'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 15, 2020

ஏமரா மன்னன்


 (மாறுரையும்  நேருரையும்)

கவிஞர் பொன்  இனியன்
Kuralsindhanai@gmail.com

இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்                                     (448)
எனும்  குறட்பாவுக்கு உரையாளர்கள் பொருள்காட்டிய விதம் குறித்த ஓர் உரசலாக அமைகிறது  இக்கட்டுரை.

“கழறுவாரை யில்லாத காவலில்லாத அரசன் தன்னைப் பகைவராய் வந்து கெடுப்பார் இல்லை யாயினும் தான் வேண்டியவா றொழுகிக் கெடும்”  என்பது மணக்குடவருரை.

“கழறுதற்கு உரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையின் காவலற்ற அரசன் பகையாய்க் கெடுப்பார் இல்லையாயினும் கெடும்” என்பது பரிமேலழகர் உரை.

“குற்றங் கண்டவிடத்துக் கடிந்துரைத்தற்கு உரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாத காப்பற்ற அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர் இல்லையாயினும் கெடும்” என்பது  பாவாணர் உரை

‘இல்லாத ஏமரா’ என்பதற்குப் பெயரெச்ச அடுக்கு எனும் இலக்கணக் குறிப்பு வரைகிறார் பரிமேலழகர். அப்பெயரெச்ச அடுக்கு காரண கருமியப் பொருளது என அதை மேலும் விரிக்கிறார் பாவாணர்.

‘இடித்துச் சொல்லும் தகுதியுடையாரைத் துணையாகக் கொள்ளாமையால் ஏமம் இல்லாத அரசன் பகையாகக் கெடுப்பார் இல்லானாயினும் கெடும் என்பது  பழைய உரை (உவெசா).
 
‘இடிப்பாரை இல்லாத’ என்பதை ‘இடிப்பாரைத் துணையாக இல்லாத’ எனப் பொருள் நீட்சி காட்டியும் ஏமரா மன்னன் எனற்குக் காவலில்லாத அரசன் என  உரை செய்தனர்.

ஏமரா - காக்கப்படாத எனப் பதவுரை காட்டுகிறார் கோபாலகிருட்டினன். காவலற்ற எனப் பொருள் கொளற்கான இலக்கண ஏது எவருரையிலும் காணப்படவில்லை. ஆயினும், ஏமரா என்றற்குக் காப்பின்மை என்பதான ஓர் (எதிர்மறைப்) பொருள் புகட்ட வேண்டிப் பாவாணர் மட்டிலும் ஒரு சொல் வகைமையைக் கீழ்க்காணுமாறு அமைத்துக் காட்டுகிறார்.  

ஏமரு(வு) - ஏமரு. ஏமருதல் - காப்புறுதல் எனும் சொற்பொருள் விளக்கத்தை வைக்கிறார். ஏமரு(தல்) =  ஏமரல் x  ஏமரா(மை). ஏமரா என்பது காப்பற்ற எனும் பொருளில் ஆளப்பட்ட சங்ககால இலக்கியச் சான்றுகள் ஏதும் உண்டா என்பது தனித்த ஒரு தேடலுக்கும் ஆய்வுக்கும் உரியது.
காமம் - காமன் = காமத்தையூட்டுபவன்; ஏமம் - ஏமர் = ஏமத்தால் தேற்றுபவர்.

‘ஏமரா’ எனுஞ்சொல் ஏமராக - ‘அரணாக’ என்றே பொருள்படுவதாகிறது. ஏமர் - ஏமரா(க) என்பதை யொத்தவாறாக இவ்வதிகாரத்திலேயே தமரா (443 & 444) என அமைந்துள்ளதும் தூவா (455) என்பதும் கருதுக. மேலும், துணையாக (1263) என்பதன் கடைக் குறையாய் ‘துணையா’ என (104, 433,  875) ஆகிய குறட்பாக்களில் அமைந்துள்ளதும் ஒப்புநோக்கி, ஏமரா எனற்குக் காப்பாக / அரணாக எனும் உடன்பாட்டுப் பொருளே தக்கதாம் என்பது அறியலாகும்.

இவை யிவ்வாறாக,

உரைகளில் காணப்படும் துணையாகக் கொள்ளாத அரசன் என்பதும் ‘பகைவராய் வந்து கெடுப்பார் இல்லையாயினும் என்பதும் சிந்திக்க வேண்டுவன வாகிறது.

