'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 14, 2020

அவள் கொடுத்த கடிதம்

 (தீபாவளிச் சிறுகதை)

பைந்தமிழ்ச் சுடர் மெய்யன் நடராஜ்

அறிமுகமில்லாத முகங்கள். சம்பந்தமில்லாத பேச்சுகள். சகிக்க / தவிர்க்க முடியாத சூழ்நிலை. ஒரு பெண்ணைப் பார்த்துப் பிடிக்கவில்லை என்று சொல்லி மழுப்பி நகர்ந்து விடுவதற்குமுன் போதும்போதும் என்பதுபோல் இருக்கிறது இந்தச் சம்பிரதாயச் சடங்கு. இன்னும் சிறிது நேரத்திற்குள் பட்டுச்சேலைஉடுத்தி அலங்கார பொம்மையெனக் கையில் பலகாரத் தட்டும் தேநீருமாய் அவன் முன் வந்து நாணிக் கோணி நிற்கப் போகிறாள் யாரோ ஒரு பெண்.

அவளை எள்ளளவும் பார்க்கப் பிடிக்காமல் குடும்பத்தாருடன் பெண்பார்க்க வந்திருக்கும் குமார் வாட்டசாட்டமானவன். ஊரில் உயர்தரம் வரை படித்துவிட்டுக் கொழும்பில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே கம்பியூட்டர் கல்வி ஒன்றைக் கற்றுத் தேறி இப்போது வருவாய்க்குக் குந்தகமில்லாத தொழில் ஒன்றில் இருக்கிறான். குடும்பத்தில் மூத்தவன். அப்பா அரச உத்தியோகத்தில் இருக்கிறார். அம்மாவுக்கு வேலையில்லை. குடும்பத்தலைவி. சென்ற வருடம் தங்கைக்கு ஒரு வரன் அமையவே நல்ல இடமாக இருந்ததால் உடன் கல்யாணத்தை வைத்துப் புகுந்த வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அப்பா பென்சன் வாங்க இன்னும் ஒருசில வருடங்களே பாக்கியிருக்கும் நிலையில் மகனுக்கும் கல்யாணத்தை நடத்திவிட வேண்டும் என்பதற்காக தீபாவளிக்கு வீட்டுக்கு வந்தவனை வலுக்கட்டாயமாக இழுத்துவந்து இந்தப் பெண் பார்க்கும் நிகழ்வு நடக்கிறது. ‘கடவுளேபொண்ணு என்னைப் பிடிக்கலைன்னு சொல்லணும்என்று மனத்துக்குள் வேண்டிக்கொள்ளும் குமாருக்கோ இதில் துளியும் உடன்பாடில்லை.

கொரோனாவின் இரண்டாம் அலையடிக்கத் தொடங்கிய நாளில் இருந்து மக்கள் சற்று கவனமாகவே இருக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதற்கு ஆதாரமாக வீட்டு வராந்தையில் வந்திருப்பவர்கள் அமர்வதற்காக சமூக இடைவெளிவிட்டுப் போடப்பட்டிருந்தன நாற்காலிகள். மிக நெருங்கிய உறவுகளுக்கு மாத்திரம் சொல்லி அழைத்திருக்கிறார்கள் போலும். பெண்களில் ஒரு ஐந்தாறு பேரும், ஆண்களில் நான்கு பேரும் மற்றும் ஒருசில குழந்தைகள் என அளவான கூட்டமாக இருந்தது. திடீரென்று பெருக்கெடுத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை எங்குப் பார்த்தாலும் முகக்கவசம் இல்லாத மனிதர்களைக் காண்பது அரிது என்ற நிலையை ஏற்படுத்தி விட்டிருந்ததன் காரணத்தால் எல்லோரும் முகக்கவசம் அணிந்திருந்தார்கள். அவர்களின் முகக்கவசப் பாதுகாப்பைப் பார்த்ததும் குமாரும் குமாரின் வீட்டாரும் அணிந்து வந்திருந்த முகக்கவசத்தை எடுக்காமலேயே இருந்தார்கள். எல்லோருக்கும் மாப்பிள்ளையின் முகத்தைப் பார்க்கும் ஆவல். வந்தவுடனேயே முகக்கவசத்தை அகற்றச் சொல்வது முறையல்ல என்பதற்காக பேசாமல் இருந்துவிட்டார்கள். முகத்தைக் காட்டாமல் இருப்பது இப்போதைக்கு நல்லதாகவே இருந்தது குமாருக்கு. முகத்தைப் பார்த்துப் பெண்ணுக்குக் குமாரைப் பிடித்துப்போய்க் கல்யாணத்திற்கு சம்மதித்துவிட்டால் அதுவும் பிரச்சினை. சும்மா இருந்தவளைப் பெண்பார்க்க வந்து அவளுக்கு ஆசைகளையும் கனவுகளையும் வழங்கிவிட்டு பின்பு வேண்டாம் என்று சொல்லி அவள் மனத்தைப் புண்படுத்திப் பார்ப்பதும் பாவம். ஒரு வார்த்தைகூட சொல்லாமல் திடீரென இந்த ஏற்பாட்டைச் செய்துவிட்ட அப்பாவின்மேல் கோபம் ஒரு எரிமலையைப்போல் வெடித்திருந்த போதும் அடக்கிக்கொண்டு அமைதியாக இருந்தான்.

