1. வெண்பாக்களில் அடிகளின் நடுவே விளங்காய்ச்சீர் விரவி வருவது சிறப்பன்று என்கிறார்களே. தகுந்த விளக்கம் தரவேண்டும் ஐயா - இளவல் ஹரிஹரன், மதுரை
குறிலிணை, குறில்நெடில்
இவை ஒற்றுடன் சேர நான்கும் "நிரையசை" என்பதே யாப்பியல் விதி. குறில் நெடில்
இடையுற்ற நேரீற்று முச்சீர் "விளங்காய்" எனப்படும். எந்த யாப்பியலாரும்
"விளாங்காய்" எனக் குறிப்பிடவில்லை. இவ்வகைச் சீருள்ள பல வெண்பாக்கள் திருக்குறள்,
நளவெண்பா, திருவாசகம் போன்ற முன்னோர் பாடல்களில் பயின்றுள. இவை வாராவெனின் அவர்கள்
எடுத்தாளக் காரணம் உண்டா? அவர்களுக்குத் தெரியாதா?
இது தவறான கருத்து
(விதியன்று). கவிதைகளையும், செய்யுட்களையும் இக்காலத்தில் உரைபோல் படித்துவிடுகிறோம்.
ஆனால் முற்காலத்தில் அவற்றை இசையாகவே பாடினர். அவ்விதம் பாடும்போது இவ்வழி விளங்காய்ச்
சீர் சற்றே நீண்டொலிப்பதால் சந்தம் கெட்டுத் தடுமாறும் நிலையின் காரணமாக விளாங்காயைக்
கூடுமானவரை தவிர்த்தார்கள். இதைக் காரணம் காட்டியே அற்றைப் புலவர் விளாங்காய் வரலாகா
என்றனர். (வரக்கூடாது எனச் சொன்னாரில்லை) வரலாகா என்றால் அது இசைத்தற்கு ஆகா என்று
பொருள். சான்றுகளாகப் பல முன்னோர் பாடல்களே இருக்கையில் விளாங்காய் வரக்கூடாது
எனச் சொல்வது பிழை.
குறிப்பு : விளாங்காய்
என்ற வாய்பாடு எந்த யாப்பியல் நூல்களிலும் இல்லை. யாப்பை விளக்க வந்த யாப்பருங்கலக்
காரிகையிலும் இச்சீர்கள் உள்ளன
2. சிலப்பதிகாரம் நடந்த கதை எனில் எங்கேனும் கல்வெட்டுகள் கிடைத்திருக்க
வேண்டுமே. ஏதும் சான்று உண்டா? - இளவல் ஹரிஹரன், மதுரை
இஃது ஆய்வுக்குரியது.
கல்வெட்டு ஆராய்ச்சியாளரிடம் கேட்டுத் தெளிய வேண்டியது.
அப்படிப்பட்ட தகவல்கள் கிடைத்தால் பகிரப்படும்.
3. அண்மையில் தினமணியில் வந்த கம்பராமாயணக் கட்டுரை ஒன்றில், கம்ப ராமாயணத்தில்
கிருத்துவக் கோட்பாடும், மகமதியக் கோட்பாடும் சொல்லப்படுவதாக ஒருவர் கட்டுரை எழுதியள்ளாரே.
எப்படி ஐயா.. - இளவல் ஹரிஹரன், மதுரை
சமயங்கள் பலவும் மக்களின் வாழ்க்கைக்கான வழிகாட்டியாக விளங்குவன. எக்கருத்தை
யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் எடுத்தாளலாம். கம்ப ராமாயணத்திலும் பிற சமயக்
கருத்துகள் அமைந்திருக்கலாம். காப்பியங்கள் படைப்போர் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்.
கம்பர் கவிச் சக்கரவர்த்தி ஆவார். எக்கருத்தையும் எடுத்தாய்ந்து எண்ணத்தில் ஏற்றி வண்ணமாக்கிக்
கொடுப்பவர் அவர்.
No comments:
Post a Comment