபாய்த்
தூய்தமிழர் வாழ்ந்த துலக்கெல்லாம் தோன்றி
விளங்கும் படியாக வீறார் பெருமை
நலத்ததாக் காட்டுது நன்கு                            2

தொல்லியல் வல்லார் துறைசால் அறிஞர்கள்
சொல்லுவ தெல்லாம் சுடர்த்தன – எல்லே
மலர்க்கொடி என்னென்பேன் கீழடியின் பீடு
வலக்கை யடியா யுள                                     3

கிறித்துவம் வந்து கிளத்துமுன் னிங்கு
விரித்தனர் கீழடி தன்னில் – ஒருப்பட்(டு)
இருந்தனர் ஓரறுநூ றாண்டுக்கு முன்னே
இருந்தமிழின் மேன்மை யிது                         4

தமிழர்தம் மேன்மை தரணியில் ஓங்கி
அமிழ்த்தற் காகா அடையாள மானயிவை
போலுமின்ன மேலு(ம்)பல வுண்டாகக் கீழடியில்
நாளுமவை கிட்டும் நமக்கு                           5

மட்கலய வண்ணம் மனங்கவர் கோட்டெழுத்து
பெட்புற வில்லம் புமதன்மேல் கீறலாய்
வீற்றாய் இலங்குதல் காண்பவர் எல்லார்க்கும்
சாற்றும் தமிழர்தம் சால்பு                             6

இரும்பாலாம் ஆணிக்கு முன்எலும்பால் கீற்றித்
தரும்பால ராயிருந்த தெல்லாம் தெரிய
வரும்பால தன்றோ அடடாநம் முன்னோர்க்(கு)
அரும்பிய ஆற்ற லது                                       7

மணற்பாங்கு நீரூற்றை மக்கட் பயன்கொள்ள
கணக்காகக் கச்சிதமாய்ச் செய்த உறைகிணறு
நுட்பத்தை அன்றே அறிந்திருந்தா ரென்பதனை
பெட்புறக் காட்டும் பிளந்து                           8

செங்கற்சுண் ணாம்பாற் செறிந்த பெருஞ்சுவர்கள்;
அங்குண் டவைஅரண் போல்தோற் றுதுமற்றும்
எங்கும் குழாய்பதித்(து) ஏற்றநீர் மேலாண்மை
தங்கும் படியாந் தகவு                                     9

அரண்மனை போல்வீடும் ஆழ்கிணறும் என்றே
திறமான மேலாண்மை தேர்ந்தபெரு வாணிபம்
என்றிவற்றின் எச்சமாய் இன்றளவும் காட்டுது
நன்றாயந் நாகரிகத் தை                               10

கடல்கோள் பெருஞ்சீற்றம் காலத்தின் நீட்சி
படல்ஒல்லா மாற்றங்கள் பல்விதத்தும் தாங்கிநின்று
பாரோர்க்(கு)  உணர்த்திடவே  இன்றளவும்  எஞ்சலாய்ச்
சீரார்ந்த  கீழடியில் சீர்த்து                             11

கீழடியில் தோண்டிக் கிடைத்ததெலா மாவணமாய்ப்
பாழடிக்குப்  போகாமல்  பார்த்துப் பொறுப்பாய்த்
தொகைப்படுத்திப் பொத்திநாம் காத்துப் புவியோர்
வகைப்படக் காணவைப் போம்                    12

தொல்லியல் ஆய்வு தொடர்ந்து நடைபெற
எல்லா வகையானும் ஏற்றதுணை செய்வதுதான்
வல்ல நடுவரசும் வாய்த்தநம் ஆள்வோரும்
கொள்ளத் தகுவதாம் குறி                              13

கீழடி ஆய்வைக்  கிறுக்(கு)ஆர் அரசியலார்
பாழடிக்கச் செய்யாத வாறாகப் பார்த்து 
நடுநிலை நோக்கோடு நானில மெல்லாம்
படுபாங்கில் வைப்போம் பரிந்து                  14

