'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 14, 2020

பன்னிருவர்

பைந்தமிழ்ப் பாமணி சுந்தர ராசன்

ஆழ்வார் திருவடிகளே சரணம்!

வேதம் தமிழ்செய்த வித்தகர்கள் பன்னிருவர்

பாதம் பிடிக்கின்ற பாக்கியத்தால் - நாதனவன்

வாழும் பரமபத வாழ்வுறுதி செய்திடலாம்

சூழும் பிறப்பிறப்பைச் சுட்டு!

 

1.       பெரியாழ்வார்

சுட்டி இறைப்பொருளைச் சூழ்ந்தார்க் குணர்த்தியே

கட்டிக் கிடந்தகிழி தான்தாழ - வெட்டிய

விட்ணுசித்தர் பாதம் வியந்தேத்து வாய்நெஞ்சே!

உட்பொருளைக் காண்பாய் உணர்ந்து!

 

2.       ஆண்டாள்

உணர்வில் அரங்கத் துறங்குபவன் மேவக்

கனவினிலே கண்டகவி செய்தே - நனவிலுமே

சூடிக் கொடுத்தாளின் சொல்லைத் தினந்தோறும்

பாடிப் பரவுதலே பண்பு!

 

3.       குலசேகராழ்வார்

பண்பில் இறையடியார் பான்மை உணர்த்திடவே

தன்கை அரவக் குடங்கொடுத்த - மன்னவனாம்

வஞ்சிக்கோ பாதம் வழுத்திப் பயமின்றித்

துஞ்சிடலாம் ஓடும் துயர்!

 

4.       திருமழிசையாழ்வார்*

துயரில்லை கர்மத் தொடர்பில்லை மாலைச்

செயலாலே பாய்சுருட்டச் செய்த - செயலாலே

அன்பர்க்குப் பின்னே அரியென் றுணர்த்திவைத்த

பொன்மழிசைப் பூபதியைப் போற்று!


5.       தொண்டரடிப் பொடியாழ்வார்

போற்று திருமாலைப் போற்றித் திருமாலை

சாற்றியருள் செய்தார் சரனிணையே! நாற்றமலர்த்

தொண்டிட்ட தொண்டர் அடிப்பொடிக்கே என்றென்றும்

தெண்டனிட்டு நெஞ்சே தெளி!

 

6.       திருப்பாணாழ்வார்

தெளிக! திருமால் திருமேனி வண்ணம்

பொலியும் ஒருபத்தில் பொத்தி - அளித்த

திருப்பாணர் வாக்கைத் தினம்பாடி நெஞ்சே!

விருப்பெல்லாம் கொள்ளும் விடை!

 

7.       மதுரகவியாழ்வார்

விடைசொற் குருதாள் விரவிப் பணிந்தே

மடைமீறி வந்த மணிபோற் - தடையின்றித்

தேன்கவிசெய் எங்கள் மதுரகவி யாழ்வார்தாள்

தான்வணங்கத் தானே தலை!

 

8.       திருமங்கையாழ்வார்

தலையேற்றி உன்னைநிதம் தாள்பணிவேன் நெஞ்சே!

நிலையேற்றி என்னைநீ வைத்தால்! அலையாய்க்

கலியனவர் சொன்ன கவியாவும் சொல்லிப்

பொலிவாய் உனக்கே புகழ்!

 

9.       பொய்கையாழ்வார்

புகழ்வேண்டேன் நில்லாப் பொருள்வேண்டேன் இங்கே

நிகழ்கின்ற யாவும் நிகழ்த்தும் - மருளில்லா

மாயோன்கைச் சங்கம் மலர்ந்த திருப்பொய்கைச்

சேயோன் நினைவெனக்குச் சீர்!

 

10.    பூதத்தாழ்வார்

சீர்வேண்டின் வாழ்வில் செயம்வேண்டின் இப்புவியில்

நேர்கின்ற யாவும் நிகழ்த்தும் - ஓர்மாலின்

கைவாழ் கதையாம் கடல்மல்லை பூதத்தார்

மெய்யடியை நெஞ்சேநீ மேவு!

 

11.    பேயாழ்வார்

மேவுமருள் வேண்டின் மிடியறியா நாள்வேண்டின்

யாவும் நடத்துகின்ற யாதவனாம் - தேவகியின்

நந்தன்கை நந்தகமாய் நம்மயிலை கேணியிலே

வந்துதித்தார் தாளை வழுத்து!

