Jan 15, 2020
ஆசிரியர் பக்கம்
அன்பானவர்களே வணக்கம்!
மரபு கவிதைகள், இலக்கண,
இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள் எனப் பல பயனுள்ள தகவல்களைத் தாங்கிவரும் பைந்தமிழ்ச்
சோலையின் தமிழ்க்குதிர் மின்னிதழ் தமிழ்ப்புத்தாண்டுச் சிறப்பிதழாக வெளிவருகிறது.
அறிவியலுக்கொவ்வாத சித்திரை
1 (ஏப்ரல் மாதம்... கடுங்கோடைக் காலம்) தமிழ்ப்
புத்தாண்டென்று நுழைக்கப்பெற்று அதை இன்றளவும் ஏற்றுக் கொண்டாடும் தமிழர்காள்!
ஆடியில் விதைத்துச் சுறவத்தில்
(தைத்திங்கள் என்னும் சனவரியாம்... வாழ்வின் மலர்ச்சிக் காலம்) அறுத்து இந்த உலகத்திற்கே
சோறிடும் நம் பண்டைய முன்னோர் கண்டறிந்த வானியற் கூற்றின்படி நமக்கெல்லாம் இன்றுதான்
தமிழ்ப்புத்தாண்டாம்.!
இக்கருத்தை வலியுறுத்தும்
முகத்தான், இத்திங்கள் முழுமையும் புத்தாண்டாகக் கொண்டு, திருப்பாவை, திருவெம்பாவை
வரிசையில்...
எந்தமிழர் இனமோங்க, எந்தமிழின்
புகழோங்க, நம் புத்தாண்டான சுறவம் திங்களைப் பாவையாக முன்னிறுத்தித், தமிழ்கூறு நல்லுலகில்
முதன் முதலாக நான் படைத்தளிக்கும் சுறவம்பாவை பனுவலை உள்ளே சுவைத்து மகிழலாம். இக்கருத்தியல்
எம் பெருமையை மீட்டெடுக்கக் கூடிய போர்வாள்.
உலகெங்கிலுமுள்ள தமிழர்கள்
அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
வாழ்க
தமிழ்! பரவுக மரபு!
தமிழன்புடன்
மரபு மாமணி
பாவலர்
மா.வரதராசன்
மருத நிலம்
பைந்தமிழ்ச் செம்மல்
நிர்மலா சிவராசசிங்கம்
பொற்கதிரோன் பொன்னொளியைப் பரப்புகின்ற வேளை
புத்தொளியாய் உழவோர்கள் ஏர்பிடித்துச் செல்வர்
நெற்பயிர்கள் காற்றினிலே தலையசைத்தே ஆடும்
நிரைநிரையாய்ப் பெண்களெல்லாம் வரிசையாக நிற்பர்
ஒற்றைவழிப் பாதையினில் கொக்குகளும் நிற்கும்
ஊர்க்குருவி பறந்துவந்து பூச்சிகளை உண்ணும்
சுற்றிவர வெருளிகளும் வரிசையிலே நிற்கும்
சோர்வின்றி வேலைசெய்வோர் உழவோர்கள் தாமே 1
உழவோர்கள் வயல்வெளியில் வேலைகளைச் செய்ய
உழத்திகளும் களைதம்மைப் பிடுங்கி நிற்பர்
அழற்கதிரோன் மெல்லெனவே உச்சியிலே ஏற
அனைவருமே மரநிழலின் கீழ்நோக்கிச் செல்வர்
பழங்கஞ்சி தட்டுகளில் பெண்களெல்லாம் ஊற்றப்
பசியடங்க வெங்காயம் சேர்த்துநன்கு உண்டு
புழுதியிலே கண்ணுறக்கம் களைப்பாறச் சாயப்
பூங்காற்று மெல்லெனவே தாலாட்டி வீசும் 2
வீசுகின்ற காற்றதுவும் களைப்பதனை நீக்க
விருப்புடனே எழுந்திடுவார் வேலைதனைச் செய்ய
நாசஞ்செய் பூச்சிக்கு மருந்துகளை வீச
நர்த்தனங்கள் புரியுமந்தப் பூச்சிகளும் மாளும்
தேசமெல்லாம் உணவுண்ண வியர்வைகளைச் சிந்தித்
தினந்தோறும் சேற்றினிலே கால்களையும் வைப்பர்
காசினியில் நெற்பயிர்கள் செழிப்புறவே நன்கு
கடுமையாக உழைத்திடுவார் வயல்வெளியில் நின்று 3
வயல்வெளியில் பெண்களெல்லாம் களையெடுத்து நிற்க
வரப்புகளில் வற்குலிகம் ஆங்காங்கு நிற்கும்
மயக்கமுற்றுக் கிளிகளெல்லாம் சுற்றிவந்து பாட
மருட்சியுடன் பூச்சியெலாம் ஓடியொளித் தேங்கும்
தயக்கமின்றி ஆங்காங்குத் தட்டான்கள் சுற்றும்
தண்ணீரில் புழுக்களெலாம் தடயமின்றிச் செல்லும்
பயிர்செழிக்கும் பக்கமெல்லாம் எழில்கொஞ்சும் நோக்கப்
பாமரரின் நெஞ்சமெல்லாம் குதூகலிக்கும் நன்றே 4
நன்றெனவே விளைந்திருக்கும் நெல்வயலைச் சுற்றி
நட்டுவைப்பர் கரும்புகளை நிரையாக அங்குத்
தின்னவரும் பசியோடு கால்நடைக ளெல்லாம்
திடுக்கிட்டுப் பார்த்ததுமே ஏமாற்றம் கொள்ளும்
பெண்களெல்லாம் கவன்களுடன் கண்விழித்து நிற்கப்
பின்புறமாய்ப் பறவையெலாம் பறந்தோடிச் செல்லும்
உண்ணிக்கொக் கெல்லாமும் தரையிறங்கிக் கத்தும்
ஊர்க்குருவி கீச்சென்றே ஒலியெழுப்பி நிற்கும் 5
நெற்கதிரைக் கிளிகளெல்லாம் கொறித்தபடி நிற்க
நெஞ்சமெல்லாம் பதறிடவே உழவோரும் விரைவர்
கற்களையும் தடிகளையும் கையெடுத்துக் கொண்டு
கலக்கமுடன் எறிந்தவற்றைத் துரத்துதற்குப் பார்ப்பர்
விற்பனங்கள் காட்டிநிற்கும் அக்கிளிகள் தம்மை
வெளியேற்ற முடியாமல் தவித்தவரும் நிற்பர்
ஒற்றுமையாய் சேர்ந்துவரும் அக்கிளிகள் போல
உழவரெல்லாம் சேர்ந்துழைத்தால் கிளியோடு மாமே 6
மேய்கின்ற எருமையெலாம் ஓய்வெடுத்து றங்க
வெள்ளைநாரை வயலினிலே தம்கால்கள் வைக்கும்
வாய்க்காலில் ஓடுகின்ற நீர்வெள்ள மாக
வயலுக்குள் பாய்ந்தோடி ஆங்காங்கு நிற்கும்
சாய்கின்ற கதிரவனின் காட்சியது காணத்
தாமரைகள் வெட்கமொடு முகம்மூடிக் கொள்ளும்
சேய்களெல்லாம் மகிழ்வுடனே தம்தாயைப் பற்றத்
தென்னங்கீற் றும்காற்றில் மெல்லவசை கொள்ளும் 7
அசைகின்ற நெற்கதிர்க ளெலாமுற்றி விட்டால்
அணிஅணியாய் உழவரெலாம் அறுவடைக்கு நிற்பர்
இசையோடு பெண்களெலாம் பாடல்களைப் பாடி
ஏராண்மை செழிக்கவைத்த இறையருளைப் போற்றத்
திசையெலாம் ஆலயங்கள் மணியெல்லாம் கேட்கும்
சேற்றுநிலம் நல்விளைச்சல் வளத்துடனே தந்தால்
நசையோடு உழவரெலாம் மகிழ்வுடனே நிற்பர்
நாடோறும் பட்டதுன்பம் திசைமாறிச் செல்லும் 8
செல்லுகின்ற வண்டியெலாம் கதிர்களவை யேற்றிச்
சிங்கநடை போடுகின்ற எருதுகளால் செல்லும்
மெல்லெனவே மனமெல்லாம் மகிழ்ச்சியினால் பொங்க
மேனியெலாம் புல்லரிக்கப் பெருமையது கொள்வர்
இல்லமெல்லாம் பசியின்றி வாழ்வதற்காய் என்றும்
ஏராண்மை என்றென்றும் உதவிகளைச் செய்யும்
தொல்லையெலாம் அகன்றிடவே உழவோர்கள் எல்லாம்
தோழமையுடன் சேர்ந்துநின்றே ஆடிமகிழ் வாரே 9
ஆடுகின்ற பெண்களெலாம் கும்மியிட்டு நன்றே
ஆனந்த மாய்ப்பாடிப் பொங்கிமகிழ் வாரே
ஓடுகின்ற நீரதுவோ ஒலியெழுப்பி யங்கே
உவகையொடு பாய்ந்துசெல்லும் வறட்சியினை நீக்கிக்
கூடுகளில் பறவையெலாம் கூடியொலி யிட்டுக்
குதூகலமாய் உழவரெல்லாம் வாழவைக்க வாழ்த்தும்
நாடுவாழப் பாடுபடும் உழவரவர் வாழ்வில்
நன்மையெலாம் நடக்கவேண்டி நாமுமெண்ணு வோமே 10
ஏமரா மன்னன்
(மாறுரையும்
நேருரையும்)
கவிஞர் பொன் இனியன்
Kuralsindhanai@gmail.com
இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும் (448)
எனும் குறட்பாவுக்கு உரையாளர்கள் பொருள்காட்டிய விதம்
குறித்த ஓர் உரசலாக அமைகிறது இக்கட்டுரை.
