உரையாடல் - பகுதி - 6
பைந்தமிழ்ச் செம்மல் தமிழகழ்வன்
புலவர்: இன்னும் வேறு எங்கெல்லாம் திருமுருகப்பெருமான்
உறைகிறார் ஐயனே?
நக்கீரர்: இதுவரை திருப்பரங்குன்றத்திலும் திருச்சீரலைவாயிலும் உறைபவன் திருமுருகப்
பெருமான் என்று கண்டோமல்லவா? இப்போது ஒரு சிறப்பான இடத்தைப் பார்க்கப் போகிறோம் புலவரே!
புலவர்: அப்படியா! அப்படி என்ன சிறப்பு என்பதையும் விளக்கிச் சொல்லுங்கள் ஐயனே!
நக்கீரர்: சொல்கிறேன் புலவரே! அவ்விடத்தில் ஒரு திருக்கோயில் இருக்கிறது. அத்திருக்கோயிலில்
முன்னே சென்று புகுவோர் யாரென்று அறிவீரோ?
புலவர்: யாருக்கு அந்த நற்பேறு கிட்டும்? அவர்கள் யார் ஐயனே?
நக்கீரர்: அவர்கள் மரவுரியை ஆடையாக உடுத்தியவர்கள்; வடிவாலும் நிறத்தாலும் அழகுடையவர்கள்;
வலம்புரிச் சங்கைப் போன்ற வெண்மையான நரைமுடியை உடையவர்கள்; தூய்மையாக விளங்கும் வடிவினை
உடையவர்கள்; மானின் தோலைப் போர்வையாகப் போர்த்துக் கொண்டுள்ளவர்கள்; உணவினை விலக்கிய
நோன்பின் காரணமாகத் தசை வற்றிய நிலையில் மார்பு எலும்புகள் வெளிப்படும் தோற்றத்தை உடையவர்கள்;
பகற்பொழுதிலும் உணவு உண்ணா நோன்பினைப் பல நாட்கள் கடைப்பிடிப்பவர்கள்.
புலவர்: அப்பப்பா, மிகவும் எளிமையாகவும் தவத்தில் வலிமையாகவும் இருக்கின்றனரே!
நக்கீரர்: ஆம்… அவர்கள் பகையினையும், நெடுங்காலம் தொடரும் சீற்றத்தினையும் அகற்றிய
மனத்தினை உடையவர்கள்; பலவற்றைக் கற்றவரும் அறிந்திராத கல்வி அறிவினை உடையவர்கள்; கல்வியால்
பெறும் அறிவிற்கே எல்லையாக விளங்கும் தலைமைப் பண்புடையவர்கள்; ஆசையினையும் கொடிய சினத்தினையும்
விலக்கிய அறிவுடையவர்கள்; ஒரு சிறிதும் துன்பம் அறியாதவர்கள்; யாரிடத்தும் வெறுப்பில்லாது
பொருந்தி ஒழுகும் மெய்யறிவினை உடையவர்கள். அத்தகு முனிவர்களே முன்னே சென்று திருக்கோயிலின்
உள்ளே புகுவர்.
புலவர்: அடடா… அவர்களை எண்ணும்போதே உள்ளம் பூரிக்கிறது. ஆமாம்.. ஐயனே! ஓர் ஐய
வினா! ஏன் அவ்வாறு? யாவரும் ஒரே நேரத்தில் சென்று காண முடியாதா? இறைவன் எல்லாருக்கும்
பொதுவானவன்றானே!
நக்கீரர்: ஆம் புலவரே! யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் திருமுருகப்
பெருமானைக் காணலாம். ஆனால், அங்கு நடந்த நிகழ்வையும், அத்திருக்கோயிலின் சிறப்பையும்
அறியத் தருகிறேன். முனிவர்கள் ஏன் முன் சென்றார்கள் என்பது அப்போது புரியும்.
புலவர்: நல்லது ஐயனே! கேட்கும் ஆவல் மிகுந்துவிட்டது. கூறுங்கள்.
நக்கீரர்: முனிவர்கள் முன் சென்றார்கள் அல்லவா? அவர்களைத் தொடர்ந்து யார் செல்கிறார்கள்
என்று பார்ப்போம். அவர்கள் வெண்புகை அல்லது பாலாவியை முகந்து ஆடையாக உடுத்தியதைப் போல
தூய மெல்லிய ஆடையினை அணிந்தவர்கள்; மலர்ந்த அரும்புகளாலாகிய மாலையினை அணிந்த மார்பினை
உடையவர்கள்; தம் செவிகளால் இசையை அளந்து நரம்புகளைக் கட்டிய வார்க்கட்டினை உடைய நல்ல
யாழ் இசையில் பயிற்சி பெற்றிருந்தவர்கள்; நல்ல உள்ளத்தை உடையவர்கள்; எப்பொழுதும் இனிய
சொல்லையே பேசுபவர்கள். அத்தகைய இசைவாணர்களாகிய பாணர்கள் இனிய யாழின் நரம்புகளை இயக்குவதற்காக
வருகை புரிந்தனர்.
புலவர்: ஓ! இசைவாணர்களா? நன்று நன்று. அவர்களைத் தொடர்ந்து?
நக்கீரர்: அவர்களைத் தொடர்ந்து, வேறு யாராக இருக்க முடியும்? சொல்கிறேன் புலவரே!