 

12.    நம்மாழ்வார்

வாழ்த்துமினோ எங்கும் வரிசங்கம் ஊதுமினோ!

பாழ்கலியை வேதத்தால் பாழ்செய்தே - கூழ்செய்ய

தென்குருகூர் சேர்ந்த திருப்பயனாம் மாறனெனும்

அன்புருவே எங்கள் அரண்!

நடுப்பக்க நயம்

கம்பனைப் போலொரு… பகுதி – 8

மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

தமிழ் நெடுங்கணக்கே தேவையற்றதெனக் கூறிய பெரியார், எவ்வித மொழியறிவும், மொழியாய்வு மின்றி எழுத்துகளைச் சீர்திருத்துகிறேன் என்று தமிழைச் சிதைக்க முற்பட்டார். ஆனால் பெரும்பான்மைத் தமிழறிஞர்களால் அத்திட்டம் தோல்வியடைந்தது.

ஐகார உயிர்மெய்யெழுத்துகளான லை, ளை போன்ற இக்கால வடிவங்கள்கூட, அவருடைய அச்சு எழுத்துக் கட்டை தேய்ந்துபோனதால் மாற்று வடிவமாக எழுதப்பட்டவையே. அது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டவையல்ல. முன்னரே மற்ற ஐகார உயிர்மெய்களான கை, ஙை… போன்ற எழுத்துகளில் இருந்த வடிவங்களே. எனவே லை, ளை என்னும் வடிவ மாற்றங்கள் ஏற்கப்பட்டன.

ஐ, ஔ இரண்டுமே தேவையற்றதென்றும், அய், அவ் என்ற எழுத்துகளாலேயே அவற்றைக் குறிக்கலாம் என்றும் அந்த இயக்கத்தாரின் நிலைப்பாடும் மிகமிகப் பிழையானதே. இதைக் குறித்துத் தனியே ஒரு கட்டுரை வரைகிறேன்.

இப்படி தமிழினத்தையும், தமிழ் மொழியையும் சிதைத்து, திராவிடத்தை முன்னிறுத்தித் ‘தமிழர்’ என்ற அடையாளத்தை இல்லாமற் செய்வதற்காகத் தன் விடுதலை இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தவர் பெரியாரும் அவருடைய தொண்டர்களும். தமிழ் என்று வருமிடங்களில் அடைப்புக் குறிக்குள் திராவிடம் என்றும், திராவிடம் என்று வருமிடங்களில் தமிழ் என்றும் எழுதும் வழக்கத்தைத் தவறாமல் செய்துவந்த பெரியாரின் உட்கிடை என்னவாக இருக்கும்? என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

திராவிடம் என்ற பெயரைச் சொல்லி நம்மினத்தையும், மொழியையும், நாட்டையும் சிதைத்து, திராவிடம் என்ற தமது சிறுபான்மை இனத்துக்குள் திணிக்கவும், தம்மினத்தை நிலைபெறச் செய்யவுமே அவர்களுடைய அடிப்படை எண்ணம் என்பதை உண்மைத் தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த திராவிடச் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக அவரைப் பின்பற்றும் தொண்டர்கள் ‘திராவிட அடிவருடி’யாகித் தமிழினத்தையும், தமிழைப் பற்றி உணர்வாகப் பேசுவோரையும் ‘ஆரிய அடிவருடி’யென்று பேசி அடக்குவதைக் கீழ்த்தரமான வழக்கமாகவைத்துக் கொண்டுள்ளனர்.

ஆக.. முற்கூறப்பட்ட பல்வேறு தரவுகளினால் நாம் யார்? நம் இனம் எது? நம் நாடு எது? திராவிடம் என்றால் என்ன? அதைத் தூக்கிச் சுமப்பவர்கள் யார்? அவர்களுக்குப் பின்புலம் என்ன? அவர்களின் நோக்கமென்ன? என்பனவற்றைப் பார்த்தாகி விட்டது. சரி.. இனி... கம்பனுக்கு வருவோமா?

ஈ.வே.ரா. அவர்களுக்குத் தமிழகத்தில் திராவிடத்தை ஊன்றுவதற்குப் பெரிதும் உதவியன சாதியப் பாகுபாடும், பார்ப்பன எதிர்ப்புமேயாகும். சாதியொழிப்பையும், ஆன்மீக மூடத்தனத்தையும் மட்டுமே எதிர்கொண்டு அவர் போராடியிருப்பாரே யானால் மாபெருந் தலைவரெனலாம்.