“கழறுவாரை யில்லாத காவலில்லாத
அரசன் தன்னைப் பகைவராய் வந்து கெடுப்பார் இல்லை யாயினும் தான் வேண்டியவா றொழுகிக்
கெடும்” என்பது மணக்குடவருரை.
“கழறுதற்கு உரியாரைத் தனக்குத்
துணையாகக் கொள்ளாமையின் காவலற்ற அரசன் பகையாய்க் கெடுப்பார் இல்லையாயினும் கெடும்”
என்பது பரிமேலழகர் உரை.
“குற்றங் கண்டவிடத்துக் கடிந்துரைத்தற்கு
உரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாத காப்பற்ற அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர் இல்லையாயினும்
கெடும்” என்பது பாவாணர் உரை
‘இல்லாத ஏமரா’ என்பதற்குப் பெயரெச்ச
அடுக்கு எனும் இலக்கணக் குறிப்பு வரைகிறார் பரிமேலழகர். அப்பெயரெச்ச அடுக்கு காரண கருமியப்
பொருளது என அதை மேலும் விரிக்கிறார் பாவாணர்.
‘இடித்துச் சொல்லும் தகுதியுடையாரைத்
துணையாகக் கொள்ளாமையால் ஏமம் இல்லாத அரசன் பகையாகக் கெடுப்பார் இல்லானாயினும் கெடும்
என்பது பழைய உரை (உவெசா).
‘இடிப்பாரை இல்லாத’ என்பதை ‘இடிப்பாரைத்
துணையாக இல்லாத’ எனப் பொருள் நீட்சி காட்டியும் ஏமரா மன்னன் எனற்குக் காவலில்லாத அரசன்
என உரை செய்தனர்.
ஏமரா - காக்கப்படாத எனப் பதவுரை
காட்டுகிறார் கோபாலகிருட்டினன். காவலற்ற எனப் பொருள் கொளற்கான இலக்கண ஏது எவருரையிலும்
காணப்படவில்லை. ஆயினும், ஏமரா என்றற்குக் காப்பின்மை என்பதான ஓர் (எதிர்மறைப்) பொருள்
புகட்ட வேண்டிப் பாவாணர் மட்டிலும் ஒரு சொல் வகைமையைக் கீழ்க்காணுமாறு அமைத்துக் காட்டுகிறார்.
ஏமரு(வு) - ஏமரு. ஏமருதல் - காப்புறுதல்
எனும் சொற்பொருள் விளக்கத்தை வைக்கிறார். ஏமரு(தல்) = ஏமரல் x
ஏமரா(மை). ஏமரா என்பது காப்பற்ற எனும் பொருளில் ஆளப்பட்ட சங்ககால இலக்கியச்
சான்றுகள் ஏதும் உண்டா என்பது தனித்த ஒரு தேடலுக்கும் ஆய்வுக்கும் உரியது.
காமம் - காமன் = காமத்தையூட்டுபவன்;
ஏமம் - ஏமர் = ஏமத்தால் தேற்றுபவர்.
‘ஏமரா’ எனுஞ்சொல் ஏமராக - ‘அரணாக’
என்றே பொருள்படுவதாகிறது. ஏமர் - ஏமரா(க) என்பதை யொத்தவாறாக இவ்வதிகாரத்திலேயே தமரா
(443 & 444) என அமைந்துள்ளதும் தூவா (455) என்பதும் கருதுக. மேலும், துணையாக
(1263) என்பதன் கடைக் குறையாய் ‘துணையா’ என (104, 433, 875) ஆகிய குறட்பாக்களில் அமைந்துள்ளதும் ஒப்புநோக்கி,
ஏமரா எனற்குக் காப்பாக / அரணாக எனும் உடன்பாட்டுப் பொருளே தக்கதாம் என்பது அறியலாகும்.
இவை யிவ்வாறாக,
உரைகளில் காணப்படும் துணையாகக்
கொள்ளாத அரசன் என்பதும் ‘பகைவராய் வந்து கெடுப்பார் இல்லையாயினும் என்பதும் சிந்திக்க
வேண்டுவன வாகிறது.
கேடு செய்வாரெல்லாம் பகைவராயிருக்க
வேண்டுவ தில்லை; பகைவரால் மட்டும் மன்னர்க்குக் கேடு வருமென்பதுமில்லை. கொல்குறும்பும்,
பாழ்செய்யும் பல்குழுவும், வேந்து அலைக்கும் உட்பகையும் (735) உண்டாம். ‘உடன்பிறந்தார்
சுற்றத்தா ரென்றிருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி’ என்பது போல் பழுதெண்ணும்
அமைச்சும் பக்கத்து எழுதலும் (639) உண்டாம்.
அதனால் பகைவர் என விரித்துக் கூற
வேண்டுவ தின்றாம். ‘பிறர் கேடு செய்யாதிருப்பினும்’ எனப் பொதுப்பட உரைப்பதே போதுமென்க.
அவ்வாறாகவே, ‘இடிப்பாரை இல்லாத’ என்பதில்
துணையாக என்பதை இடைச் செருகியதும் வேண்டற்பால தின்றேயாம்.
‘உரிய நடைமுறைகளை அவ்வத்துறை சார்ந்த
அறிஞர்களைக் கொண்ட குழுக்களிடம் கேட்டறிந்த அந்நாளில் மன்னர்கள் ஆட்சி செய்தனர்’ என்பதும்
அக்குழு ‘ஐம்பேராயம்’ எனப் பெயரியதாயிருந்ததும் சங்க இலக்கியங்களிலிருந்து அறிய முடிகிறது. இக்குழுக்கள் பரிந்துரை (Reccommending Body
only) அளவினவேயாகும். கொடுங்கோலனாயின் ஐம் பேராயங் காட்டிய அறிவுரையை மேற்கொள்ளாமற்
போதலுமுண்டு. இத்தகையவனையே கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோலன் (570) என்கிறது
திருக்குறள்.