குமாரும் தீபாவும் இரண்டு வருடத்திற்கு மேலாகவே காதலிக்கிறார்கள். கூடிய சீக்கிரமே வீட்டில் சொல்லி, வீட்டார் சம்மதத்துடன் அவளைக் கரம்பிடிக்க வேண்டும் என்று கற்பனைகள் வளர்த்திருந்தான். தீபாவளி முடிந்ததும் மெதுவாக அம்மாவின் காதில் விசயத்தைக் கூறி அப்பாவின் காதுகளுக்கு எட்டச் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்துடனேயே தீபாவளிக்கு வீட்டுக்கு வந்திருந்தான். ஆடிக்கு வீட்டுக்குவந்து தலைப் பிரசவத்தையும் தாய்வீட்டிலேயே நடத்திக் கொண்ட தங்கையை அவளது வீட்டிற்குக் கொண்டுவிட வேண்டி இருந்ததால் அவளுக்கும் அவள் குழந்தைக்கும் தேவையான சாமான்களை எல்லாம் அம்மா சொன்னபடிக் கேட்டு வாங்குவதற்கு அங்குமிங்கும் அலைந்ததில் தீபாவைப் பற்றி அம்மாவிடம் சொல்லத் தகுந்த  நேரம் அமையவில்லை. சொல்லலாம் என்று ஒரு சந்தர்ப்பம் கூடிவந்த வேளை அப்பா பேச்சை ஆரம்பித்தார்.

தெய்வானை... நீ அவன்கிட்ட சொன்னியா..’

‘எதைச் சொல்லுறீங்க’

உனக்குத்தான் எல்லாத்திலேயும் ஞாபக மறதியாச்சே.. அதான் அந்திக்குப் பொண்ணு பார்க்க போகணும் என்று சொன்னேனே..’

.. அதுவா.. இதோ இப்போ சொல்லிடுறேன்என்றவள் குமாரின் காதில் அந்தக் குண்டைத் தூக்கிப் போட்டாள். விசயத்தைக் கேட்டதும் பதறிப் போய்அம்மா யாரைக் கேட்டு இந்த ஏற்பாட்டைப் பண்ணுனீங்க. எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்

 என்னடா இப்படி பேசுற.. வீட்டுக்கு ஒரு மருமக வேண்டாமா.’

அதுக்காக இப்படி திடுதிப்பென்னு கூப்பிட்டா எப்படிம்மா..’

இப்போ என்ன பொண்ண பார்த்து நாங்களே முடிவு செய்து உன்ன தாலி கட்டவா கூப்புடுறோம்? பொண்ணுபார்க்கத்தானே கூப்புடுறோம்

ஐயோ அதுக்கு இல்லம்மாஎன்று அவன் மழுப்பும்போதே அவனது அப்பாவிற்குப் புரிந்து விட்டது. ஒரு வார்த்தை அவனிடம் இதுபற்றிக் கூறிவிட்டு இந்த ஏற்பாட்டை நிகழ்த்தியிருக்கலாம் என்று. இப்போது அவர் யோசிப்பதில் இனி ஆகப்போவது ஒன்றும் இல்லை. எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் அவர்களை ஏமாற்றவும் முடியாது. முதலில் பெண்ணைப் பார்ப்போம். பெண் லட்சணமாக குடும்பத்திற்கு ஏற்றாற்போல் இருந்தால் இவனே மனசு மாறக்கூடும் என்ற அசாத்திய நம்பிக்கையில் ஒரு சம்பிரதாயத்திற்காக இந்தப் பெண்பார்க்கும் நிகழ்வுக்குக் குமாரைப் பிடிவாதமாக அழைத்து வந்துவிட்டார்.