ஆனால் அவருடைய நோக்கம் இவையல்ல. இவற்றின் வழியே திராவிடத்தை வேரூன்றித் தமிழரையும், அவருடன் இணைந்து வாழ்ந்திருந்த, பிறப்பால் தமிழரென வாழ்ந்திருந்த தமிழுணர்வு மிக்க பார்ப்பனர்களையும் பிரித்தாளும் சூழ்ச்சியால் பிரித்து எதிரிகளாக்கித் தமிழினம் என்ற அடையாளத்தை அழிப்பதேயாம்.

அருந்தமிழுக்கு அளப்பரிய பெருந்தொண்டுகள் செய்த பல தமிழ்ப் பார்ப்பனர்களை எள்ளி நகையாடியும், அவர்தம் தொண்டுகளை இழித்தும் பழித்தும் பேசியதாலும் நந்தமிழ் அந்தணர்கள் வேறு வழியின்றி மூலவேரான ஆரியப் பார்ப்பனருடன் அஃதாவது தேசிய நீரோட்டத்துடன் கலந்துவிட்டனர். இந்த விடயத்தில் பெரியாரின் எண்ணம் முழுமையாகவே ஈடேறியது.

தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற கருத்தியலில் பெரியார் இருவேறு முரண்பட்ட கருத்துகளையே கொண்டிருந்தார் என்பது அவருடைய எழுத்துகளாலும், பேச்சுகளாலும் நன்குணரலாம். 'தமிழுக்கு உழைத்தார்' என்று சிலர் சொல்வது தன்னுடைய அமைப்பு வளர்ச்சிக்குத் துணையாக அமைந்த செயல்களையே. மனத்தளவில் அவருக்குத் தமிழ்மேல் பெருவெறுப்பே இருந்தது என்பதை மறுக்கமுடியாது.

(கம்பனைக் குறித்த இந்தக் கட்டுரைக்கு இவ்வளவு செய்திகள் போதும். மேலும் பல செய்திகளையும், உண்மைகளையும் அறிய வேண்டுமானால் உண்மையான தமிழுணர்வுடன் தேடுங்கள் தெளிவடைவீர்)

ஆகப்... பார்ப்பனர்களை எதிர்க்க வேண்டுமாயின் இறைமறுப்பும், இறைமறுப்பு எனும்போது ஆரியப் பார்ப்பனர்களின் முதன்மைக் கட்டுகளான இராமாயணமும், மகாபாரமும் தவிர்க்க முடியாத இலக்காயின.

வலிமையாகக் கட்டமைக்கப்பட்ட ஆரியப் பார்ப்பனியத்தின் வேரை அசைக்க. அவர் பயன்படுத்திக் கொண்ட ஆயுதம் திராவிடம் என்னும் சாட்டை மட்டுமே. அந்தச் சாட்டையால் ஆரிய மரத்தை அடிக்க முடிந்ததே தவிர அசைக்கவோ, பிடுங்கவோ, சாய்க்கவோ முடியவில்லை.

திராவிடத்திற்கு மாறாக அவர் இறைமறுப்புக் கொள்கையைத் தமிழியச் சிந்தனையுடன் தமிழியப் பண்பாட்டு ஆய்வுடன் எதிர்கொண்டிருந்தால் அந்தத் தமிழியப் பண்பாடு என்னும் கூரிய வாளால் ஆரிய மரத்தை வேரோடு சாய்த்திருக்க முடியும்.

ஏனெனில், சாதியக் கட்டமைப்பு என்பதையும் தாண்டி, வாழ்வியல் உண்மையும் இணைந்திருந்ததே தமிழர்தம் சமயநிலை. ஆன்மீகத்தை மருத்துவத்துடன் இணைத்துப் பொதித்து வாழ்ந்தவர் நம் முன்னோர். அவர்தம் வாழ்வியல் நெறிகளை இன்றைக்கும் புறந்தள்ளிவிட முடியாதபடி நந்தமிழர் வாழ்வியலும், இறைமையும் ஒன்றோடொன்று பிணைந்திருந்தன என்பதை ஆய்ந்துணரலாம்.

"சாதியம் என்ற கட்டமைப்புக்கும், சமயம் என்ற கட்டமைப்புக்கும் மலையளவு வேறுபாடுள்ளது. இவையிரண்டும் ஒன்றுக்கொன்று வெவ்வேறானவை யாகும்".

