(மாறுரையும் நேருரையும்)
பைந்தமிழ்ப் பாமணி பொன். இனியன்
‘பெண்மை வாழ்க’வென்று கூத்திட்டவர் மகாகவி பாரதியார். காதலொருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவினுங் கைகொடுத்து மாதரறங்கள் யாவையும் மாண்புறச் செய்யும் பெண்கள் சமூகத்தின் சரிபாதி என்பதால், பெண்ணுக்கு வரும் பீழை எதுவாயினும் அது ஆணுக்குமாம் என்று காட்டினார். ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்கும் என்று உறுதி காட்டினார். ‘கற்பு நிலை என்று சொல்ல வந்தால் அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்’ என்று ரௌத்திரம் காட்டினார்.
20ஆம் நூற்றாண்டு பாரதியார் கொண்ட பாடுபொருளை ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள’ எனப்பெருமை பேசி தம் குறளில் காட்டிய வள்ளுவர், மகளிரே போல தானும் ஒருமை கொண்டு தன்னை ஒழுகின் பெருமை உண்டு (974) எனக் கற்பை ஆணுக்கு மாக்கிக் கற்பித்தார்.
குறட்டொகுதியுள் அமைந்த,
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது (901)
எனும் குறளுக்கு எழுந்த உரைகள் யாவிலும், ‘மனைவியின் சொற்கேட்டு’ நடப்பவன் மாட்சி யடைதல் இல்லை’ எனும் கருத்தையே முன்னிருத்திக் காட்டுகின்றன. இப்படியானதொரு கருத்தை வள்ளுவர் வைத்திருப்பாரா எனும் ஒரு திகைப்பைத் தருவனவாய் உள்ளன இவ்வுரைகள்.
அது கொண்டு, முன் உரைகள் சிலவற்றைச் சற்றே உரசி அவற்றின் உண்மையறிய முயலுதலும் இக்கருத்துக்கு இயைபுடையவா றாகவோ அன்றி இதனைத் தாங்குமா றாகவோ குறட்டொகுதியுள் வேறெதுவும் கூறப்பட்டுள்ளதா என ஆய்வதும் இக்குறட்பாவுக்கான நேரிய பொருளைத் தேர்தலும் இக்கட்டுரையின் நோக்கமாகிறது.
மங்கலம் என்ப(து) மனைமாட்சி (60) என இல்வாழ்வின் சிறப்பை எடுத்தியம்புகிறது குறள். இல்லதென் இல்லவள் மாண்பானால் (53) எனக் குறித்த வள்ளுவர் அத்தகைய இல்லாள் சொற்கேட்டு நடத்தலை இழிவாகக் குறித்திருப்பாரா என்பது சிந்தித்தற் குரியதொன்றாகும்.
அன்பும் அறனுமே இல்லறத்துக்கு அடிப்படையாவ தும் ஒருவன் தன் மனையாளை இன்றுணையாக் கொண்டே இல்லறத்தை நடத்த வேண்டி யிருப்பதும் கருத, தன் மனைவியை விரும்பாமை எனுங் கருத்து ஒப்புமாறில்லை. இல்லாள் தோள் அமையார் இமையாரின் வாழினும் பாடிலரே (906) எனுங் குறளை ஈண்டு நினைக.
மனையாளைக் காதலித்து ஒழுகுவார் நற்பயனைப் பெறார்; யாதானும் ஒரு வினையைச் செய்து முடிக்க வேண்டுவார் விரும்பாத பொருளும் அவரை விழையாமை என்பது மணக்குடவர் உரை.
இன்பம் காரணமாகத் தன் மனையாளை விழைந்து அவள் தன்மையராய் ஒழுகுவார் தமக்கு இன்றுணையாய அறத்தினை எய்தார் இனிப் பொருள் செய்தலை முயல்வார் அதற்கு இடையூறென்று இகழும் பொருளும் அவ்வின்பம் என்பது பரிமேலழகருரை
அவ்வின்பம் அவள் தன்மையராதற்கு ஏதுவாய இன்பம். அஃது அவளாற் பயனாய அறத்தினும் அவ்வறத்திற்கும் தனக்கும் ஏதுவாய பொருளினும் செல்ல விடாமையின், விடற்பாற்று என்பதாம் என உரை விளக்கம் வைத்துள்ளார்.