மன்னர் தம் ஆட்சி அலுவல்கள் அத்தனையும்
அமைச்சரைக் கொண்டே நிகழ்த்துதலின் மன்னர்க்காம் பெருமைக்கும் பழிக்கும் தானும் ஒரு
கரணியமாயிருத்தல் கருதி, அவரிடத்துப் பிழை தோன்றின் அவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டிய
கடப்பாடுடையவராக அமைச்சர் இருக்கிறார். அமைச்சர் அஞ்சாது எடுத்துரைக்க வல்லவரே யாயினும் இடித்துரைக்க
மாட்டாதவரேயாம். மிகுதிக்கண் மேற்சென்றிடிக்கும் (784) கிழமை நட்புக்கே உரியது. அதாவது எந்நிலையிலும் தக்கவாறு
இடித்துத்துரைத்து அவர்க்கு உறும் கேட்டினின்று தப்புவிக்கும் அறிஞர் தம் நட்பை மன்னர்
போற்றிக் கொளல் வேண்டுவதாம். காண்க: அழ அல்லது இடித்துச் சொல்லி வழக்காய்ந்து அறிய
வல்லார் நட்பு கொளல் (795), தம்மவராக் கொளல் (443 & 444) எனவும், இனத்தனாய் இருத்தல்
(446) எனவும், துணையாரை ஆளுதல் (447) எனவும், சார்ந்து நிற்றற் குரியர் (449) என்றும்
சுற்றமாக் கொளல் (445) என்றும் பிறவிடங்களில் வெளிப்படக் குறித்தார். இப்பாடலின் நண்பராக்
கொளல் என்பதை அருத்தாபத்தி யாக்கினார் என்க.
மேற்குறித்த கருத்தை யுட்கொண்டு,
‘இடிப்பாரை ஏமரா யில்லா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்’ எனும் பொருள்கோள் வைப்பில்,
இடித்துரைக்க வல்லவர்களைத் தன் அரணாகக் கொண்டிராத அரசன் பிற எவரும் கேடு செய்யாத போதும்
தானே கெடுவான் என்பது நேரியதும் நிறைவுடையதுமான உரையாயமைகிறது. இது அதிகாரம் கருதி அரசர்க்கு எனச் சிறப்பித்துக் கூறப்படினும்
பொதுப்பட அனைவர்க்குமாவதே என்க.
கம்பனின் காவியம் பகுதி – 3
கவிஞர் சிதம்பரம்
சு. மோகன்
இராமன் விடுகின்ற அம்பு தன்னுடைய
இலக்கினைத் தாக்கி அழித்த பிறகு அவனிடமே திரும்பி வந்துவிடக் கூடியது. இதற்குச் சில
பாடல்கள் உள்ளன.
1) “கைஅவண் நெகிழ்தலும் கணையும்
சென்றுஅவன்
மை அற தவம் எலாம் வாரி மீண்டதே” - என்பது பரசுராமனின்பால் ஏவிய அம்புக்கான பாடல்.
2) “கை அவண் நெகிழ்தலோடும்,
கடுங்கணை, கால வாலி
வெய்ய மார்பு அகத்துள் தங்காது
உருவி, மேக்கு உயர மீப் போய்,
துய்ய நீர்க் கடலுள் தோய்ந்து,
தூய் மலர் அமரர் சூட்ட,
ஐயன் வெந் விடாத கொற்றத்து
ஆவம் வந்து அடைந்தது அன்றே” – என்பது வாலியின் உயிரைப் போக்கிய அம்புக்கான பாடல். அதுபோல,
3) தாடகையின் மார்பைத் துளைத்த
அம்பும் திரும்பி வந்திருக்கத்தானே வேண்டும்? ஆனால் வரவில்லை. “வயிரக் கல்லொக்கும்
நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்று” அந்த அம்பு.
இதைத்தான் பலநூறு முறை நாம் கேட்டாயிற்றே.
அம்பு கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்று என்பதெல்லாம் சரி. எங்கே போயிற்று என்று கேட்டால் அதற்கு ஒரு விடையைச்
சொல்ல வேண்டாவா? அதனை இப்போது சிந்திப்போம்.
வேள்வி காக்கும் வேள்வியில் ஈடுபட்டுத்
தாடகையை வீழ்த்தினான் இராமன். அப்போது அங்கிருந்த தேவர்களிடம் கேட்கலாம். ஆனால் எல்லோரும் மகிழ்ச்சிப் பெருக்கில் இருந்ததால் அவ்வம்பு
எங்கே போயிற்று என்று யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். தாடகை வீழ்ந்த அக்கணத்தில்
“யாமும் எம் இருக்கை பெற்றேம்” என்றல்லவா எண்ணி மகிழ்ந்தார்கள்! சரி. தாடகையின் உயிரைக்
குடித்த கூற்றுவனிடம் கேட்டால் சொல்வானா? அவனாலும்
இயலாது. ஏன் தெரியுமா?
தாடகையோடு வந்த மாரீசன், சுபாகு
ஆகியோரின் குருதியைச் சற்று ருசி பார்த்து, அரக்கரின் இரத்தம் இப்படித்தான் இருக்குமா
என்றெண்ணி மகிழ்ந்தான் கூற்றுவன் என்பார் கம்பர். எனவே, எமனும் அந்த அம்பு எங்கு போயிற்றென்று
பார்த்திருக்க மாட்டான். இலக்குவனிடம் கேட்கலாம்; அண்ணனைப் பற்றி அவனுக்குத் தெரிந்திருக்கும்.
ஆனால் அண்ணனின் திறமையைத் தானே புகழ்வதாகும் என்று தற்புகழ்ச்சி என்று உண்மையைக் கூறமாட்டான்.
அங்கிருந்த முனிவர்களிடம்? ஊஹூம். அவர்களெல்லாம்
விசுவாமித்திரனுக்குக் கட்டுப் பட்டு யாகம் செய்துகொண்டிருந்தார்கள். கவனித்திருக்க
மாட்டார்கள். அவர்களிடமும் கேட்டுப் பயனில்லை. அப்படியானால் விசுவாமித்திரனிடம்தான்
கேட்க வேண்டும். அவன்தானே இராமனின் ஆற்றலை உணர்ந்து வேள்வி காக்க அழைத்து வந்தவன்.
அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்; தாடகையின் மார்பைத் துளைத்த அம்பு எங்கே போயிற்று
என்று.
ஆனால் அதற்குள் அவன்தான் இராம
இலக்குவன் இருவரையும் அழைத்துக்கொண்டு மிதிலை நோக்கிச் சென்றுவிட்டானே... எப்படிக்
கேட்பது? வாருங்கள். மிதிலைக்கே சென்று கேட்போம்.
மிதிலைக்கு வந்து அரண்மனைக்கும்
வந்து விட்டோம். ஆகா... அதோ பாருங்கள். சனகனிடம் இராமனின் குலத்தைப் பற்றிக் கூறிக்
கொண்டிருக்கிறான் விசுவாமித்திரன். என்ன சொல்கிறான் என்று கவனியுங்கள்.
மனுவென்ற நீதியான் மகவின்றி வருந்துவான்…
கலைக்கோட்டுப் பெயர் முனியால் துயர் நீங்கக் கருதினான்… பொன்னின் மணிப் பரிகலத்தில்
புறப்பட்ட இன்னமுதை… கருங்கடலைச் செங்கனிவாய்க் கவுசலை என்பாள் பயந்தாள்… அலையாழி என
(இராமன்) வளர்ந்த பின்னர், உபநயன விதி முடித்து மறை ஓதுவித்து இவனை வளர்த்தானும் வசிட்டன்
காண்.. என்று இராமனின் பிறப்பு தொடங்கி சொல்லிக்கொண்டிருக்கிறான். அடுத்து, வேள்வியைக்
காத்தல்பொருட்டு அவனைத் தான் அழைத்து வந்ததைச் சொல்கிறான். அடுத்து, தாடகையை இராமன் வதம் செய்த விதத்தைப் பற்றிச் சொல்கிறான்.
பாருங்கள். ஆ… இதுதான். உற்றுக் கேளுங்கள்.