…தொடரும்…

பெருநோய்

பைந்தமிழ்ப் பாமணி சரஸ்வதிராசேந்திரன்

பஃறொடைவெண்பா

 

வீதியுலாப் போனதினால் வீழ்ந்தேனே தீநோயில்

ஓதியவர் எல்லாம் ஒதுக்கிவிட்டு நின்றேன்

செருக்காய்த் திரிந்தேன் சிறுமையாய்ப் போனேன்

பெருக்கியே ஆட்டும் பெருநோயில் வீழ்ந்து

தெளிவிலா உள்ளத்தால் தீநோயும் பற்றி

ஒளிந்து கிடப்பதோ ஓய்வு

 

ஓய்வு கொடுக்கத்தான் ஓடோடி வந்ததோ

மாய்ந்துதான் போகிறார் மக்களும் ஏங்கியே

என்றுதான் தீருமோ இத்துன்பம் பூமியில்

மன்றாடிப் பார்க்கும் மருத்துவரும் நோயிடம்;

போதுமே சென்றிடு பொல்லாத நோயேநீ

ஏதும் குறையில்லை இங்கு

கண்ணதாசா

பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்

பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


கற்றோரும் மற்றோரும் எளிதாக விளங்குவண்ணம்

    கவியரசா நீவடித்தாய் பாட்டு !

காற்றோடு கலந்தினிக்கும் காலமெல்லாம் புகழ்கூட்டும்

    கண்ணதாசா உனக்கில்லை மாற்று !!

சொற்சுவையும் பொருட்சுவையும் நயங்கொஞ்சும் எழில்நடையும்

    துள்ளிவரு மின்சந்தத் தோடு

சுகமாக நெஞ்சள்ள சோகத்தை யும்மறந்து

    சொக்கித்தான் போகிறோமே கேட்டு !!

வற்றாத ஊற்றாக வளமான தத்துவங்கள்

    வாழ்விற்கு நல்லவழி காட்டும் !

மனநோய்க்கு மருந்தாக உறவாட விருந்தாக

    மயிலிறகாய் வருடித்தா லாட்டும் !!

முற்றாத இளமையொடு குன்றாத பொலிவோடு

     முத்தாக ஒளிவீசி மின்னும் !

முப்போதும் தப்பாமல் திக்கெட்டும் ஒலித்திருக்கும்

     முத்தையா நின்பாக்கள் என்றும் !!


பட்டுவேட்டிச் சட்டையுடன் மிடுக்கான நடை போட்டுப்

     பாட்டெழுத வருமுன்றன் தோற்றம்

பார்ப்போரைக் கவர்ந்திழுக்கப் பாவலநின் உள்ளத்தில்

     பழகுவதில் என்றுமில்லை மாற்றம் !

பொட்டுவைத்த நெற்றியிலே வெண்ணீறும் எடுப்பாகப்

    பொன்னொளிரும் நிறத்தழகைக் கூட்டும் !

பொலிவான வதனத்தில் பொங்கிவரும் இதழோரப்   

     புன்னகையில் சொக்கிவிடும் கூட்டம்

கட்டுடைத்த வெள்ளமெனத் தடையின்றித் துள்ளிவரும் 

    கதைகேட்ட அக்கணமே பாட்டு !

காண்போரும் விழிவிரிய அசையாமல் நின்றிருக்கக் 

   கண்ணதாசா நீகவிதை ஊற்று !

பட்டங்கள் பெற்றதில்லை கல்லூரி போனதில்லை

   பாட்டாலே பாடங்கள் சொன்னாய் !

பரம்பொருளின் அருளாசி நின்றனுக்கு வாய்த்ததனால்

    பார்போற்ற புகழீட்டி நின்றாய்! !!

 

தெவிட்டாத பாசமைத்தாய் தினந்தோறும் பருகுகிறோம்

    தீரவில்லை இன்னுமெங்கள் தாகம் !

தேமதுர மொழியினிலே தேவசுக மீட்டலிலே

    தென்றலுக்கும் பிறவாதோ மோகம்?

கவிமகனே! உன்படைப்பை மிஞ்சுதற்கு நீயிந்தக்

    காசினியில் பிறப்பெடுப்பாய் மீண்டும் !

கவல்போக்கும் களிம்பாகிக் காயத்தை ஆற்றிவிடக்

    கடவுளுனை இங்கனுப்ப வேண்டும் !!