நடுப்பக்க நயம்


மரபு மாமணி
பாவலர் மா.வரதராசன்

நற்றிணை காட்டும் நயத்தகு உறவு

அதுவொரு இனிமையான மாலை நேரம். இருள் கவிந்தும் கவியாததுமாகிய பொன்மாலைப் பொழுது. பறந்து திரிந்து கொண்டிருந்த பறவைகள் தத்தம் கூடு திரும்பிக் கொண்டிருந்தன. கொண்டு வந்த இரையைத் தம் குஞ்சுகளுக்கு ஊட்டும் "கீச்..கீச்...” ஒலிபரப்பிய அந்தப் புன்னை மரத்தின்கீழ் காதலர் இருவர் தனிமையில் பேசிக் களிப்பெய்திக் கிடந்தனர். காதலர் சந்தித்தால் நேரம் போவதா தெரியும்? இந்த உலகமே நாம் இருவர் மட்டும்தான் என்ற நினைப்பில் கிடந்த அப்போழ்து காதலனின் கைகள் தலைவியைத் தழுவப் போந்தன.

சட்டென்று விலகினாள் அவள். மீண்டும் அவன் முயன்றான்... மீண்டும் அவள் விலகக் கடுஞ்சினமுற்ற தலைவன், "ஏன், நான் தொட்டால் என்ன? இதற்குமுன் பலமுறை தழுவியிருக்கிறேனே... இப்போது மட்டும் என்னவாம்?" என்று கேட்டான். தலைவியோ, "எனக்கு முன் பிறந்த என் அக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு முன் இவ்வாறிருக்க நாணமாயிருக்கிறது." என்றாள்.

தலைவன் சுற்றுமுற்றும் பார்த்தான். சற்றுத் தொலைவில் அதோ அந்த வேம்பின் நிழலில் தலைவியுடன் வந்திருந்த தோழி மட்டுமேயிருக்க மற்றபடி ஒருவருமேயில்லை. தலைவனுக்குச் சினம் மிகுந்தது.

"பொய்யுரைக்கிறாயா? " என்றான்.
"இல்லை... உண்மையைத்தான் உரைக்கிறேன்" என்றாள்.
"இங்கு நம்மையும் உன் தோழியையும் தவிர வேறொருவருமே இல்லை" என்றான்.
"என் தமக்கையும் பார்த்துக்கொண்டிருக்கிறாள்" என்றாள் அவள்.

இப்போது தலைவனுக்குச் சினம் விலகி ஊடலேற்படத் திரும்பியமர்கிறான். தலைவியோ அவனைப் பார்த்தபடி... ஒருவிதத் தவிப்புடன் அமர்ந்திருக்க... தொலைவிலிருந்து இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த தோழி, 'ஏதோ ஊடலுண்டாகியிருக்கிறது' என்பதை ஒருவாறு ஓர்ந்தவளாக அவர்களிடத்தே சென்றாள்.

"என்னாயிற்று?" தோழி.
"அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை போலும்" தலைவன்.
"அப்படியேதுமில்லை. நம் அக்கை பார்ப்பதால் விலகினேன். அவர் தவறாகப் புரிந்துகொண்டார்" தலைவி.

தோழிக்கு அனைத்தும் புரிந்துவிட்டது. மென்மையாக நகைத்தவாறே தலைவனை நோக்கி இவ்வாறு கூறுகிறாள்.

"யாழில் புதிய பண் கூட்டிப் பாணர் எழுப்பும் விளரி இசை போல் வலம்புரிச் சங்குகள் ஒலி எழுப்பும் நெய்தற் றுறையின் தலைவனே! எங்கள் அன்னை தன் சிறுவயதில் தோழியருடன் விளையாடும்போது மணலுக்குள் புன்னங்கொட்டையை மறைத்து விளையாடும் போது அதனை எடுக்காமல் மறந்துவிட்டுச் சென்றுவிட அது முளைத்துக்கொண்டது. பின்னர் எமக்கு அதைக் காட்டிய எம் அன்னை "அது உமக்கு நுவ்வை (உன்னுடன் பிறந்தவள்) ஆகும்" என்று சொன்னாள். எனவே எமக்கு உண்ணக் கொடுத்த பாலை அதற்கு ஊற்றி வளர்த்து வந்தோம். இப்போது அது மரமாக நிற்கிறது. தலைவ! அதன்கீழ் உன்னோடு சிரித்துக்கொண்டு விளையாட வெட்கமாக இருக்கிறது. (எம் உடன்பிறந்தவள் பார்த்துக்கொண்டிருக்கும் போது உன்னோடு எப்படி உறவாட முடியும்?)" என்கிறாள் தோழி.