இன்பம் பற்றி மனைவியை அளவிறந்து காதலித்து அவர் விருப்பப்படி நடப்பவர் சிறந்த பயன் தரும் அறத்தினைச் செய்யார். இன்பத்திற்கும் அறத்திற்கும் ஏதுவான பொருள் ஈட்டுதலை விரும்புவார் அதற்குத் தடையெனக்கருதி விரும்பாத செய்தியும் மனைவிக்கு அடிமையாக்கும் பெண் பித்தமே என உரைக்கிறார் பாவாணர்.
மேற்கண்ட உரைக்கருத்துகள் திருக்குறளோடு எத்துணை இசைவும் நெருக்கமும் உடையன என்பதையும், திருக்குறளில் அமைந்துள்ள சொற்கு இவர்கள் பொருள்காட்டிய விதங் குறித்தும் காண்போம்.
மனைவியை விழையாமை எனும் கருத்தை உன்னுகையில் கீழ்க்காணுமாறான கேள்விக்கு அது இடந்தருவதாகிறது. இயல்புடைய மூவருள் ஒருத்தியாகிய தன் துணையை விழையாதிருத்தல் தகுவதாமா? அது மனைத்தக்க தாகுமா? விரும்பாத ஒருவரைத் துணைக்கொண்டு இல்லறம் நடத்துதலாவது, கூடினுங் கூடாத செப்பின் புணர்ச்சி போலாவதாம். அது குடங்கருள் பாம்பொடு உடனுறைதலை ஒக்குமாதலின் இவர் இல்புரிந்த புகழ் (59) எட்டுதல் எவ்வாறாம்?
தன் மனையாளை விழைந்து அவள் தன்மையராய் ஒழுகுவார் தமக்கு இன்றுணையாய அறத்தினை எய்தார் எனும் பரிமேலழகர் கூற்று குறளிலிருந்து கற்றதன்றாம்; மனு முதலிய நூல்களிலிருந்து பெற்றதாகும். அவை தாம் பெண்ணை அறிவிலி யாகவும் உரிமையிலியாகவும் பாவிப்பன. தமிழிலக்கிய வரலாற்றில் ‘வாழ்க்கைத் துணை’ என்ற சொல்லை வடிவமைத்துக் கொடுத்த முதற் பாவலராகிய வள்ளுவர் தம் நூலில் வாழ்க்கைத் துணைநலம்’ என ஓர் அதிகாரத்தை வைத்தமைத்தவராகவும் திகழ்கிறார் என்பதை எண்ணுங்கால் மனைவியைப் பழிக்குமாறான ஒரு கருத்தை கூறினாரெனக் கொள்ளுதற் கிடமில்லை.
குறட்டொகுதியுள், விழைவு என்பதைச் சொல்லடியாகக் கொண்டமைந்த பாக்கள் 18 உள்ளன. பிற எல்லாப் பாக்களுக்கும், விழைவு எனற்கு விரும்புதல் என்ற பொருளை (மட்டுமே) காட்டிய உரையாளர்கள் 901, 902 ஆகிய இரு பாக்களுக்கு மட்டும் வரம்பற்ற/அளவிறந்த/ அடிமை யாகும் அளவு என முன்னடைவு கொண்டு வலிந்து நீட்டித்துக் காட்டினர்.
வள்ளுவர் கருத்து அதுவாமாயின், கடிதோச்சி (562), இறந்தமைந்த (900) என்பன போல அவரே தக்கதொரு முன்னடைவைத் தந்து அமைத்திருக்க மாட்டாரா என்பதும் கருதத் தக்கதாம். விழைவார் என்பதே குறள் குறிப்பாயிருக்க அதனை ‘அவள் தன்மையராய் ஒழுகுவார்’ எனத் திரித்தும், ‘இன்பம் காரணமாக’ எனப் புறத்திருந்து வருவித்துப் பொருத்தியும் காட்டுதல் வேண்டற்பாலதின்றாம்.
இவ்வாறு குறள் குறிப்பின்றியே புறத்திருந்து கொண்டுவந்து பொருத்திக் காட்டிய தம் உரைக் கருத்துக்கு முட்டுக்கொடுக்கக் கருதி, ‘இன்பங் காரணமாக / காம வேட்கையால் அவட்கு அடிமைப் பட்டு’ என்ற ஒரு காரணத்தை உரையாசிரியர்கள் கற்பிக்கிறார்கள்.