அவர்கள் நோயற்ற உடலை உடையவர்கள்; மாமரத்தின்
ஒளி பொருந்திய தளிர் போன்ற நிறமுடையவர்கள்; உரைகல்லில் பொன்னை உரைக்கும்போது தோன்றும்
பொன் துகள் போன்ற தோற்றமுடைய அழகு தேமலை உடையவர்கள்; காண்பதற்கினிய ஒளி பொருந்திய பதினெட்டு
வடங்களாலாகிய மேகலையை அணிந்தவர்கள்; யாரென்று தெரிகிறதா? அவர்கள் பாடினி என்று அழைக்கப்படுகின்ற
இசை வாணிகளாகிய மகளிர். அவர்களும் வருகை புரிந்தனர்.
புலவர்: ஓ! பாணர்களைத் தொடர்ந்து பாடினிகள். அப்பப்பா. அவர்கள் பாடுவதைக் கேட்கவே
உள்ளம் இனிக்குமே! அவர்களைத் தொடர்ந்து?
நக்கீரர்: அவர்களைத் தொடர்ந்து, பெருந்தலைவர்கள்.
புலவர்: பெருந்தலைவர்களா? அவர்கள் யார்?
நக்கீரர்: நஞ்சுடன் கூடிய துளையையும் வெண்மையான பற்களையும், நெருப்புப்போல மூச்சுவிடும்போது
காண்பவர்களுக்கு அச்சத்தை விளைவிக்கும் கடுமையான வலிமையினையும் உடையன பாம்புகள் அல்லவா?
அத்தகைய பாம்புகளும் மடியும்படி அவற்றை அடித்து வீழ்த்துவதும் பல வரிகளை உடைய வளைந்த
சிறகுகளையுடையதுமானது கருடன் எனப்படும் பறவை. அத்தகைய கருடன் தோற்றமளிக்கும் கொடியையுடைய
திருமால்…
புலவர்: ஓ! கருடக் கொடியான். அவருக்கு அங்கே என்ன வேலை?
நக்கீரர்: அவர் மட்டுமா? தம் ஊர்தியான வெண்ணிறக் காளை தோற்றமளிக்கும் கொடியினை
உயர்த்தியுள்ளவரும், பலரும் புகழ்ந்து போற்றும் திண்மையான தோள்களை யுடையவரும், உமையம்மையைத்
தம் இடப்பக்கத்தில் உடையவரும், இமைக்காத மூன்று கண்களையுடையவரும், முப்புரங்களை எரித்து
அழித்தவருமான சிவபெருமான்…
புலவர்: அவருமா?
நக்கீரர்: அவர் மட்டுமா? ஆயிரம் கண்களை உடையவனும், நூற்றுக்கு மேற்பட்ட வேள்விகளைச்
செய்து முடித்தலால் பகைவரை வென்று அவர்களைக் கொல்லும் வெற்றியை உடையவனும், முன்பக்கம்
உயர்ந்த நான்கு கொம்புகளையும் அழகிய நடையினையும், நிலத்தைத் தொடுமாறு நீண்ட வளைந்த
துதிக்கையினையும் உடையதும், புலவர்களால் புகழப்படுவதுமான 'ஐராவதம்' எனப்படும் யானையின்
பிடரியின் மீது அமர்ந்தவனுமான இந்திரன். அம்மூவரும் அத்திருக்கோயிலில் வந்து சேர்ந்தார்கள்.
புலவர்: ஓ! அவர்களுக்கு என்ன வேண்டும்? அவர்கள் திருமுருகப் பெருமானைத் தேடிச்
செல்லக் காரணம் என்ன?
நக்கீரர்: அவ்வாறு நான்கு பெருந்தெய்வங்களில் பிரமன் அல்லாத மற்ற மூவரும் உலகத்தைக்
காத்தலையே தங்கள் கோட்பாடாகக் கடைப் பிடித்து வரவும், திருமாலின் கொப்பூழ்த் தாமரையில்
தோன்றிய பிரமனுக்காகத், திருமுருகப் பெருமானின் திருவருளினை வேண்டி முப்பத்து முக்கோடித்
தேவர்களுடனும் பதினெட்டுக் கணங்களுடனும் ஞாயிறு போன்ற ஒளியுடன் வரலாயினர். அவர்கள்
விண்மீன்களைப் போன்ற தோற்றத்தினர்; காற்றினைப் போல் விரைவாகச் செல்லும் ஆற்றல் உடையவர்கள்;
காற்றில் தீ எரிவதைப் போன்ற வலிமை உடையவர்கள்; வானத்தில் மின்னலுடன் இடி இடிக்கும்
ஓசையை ஒத்த குரலை உடையவர்கள். அவர்கள் பிரமனைச் சிறையிலிருந்து விடுவிக்கவேண்டும் என்னும்
வேண்டுகோளுடன் வானத்தில் வட்டமாய்ச் சுழன்று வந்து நின்றனர்.
புலவர்: அப்பப்பா... திருமுருகப் பெருமானின் புகழ் ஓங்குக!
நக்கீரர்: ஆம். அத்தகைய திருக்கோயில் உடைய திரு ஆவினன்குடி என்னும் ஊரில் குற்றமற்ற
கொள்கையை உடைய தெய்வயானை அம்மையுடன் சில நாள்கள் அமர்ந்து இருப்பவர் திருமுருகப் பெருமான்.
No comments:
Post a Comment