செவிகுளிர இனுஞ்சொல்லி நம்பிக்கை ஒளியூட்டச்

    சித்தனுன்றன் தத்துவமும் வேண்டும் !

திருநீற்றுக் கீற்றோடு நெற்றியிலே பொட்டிட்டுச்

    சிறுகூடற் பட்டியானே வாராய் !!

புவியினிலே உன்புகழைப் பாடுவதே தன்பணியாய்ப்

    போற்றிவாழும் அன்பருளர் பாராய் !

பொலிவான சிலைவைத்துப் பெரும்பேறாய் அதைநினைத்துப்

    பூசிப்போர் பூரிக்க வாராய் !!!

இற்றைத் திங்கள் இவரைப் பற்றி


 பைந்தமிழ்ச்செம்மல் 
தமிழகழ்வன் சுப்பிரமணி


கட்டுரையாக்கம்:

பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து 

‘அகடவிதமது’ என்னும் கவிதைத் தொகுப்பின் மூலம் தனது முதல்நூலின் தலைப்பினாலே அனைவரையும் திக்குமுக்காடச் செய்த இளங்கவி தமிழகழ்வன். சொல்லாற்றலில் வல்லாற்றல் கூட்டும் சுந்தரக் கவிஞரான தமிழகழ்வன் இருபத்தோராம் நூற்றாண்டில்  மரபு கவிதையின் அத்தனை வடிவங்களிலும் புகுந்து விளையாடும் ஆற்றல் மிக்கவர். இற்றைத்திங்கள் தமிழ்குதிரின் கதாநாயகனாக வருகிறார். வாருங்கள் அவரைப் பற்றி அறிந்து கொள்வோம்..

தீபங்கள் போற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1987ஆம் ஆண்டு சேகர் – பூமாதேவி இணையோரின் தவப்புதல்வனாகத் தோன்றியவர் சுப்பிரமணி. தமிழ்மீதுள்ள காதலால் தமிழகழ்வன் என்னும் புனைபெயரைக் கொண்டார்.

பள்ளிப் பருவத்திலே பாடப் பகுதியாக யாப்பிலக்கணம் இடம்பெறாத வகுப்பிலும் தனக்குக் தமிழ் கற்பித்த ஆசிரியர்கள் மூட்டிய ஆர்வத்தீயால் யாப்பிலக்கணம் கற்றுத்தான் பாட்டெழுத வேண்டும் என முயன்று மரபு கவிதைகளை மட்டுமே கைக்கொண்டு வளர்ந்தார்.

பைந்தமிழ்ச் சோலையின் ஆசான் மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் அவர்களிடமும் பைந்தமிழ்ச் செம்மல் கவினப்பன், பைந்தமிழ்ச் செம்மல் முனைவர் அர.விவேகானந்தன் ஆகியோரிடமும் தமிழ் இலக்கணங்களைக் கற்று முறையாக மரபு கவிதைகளை எழுதி வருகிறார். ‘புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்’ என்பதற்கேற்பப் பைந்தமிழ்ச் சோலையின்மீதும் பாவலர் மா.வரதராசனார் மீதும் அளவில்லாப் பற்றுடையவர்.

பொறியியல் பட்டம் பெற்று மென்பொறியாளராய்த் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி னாலும் அகவல் பாடும் ஆற்றலில் அறிந்து கொள்ளலாம் அன்னாரின்  தமிழ்ப்பற்றை. ஆர்வத்துடன் செய்யும் செயலுக்கு எத்தனை தடைகள் வந்தாலும் அவை தடக்கற்களாக மாறிவிடும் என்பதுபோல, பள்ளிப்படிப்போடு தமிழைக் கற்றல் நின்றுவிடக் கூடாது என, இளநிலைத் தமிழிலக்கியமும் பயின்றுள்ளார்.

கதை, கவிதை, கட்டுரையென இலக்கியத் துறையின் அத்தனை வடிவங்களிலும் வலம் வரும் இளைஞரான தமிழகழ்வன் அவர்கள் பைந்தமிழ்ச் சோலையின் மின்னிதழான தமிழ்க்குதிர் இதழின் முக்கிய ஆசிரியராவும் பணியாற்றுகிறார்.

வாள்வீச்சென ஒளிவிசும் மிகச்சிறந்த பாவகைகளைப் படைக்கும் இவர் கவியரங்க  மேடைகளிலும் அறிமுகமாகி அலங்கரிக்கின்றார்.