மனைவியாக தீபாவை எண்ணி மனத்தால் தாலி கட்டிவிட்ட குமாருக்கு மற்ற பெண்ணை அந்த இடத்தில் வைத்துப் பார்க்க மனசு கூசியது. இருந்தாலும் நிலைமையை சமாளிக்க வேண்டும் என்பதற்காகப் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தான். இடையிடையே தீபா கைப்பேசியில் குறுந்தகவல்கள் அனுப்பி வைத்துக்கொண்டு இருந்தாள். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒருநாள் கோல்பேஸ் கடற்கரைக்கு அவளைக் கூட்டிக் கொண்டு வந்திருந்தபோதுகுமார் எங்க வீட்டிலே ஒரு சோதிடர்கிட்ட என்னோட சாதகத்தைக் கொடுத்துப் பார்த்தாங்களாம் சொந்தத்திலேதான் எனக்கு மாப்பிள்ளை அமையும் என்று அந்த சோதிடர் சொன்னாராம்

அப்படீனா நல்லதா போச்சு நான் வேற நல்ல பொண்ணா பார்த்து..’ பேசி  முடிக்கும் முன்பே குமாரின் வாயை கைகளால் பொத்தியவள்இந்த விளையாட்டெல்லாம் வேண்டாம் நான் உண்மையாதான் சொல்றேன் எனக்கு எங்க வீட்டிலே மாப்பிள்ளை தேடுறாங்களாம். சீக்கிரமா வந்து என்ன பொண்ணு கேளு

நீ ஒன்னு இந்தக் காலத்திலேயும் சோசியம் அது இதுன்னு சொல்லிக்கிட்டு... அதெல்லாம் பழைய பஞ்சாங்கம். இந்த தீபாவளிக்கு நான் வீட்டுக்குப் போவேன் அப்போ நம்ம விசயமா பேசி ஒரு நல்ல முடிவோடு வருவேன்

இல்ல குமாரு அந்த சோதிடர் கணிச்சி சொன்னாருன்னா அது சரியாக இருக்கும் எங்க ஊர்ல மிகவும் பேர் போனவர். அதுதான் பயமா இருக்கு.’

சரி சரி மனசப் போட்டுக் குழப்பிக்காத. தீபாவளிக்கு இன்னும் ஒரு மாசம்தானே இருக்கு. அதுக்குள்ளே உன்ன எந்த முறைமாமன் வந்து கட்டுறான்னு பார்ப்போம்

நடக்கனுமுன்னு இருந்தா ஒரு நாள் இல்ல ஒரு நிமிசத்திலேகூட நடந்திடும் அசட்டையா இருந்திடாத, மறக்காம நம்ம விசயத்துக்கு ஒரு முடிவோடு வா.’ அவள் அவனோடு பேசியது வேறு இப்போது ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது. ஒரு வேளை அப்படி நடந்துவிடுமோ என்று பயமாகவும் இருந்தது. இங்கு வருவதற்கு ஒரு மணித்தியாலத் திற்கு முன்பும் தீபா குறுந்தகவல் அனுப்பி இருந்தாள். ‘இக்கட்டான நிலையில் இருக்கிறேன். கல்யாண ஏற்பாட்டோடு வா. இல்லாவிட்டால் நமது வாழ்க்கை திசைமாறிவிடும். போன் பேசமுடியாத சூழ்நிலை. விபரத்தைக் கொழும்புக்குத் திரும்பியதும் கூறுகிறேன்என்று அவள் வேறு குழப்பியிருந்தாள்.