இது முறையானதா என்பது ஒருபுறமிருக்க, இதை ஒருவாறு ஒப்புவதெனினும், கடிந்தொர வேண்டியது மனைவிக்கு அடிமையாக்கும் பெண் பித்தமே யாவதும் அக்குற்றத்தைத் துடைத்துக்கொள்ள வேண்டுவது அவனேயாவதும் பெறப்படும்.
காமம் வேண்டப்படுவதொன்றாயினும் அது வரைகடவாது காத்தல் வேண்டும் எனுங் கருத்துடையராகி, ‘அளவிறந்த காம விச்சையால்’ என்ற ஒரு தொடரையும் உரையில் வைத்துக் காட்டுவாரும் உளர். உண்ணலில் (943) தொடங்கி ஊடுதல் (1302) வரையிலும் எல்லா நிலையிலும்; அளவறிந்து வாழ்தலையும் (479) எவ்விடத்தும் அளவின்கண் (அமைந்து) நிற்றலையும் ஓர் ஆற்றலாகவும் (287) ஒழுக்காறாகவும் (286) திருவள்ளுவர் குறிக்கிறார். அதனால் எதையும் முறையோடும் நிறைவோடும் துய்த்தலைக் குறள் தடைப்படுத்துதல் இல்லை என்பதும் ஈண்டு ஓர்தற்குரியதாம்.
எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூவும் மேவற் றாகும்
- தொல்காப்பியம் பொருள் (27)
விடுதலையும் இன்ப நாட்டமும் எல்லா உயிர்க்கும் இயல்பான தொன்றாவதும், இவ்வின்ப நாட்டமே உயிர்களின் தொடர் அறாது நிலைபெறச் செய்யும் இயற்பு உத்தியாதலும் ஓர்க.
கடல்மற்றுக் காமவின்பம் (1166) எனவும், பனைத் துணையும் காமம்வரின் தினைத்துணையும் ஊடாமை வேண்டும் எனவும் குறளில் குறித்திருப்பது(ம்) கருதின், ‘மனைவியை அளவிறந்து காதலித்து அவள் எண்ணப்படி நடப்பவன் சிறப்படையமாட்டான்’ என்பது எவ்வாற்றானும் வள்ளுவத்தோடு பொருந்திய கருத்தாகாதென்பது தேற்றமாம்.
‘பொருள் செய்தலை முயல்வார் அதற்கு இடையூறென்று இகழும் பொருளும் அவ்வின்பம்’ என்பது பரிமேலழகர் உரை. பொருள் ஈட்டுதலை விரும்புவார் அதற்குத் தடையெனக்கருதி விரும்பாத செய்தியும் மனைவிக்கு அடிமையாக்கும் பெண்பித்தமே என்பது பாவாணர் உரை.
காதலும் வீரமும் தம்மிரு கண்களாய்ப் போற்றியது தமிழர் வாழ்வியலாகும். வினையாற்றலும் காமந் துய்த்தலும் ஒன்றற்கொன்று பகையாவதில்லை என்பதை ‘வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை யயர்கம் விருந்து’ (1268) எனக் குறளே குறித்துக் காட்டியிருப்பது கருதின், யாதானும் ஒரு வினையைச் செய்துமுடிக்க வேண்டுவார் விரும்பாத பொருளும் அவரை விழையாமை என்றது உரையன்மை யென்க.
‘மனை’ எனும் குறள் குறிப்பை மனையாள் எனும் கருத்தின் அடிப்படையிலேயே அனைவரும் காட்டியுள்ளனர். வள்ளுவர்தம் எண்ணம் மனைவியைப் பற்றியதாயிருப்பின் மனையாள் (904) என இவ்வதிகாரத்திலேயே பிறிதோர் பாடலில் உள்ளது போல இதிலும் குறித்திருப்பார் என்க.
குறட்டொகுதியுள், இல் (41), இல்லாள் (52) எனவும் மனை (521), மனையாள் (904) எனவும் வேறுபாடு காட்டிச் சொற்களை இடமறிந்து ஆண்டுள்ளதுங் காணலாம். மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் (820) என்பதிற்போல இக்குறட்பாவிலும் மனை என்றது இடப்பொருளாவதன்றி உறவுமுறை பற்றியதன்றாம்.