அதோடு மட்டுமல்லாமல் மதுரைத் தமிழிலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தில் (Project Madurai) தன்னார்வலனாக இணைந்து உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்கடன் பணிசெய்து கிப்பதே என்ற சான்றோர் வாக்கிற்கிணங்க ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் ஓடோடித் தமிழ்பணியாற்றுமிவர் பைந்தமிழ்ச் சோலையின் உறுப்பினராகவும், எண்பேராயத்தில் உறுப்பினராகவும், பயிற்றுவிக்கும் துணை யாசிரியர்களுள் ஒருவராகவும், பைந்தமிழ்ச் சோலை – திருவண்ணாமலைக் கிளையின் துணைத்தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்  அவ்வியக்கத்தின் மூலமாகக் குழந்தைகளுக்கு இலக்கண முறைப்படியான தமிழ்ப்பெயர்களைப் பரிந்துரைத்தல், செய்யுளிலும், உரைகளிலும் இலக்கணப் பிழைகளைக் களைந்து உதவுதல், யாப்பிலக்கண வகுப்பெடுத்தல் எனத் தமிழ்த்தொண்டு செய்கிறார்.

படிப்பவன் அறிவைப் பெறுகிறான்; படிப்பின் வழியாகப் படைப்பவனே அதில் முழுமையடை கிறான். ஆம் இக்கவிஞரும்

·        தமிழர்தம் காலக் கணிதம் எங்கே போனது?

·        வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ…

·        தமிழில் பெயர் வைப்பது எப்படி?

·        தமிழாதங்கம்

·        ஆத்தீகமும் நாத்தீகமும்

·        திருமுருகாற்றுப்படை – உரையாடல்

போன்ற தரமான கட்டுரைகளை எழுதிச் சான்றோர் பலராலும் பாராட்டைப் பெற்றுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் சிறுகதையிலும் கோலோச்சும் இவர்

·        அமிழ்தினும் ஆற்ற இனிதே,

·        அன்புத்தொல்லை

·        நீரில் உறங்கும் நிறைபிணி தீர்க்கும் (வாழ்க்கைக் கதை)

·        காந்தி ஆசிரியரின் வகுப்பில் (வாழ்க்கைக் கதை)

போன்ற கதைளையும் எழுதியுள்ளார்.

·        புதுமைப் பொங்கல் பொங்குக

·        எல்லோரும் கொண்டாடுவோம்

·        கலையாத கனவுகள்

·        என்னை எழுதச் சொன்னது வானே!

·        தமிழெங்கள் வளமிக்க உளமுற்ற தீ

·        என்ன தவம் செய்தேன்

·        ஏருக்குச் சீர் செய்வோம்

·        போற்றப்பட வேண்டியது தாய்மை

·        விழுதைத் தேடும் வேர்கள்ஔ

·        சமூக முன்னேற்றத்திற்கு வேண்டியது - தொழில் வளர்ச்சி

·        வானம் தொடலாம் வா

என்னும் தலைப்புகளில் தமிழகத்தின் பல ஊர்களிலும் கவியரங்க மேடையில் பங்காற்றுகிறார்.  மேலும் பல கவியரங்கங்களில் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

பைந்தமிழ்ச்செம்மல், நற்றமிழாசான், சந்தக் கவிமணி, ஆசுகவி, விரைகவிவாணர், பைந்தமிழ்க் குருத்து, பைந்தமிழ்க்கதிர், வீறுகவியரசர் முடியரசன் விருது, கவியொளி போன்ற பட்டங்களையும் விருதுகளையும் பெற்று ஆற்றல் மிக்க எழுத்தாளராக வலம்வரும் தமிழகழ்வன் சுப்பிரமணி அவர்களுக்கு ஆனந்தி என்ற மனைவியும், தமிழ்க்குமரன், கதிர்வேலன் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். 

பூமலர் தேடிப் புகுந்து நறுந்தேனுண்ணும் வண்டைப்போல் தமிழ்த்தேன் உண்டு யாவருக்கும் வழங்கும் தமிழகழ்வன் சுப்பிரமணி அவர்கள் எல்லா வளமும் பெற்றுத் தமிழன்னையின் புகழைத் தரணியெங்கும் கொண்டு செல்லும் ஒப்பற்ற பணிசெய்ய நாமும் உவகையுடன் வாழ்த்துவோம்.