“அலையுருவக் கடலுருவத்(து) ஆண்டகைதன் நீண்டுயர்ந்த
நிலையுருவப் புயவலியை நீயுருவ நோக்கையா
உலையுருவக் கனலுமிழ்கண் தாடகைதன் உரம்உருவி
மலையுருவி, மரம் உருவி, மண் உருவிற்று ஒரு வாளி”
தாடகையின் மார்பில் பாய்ந்த அம்பு
அப்புறம் கழன்றுபோய் மலையை உருவிற்றாம். பின்னர் அங்கிருந்த மரங்களை உருவிற்றாம். பின்னரும் வேகம் குறையாமல் மண்ணை உருவித் தொடர்ந்து
போய்க்கொண்டே இருக்கிறதாம். அடடா... மண்ணை உருவிற்று என்று சொன்னானே தவிர அது எங்கேதான்
போனது என்று அவனும் பார்க்கவில்லை போலிருக்கிறதே. ஒருவேளை அந்த அம்பு இன்னமும் தன்
பயணத்தை நிறுத்தாமல் போய்க்கொண்டே இருக்கிறதோ?
ஆம். அதுதான் விடை. தாடகையின்
மார்பைத் துளைத்த அம்பின் வேகம் அப்படிப்பட்டது. அது கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன
பொருளைப்போல் சற்றும் பயன்படாத தன்மையை மட்டுமல்லாமால் அவர்கள் நெஞ்சில் அவ்வுயர்ந்த
பொருள் நில்லாது அகலுகின்ற வேகமும் கொண்டது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். எனவேதான்,
அது எப்படிப் போயிற்று என்று தெரிந்தாலும் எங்கே போயிற்றென்று எவருக்கும் தெரியவில்லை. அம்பை ஏவிய இராமனுக்கும்கூட அது தெரியாது என்பேன்
நான்.
இற்றைத் திங்கள் இவரைப் பற்றி
கவிமாமணி
இலந்தை சு.இராமசாமி
கட்டுரையாக்கம்:
பைந்தமிழ்ச் செம்மல் விவேக்பாரதி
கவிமாமணி, கவி வேழம், சந்தத் தமிழ்க்
கடல் என்றெல்லாம் மரபு கவிதை உலகத்தில் பாராட்டப்படுபவர் இலந்தை சு.இராமசாமி அவர்கள்.
தேர்ந்த மரபு கவிஞர், சொற்பொழிவாளர், கவிதை, நாடகங்கள், நாவல், சிறுகதைகள், வில்லுப்பாட்டு,
கட்டுரைகள் என்று படைப்பின் எல்லாப் புலத்திலும் செயல்படும் தீவிரமான படைப்பாளி இலந்தை
சு.இராமசாமி.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறுக்கு
அருகில் தெற்கிலந்தைக்குளம் என்னும் கிராமத்தில் 1947 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 20 ஆம்
தேதி பிறந்தவர். இவரது தந்தையார் சுப்பையர், தாயார் பொன்னம்மாள். இவர்களுக்கு இவர்
எட்டாவது மகனாகப் பிறந்தார். கயத்தாறில் கட்டபொம்மன் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
சிறு வயதிலிருந்தே படிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் படித்த மாணவர், தம்முடைய பள்ளி முதல்வர்
மூலம், ’நாணல்’ என்ற புனைப்பெயரில் அப்போது எழுதிவந்த அ.சீனிவாச ராகவனிடம் அறிமுகமானவர்.
அதன் விளைவாக அ.சீ.ரா முதல்வராக இருந்த தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் கணிதவியல்
இளங்கலைப் பட்டம் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.
அ.சீ.ரா. மூலம் கவிதை எழுதும் ஆற்றலையும்
இவர் வளர்த்துக் கொண்டார். 1958 ஆம் ஆண்டு கல்லூரி படிக்கும்போது ’மஞ்சரி’ இலக்கிய
இதழில், வாகீச கலாநிதி கீ.வா.ஜ. எழுதிவந்த ‘கவிபாடலாம்’ என்ற தொடரின் மூலம் கவிதை இலக்கணம்
கைவரப் பெற்றார்.
1962-65 வரை வ.உ.சி கல்லூரியில் ஆங்கிலத் துறையில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு இந்தியத் தபால் தந்தித் துறையில் சிறப்புத் தேர்வு செய்யப்பட்டு, 1966 இல் பொறியியல் மேற்பாற்வையாளராகப் பதவி யேற்றார். அங்கே பணிசெய்து கொண்டே பொறியியல் கற்று மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியலில் பட்டம் பெற்றார். அதில் பெற்ற சிறப்பு வித்தகத்தால் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு மையத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அதே துறையில் சென்னை, பம்பாய், டெல்லி, மற்றும் வடக்கு ஏமன் நாட்டிலும் பணிபுரிந்தார். பின்பு உதவிப் பொது மேலாளராகப் பணிபுரிந்து, பணி ஓய்வு பெற்றார். இவரது மனைவி பானுமதி. இவரது மகன் சீனிவாச ராகவன். மகள் கவிதா ராமசாமி.
பேராசிரியர் அ.சீ.ரா தலைமையில், 1962-இல் முதல் கவியரங்கத்தில் கலந்துகொண்டார். சென்னையில் பாரதி கலைக்கழகத்தின் பல கவியரங்குகளில் இவர் பங்கேற்றுள்ளார். குழந்தைகளுக்கான கவிகள் இயற்றும் ஆர்வம் அவருக்கு கவியரங்குகளில் கலந்து கொண்ட ஆரம்ப கால கட்டங்களிலேயே இருந்தது. இன்று வரை 2000க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியிருக்கும் இவரது கவிதைகள் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. நூற்றுக்கணக்கான கவியரங்குகளில் கலந்து கொண்டுள்ள இவர் 200க்கும் மேற்பட்ட கவியரங்குகளுக்குத் தலைமைப் பொறுப்பேற் றிருக்கிறார். ஏமன் நாட்டில் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மாநாட்டில் இருமுறை கவியரங்கத்தலைமைப் பொறுப்பேற்றுள்ளார். இந்தியாவின் பல பாகங்களிலும் இவர் கவியரங்குகளில் பங்கேற்றிருப்பதோடு, சொற்பொழிவுகளும் நிகழ்த்தியுள்ளார். சிங்கப்பூர், அமெரிக்கா, ஏமன் ஆகிய நாடுகளில் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.
பாரதி வரலாற்று வில்லுப்பாட்டு, ஐயப்பன் சரிதை வில்லுப்பாட்டு ஆகியவற்றை இயற்றியுள்ள இவர் வில்லுப்பாட்டுக் குழு அமைத்துத் தமிழகத்திலும் ஏமன் தலைநகர் சன்னாவிலும் அமெரிக்காவில் நியுஜெர்சி தமிழ்ச்சங்கத்திலும் முழுநேர வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளாக நடத்தியுள்ளார். இவருடைய மெல்லிசைப் பாடல்கள் பல வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பாடப்பட்டுள்ளன. அமெரிக்காவில் நியூயார்க்கிலிருந்து வெளிவந்த “தி தமிழ் டைம்ஸ்” என்னும் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக இரண்டாண்டுகளுக்கும் மேல் பொறுப்பேற்று நடத்தியிருக்கிறார். அமெரிக்காவில் நடந்த முதல் பன்னாட்டுப் புறநானூற்று மாநாட்டில் ’புறநானூற்றில் வாழ்த்து’ உத்திகள் என்னும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார். மிச்சிகன் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம், நியூஜெர்சி, இண்டியானா போலிஸ், சிக்காகோ, ஹூஸ்டன் பாரதி கலா மன்றம், நியூயார்க், ஃபெட்னா (மூன்று முறை) டொரொண்டோ தமிழமைப்பு, உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை போன்ற அமைப்புகளில் பல சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.
