'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 14, 2020

குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 21

நேரிசை வெண்பா


     1.       கவிஞர் பூங்கா  சண்முகம்

செய்யோன் வெயிலொளி மேனியேற்று நீலவானில்

பொய்யொளியால் மெய்ப்புகழ் கொண்டிடினும் - மெய்க்குறை(வு)

எய்தி வளரும் நிலவே வளர்மதியாய்

பொய்வாயில் வீழாது போற்று

     

      2.       கவிஞர் ஓசூர் மணிமேகலை

சொல்கின்ற வாக்கினில் சோர்விலா ஆற்றல்தான்

வெல்லும் வழியாம் விரும்பிடு - நல்வழியாம்

மெய்யொன்றே எந்நாளும் மேன்மை யளித்திடும்

பொய்வாயில் வீழாது போற்று


      3.       கவிஞர் வ.க.கன்னியப்பன்

செய்யும் செயல்களில் செம்மைபல உண்டெனினும்

உய்யும் வழியினுக் குற்றதுணை – மெய்யாக

எய்துசெய்யும் செய்கைகள் எல்லாமும் எஞ்ஞான்றும்

பொய்வாயில் வீழாது போற்று!


       4.       கவிஞர் பஃக்ருத்தீன் இப்னு ஹம்துன்

புத்தம் புதுமலராய்ப் பூவுலகில் கண்விழிக்கும்

முத்தனைய பிள்ளைக்கு முத்தங்கள் - இத்தரையில்

மெய்யன்பை ஊட்டி வளர்த்தவளை நாளெல்லாம்

பொய்வாயில் வீழாது போற்று. 


      5.       கவிஞர் அபூ முஜாஹித்

தூய்மையினை நெஞ்சிருத்தித் துர்க்குணத்தை விட்டகற்றி

ஆய்ந்தெடுத்த சொல்லை அணிசேர்த்து - வேய்ங்குழலாய்ப்

பொய்கைப் புதுக்காற்றாய்ப் பூமணத்து வாசமாய்ப்

பொய்வாயில் வீழாது போற்று

No comments:

Post a Comment