கட்டுரையாக்கம்:
பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து
‘அகடவிதமது’ என்னும் கவிதைத் தொகுப்பின் மூலம் தனது முதல்நூலின் தலைப்பினாலே அனைவரையும் திக்குமுக்காடச் செய்த இளங்கவி தமிழகழ்வன். சொல்லாற்றலில் வல்லாற்றல் கூட்டும் சுந்தரக் கவிஞரான தமிழகழ்வன் இருபத்தோராம் நூற்றாண்டில் மரபு கவிதையின் அத்தனை வடிவங்களிலும் புகுந்து விளையாடும் ஆற்றல் மிக்கவர். இற்றைத்திங்கள் தமிழ்குதிரின் கதாநாயகனாக வருகிறார். வாருங்கள் அவரைப் பற்றி அறிந்து கொள்வோம்..
தீபங்கள் போற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1987ஆம் ஆண்டு சேகர் – பூமாதேவி இணையோரின் தவப்புதல்வனாகத் தோன்றியவர் சுப்பிரமணி. தமிழ்மீதுள்ள காதலால் தமிழகழ்வன் என்னும் புனைபெயரைக் கொண்டார்.
பள்ளிப் பருவத்திலே பாடப் பகுதியாக யாப்பிலக்கணம் இடம்பெறாத வகுப்பிலும் தனக்குக் தமிழ் கற்பித்த ஆசிரியர்கள் மூட்டிய ஆர்வத்தீயால் யாப்பிலக்கணம் கற்றுத்தான் பாட்டெழுத வேண்டும் என முயன்று மரபு கவிதைகளை மட்டுமே கைக்கொண்டு வளர்ந்தார்.
பைந்தமிழ்ச் சோலையின் ஆசான் மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் அவர்களிடமும் பைந்தமிழ்ச் செம்மல் கவினப்பன், பைந்தமிழ்ச் செம்மல் முனைவர் அர.விவேகானந்தன் ஆகியோரிடமும் தமிழ் இலக்கணங்களைக் கற்று முறையாக மரபு கவிதைகளை எழுதி வருகிறார். ‘புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்’ என்பதற்கேற்பப் பைந்தமிழ்ச் சோலையின்மீதும் பாவலர் மா.வரதராசனார் மீதும் அளவில்லாப் பற்றுடையவர்.
பொறியியல் பட்டம் பெற்று மென்பொறியாளராய்த் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி னாலும் அகவல் பாடும் ஆற்றலில் அறிந்து கொள்ளலாம் அன்னாரின் தமிழ்ப்பற்றை. ஆர்வத்துடன் செய்யும் செயலுக்கு எத்தனை தடைகள் வந்தாலும் அவை தடக்கற்களாக மாறிவிடும் என்பதுபோல, பள்ளிப்படிப்போடு தமிழைக் கற்றல் நின்றுவிடக் கூடாது என, இளநிலைத் தமிழிலக்கியமும் பயின்றுள்ளார்.
கதை, கவிதை, கட்டுரையென இலக்கியத் துறையின் அத்தனை வடிவங்களிலும் வலம் வரும் இளைஞரான தமிழகழ்வன் அவர்கள் பைந்தமிழ்ச் சோலையின் மின்னிதழான தமிழ்க்குதிர் இதழின் முக்கிய ஆசிரியராவும் பணியாற்றுகிறார்.
வாள்வீச்சென ஒளிவிசும் மிகச்சிறந்த பாவகைகளைப் படைக்கும் இவர் கவியரங்க மேடைகளிலும் அறிமுகமாகி அலங்கரிக்கின்றார்.