இன்று நல்ல மழை பெய்யும்என்ற தொலைக் காட்சி அறிவிப்பை நம்பிக் கையில் குடையை எடுத்துச்செல்லும் நாட்களில் மழை வராமல் போவதும், இன்று மழை வராது என்று எண்ணிக் குடையை விட்டுச் செல்லும் நாட்களில் அடைமழை பெய்துவிடுவதும்போல வாழ்க்கையிலும் நம் எதிபார்ப்புகளைத் தாண்டிப் பல விசயங்கள் நடந்து விடுகின்றன. இதைத்தான் விதி என்று இந்த மனிதர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள் போலும். ஒருவேளை என் வாழ்விலும் அப்படி ஏதேனும் நடந்து விடுமோ என்று எண்ணிய குமாருக்குப் படபடப்பாக இருந்தது. தேவையில்லாத நேரத்தில் தேவையில்லாததை எல்லாம் தேவைக்கு அதிகமாகக் சிந்திக்க வைத்துவிடும் சிந்தனையின் தேவையை தேவையில்லாது செய்துவிடுவது இப்போதைய தேவை என்ற நினைப்புக்குத் திருப்பியவன் சூழ்நிலைக்கு முகம்கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப் பட்டான்

வயதானவர்கள் அவரவர்களுக்கு ஏற்றவர்களுடன் நாட்டு நடப்பு, கொரோனா, வருமானக் குறைவு என்று ஏதேதோ சம்பாசித்துக் கொண்டிருந்தனர். தன் வயதை ஒத்தவர்கள் யாராவது இருக்கின்றார்களா எனக் கண்களால் நோட்டமிட்டான். ஒருவரும் அகப்படவில்லை. வீட்டுச் சுவரில் ஒரு பழங்காலக் கடிகாரம் இவன் மனதைப்போலடொக் டொக்’ எனத் துடித்துக் கொண்டிருந்தது. கூடவே கடந்துபோகும் நேரத்தைக் காட்டி எச்சரிக்கை செய்தது. குமாரின் அப்பா பேச்சை ஆரம்பித்தார். 

நாங்க சீக்கிரமா போகணும். பொண்ண வரச் சொன்னீங்கன்னா நல்லாருக்கும்’, ‘இதோ கொஞ்சம் இருங்க.. இப்ப வந்துரும்..’ யாரோ ஒருவர் பதிலளித்துவிட்டுஇன்னும் என்ன செய்யிறீங்க.. கொஞ்சம் சீக்கிரமா அவளை அனுப்புங்க.’ குரல் கொடுத்துக்கொண்டே ஒரு அறைக்குள் நுழையவும் பெண் தேநீர்த் தட்டுடன் தலை கவிழ்ந்து வரவும் சரியாக இருந்தது. நல்ல லட்சணமானவள் என்பது அவள் அணிந்திருந்த முகக் கவசத்தையும் தாண்டி வெளிப்பட்டது. தட்டுத்தடுமாறி அவனருகே வந்து தேநீரை நீட்டியவளின் முகத்தைப் பார்த்தும் பாராதவனாய் தேநீரை வாங்கிக் கொண்டான். 

பொண்ண நல்லா பாத்துக்கடாஎன்று அம்மா கூற தலையாட்டியவன் அம்மாவின் முகத்தைப் பார்த்தான். அவனது விருப்பமின்மையை விளங்கிக் கொண்டவளாய்க் கண்களால் ஏதோ சமிக்ஞை செய்தவள் பெண்ணின் குடும்பத்தாருடன் ஏதோ பேசுவதுபோல நிலைமையைச் சமாளித்தாள். தேநீரைக் கொடுத்த பெண் குமாரின் பெற்றோரின் காலில் விழுந்து ஆசி வாங்கினாள். ‘நல்லா இரும்மா நல்லா இருஎன்ற குமாரின் அம்மா அவளின் தலையை நிமிர்த்தி முகத்தைப் பார்த்தார். பெண்ணை அவருக்குப் பிடித்துவிட்டது. அருகில் இருந்த கணவரின் காதில் பெண் பிடித்திருப்பது பற்றிக் கிசுகிசுத்தார். அவருக்கும் அதே எண்ணமாக இருந்தது. ஆனால் குமாரின் விருப்பம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்பதனால் இருவரும் மௌனமானார்கள். ஒரு சில நிமிடங்கள் அங்கு நின்றிருந்த பெண் மேலும் அங்கு நிற்க சங்கோஜப் பட்டவளாய்த் தனது  அறைக்குள் சென்றுவிட, அதே நேரம் பெண்ணின் உறவுக்காரப் பெண்மணி ஒருவர்என்ன மாப்பிள்ள முகக் கவசத்தைக் கழட்டாமலேயே இருக்கிறார். நாங்க அவர் முகத்தை முழுசா பார்க்கக் கூடாதா