கேடு செய்வாரெல்லாம் பகைவராயிருக்க வேண்டுவ தில்லை; பகைவரால் மட்டும் மன்னர்க்குக் கேடு வருமென்பதுமில்லை. கொல்குறும்பும், பாழ்செய்யும் பல்குழுவும், வேந்து அலைக்கும் உட்பகையும் (735) உண்டாம். ‘உடன்பிறந்தார் சுற்றத்தா ரென்றிருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி’ என்பது போல் பழுதெண்ணும் அமைச்சும் பக்கத்து எழுதலும் (639)  உண்டாம். 

அதனால் பகைவர் என விரித்துக் கூற வேண்டுவ தின்றாம். ‘பிறர் கேடு செய்யாதிருப்பினும்’ எனப் பொதுப்பட உரைப்பதே போதுமென்க. அவ்வாறாகவே,   ‘இடிப்பாரை இல்லாத’ என்பதில் துணையாக என்பதை இடைச் செருகியதும் வேண்டற்பால தின்றேயாம்.

‘உரிய நடைமுறைகளை அவ்வத்துறை சார்ந்த அறிஞர்களைக் கொண்ட குழுக்களிடம் கேட்டறிந்த அந்நாளில் மன்னர்கள் ஆட்சி செய்தனர்’ என்பதும் அக்குழு ‘ஐம்பேராயம்’ எனப் பெயரியதாயிருந்ததும் சங்க இலக்கியங்களிலிருந்து அறிய முடிகிறது.  இக்குழுக்கள் பரிந்துரை (Reccommending Body only) அளவினவேயாகும். கொடுங்கோலனாயின் ஐம் பேராயங் காட்டிய அறிவுரையை மேற்கொள்ளாமற் போதலுமுண்டு. இத்தகையவனையே கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோலன் (570)  என்கிறது  திருக்குறள்.

மன்னர் தம் ஆட்சி அலுவல்கள் அத்தனையும் அமைச்சரைக் கொண்டே நிகழ்த்துதலின் மன்னர்க்காம் பெருமைக்கும் பழிக்கும் தானும் ஒரு கரணியமாயிருத்தல் கருதி, அவரிடத்துப் பிழை தோன்றின் அவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டிய கடப்பாடுடையவராக அமைச்சர் இருக்கிறார். அமைச்சர் அஞ்சாது எடுத்துரைக்க வல்லவரே யாயினும்  இடித்துரைக்க  மாட்டாதவரேயாம். மிகுதிக்கண் மேற்சென்றிடிக்கும் (784) கிழமை  நட்புக்கே உரியது. அதாவது எந்நிலையிலும் தக்கவாறு இடித்துத்துரைத்து அவர்க்கு உறும் கேட்டினின்று தப்புவிக்கும் அறிஞர் தம் நட்பை மன்னர் போற்றிக் கொளல் வேண்டுவதாம். காண்க: அழ அல்லது இடித்துச் சொல்லி வழக்காய்ந்து அறிய வல்லார் நட்பு கொளல் (795), தம்மவராக் கொளல் (443 & 444) எனவும், இனத்தனாய் இருத்தல் (446) எனவும், துணையாரை ஆளுதல் (447) எனவும், சார்ந்து நிற்றற் குரியர் (449) என்றும் சுற்றமாக் கொளல் (445) என்றும் பிறவிடங்களில் வெளிப்படக் குறித்தார். இப்பாடலின் நண்பராக் கொளல் என்பதை அருத்தாபத்தி யாக்கினார் என்க.

மேற்குறித்த கருத்தை யுட்கொண்டு, ‘இடிப்பாரை ஏமரா யில்லா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்’ எனும் பொருள்கோள் வைப்பில், இடித்துரைக்க வல்லவர்களைத் தன் அரணாகக் கொண்டிராத அரசன் பிற எவரும் கேடு செய்யாத போதும் தானே கெடுவான் என்பது நேரியதும் நிறைவுடையதுமான உரையாயமைகிறது. இது  அதிகாரம் கருதி அரசர்க்கு எனச் சிறப்பித்துக் கூறப்படினும் பொதுப்பட அனைவர்க்குமாவதே என்க.

No comments:

Post a Comment