தற்காத்துத் தற்கொண்டான் பேணலை அவட்கு வைத்துக்காட்டியது போல வாழ்க்கைத் துணைவ னாகிய அவற்கும் தன்மனைவியை விழைதலே தகுவதும் உரியதுமாம். அதனால் தன் மனைவியை விரும்புவார் மாண்பயன் எய்தார் எனும் கருத்து முறையின்றாம் என்க. மனை என்பது ஆகுபெயராய் மனைவியைக் குறித்தற்கு மொழியிலக்கணம் இடந்தருவதாயினும் ஈண்டு அதன் பொருந்தாமையை அறிக.
இவை இவ்வாறாக,
மனை யென்பது இல்லாளைக் குறிப்பதெனில் தன்மனையைத் தானே விழையாமை எனலும் பொருந்தாது. மேலும், இது பிறன் மனைவியைக் குறித்தோ எனில் அதுவுமின்றாம். என்னை, தன்மனைவியை என்பது கூறாமலே பெறப்படும். முன்னிலையும் படர்க்கையும் குறித்துக் காட்டப்படும். அதனால், இதனைப் பிறன் மனைவி எனப் பொருள் காட்டற்கும் இடமாவதில்லை.
பின், எவர் மனை அல்லது எந்த மனை எனும் கேள்வி எழுவதாகிறது. அதனால் மனை யென்றது எதன் பொருட்டாம் என்பது அறியவேண்டுவதாகிறது.
மனை என்பது தன் மனையும் அன்று, தன் மனையாளும் அன்று என்பதானால் இக்குறட்காம் நேர்ப்பொருள்தான் என்னாம் என்பது இனிக் காண்பாம்.
கரவாடுங் கழகம் புகுவார் தம் கைப்பொருளையும் பண்பையும் இழந்து போவர் (937) எனவும் கள்ளுண்பவர் தம் நற்பெயர் கெடுவதோடு எல்லாராலும் எள்ளப்படுவார் (921) என்றதும் போல பொருட்பெண்டிர் வாழ்மனை புகுவார் (சமூகத்தில்) மாண்பிழந்து போவார்; பயத்தக்க வினையாளர் எவரும் அதை (அவ்வாறு போதலை) விரும்பார் என்றவாறிது.
இப்பாடல் ‘பெண்வழிச் சேறல்’ எனும் அதிகாரத்தின் கீழமைவது. சேறல் எனற்குப் பின் செல்லுகை என்பது பொருளாகும். பெண்விழைவு, பெண் சேர்ந்தொழுகுதல், பெண்ணேவல் என்பவற்றையும் கருதின் மனைவிழைவு என்றது மனைவியைக் குறித்ததன்று என்பது நன்கு புலப்படும்.
‘பெண்பொறுக்கி’ என்ற நாட்டுப்புற வழக்குச் சொல்லையே பெண்வழிச்சேறல் என இலக்கிய நடையில் குறித்தார் என்க.
பெண்ணுக்கும் பெண்டாட்டிக்கும் உள்ள பொருள் வேறுபாட்டைப் பாராட்டிக் கொள்ளாததாலேயே “மனைவியே கதியென்று மயங்கிக் கிடப்பவன் வாழ்வின் மேன்மையடைய மாட்டான்” என்றெல்லாம் உரை எழுதுவாரும் உளரானாரென்க.
இக்குறட்பா, பொருளும் மனை விழைவார் ‘மாண்’ பெய்தார் பயன்வினை விழைவார் வேண்டாரது எனும் வைப்பு கொளத் தக்கதாம்.
உருள் பெருந்தேர் (667) - உருளும் பெருந்தேர் என்னுமாப்போல, பொருள்மனை என்பதே பொருளும் மனை எனக் குறிக்கப்பட்டது.
பொருளும் மனை - பொருள்கின்ற மனை - பொருளையே பொருட்டாக்கொள்ளும் மனை பொருட்பொருளார் (914) வாழும் மனை.
அருள் - அருளுதல் – அருட்செய்வு
பொருள் - பொருளுதல் - பொருட்செய்வு.
இம்னை வாழ் மகளிர் பொருள் விழைபுடையவரே யாதலன்றி அன்பின் விழைவற்றவராவர் (911).
பொருட்பொருளார் வாழ்மனையை விரும்பிச் செல்பவர் தன் மதிப்பிழந்து போவார்; பயன் விளைக்குஞ் செயலைப் பாராட்டுவாரெவரும் (பழிக்கத்தக்க) இம்மனையைக் கருதார் என்பது இதனுரையாகும்.
No comments:
Post a Comment