அதெல்லாம் இல்லேங்க… இந்தக் கொரோனா யாருகிட்ட இருந்து யாருக்குத் தாவும் என்று சொல்ல முடியாது. நாளைக்கு மறுநாள் கொழும்புக்கு வேலைக்குப் போகணும் இல்லையாஇங்கே இருந்து சாதாரண காய்ச்சல் தடுமனோட போனாலும் இவன் வேலை செய்கிற கம்பனியிலே உள்ளே எடுக்க மாட்டாங்களாம். அதுதான் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கிறான்நிலைமைக்கு ஏற்றாற்போல் அவன் அம்மா பேசியது சற்று ஆறுதலாக இருந்தது குமாருக்கு. பெண் அறைக்குள் போய்விட்டாள் என்பதை நோட்டமிட்டு ஊர்ஜிதம் செய்துகொண்டு முகக் கவசத்தை அகற்றினான். எல்லோரும் ஒருமுறை குமாரின் முகத்தைப் பார்த்துக் கொண்டார்கள். அந்நேரம் குமாரின் அம்மா வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல்பொண்ணையும் முகக்கவசத் தோடுதானே அனுப்புனீங்க நாங்களும் முகக் கவசம் இல்லாமல் ஒருமுறை பொண்ணோட முகத்தைப்  பார்க்கணும்என்றார்.

அதனால என்ன பார்த்துட்டாப் போச்சு. பொண்ணு பார்க்கத்தானே வந்தீங்க பொண்ணோட முகக்கவசத்தையா பார்க்க வந்தீங்கயாரோ துடுக்கான பெண்மணி ஒருவர் கேலியாகக் கூற எல்லோர் முகத்திலும் சிரிப்பு. தன்பங்கிற்கு ஒப்புக்காக சிரித்து வைத்த குமாருக்கு இப்போது தலைசுற்றுவது போலிருந்தது. எப்படியாவது தப்பித்துப் போய்விடலாம் என்று பார்த்தால் வீண் வம்பை விலைகொடுத்து வாங்கின மாதிரி அம்மாவின் ஆசை இப்போது மேலும் சங்கடத்திற்குள்ளாக்கி விட்டது. அதற்குள்இதோ கூட்டிக்கொண்டு வர்ரேங்க..’ அவசரமாகப் பெண்ணின் அறைக்குள் நுழைந்தார் அவளின் அம்மா.