அதோடு மட்டுமல்லாமல் மதுரைத் தமிழிலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தில் (Project Madurai) தன்னார்வலனாக இணைந்து உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்கடன் பணிசெய்து கிப்பதே என்ற சான்றோர் வாக்கிற்கிணங்க ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் ஓடோடித் தமிழ்பணியாற்றுமிவர் பைந்தமிழ்ச் சோலையின் உறுப்பினராகவும், எண்பேராயத்தில் உறுப்பினராகவும், பயிற்றுவிக்கும் துணை யாசிரியர்களுள் ஒருவராகவும், பைந்தமிழ்ச் சோலை – திருவண்ணாமலைக் கிளையின் துணைத்தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார் அவ்வியக்கத்தின் மூலமாகக் குழந்தைகளுக்கு இலக்கண முறைப்படியான தமிழ்ப்பெயர்களைப் பரிந்துரைத்தல், செய்யுளிலும், உரைகளிலும் இலக்கணப் பிழைகளைக் களைந்து உதவுதல், யாப்பிலக்கண வகுப்பெடுத்தல் எனத் தமிழ்த்தொண்டு செய்கிறார்.
படிப்பவன் அறிவைப் பெறுகிறான்; படிப்பின் வழியாகப் படைப்பவனே அதில்
முழுமையடை கிறான். ஆம் இக்கவிஞரும்
·
தமிழர்தம் காலக் கணிதம் எங்கே போனது?
·
வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ…
·
தமிழில் பெயர் வைப்பது எப்படி?
·
தமிழாதங்கம்
·
ஆத்தீகமும் நாத்தீகமும்
·
திருமுருகாற்றுப்படை – உரையாடல்
போன்ற தரமான கட்டுரைகளை எழுதிச் சான்றோர் பலராலும் பாராட்டைப் பெற்றுள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் சிறுகதையிலும் கோலோச்சும் இவர்
·
அமிழ்தினும் ஆற்ற இனிதே,
·
அன்புத்தொல்லை
·
நீரில் உறங்கும் நிறைபிணி தீர்க்கும் (வாழ்க்கைக் கதை)
·
காந்தி ஆசிரியரின் வகுப்பில் (வாழ்க்கைக் கதை)
போன்ற கதைளையும் எழுதியுள்ளார்.
·
புதுமைப் பொங்கல் பொங்குக
·
எல்லோரும் கொண்டாடுவோம்
·
கலையாத கனவுகள்
·
என்னை எழுதச் சொன்னது வானே!
·
தமிழெங்கள் வளமிக்க உளமுற்ற தீ
·
என்ன தவம் செய்தேன்
·
ஏருக்குச் சீர் செய்வோம்
·
போற்றப்பட வேண்டியது தாய்மை
·
விழுதைத் தேடும் வேர்கள்ஔ
·
சமூக முன்னேற்றத்திற்கு வேண்டியது - தொழில் வளர்ச்சி
·
வானம் தொடலாம் வா
என்னும் தலைப்புகளில் தமிழகத்தின் பல ஊர்களிலும் கவியரங்க மேடையில் பங்காற்றுகிறார். மேலும் பல கவியரங்கங்களில் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
பைந்தமிழ்ச்செம்மல், நற்றமிழாசான், சந்தக் கவிமணி, ஆசுகவி, விரைகவிவாணர், பைந்தமிழ்க் குருத்து, பைந்தமிழ்க்கதிர், வீறுகவியரசர் முடியரசன் விருது, கவியொளி போன்ற பட்டங்களையும் விருதுகளையும் பெற்று ஆற்றல் மிக்க எழுத்தாளராக வலம்வரும் தமிழகழ்வன் சுப்பிரமணி அவர்களுக்கு ஆனந்தி என்ற மனைவியும், தமிழ்க்குமரன், கதிர்வேலன் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
பூமலர் தேடிப் புகுந்து நறுந்தேனுண்ணும் வண்டைப்போல் தமிழ்த்தேன் உண்டு யாவருக்கும் வழங்கும் தமிழகழ்வன் சுப்பிரமணி அவர்கள் எல்லா வளமும் பெற்றுத் தமிழன்னையின் புகழைத் தரணியெங்கும் கொண்டு செல்லும் ஒப்பற்ற பணிசெய்ய நாமும் உவகையுடன் வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment