பைந்தமிழ்ச் செம்மல்
நிர்மலா சிவராசசிங்கம்
பொற்கதிரோன் பொன்னொளியைப் பரப்புகின்ற வேளை
புத்தொளியாய் உழவோர்கள் ஏர்பிடித்துச் செல்வர்
நெற்பயிர்கள் காற்றினிலே தலையசைத்தே ஆடும்
நிரைநிரையாய்ப் பெண்களெல்லாம் வரிசையாக நிற்பர்
ஒற்றைவழிப் பாதையினில் கொக்குகளும் நிற்கும்
ஊர்க்குருவி பறந்துவந்து பூச்சிகளை உண்ணும்
சுற்றிவர வெருளிகளும் வரிசையிலே நிற்கும்
சோர்வின்றி வேலைசெய்வோர் உழவோர்கள் தாமே 1
உழவோர்கள் வயல்வெளியில் வேலைகளைச் செய்ய
உழத்திகளும் களைதம்மைப் பிடுங்கி நிற்பர்
அழற்கதிரோன் மெல்லெனவே உச்சியிலே ஏற
அனைவருமே மரநிழலின் கீழ்நோக்கிச் செல்வர்
பழங்கஞ்சி தட்டுகளில் பெண்களெல்லாம் ஊற்றப்
பசியடங்க வெங்காயம் சேர்த்துநன்கு உண்டு
புழுதியிலே கண்ணுறக்கம் களைப்பாறச் சாயப்
பூங்காற்று மெல்லெனவே தாலாட்டி வீசும் 2
வீசுகின்ற காற்றதுவும் களைப்பதனை நீக்க
விருப்புடனே எழுந்திடுவார் வேலைதனைச் செய்ய
நாசஞ்செய் பூச்சிக்கு மருந்துகளை வீச
நர்த்தனங்கள் புரியுமந்தப் பூச்சிகளும் மாளும்
தேசமெல்லாம் உணவுண்ண வியர்வைகளைச் சிந்தித்
தினந்தோறும் சேற்றினிலே கால்களையும் வைப்பர்
காசினியில் நெற்பயிர்கள் செழிப்புறவே நன்கு
கடுமையாக உழைத்திடுவார் வயல்வெளியில் நின்று 3
வயல்வெளியில் பெண்களெல்லாம் களையெடுத்து நிற்க
வரப்புகளில் வற்குலிகம் ஆங்காங்கு நிற்கும்
மயக்கமுற்றுக் கிளிகளெல்லாம் சுற்றிவந்து பாட
மருட்சியுடன் பூச்சியெலாம் ஓடியொளித் தேங்கும்
தயக்கமின்றி ஆங்காங்குத் தட்டான்கள் சுற்றும்
தண்ணீரில் புழுக்களெலாம் தடயமின்றிச் செல்லும்
பயிர்செழிக்கும் பக்கமெல்லாம் எழில்கொஞ்சும் நோக்கப்
பாமரரின் நெஞ்சமெல்லாம் குதூகலிக்கும் நன்றே 4
நன்றெனவே விளைந்திருக்கும் நெல்வயலைச் சுற்றி
நட்டுவைப்பர் கரும்புகளை நிரையாக அங்குத்
தின்னவரும் பசியோடு கால்நடைக ளெல்லாம்
திடுக்கிட்டுப் பார்த்ததுமே ஏமாற்றம் கொள்ளும்
பெண்களெல்லாம் கவன்களுடன் கண்விழித்து நிற்கப்
பின்புறமாய்ப் பறவையெலாம் பறந்தோடிச் செல்லும்
உண்ணிக்கொக் கெல்லாமும் தரையிறங்கிக் கத்தும்
ஊர்க்குருவி கீச்சென்றே ஒலியெழுப்பி நிற்கும் 5
நெற்கதிரைக் கிளிகளெல்லாம் கொறித்தபடி நிற்க
நெஞ்சமெல்லாம் பதறிடவே உழவோரும் விரைவர்
கற்களையும் தடிகளையும் கையெடுத்துக் கொண்டு
கலக்கமுடன் எறிந்தவற்றைத் துரத்துதற்குப் பார்ப்பர்
விற்பனங்கள் காட்டிநிற்கும் அக்கிளிகள் தம்மை
வெளியேற்ற முடியாமல் தவித்தவரும் நிற்பர்
ஒற்றுமையாய் சேர்ந்துவரும் அக்கிளிகள் போல
உழவரெல்லாம் சேர்ந்துழைத்தால் கிளியோடு மாமே 6
மேய்கின்ற எருமையெலாம் ஓய்வெடுத்து றங்க
வெள்ளைநாரை வயலினிலே தம்கால்கள் வைக்கும்
வாய்க்காலில் ஓடுகின்ற நீர்வெள்ள மாக
வயலுக்குள் பாய்ந்தோடி ஆங்காங்கு நிற்கும்
சாய்கின்ற கதிரவனின் காட்சியது காணத்
தாமரைகள் வெட்கமொடு முகம்மூடிக் கொள்ளும்
சேய்களெல்லாம் மகிழ்வுடனே தம்தாயைப் பற்றத்
தென்னங்கீற் றும்காற்றில் மெல்லவசை கொள்ளும் 7
அசைகின்ற நெற்கதிர்க ளெலாமுற்றி விட்டால்
அணிஅணியாய் உழவரெலாம் அறுவடைக்கு நிற்பர்
இசையோடு பெண்களெலாம் பாடல்களைப் பாடி
ஏராண்மை செழிக்கவைத்த இறையருளைப் போற்றத்
திசையெலாம் ஆலயங்கள் மணியெல்லாம் கேட்கும்
சேற்றுநிலம் நல்விளைச்சல் வளத்துடனே தந்தால்
நசையோடு உழவரெலாம் மகிழ்வுடனே நிற்பர்
நாடோறும் பட்டதுன்பம் திசைமாறிச் செல்லும் 8
செல்லுகின்ற வண்டியெலாம் கதிர்களவை யேற்றிச்
சிங்கநடை போடுகின்ற எருதுகளால் செல்லும்
மெல்லெனவே மனமெல்லாம் மகிழ்ச்சியினால் பொங்க
மேனியெலாம் புல்லரிக்கப் பெருமையது கொள்வர்
இல்லமெல்லாம் பசியின்றி வாழ்வதற்காய் என்றும்
ஏராண்மை என்றென்றும் உதவிகளைச் செய்யும்
தொல்லையெலாம் அகன்றிடவே உழவோர்கள் எல்லாம்
தோழமையுடன் சேர்ந்துநின்றே ஆடிமகிழ் வாரே 9
ஆடுகின்ற பெண்களெலாம் கும்மியிட்டு நன்றே
ஆனந்த மாய்ப்பாடிப் பொங்கிமகிழ் வாரே
ஓடுகின்ற நீரதுவோ ஒலியெழுப்பி யங்கே
உவகையொடு பாய்ந்துசெல்லும் வறட்சியினை நீக்கிக்
கூடுகளில் பறவையெலாம் கூடியொலி யிட்டுக்
குதூகலமாய் உழவரெல்லாம் வாழவைக்க வாழ்த்தும்
நாடுவாழப் பாடுபடும் உழவரவர் வாழ்வில்
நன்மையெலாம் நடக்கவேண்டி நாமுமெண்ணு வோமே 10
No comments:
Post a Comment