இணையத்தில் ”சந்த வசந்தம்” என்னும் கூகுள் குழுமத்தை 2001 ஆம் ஆண்டு தொடங்கினார். 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு அக்குழுமம் சிறப்பாக இயங்கிவருகிறது. அதில் கவியரங்குகள், கவிதைப் பட்டிமண்டபம் ஆகியவை நடத்தப்படுகின்றன. அது தவிர, மரபு கவிதை இலக்கண ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன. ஆங்கிலத்திலிருந்து பல புதிய இலக்கண மரபுகளைத் தமிழுக்குக் கொண்டுவரும் தொண்டு வெகுவாகப் பாராட்டப்படுகிறது. முதல்முதலாக விழியக் கவியரங்கம் நடத்திய பெருமை இன்று சந்த வசந்தம் குழுமத்திற்கு உண்டு. மின்னஞ்சல் மூலம் மரபு கவிதைகளை அந்தக் குழும உறுப்பினர்களுக்கு அவர் சொல்லிக் கொடுக்கிறார்.
உலகம் முழுவதும் உள்ள கவிஞர்களுக்கு மரபு இலக்கணமும், செய்யுள் இலக்கணமும் தெரிந்து கொண்டு தாம் கற்றதைப் பயிற்சி செய்யும் தளமாக இன்று சந்தவசந்தம் வளர்ந்துள்ளது. இக்குழுமத்தின் நீட்சியாக முகநூலிலும் தமிழ்ச் செய்யுள் இலக்கணம், தமிழ் மரபு கவியரங்கங்கள் நடந்த வண்ணம் உள்ளன. ‘விருத்தம் எழுத வருத்தம் எதற்கு’ என்னும் இலக்கணத்தொடர் வெளியாயிற்று.
இவர்
1. இலந்தை சு இராமசாமி,
2. காகுத்தன்,
3. வீரபத்ர வில்லவராயன்
போன்ற பல புனைப்பெயர்களில் எழுதி வருகிறார்.
இவர் படைத்திருக்கும் நூல்கள்:
கவிதை நூல்கள்:
1. ஸ்ரீதேவி கருமாரி அந்தாதி
2. ஸ்ரீ ஐயப்பன் சிந்து
3. சைதை சிவசுப்பிரமணியன் நான்மணி மாலை
4. கானூர் பிரளய விடங்கேசர் இரட்டை மணி மாலை
5. கயத்தாறு அகிலாண்டேஸ்வரி இரட்டைமணிமாலை
6. பேராசிரியர் அ.சீ.ரா இரட்டைமணி மாலை
7. முத்தமிழ் மும்மணிச்சிந்து
8. தெற்கிலந்தைக்குளம் ஸ்ரீ வீரபத்ரர் இரட்டைமணிச்சிந்து
9. பொருநை வெள்ளம்
10. சந்த வசந்தம்
11. அப்பாலுக்கப்பால்
12. வள்ளுவ வாயில்
13. காரைக்காலம்மையார் காரிகை
14. கண்ணன் ஏன் தேம்பித்தேம்பி அழுகிறான்
15. ஏனிந்த மாட்டுப் பொங்கல்?
16. இலந்தைக் கவிப்பெட்டகம் 1- சொல்லத்தான் நினைக்கிறேன்
17. வாரிக்கொடுப்பாள் வாராகி
18. இலந்தைக் கவிதைப் பெட்டகம் 2 - அளவு மீறினும் அமுதம்.
கட்டுரை நூல்கள்:
1. பாரதி வாழ்வும் வாக்கும்
2. அன்றாடம் மலரும் அறிவியல் பூக்கள்
3. அலாஸ்கா- பயண நூல்
4. கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் எடிசன்
5. ஹென்றி ஃபோர்ட்
6. ஐயர் தி கிரேட் - வ.வே சு ஐயர்
7. வீர் சாவர்க்கர்
8. மகாகவி பாரதி
9. பனிகண்டேன் பரமன் கண்டேன் (கைலாய யாத்திரை)
10. மைக்கேல் பாரடே
11. அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்
12. படைத்தளித்த பதின்மூன்று - அமெரிக்க வரலாறு
13. இலக்கியச் சீனி அ.சீ.ரா வாழ்வும் வாக்கும்
14. திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும்
15. பாரதியில் அறிவியல்
16. இந்திய சுதந்திரப் போராட்டம்
17. கீத கோவிந்தம் உரை மொழியாக்கம்
18. பஜகோவிந்தம், கனகதாரா- மொழியாக்கம்
19. விடுதலை வேள்வியில் தொட்டதும் சுட்டதும்
20. புறநானூற்றில் வாழ்த்து உத்திகள்
21. விருத்தம் எழுத வருத்தம் எதற்கு?
22. மூவேந்தரைப் போற்றிய முத்தொள்ளாயிரம்
வில்லுப்பாட்டு நூல்: பாரதி வில்லுப்பாட்டு
சிறுகதை நூல் : விண்ணோக்கிய வேர்கள்
தொகுத்த நூல்: கவிதையில் சித்திர விசித்திரம்.
இவர் பெற்றிருக்கும் விருதுகளும் பரிசுகளும்:
1. கவிமாமணி - சென்னை பாரதி கலைக்கழகம் வழங்கியது.
2. சந்தத் தமிழ்க்கடல் - கவியோகி வேதம் நடத்தும் சக்தி யோகா நிலையம் வழங்கியது
3. கவிவேழம் – சந்த வசந்தத்தில் கவிஞர் புதுச்சேரி தியாகராஜன் வழங்கியது.
4. அமுத சுரபி நடத்திய குறுநாவல் போட்டியில் முதற்பரிசு
5. அமுதசுரபி நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு
6. கலைமகள் பத்திரிகை நடத்திய கி வா.ஜ நூற்றாண்டு விழாக் கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு
7. முனைவர் க. தமிழ்மல்லன் நடத்தும் ’வெல்லும் தூய தமிழ்’ பத்திரிகை நடத்திய தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு.
8. இவர் எழுதியுள்ள மகாகவி பாரதி வரலாறு புத்தகத்திற்குத் திருப்பூர்த் தமிழ்ச்சங்கத்தின் பரிசு
9. இலந்தைப் பெட்டகம் முதல் தொகுதி நூலுக்கு நல்லழகம்மை செல்லப்பன் அறநிலையம் நடத்திய மரபுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு - 2018
10. கவிதை உறவு நடத்திய மரபுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு - 2018
11. சேஷன் சன்மான் விருது -2018
சந்த வசந்தம் கூகுள் குழுமத்தின் மூலம் எண்ணற்ற மரபு கவிஞர்களை உருவாக்கியவர். கனடாவைச் சேர்ந்த புலவர் பசுபதி, கவிஞர் அனந்த நாராயணன், கவிஞர் ஹரிகிருஷ்ணன், கவிஞர் சிவசிவா சுப்பிரமணியன், கவியோகி வேதம், இசைக்கவி ரமணன், கவிமாமணி வ.வே.சு, கவிமாமணி கே.ரவி என்ற நட்பு வட்டத்துடன் அடிக்கடி இணைந்து பல இலக்கிய ஆராய்ச்சிகளில் சந்த வசந்தம் குழு தொடர்ந்து செய்து வருகிறது.
கவிமாமணி இலந்தை சு. இராமசாமியைத் தொடர்பு கொள்ள:
இலந்தை சு.இராமசாமி,
பாரதி இல்லம்,
29ஆவது தெரு,
தில்லை கங்கா நகர்,
சென்னை – 600061
மின்னஞ்சல் முகவரி - kavimaamani@gmail.com
மருத்துவ வெண்பா - பசுவின் பால்
டாக்டர் வ. க. கன்னியப்பன்,
கண் மருத்துவப் பேராசிரியர்
(பணி நிறைவு)
மதுரை 18
வைத்திய வித்வன்மணி
சி.கண்ணுசாமி பிள்ளை இயற்றிய சித்த வைத்திய பதார்த்த குண விளக்கம் (1956) என்ற
புத்தகத்திலிருந்து சில மருத்துவ சம்பந்தமான நேரிசை வெண்பாக்களையும், அவற்றின்
பொருளும் குணமும் புத்தகத்தில் உள்ளபடி வெண்பாக்களின் நயத்திற்காகத் தருகிறேன்.