இப்போது குமாரின் நெஞ்சம் படபடக்கத் தொடங்கியது. ‘கடவுளே எப்படியாவது காப்பாற்று’ வேண்டிக்கொண்டான். கோடிக்கணக்கில் கொரோனா நோயாளர்களை உருவாக்கி லட்சக்கணக்கான பேர்களை மரணிக்க வைத்துவிட்டு, இருக்கின்ற உலகத்து மக்களில் ஒருவருக்கேனும் இதற்கான மருந்தைக் கண்டுபிடிக்கும் உத்தியைக் கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கடவுள் அவ்வளவு சீக்கிரத்தில் இவனுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொள்வாரா என்ன…? குமார் வேண்டி முடிப்பதற்குள் ஓடிவந்த பெண்ணின் தாயார்அவ மறுபடியும் வாரத்துக்குக் கூச்சப்படுறா.. வாங்க உள்ளே போய்ப் பார்ப்போம்எனக் குமாரின் அம்மாவை அழைத்தார். அதற்குள் அங்கு அமர்ந்திருந்த ஒரு வயதானவர்,அட அவுங்க பாத்து என்னவாகப் போகுது. பொண்ண பார்க்க வேண்டியவரைக் கூட்டிப்போய் காட்டு. இது நம்ம காலம் இல்ல. பொண்ணும் மாப்பிள்ளையும் பரஸ்பரம் பார்த்துப் பேசி விருப்பப்பட்டுக் கிட்டான்கன்னா நாம மேற்கொண்டு ஆக வேண்டியத பார்க்கலாம்’ என்றதும்அட அதுவும் சரிதான்என்று எல்லோரும் ஏகோபித்துக் குரல் கொடுத்துக் குமாரைப் பெண்ணின் அறைக்குள்  கொண்டுபோய் நிறுத்திவிட்டார்கள். இவன் அறைக்கு வருகிறான் என்று தெரிந்த கணமே பெண்ணுக்கும் படபடப்பு அதிகமாக முகத்தைச் சுவர்ப்பக்கம் வைத்துக்கொண்டு நின்றிருந்தாள். இருவருக்கும் வியர்த்துக் கொட்டியது. என்ன பேசுவதென்றே தெரியவில்லை. சரி எது வந்தாலும் பரவாயில்லை என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்ட குமார் அவளிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்துப் பேச ஆரம்பித்த வேளை பெண் சற்றுத் திரும்பித்  தலைகவிழ்ந்த வண்ணம் தன் மடியில் சொருகி வைத்திருந்த அந்தக் கடிதத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள். வாங்கிப் படித்தான். அதில்என்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லி விடுங்கள்என்று மட்டும் எழுதியிருந்தது. கடிதத்தை வாசித்த குமாரின் மகிழ்ச்சி ஆகாயத்தில் பறப்பதுபோல் இருந்தது. அவளிடம்ஏன்என்று கேட்க நினைத்தவன் வாயை மூடிக்கொண்டு சற்றுநேரம் வரை இருந்தான். உடனே வெளியேறினால் இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை என்று எண்ணிவிடுவார்கள் என்பதனால் மௌனமாகவே இருந்துவிட்டு வெளியேறினான். உள்ளே செல்லும்போது படப்படப்போடு சென்றவன் வெளியே வந்தபோது புன்னகையோடு வருவதைக்கண்ட எல்லோரும் மாப்பிள்ளைக்குப் பெண்ணைப் பிடித்துவிட்டது என்பதாக ஊர்ஜிதம் செய்துகொண்டார்கள். அதே நேரம் குமாரின் அம்மா, அப்பாவுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களின் எதிர்பார்ப்பு வீண்போக வில்லை. ‘பெண்ணை எனக்குப் பிடிச்சிருக்கு. பொண்ணுக்குப் பிடிச்சிருந்தா பேசி முடிச்சிருங்க. கல்யாணத்தைக் கொரோனா சற்று ஓயும் நேரத்தில் வைத்துக் கொள்ளலாம்என்றான். அதே நேரம் அறையின் கதவோரம் நின்று இதைக் கேட்ட பெண் இடியோசைக் கேட்ட நாகம் போலானாள். ‘என்ன பைத்தியக்காரன் இவன்… பிடிக்கவில்லை என்று சொல்லச் சொன்னா பிடிச்சிருக்கு என்று சொல்கிறானேஎன்று யோசிப்பதற்குள் குடும்பமே ஓடி வந்துநீ அதிர்ஷ்டக்காரி. பார்க்க வந்த முதல் மாப்பிள்ளைக்கே உன்ன பிடிச்சிரிச்சி’ என்று ஆளாளுக்கு ஏதேதோ சொல்லி மகிழ்ந்தார்கள். அவர்களின் அந்த மகிழ்ச்சியை மாப்பிள்ளையை எனக்குப் பிடிக்கவில்லை என்ற வார்த்தைக்குண்டால் தகத்தெறிய முடியாதவளாய் மௌனமானாள். அதற்குள் குமாரின் வீட்டார் புறப்படுவதற்குத் தயாராகவே எல்லோரும் வாசல்வரை வந்து வழியனுப்பினார்கள்.

வந்திருந்த வாடகை வண்டியின் முன் ஆசனத்தில் அப்பாவை ஏற்றிவிட்டு அம்மாவுடன் பின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டான் குமார். வண்டி ஒரு நூறு இருநூறு மீற்றர் தூரம் கடப்பதற்கு முன்னதாகவே அவன் அம்மா பேச்சை ஆரம்பித்தாள்.

பொண்ணு லட்சணமா குடும்பத்திற்கு ஏற்றவளா இருந்தா. பார்த்ததுமே எங்களுக்குப் பிடிச்சிருச்சி. நீ வேண்டா வெறுப்பா இருந்ததினாலே நாங்க பேசாம இருந்தோம்’.

