'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 15, 2020

கம்பனின் காவியம் பகுதி – 3


கவிஞர் சிதம்பரம் சு. மோகன்

இராமன் விடுகின்ற அம்பு தன்னுடைய இலக்கினைத் தாக்கி அழித்த பிறகு அவனிடமே திரும்பி வந்துவிடக் கூடியது. இதற்குச் சில பாடல்கள் உள்ளன.

1) “கைஅவண் நெகிழ்தலும் கணையும் சென்றுஅவன்
மை அற தவம் எலாம் வாரி மீண்டதே” - என்பது பரசுராமனின்பால் ஏவிய அம்புக்கான பாடல்.

2) “கை அவண் நெகிழ்தலோடும்,
       கடுங்கணை, கால வாலி
வெய்ய மார்பு அகத்துள் தங்காது
       உருவி, மேக்கு உயர மீப் போய்,
துய்ய நீர்க் கடலுள் தோய்ந்து,
      தூய் மலர் அமரர் சூட்ட,
ஐயன் வெந் விடாத கொற்றத்து
      ஆவம் வந்து அடைந்தது அன்றே” – என்பது வாலியின் உயிரைப் போக்கிய அம்புக்கான பாடல். அதுபோல,

3) தாடகையின் மார்பைத் துளைத்த அம்பும் திரும்பி வந்திருக்கத்தானே வேண்டும்? ஆனால் வரவில்லை. “வயிரக் கல்லொக்கும் நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று கல்லாப் புல்லர்க்கு  நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்று” அந்த அம்பு.

இதைத்தான் பலநூறு முறை நாம் கேட்டாயிற்றே. அம்பு கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்று என்பதெல்லாம் சரி.  எங்கே போயிற்று என்று கேட்டால் அதற்கு ஒரு விடையைச் சொல்ல வேண்டாவா? அதனை இப்போது சிந்திப்போம்.

வேள்வி காக்கும் வேள்வியில் ஈடுபட்டுத் தாடகையை வீழ்த்தினான் இராமன். அப்போது அங்கிருந்த தேவர்களிடம் கேட்கலாம். ஆனால்  எல்லோரும் மகிழ்ச்சிப் பெருக்கில் இருந்ததால் அவ்வம்பு எங்கே போயிற்று என்று யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். தாடகை வீழ்ந்த அக்கணத்தில் “யாமும் எம் இருக்கை பெற்றேம்” என்றல்லவா எண்ணி மகிழ்ந்தார்கள்! சரி. தாடகையின் உயிரைக் குடித்த கூற்றுவனிடம் கேட்டால் சொல்வானா?  அவனாலும் இயலாது.  ஏன் தெரியுமா?

தாடகையோடு வந்த மாரீசன், சுபாகு ஆகியோரின் குருதியைச் சற்று ருசி பார்த்து, அரக்கரின் இரத்தம் இப்படித்தான் இருக்குமா என்றெண்ணி மகிழ்ந்தான் கூற்றுவன் என்பார் கம்பர். எனவே, எமனும் அந்த அம்பு எங்கு போயிற்றென்று பார்த்திருக்க மாட்டான். இலக்குவனிடம் கேட்கலாம்; அண்ணனைப் பற்றி அவனுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அண்ணனின் திறமையைத் தானே புகழ்வதாகும் என்று தற்புகழ்ச்சி என்று உண்மையைக் கூறமாட்டான். அங்கிருந்த முனிவர்களிடம்? ஊஹூம்.  அவர்களெல்லாம் விசுவாமித்திரனுக்குக் கட்டுப் பட்டு யாகம் செய்துகொண்டிருந்தார்கள். கவனித்திருக்க மாட்டார்கள். அவர்களிடமும் கேட்டுப் பயனில்லை. அப்படியானால் விசுவாமித்திரனிடம்தான் கேட்க வேண்டும். அவன்தானே இராமனின் ஆற்றலை உணர்ந்து வேள்வி காக்க அழைத்து வந்தவன். அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்; தாடகையின் மார்பைத் துளைத்த அம்பு எங்கே போயிற்று என்று.

ஆனால் அதற்குள் அவன்தான் இராம இலக்குவன் இருவரையும் அழைத்துக்கொண்டு மிதிலை நோக்கிச் சென்றுவிட்டானே... எப்படிக் கேட்பது? வாருங்கள். மிதிலைக்கே சென்று கேட்போம்.

மிதிலைக்கு வந்து அரண்மனைக்கும் வந்து விட்டோம். ஆகா... அதோ பாருங்கள். சனகனிடம் இராமனின் குலத்தைப் பற்றிக் கூறிக் கொண்டிருக்கிறான் விசுவாமித்திரன். என்ன சொல்கிறான் என்று கவனியுங்கள். 

மனுவென்ற நீதியான் மகவின்றி வருந்துவான்… கலைக்கோட்டுப் பெயர் முனியால் துயர் நீங்கக் கருதினான்… பொன்னின் மணிப் பரிகலத்தில் புறப்பட்ட இன்னமுதை… கருங்கடலைச் செங்கனிவாய்க் கவுசலை என்பாள் பயந்தாள்… அலையாழி என (இராமன்) வளர்ந்த பின்னர், உபநயன விதி முடித்து மறை ஓதுவித்து இவனை வளர்த்தானும் வசிட்டன் காண்.. என்று இராமனின் பிறப்பு தொடங்கி சொல்லிக்கொண்டிருக்கிறான். அடுத்து, வேள்வியைக் காத்தல்பொருட்டு அவனைத் தான் அழைத்து வந்ததைச் சொல்கிறான். அடுத்து,  தாடகையை இராமன் வதம் செய்த விதத்தைப் பற்றிச் சொல்கிறான். பாருங்கள். ஆ… இதுதான். உற்றுக் கேளுங்கள்.

“அலையுருவக் கடலுருவத்(து) ஆண்டகைதன் நீண்டுயர்ந்த
நிலையுருவப் புயவலியை நீயுருவ நோக்கையா
உலையுருவக் கனலுமிழ்கண் தாடகைதன் உரம்உருவி
மலையுருவி, மரம் உருவி, மண் உருவிற்று ஒரு வாளி”

தாடகையின் மார்பில் பாய்ந்த அம்பு அப்புறம் கழன்றுபோய் மலையை உருவிற்றாம். பின்னர் அங்கிருந்த மரங்களை உருவிற்றாம்.  பின்னரும் வேகம் குறையாமல் மண்ணை உருவித் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கிறதாம். அடடா... மண்ணை உருவிற்று என்று சொன்னானே தவிர அது எங்கேதான் போனது என்று அவனும் பார்க்கவில்லை போலிருக்கிறதே. ஒருவேளை அந்த அம்பு இன்னமும் தன் பயணத்தை நிறுத்தாமல் போய்க்கொண்டே இருக்கிறதோ?

ஆம். அதுதான் விடை. தாடகையின் மார்பைத் துளைத்த அம்பின் வேகம் அப்படிப்பட்டது. அது கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளைப்போல் சற்றும் பயன்படாத தன்மையை மட்டுமல்லாமால் அவர்கள் நெஞ்சில் அவ்வுயர்ந்த பொருள் நில்லாது அகலுகின்ற வேகமும் கொண்டது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். எனவேதான், அது எப்படிப் போயிற்று என்று தெரிந்தாலும் எங்கே போயிற்றென்று எவருக்கும் தெரியவில்லை.  அம்பை ஏவிய இராமனுக்கும்கூட அது தெரியாது என்பேன் நான்.

No comments:

Post a Comment