நேரிசை வெண்பா
பாலர் கிழவர்
பழஞ்சுரத்தோர் புண்ணாளி
சூலையர் மேகத்தோர்
துர்பலத்தோர் – ஏலுமிவர்
எல்லார்க்கு மாகு
மிளைத்தவர்க்குஞ் சாதகமாம்
நல்லாய்! பசுவின்பால்
நாட்டு.
பொருளுரை:
குழந்தைகள், முதியோர்,
நெடு நாட்கள் சுரத்தால் பாதிக்கப்பட்டோர், ரணம் உள்ளவர், சூலை, பிரமேகம், நோயினால்
பலம் குறைந்து இளைத்தவர்கள், நரம்பு தளர்ந்தவர்கள், மூளை பாதிப்பு, குடல்
சம்பந்தமான நோயாளிகள், வாத ரோகிகள், அஜீர்ண பேதி, நீர்த்தாரை ரணம் உடையவர்கள்
ஆகியோர் பசும்பாலைஅருந்தலாம்.
தாய்ப்பால் இல்லாத
குழந்தைகளுக்கும், சுரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பசும்பாலில் சம அளவு
தண்ணீர் கலந்து காய்ச்சி பாலாடையை நீக்கிக் கொடுக்கலாம்.
காய்ச்சிய பாலுடன்,
பார்லி அரிசியை வேக வைத்து வடித்த கஞ்சியை 2 பங்கு சேர்த்து டைபாய்டு காய்ச்சலில்
பாதிக்கப்படவர்களுக்குத் தரலாம்.
பசும்பாலில்
சிறிது மஞ்சள் தூவி, பனங்கற்கண்டும் சேர்த்து இரவில் அருந்தி வந்தால் வறட்சியினால்
உண்டான இருமல் குணமாகும்.
புலம்பெயர் நாடும் வாழ்வும் - பகுதி 8
பைந்தமிழ்ச் செம்மல்
இணுவையூர் வ.க.பரமநாதன்
டென்மார்க்கிலிருந்து
அரசியலமைப்பும் குடியுரிமைச் சட்டமும்
இன்று இந்தியாவில் சர்ச்சைக்குரிய விவாதப் பொருளாக மாறியிருக்கும் குடியுரிமைச்
சட்டம் எவ்வாறு இங்கு கையாளப்படுகின்றது என்பதை இவ்வேளையில் எடுத்துரைப்பது அவசியமாகிறது.
டென்மார்க் தனது மக்களுக்கான டெனிஷ் மற்றும் வெளிநாட்டிலிருந்து ஏதிலிகளாகக்
குடியேறியவர் பற்றி மிகத் தெளிவான சட்டவரைபுகளை இயற்றி அதன் வழிநின்று செயற்படுகின்றது
என்பதனை முதலிற் பதிவு செய்கிறேன். இச்சட்டத் திருத்தத்தில் சில நெகிழ்வுகளும் இருக்கத்தான்
செய்கின்றன. இவ்வகை நெகிழ்வுத் தன்மைகள் எப்படிக் கையாளப்படுகின்றன என்பதனையும் இக்
கட்டுரையில், நடந்த நிகழ்வுகளுடன் சுட்டிக் காட்ட முற்படுகின்றேன்.
தாய் அல்லது தந்தை (வெளிநாட்டவராக இருந்தாலும்) டெனிஷ் குடியுரிமை பெற்றவராக
விருக்குமிடத்து அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை சட்டப்படி இந்நாட்டுக் குடியுரிமை
பெற்றவ ராகின்றார்.
இந்நாட்டில் பல்லாண்டு காலமாக வாழ்ந்துவரும் டெனிஷ் மக்களுக்கான குடியுரிமையானது
சட்டவாக்கத்தாற் தெளிவாக உறுதிசெய்யப் பட்டுள்ளது. எனவே ஏதிலிகளுக்கான அதாவது சட்ட
விரோதமாக இந்நாட்டிற்குள் வந்தவர்கள் எவ்வாறு குடியுரிமை பெறுகின்றார்கள் என்பதனையும்,
சில சட்ட நெகிழ்வுத்தன்மை எவ்வாறு பயன்படுத்தப் படுகின்றது என்பதனையும் இனிப் பார்ப்போம்.
வெளிநாட்டவர் விமானம் மூலம் அல்லது இருநாட்டு எல்லைகளுக்கூடாக இந்நாட்டிற்குள்
ஏதிலிகள் வருகின்றனர். இவர்கள் நாட்டுக் காவலர்களின் (Police) விசாரணையின் பின் இவர்களுக்காக
அமைக்கப்பட்ட முகாங்களில் தங்க வைக்கப் படுகின்றார்கள். இவர்களுக்கு வழங்கப்படும் அடையாள
அட்டையுடன் டென்மார்க் நாட்டிற்குள் சுதந்திரமாக நடமாடவும் அனுமதிக்கப் படுகின்றனர்.
இவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அல்ல என்பது கண்டறியப்பட்ட
பின் இந்நாட்டில் வாழ்வதற்கான அனுமதி வழங்கப்படுவதோடு அவர்கள் விரும்பும் பகுதிகளில்
குடியேறுவதற்கான ஏதுநிலையையும் உருவாக்கிக் கொடுக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் விடுமுறைக்
காலங்களில் பயணம் மேற்கொள்வதற்கான கடவுச்சீட்டினையும் வழங்குகின்றனர் (எந்த நாட்டிலிருந்து
வந்தார்களோ அந்த நாட்டிற்கு மட்டும் செல்ல முடியாது). இக்கடவுச்சீட்டானது குடியுரிமை
பெற்றவர்களுக் காக வழங்கப்படும் கடவுச் சீட்டினைப்போ லிருக்காது என்பதனையும் குறிப்பிட்டேயாக
வேண்டும்.
குறிப்பிட்ட ஆண்டுகள் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருக்குமிடத்து நிரந்தரமாக
வாழ்வதற்கான (குடியுரிமை இல்லாவிடினும்) அனுமதி வழங்கப்படும்.
ஏதிலிகளாக வந்தோர் அனைவருக்கும் ஓராண்டு டெனிஷ் மொழி கற்பிக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து இவர்கள் தம் வேலைத்திறனிற்கேற்ப தொழில்களில் இணைக்கப்படுகின்றனர்.
நான் இந்நாட்டில் எனது டெனிஷ் மொழிக் கல்வியைப் பெற்றபின், ஈழத்திற் பெற்ற தொழில்சார்
கல்விச் சான்றிதழின் மூலமாக வேலையினைப் பெற்றுக் கொண்டேன். சில மாதங்கள் எனது கல்விச்
சான்றிதழ் குறிப்பிடும் வேலை, உண்மையில் எனக்குத் தெரிந்ததுதான் என்பதனைத் தெளிவாக
உறுதிசெய்த பின் அப்பகுதியில் நிரந்தர ஊழியராகச் சேர்க்கப்பட்டேன்.
இக்காலப் பகுதியில் சோமாலியா நாட்டிலிருந்து சிறந்த ஓட்டப் பந்தைய வீரரான
வில்சன் கிப்கெரர் (Wilson Kipketer) ஏதிலியாக இந்நாட்டிற்கு வந்து சேர்கின்றார். இவரின்
திறமையினை சோமாலியா பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது வேறு கதையாகும்.
வில்சனின் திறமையினைத் தெரிந்து கொண்ட டென்மார்க் தேசிய விளையாட்டுக்
கழகம் அரசின் அனுமதியினைப் பெற்றுப் பயிற்சியினை அளித்ததோடு குறுகிய காலத்திற்குள்
டெனிஷ் குடியுரிமையினையும் பெற்றுக் கொடுத்தது. அதே ஆண்டு நடைபெற்ற உலக விளையாட்டுப்
போட்டியிலும், அதன்பின் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் வில்சன் மூலம் 800 மீட்டர்
ஓட்டத்திற்கான தங்கப் பதக்கத்தினைப் பெற்றுக் கொண்டதும் டென்மார்க் இதன்மூலம் பெருமை
கொண்டதும் இதற்கு எடுத்துக் காட்டாகும்.