"உயர்ந்த இதன் நிழலில் பிறவும் பார்த்துக் கொண்டிருக்கும்போது பட்டப் பகலில் நீர் என்னைத் தழுவ முனைவது எனக்குக் கூச்சமாக இருக்கிறது." தலைவி தலைவனிடம் இப்படிக் கூறுகிறாள்.

அடடா...! என்னே உயர்ந்த உறவு! அஃறிணையான மரத்தைத் தன் அக்கையாகக் கொள்ளும் மனப்பாங்கு எத்துணை உயர்வானது. அஃறிணையாயினும் அவற்றிற்கும் உணர்வுண்டென்று சொன்ன தொல்காப்பியப் பாட்டன் வழியில் வந்தவரல்லவா நாம்.!? அதை மெய்ப்பிக்கும் காட்சியன்றோயிது? மரப்பாச்சி பொம்மைக்கும் மாராப்புப் போட்டு விளையாடக் கற்றுக் கொடுத்ததல்லவா நம்மினம்? பெற்றவன் தீண்டலும் முற்றும் வரையே (பூப்பருவம்) என்கிறதே நம் பண்பாடு.

இத்தகைய பண்பாட்டுத் தொட்டிலில் வந்து பிறக்க "என்ன தவம் நாம் செய்தோம்?" ஆகா... ஆகா... என்று அகமகிழ்ந்து கிடப்போம்... அன்பியைந்த வாழ்வை அகவிலக்கணத்தை மீறாது காப்போம்.

இதோ அந்த உறவாய் இயைந்த உணர்வு பாடல்...

(நெய்தல் திணை: பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது; குறிபெயர்த்தீடுமாம். ஆசிரியர் பெயர் தெரியவில்லை)

விளையாடு ஆயமொடு வெண்மண லழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்
றன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளரிசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்
துறைகெழு கொண்கநீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமா ருளவே!
(நற்.172)  

குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 8


அறுசீர் விருத்தம்

1.       கவிஞர் சுந்தர ராசன், சென்னை

ஆழ்தமிழ் கற்று வாழ்க!
    அகமகிழ் வோடு வாழ்க!
வாழ்தமிழ் வளர்த்து வாழ்க!
    வளமெலாம் பெற்று வாழ்க!
சூழ்தமிழ் சுவைத்து வாழ்க!
    சுறுசுறுப் போடே வாழ்க!
யாழ்தமிழ் இசைத்து வாழ்க!
    யாவரும் நலமே வாழ்க!
2.       கவிஞர் சுப முருகானந்தம், மதுரை

ஆழ்தமிழ் கற்று வாழ்க
    அகமகிழ் வோடு வாழ்க
வாழ்வறம் கண்டு வாழ்க
    வள்ளுவம் போற்றி வாழ்க
சூழ்பகை வென்று வாழ்க
    சுற்றமும் தாங்கி வாழ்க
பேழ்மனம் பெற்று வாழ்க
    பெற்றவர் வாழ்த்த வாழ்க

3.       கவிஞர் பொன். இனியன், பட்டாபிராம்

வாழ்வியல்  தன்னை  நன்கு
    வரையறை  செய்து  காட்டும்
தூய்தமிழ்  தொன்னூல்  சொன்ன
    தொடர்மர  பெல்லாம்  போற்றி
ஆய்வொடு  சுட்டு கின்றார்
    அரியராம்  வரத  ராசர்
ஆழ்தமிழ் கற்று வாழ்க
    அகமகிழ் வோடு  வாழ்க

4.       கவிஞர் தமிழகழ்வன், திருவண்ணாமலை

வாழ்க்கையில் வாய்க்கும் யாவும்
   வகைவகை அறிந்து வாழ்க
தாழ்ச்சிகொள் எண்ணம் வேண்டா
   தரணியே உனக்கா கத்தான்
காழ்ப்புணர் வகன்றோ டட்டும்
   காய்ப்பன காய்ந்தோ டட்டும்
ஆழ்தமிழ் கற்று வாழ்க
   அகமகிழ் வோடு வாழ்க

குறட்டாழிசை

5.       கவிஞர் சரண்ஜா செல்வரெத்னம், முல்லைத்தீவு, இலங்கை

வாழ்வினில் போற்றும் பேறே
    வகையினில் கண்டு கொண்டேன்
ஆழ்தமிழ் கற்று வாழ்க!              
   அகமகிழ் வோடு வாழ்க!