சரிம்மா இந்தப் பொண்ணு யாரும்மா? எப்படி இந்த ஏற்பாட்ட செய்தீங்க?’

அது உங்க  அப்பா வழியில நமக்குத் தூரத்து சொந்தம். அதான் பதுளைக்கு அங்கால ஏதோ ஒரு ஊர்ல இருக்க உங்க சின்ன தாத்தாவோட மூணாவது மகளோட மகளாம்... அதெல்லாம் விபரமா உங்க அப்பாவுக்குத்தான் தெரியும் நீ அவரைக்கேட்டுத் தெரிஞ்சிக்க

 அப்படீன்னா இங்கே எப்படிம்மா பொண்ணு பார்க்க ஏற்பாடு செய்தீங்க

இப்போ நாம போனது பொண்ணோட அத்தை வீடாம் நம்ம வீடும் இவுங்க வீடும் பெரிய தூரத்தில் இல்லைங்கிறதால் தீபாவளிக்கு அவங்க வீட்டுக்கு வந்த பொண்ண இங்கே கூட்டிவந்து இந்த ஏற்பாட்டை நடத்தினாங்க... அதுசரி அது எப்படிடா உள்ளே போய் அவள் முகத்தைப் பார்த்ததும் உன் முடிவை மாத்திக்கிட்ட?’

அதெல்லாம் ஒண்ணுமில்லே. மாத்தல அம்மா. முதல்ல அவ அங்கே எனக்குக் கொடுத்த இந்த கடிதத்தை வாசி

சட்டைப்பையில் இருந்து எடுத்து நீட்டினான். ‘என்னது கடிதம் கொடுத்தாளா.. அது எதுக்குடா..’ பதற்றத்துடன் வாங்கிப் படித்தாள். அதில்என்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லி விடுங்கள்என்று மட்டும் அவள்  எழுதியிருந்ததை வாசித்துவிட்டுஎன்னடா அவ இப்படி எழுதி இருக்கா.. இதைப் பார்த்த பின்பும் நீ எதுக்காக பொண்ண பிடிச்சிருக்குன்னு சொன்ன? ‘இல்லம்மாஇந்தப் பொண்ண எனக்கு ஏற்கனவே தெரியும். இவளைக் கட்டிக்கிறதா ஏற்கனவே வாக்குக் கொடுத்திருந்தேன். அதனாலத்தான் வேண்டா வெறுப்பாக இருந்தேன். ஆனா இவளைத்தான் பெண் பார்க்கப் போறேன் என்று தெரிஞ்சிருந்தா சந்தோசமாகவே வந்திருப்பேன்’ ‘அப்போ எதுக்குடா பொண்ணு அவளைப் பிடிக்கல என்று சொல்லச் சொல்லிக் கடிதம் கொடுத்தா.’ ‘அவளும் என்ன மாதிரியே என்ன மனசில வச்சிக்கிட்டு வேறு யாரையோ மாப்பிள்ளை பார்க்கிறதா நினைச்சுக்கிட்டு முகத்தைக்கூடத் திருப்பாமல் இந்தக் கடிதத்தைக் கொடுத்தாள். கடிதத்தில் இருந்த இந்த  அழகான கையெழுத்தை நான் ஏற்கனவே பார்த்திருந்ததால் கடிதம் கொடுத்தது இவள்தான் என்று புரிந்துகொண்ட நான், நான் யாரென்பதைக் காட்டிக்கொள்ளாமல் எதுவுமே பேசாமல் முகத்தையும் காட்டாமல் உங்ககிட்ட பொண்ண புடிச்சிருக்குன்னு சொல்லிட்டு வந்துவிட்டேன். நீ பாரு இன்னும் கொஞ்ச நேரத்திலே எனக்குப் போன் வரும்என்றான். அவன் சொன்னதுபோலவே அவனது கைப்பேசி சிணுங்கியது.. அது அவள் அவளேதான். அம்மாசரி எடுடா எடுத்துப் பேசு.’

கொஞ்சம் இரு அம்மா. கொஞ்சம் காக்க வச்சிப் பிறகு சொல்லிக்கிறேன்என்றவாறு அழைப்பைத் துண்டித்தான். அது மறுபடியும் மறுபடியும் சிணுங்கிக்கொண்டே இருந்தது.

No comments:

Post a Comment