நான் குடும்பத்துடன் இங்கு வாழ்ந்து கொண்டிருந்த காலப் பகுதியில் எனது
மூத்த மகன் தற்காப்புக் கலையினைக் (Taekwondo) கற்றுக் கொண்டிருந்தான். இவனின் திறமையினால்
தேசிய தற்காப்புக் கலைக் கழகத்திற்குத் தேர்வு செய்யப்பட்டான். இக் கழகத்தில் இணைக்கப்படுவதாயின்
டெனிஷ் குடியுரிமையுள்ளவராக இருக்க வேண்டும் என்பது சட்டம். எங்களுக்குக் குடியுரிமை
இல்லாம லிருந்ததால் அவர்கள் மூலமாக எனது மகனுக்கு ஒரு வாரத்திற்குள் குடியுரிமையும்
கடவுச்சீட்டும் வழங்கப்பட்டது. இதுநடந்து 3 ஆண்டுகளின் பின்னரே எனக்குக் குடியுரிமை
கிடைத்தது. சரி எப்படிக் கிடைத்தது என்பதனை இனி விளக்குகின்றேன்.
இந்நாட்டின் குடியுரிமைச் சட்டம், ஏதிலியாக இருக்கும் ஒருவர் குடியுரிமை
பெற வேண்டுமாயின் அவர் தேவையான அனைத்தையும் உள்நாட் டமைச்சிற்கு முறையாகக் கையளிக்க
வேண்டும். அதாவது அரசப் பள்ளிக்கான 9 ஆம் வகுப்பிற்கான டெனிஷ் மொழிக்கு ஈடான பரீட்சையில்
சித்தி பெற்றிருக்க வேண்டும். மேலும் டெனிஷ் மொழி உரையாடலின் தரமும் உரியவர் மூலம்
உறுதி செய்யப்பட்டு உள்நாட்டமைச்சிற்கு அனுப்பி வைக்கப்படும். இவ்விண்ணப்பங்கள் உரியவர்க
ளால் பரிசீலிக்கப்பட்டுப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும்.
ஒவ்வோ ராண்டும் இத்தெரிவுக்குழுவானது ஒப்புதல் அளிப்பதன் மூலம் குடியுரிமை வழங்கப்படும்.
குடியுரிமை பெற்ற ஒருவருக்கு 18 அகவைக்குட்பட்ட பிள்ளைகளிருப்பின் அவர்களும்
தாமாகவே குடியுரிமை பெற்றுக் கொள்கின்றார்கள்.
டென்மார்க் கிறிஸ்தவ மதத்தவர்களின் நாடாக இருப்பினும் மதம், இனம் என்னும்
வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதத் தன்மையினை மதிக்கும் நாடாக விளங்கி வருவதினைப் பறைசாற்றுகின்றது.
தைத்திருநாள்
கவிஞர் தமிழகழ்வன்
தைத்திரு நாளே உள்ளத் துவகை
தைத்திரு நாளே வளமும் நலமும்
தைத்திரு நாளே பொங்கல் இன்பம்
தைத்திரு நாளே தமிழர் நாளே
தைத்திருநாள் - தைத்து இருக்கும் நாள், தைத்திங்கள் திருநாள்.
திருக்குறளில் உவமை
கவிஞர்
ஜெகதீசன்
முத்துக்கிருஷ்ணன்
திருக்குறள் தமிழில்
மலா்ந்தது. பல மொழிகளில் பெயா்ந்தது. அறமும் நீதியும் நவிலும் நூல்கள், இலக்கிய இன்பம் தாரா என்ற பொதுவான கருத்து ஒன்று
உண்டு. திருக்குறள் இதற்கு விதிவிலக்கு. திருக்குறள் இலக்கிய நயம் பெற்று
விளங்கும் ஓா் இனிய கருத்துக் கருவூலமாகும் .
எழுத்தசை சீரடி
சொற்பொருள் யாப்பு
வழுக்கில் வனப்பணி
வண்ணம் - இழுக்கின்றி
என்றெவா் செய்தன எல்லாம்
இயம்பின
இன்றிவா் இன்குறள்வெண்
பா
என்னும் நச்சுமனாா்
பாடல், எல்லா இலக்கணங்களும் பொருந்திய இனிய நூல்
திருக்குறள் என்பதற்குச் சான்றாகும்.
திருக்குறளில் அமையப்
பெற்ற உவமைகள் ஆழமும், அழகும்
நிரம்பப் பெற்றவை. பொருட்செறிவு மிக்கவை. ஒரு பொருளுக்கு, மற்றொரு
பொருளை உவமையாகச் சொல்லும்போது, அவ்விரண்டு பொருள்களுக்கும்
பொதுவான காரணிகள் நான்கு வகைப்படும் என்பாா் தொல்காப்பியா். அவை வினை, பயன், மெய், உரு என்று நால்
வகைப்படும்.
வினைபயன் மெய்உரு என்ற
நான்கே
வகைபெற வந்த உவமத்
தோற்றம்.
என்பது தொல்காப்பிய
நூற்பாவாகும்.
1.
வினை உவமம்:
இதைத் தொழிலுவமம்
என்றும் கூறுவா். ஒரு பொருளுக்கு எந்த ஒரு பொருளை உவமை செய்கிறோமோ, அதில் ஒரு வினை அல்லது தொழில் காணப்படும். இதை
வினை உவமம் என்பா்.
எடுத்துக்காட்டாக, அறைபறை அன்னா் கயவா்
என்ற குறட்பாவில், கயவா் பேச்சையும், பறையறிந்து
செய்தி கூறும் தொழிலையும் ஒப்புமைபடுத்திக் கூறுவதால், இது
வினை உவமம் ஆயிற்று. பறையினைக் கையால் சுமந்து கொண்டு, பல
இடங்களுக்கும் சென்று, செய்திகளைப் பலருக்கும் உணா்த்துவது
போன்று, கயவா்களும் தாம் கேட்ட மறைபொருளை, தங்கள் வாய் மூலமாக அனைவருக்கும் சொல்லுவதால் இது வினை உவமம் ஆயிற்று.
இக்குறட்பாவில் 'அன்ன' என்ற உருபின் வேற்று
வடிவமான 'அன்னா்' உவம உருபாக வருவதைக்
காணலாம்.
அன்ன, ஆங்க, மான, விறப்ப,
என்ன, உறழ, தகைய, நோக்கொடு
கண்ணிய எட்டும்
வினைப்பால் உவமம் .
என்பா் தொல்காப்பியா் .
'ஆங்க' என்னும் உருபு:
கணைகொடிது யாழ்கோடு
செவ்விதாங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.
அம்பு நேரான வடிவம்
உடையதுதான் . ஆனால் அது புாியும் தொழிலோ கொலைத் தொழில். யாழோ வளைந்த வடிவம்
உடையது. இசையெழுப்பி இன்பம் ஊட்ட வல்லது. ஒன்று இன்பம் தரும் தொழிலைச் செய்கிறது.
மற்றொன்றோ துன்பம் தரும் தொழிலைச் செய்கிறது. எனவே வேடத்தால் நல்லவா்கள் செயலால்
தீயவா்களாக இருக்கலாம் கணையைப் போல. அதே சமயத்தில் தோற்றத்தால் இழிந்தவா்கள், நல்லவா்களாக இருக்கலாம் யாழைப்போல. இங்கே தொழில்
பற்றி ஒப்புமை பேசப்பட்டதால், இக்குறள் தொழிலுவமத்திற்குச்
சான்றாயிற்று.
'தகைய' என்னும் உருபு:
ஊக்கமிகுந்த அரசன்
ஒருவன், தனக்கு ஏற்ற காலத்தை எதிா்நோக்கி காத்திருக்க
வேண்டும். காலமறிந்தே எச்செயலையும் செய்தல் வேண்டும். இதனை விளக்க வள்ளுவா் எளிய
உவமை ஒன்றினை எடுத்துக் காட்டுகின்றாா். கிராமப் புறங்களில், திருவிழாக் காலங்களில், நாம் காணுகின்ற ஆட்டுக்
கிடாய்ச் சண்டையை, இங்கு உவமையாகக் காட்டுகின்றாா் .
ஆட்டுக்கடா தன் பகையைத்
தாக்குவதற்காகப் பின்னோக்கிச் செல்லுவதைப்போல, அரசனும் காலமறிந்து போா்ச்செயல்களில் ஈடுபடல் வேண்டும். தக்க காலத்தை
நோக்கி ஒடுங்கியிருத்தல் அவனுக்கு இழுக்காகாது. வெற்றி வாய்ப்பிற்கு ஏற்ற காலம்
வரும்போதுதான் வெற்றி கிட்டும். எனவே ஓா் அரசன் போா்வினை தவிாத்திருத்தல் என்பது,
பின்நிகழும் போருக்குத் தன்னை ஆக்கப்படுத்திக் கொள்கிறான் என்று
இந்த உவமையின் மூலமாக ஆசிாியா் விளக்குகின்றாா்.
ஊக்க முடையான் ஒடுக்கம்
பொருதகா்
தாக்கற்குப் பேருந்
தகைத்து
என்னும் குறட்பாவின்
மூலம் அரசனுக்கும் மக்களுக்கும் அறிவுரை கூறுகிறாா். வள்ளுவா் பொருட்பாலில்
அரசனுக்குக் கூறும் அறிவுரைகளில் பெரும்பாலும், தனிமனித வாழ்க்கைக்கும் பொருந்தி வருகின்றன என்பது ஈண்டு நோக்கத் தக்கது.
இக்குறட்பாவில் ஆட்டுக்
கிடாயின் பின்நோக்கிச் செல்லும் வினையானது, அரசனுடைய ஒடுக்கத்திற்கு ஒப்புமை செய்யப்படுவதால், இது
வினையுவமம் ஆயிற்று .
2.
பயனுவமம்
வினையுவமத்திற்கு
அடுத்ததாகத் தொல்காப்பியா் பயனுவமத்தைக் கூறுகிறாா். வினையின் விளைவால் கிடைப்பது
பயன் ஆதலின், இதை வினையுவமத்திற்குப்
பின்னே வைத்தாா் .
எள்ள, விழைய, புல்ல, பொருவ,
கள்ள, மதிப்ப, வெல்ல, வீழ
என்றாங்கு எட்டே பயனிலை
உவமம்.
என்பன பயனுவமத்தின்
உருபுகளாகத் தொல்காப்பியா் குறிப்பிடுகின்றாா். ஆனால் இவ்வுவம உருபுகள்
திருக்குறளில் கையாளப் படாமல் அற்று, அன்ன, ஆங்கு, இன், நோ் ஆகிய உருபுகளே பயனுவம உருபுகளாக ஆசிாியா் கையாளுகிறாா்.
சேற்று நிலத்தை எளிதே
கடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவதுபோல, துன்பமுறும்
காலத்தில், நமக்குக் கைகொடுத்து உதவுவது ஒழுக்கமுடைய
பொியோாின் அறிவுரைகளாகும். "உனக்குத் துன்பம் வரும்போது, சான்றோா்களின் அறிவுரை களைக் கேட்டு நட" என்று சுவையற்ற வகையில்
கூறாமல், துன்பத்தை சேற்று நிலத்திற்கும், சான்றோா்களின் அறிவுரைகளை ஊன்று கோலுக்கும் ஒப்பிட்டுக் கூறும் பாங்கு
போற்றுதற் குாியது.
இழுக்கல் உடையுழி
ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையாா்வாய்ச்
சொல்.
இக்குறட்பாவில் 'அற்று' உவம உருபாக
வந்துள்ளது. ஒழுக்கமுடையாாின் வாய்ச்சொற்களால் வாய்க்கும் பயனைப் போற்றி உரைப்பதால்
இது பயனுவமம் ஆகிறது.
நமக்குக் கிடைத்த
செல்வத்தை உற்றாா் உறவினா்களோடும், உறவற்ற
பிற மக்களோடும் பகிா்ந்து உண்ண வேண்டும். இக்கருத்தைச் சாதாரணமாகச் சொன்னால்,
மக்களின் மனத்தில் தங்காது. இதையே ஓா் உவமையின் வாயிலாகக்
கூறும்போது மக்களின் மனத்தை அது தைக்கும். பகிா்ந்துண்ணலின் அருமையை அறிந்து,
அறம் செய்யத் தலைப்படுவாா்கள்.
காக்கைக் கரவா
கரைந்துண்ணும ஆக்கமும்
அன்ன நீராா்க்கே உள.
ஒரு காக்கைத் தனக்கு
உணவு கிடைத்தவழி அது கரையும். உடனே பிற காகங்களும் அங்கு வந்து உணவைக் கூடி
உண்ணும். அது போல மனிதா்களும் பகிா்ந்துண்ணும் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும்
என்பது இக்குறளின் கருத்தாகும். "செல்வத்துப் பயனே ஈதல்" என்னும்
கருத்தைக் காக்கையின் மூலம் உணா்த்தியதால் இது பயனுவமம் ஆயிற்று. இக்குறளில் 'அன்ன' என்னும் உருபு பயின்று
வந்துள்ளது.
‘ஆங்க’ உருபு
கூற்றுவனே வந்தாலும், அவனை எதிா்நோக்கு கின்ற அச்சமின்மை வேண்டும்.
இந்தப் பண்பு அரசனுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் இருத்தல் வேண்டும். எல்லா வகையான
அரண்கள் இருந்தாலும், மனத்தில் அச்சமுள்ள அரசனைப் பகைவா்கள்
எளிதில் வெற்றி கொள்வா். அதுபோலவே மறதி உடையவா்களுக்கும், வாழ்வில்
ஒரு பயனும் விளையாது. உள்ளத்தில் அச்சமுடைய அரசனுக்குக் காப்பாக அமைந்த அரண்கள்
எவ்வாறு பயன்படுவதில்லையோ அவ்வாறே மறதியும், சோா்வும்
உடையவா்களுக்குப் பெற்ற செல்வங்களாலும் பயனில்லை.
அச்சம் உடையாாக்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையாா்க்கு நன்கு (
534 )
இக்குறட்பாவில் பயனுவம
உருபு 'ஆங்க' பயன்படுத்தப்பட்டுள்ளது
.
பொருளாட்சி போற்றாதாா்க் கில்லை யருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவா்க்கு . ( 252 )
அருளிலாாக்கு அவ்வுலகம் இல்லை பொருளிலாா்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு ( 247 )
இவ்விரண்டு
குறட்பாக்களிலும் ‘ஆங்க’ உருபு பயனுவமத்தில் வரப்பெற்றுள்ளதைக் காணலாம் .
'இன்' உருபு
செல்லான் கிழவன்
இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும் .
( 1039 )
இக்குறட்பாவில் 'இன்' உருபு வந்துள்ளது.
தொல்காப்பியா் விதித்த பயனுவம உருபுகளில் இது வரவில்லை என்றாலும், பேராசிாியா் ஐந்தன் உருபையும் பயனுவம உருபாகக் கொள்வாா்.
நிலத்திற்கு உாியவன்
நிலத்தைச் சென்று பாா்க்காமல் இருந்தால், அந்நிலம் அவனுடைய மனைவியைப் போல வெறுத்து அவனோடு பிணங்கிவிடும் என்பதை
உவமை வாயிலாக விளக்குகின்றாா்.
நோ் உருபு
ஒரு பயனை எதிா்நோக்கி
நட்பு கொள்ளும் நண்பா்களும், கொடுப்பவரை
உள்ளத்திற் கொள்ளாது, அவா் கொடுக்கும் பொருளை மட்டும்
மகிழ்ந்து ஏற்றுக்கொள்ளும் விலைமகளிரும், கள்வா்களும்
தம்முள் ஒத்தவராவாா்.
உறுவது சீா்தூக்கும்
நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும்
நோ்
இக்குறளில் பயனுவம
உருபாக 'நோ்' வந்தள்ளது.
(தொடரும்)
Subscribe to:
Posts (Atom)