'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 15, 2020

புலம்பெயர் நாடும் வாழ்வும் - பகுதி 8


பைந்தமிழ்ச் செம்மல்
இணுவையூர் வ.க.பரமநாதன்
டென்மார்க்கிலிருந்து

அரசியலமைப்பும் குடியுரிமைச் சட்டமும்

இன்று இந்தியாவில் சர்ச்சைக்குரிய விவாதப் பொருளாக மாறியிருக்கும் குடியுரிமைச் சட்டம் எவ்வாறு இங்கு கையாளப்படுகின்றது என்பதை இவ்வேளையில் எடுத்துரைப்பது அவசியமாகிறது.

டென்மார்க் தனது மக்களுக்கான டெனிஷ் மற்றும் வெளிநாட்டிலிருந்து ஏதிலிகளாகக் குடியேறியவர் பற்றி மிகத் தெளிவான சட்டவரைபுகளை இயற்றி அதன் வழிநின்று செயற்படுகின்றது என்பதனை முதலிற் பதிவு செய்கிறேன். இச்சட்டத் திருத்தத்தில் சில நெகிழ்வுகளும் இருக்கத்தான் செய்கின்றன. இவ்வகை நெகிழ்வுத் தன்மைகள் எப்படிக் கையாளப்படுகின்றன என்பதனையும் இக் கட்டுரையில், நடந்த நிகழ்வுகளுடன் சுட்டிக் காட்ட முற்படுகின்றேன்.

தாய் அல்லது தந்தை (வெளிநாட்டவராக இருந்தாலும்) டெனிஷ் குடியுரிமை பெற்றவராக விருக்குமிடத்து அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை சட்டப்படி இந்நாட்டுக் குடியுரிமை பெற்றவ ராகின்றார்.

இந்நாட்டில் பல்லாண்டு காலமாக வாழ்ந்துவரும் டெனிஷ் மக்களுக்கான குடியுரிமையானது சட்டவாக்கத்தாற் தெளிவாக உறுதிசெய்யப் பட்டுள்ளது. எனவே ஏதிலிகளுக்கான அதாவது சட்ட விரோதமாக இந்நாட்டிற்குள் வந்தவர்கள் எவ்வாறு குடியுரிமை பெறுகின்றார்கள் என்பதனையும், சில சட்ட நெகிழ்வுத்தன்மை எவ்வாறு பயன்படுத்தப் படுகின்றது என்பதனையும் இனிப் பார்ப்போம்.

வெளிநாட்டவர் விமானம் மூலம் அல்லது இருநாட்டு எல்லைகளுக்கூடாக இந்நாட்டிற்குள் ஏதிலிகள் வருகின்றனர். இவர்கள் நாட்டுக் காவலர்களின் (Police) விசாரணையின் பின் இவர்களுக்காக அமைக்கப்பட்ட முகாங்களில் தங்க வைக்கப் படுகின்றார்கள். இவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையுடன் டென்மார்க் நாட்டிற்குள் சுதந்திரமாக நடமாடவும் அனுமதிக்கப் படுகின்றனர்.

இவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அல்ல என்பது கண்டறியப்பட்ட பின் இந்நாட்டில் வாழ்வதற்கான அனுமதி வழங்கப்படுவதோடு அவர்கள் விரும்பும் பகுதிகளில் குடியேறுவதற்கான ஏதுநிலையையும் உருவாக்கிக் கொடுக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் விடுமுறைக் காலங்களில் பயணம் மேற்கொள்வதற்கான கடவுச்சீட்டினையும் வழங்குகின்றனர் (எந்த நாட்டிலிருந்து வந்தார்களோ அந்த நாட்டிற்கு மட்டும் செல்ல முடியாது). இக்கடவுச்சீட்டானது குடியுரிமை பெற்றவர்களுக் காக வழங்கப்படும் கடவுச் சீட்டினைப்போ லிருக்காது என்பதனையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.

குறிப்பிட்ட ஆண்டுகள் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருக்குமிடத்து நிரந்தரமாக வாழ்வதற்கான (குடியுரிமை இல்லாவிடினும்) அனுமதி வழங்கப்படும்.

ஏதிலிகளாக வந்தோர் அனைவருக்கும் ஓராண்டு டெனிஷ் மொழி கற்பிக்கப்படும். இதனைத் தொடர்ந்து இவர்கள் தம் வேலைத்திறனிற்கேற்ப தொழில்களில் இணைக்கப்படுகின்றனர். நான் இந்நாட்டில் எனது டெனிஷ் மொழிக் கல்வியைப் பெற்றபின், ஈழத்திற் பெற்ற தொழில்சார் கல்விச் சான்றிதழின் மூலமாக வேலையினைப் பெற்றுக் கொண்டேன். சில மாதங்கள் எனது கல்விச் சான்றிதழ் குறிப்பிடும் வேலை, உண்மையில் எனக்குத் தெரிந்ததுதான் என்பதனைத் தெளிவாக உறுதிசெய்த பின் அப்பகுதியில் நிரந்தர ஊழியராகச் சேர்க்கப்பட்டேன்.

இக்காலப் பகுதியில் சோமாலியா நாட்டிலிருந்து சிறந்த ஓட்டப் பந்தைய வீரரான வில்சன் கிப்கெரர் (Wilson Kipketer) ஏதிலியாக இந்நாட்டிற்கு வந்து சேர்கின்றார். இவரின் திறமையினை சோமாலியா பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது வேறு கதையாகும்.



வில்சனின் திறமையினைத் தெரிந்து கொண்ட டென்மார்க் தேசிய விளையாட்டுக் கழகம் அரசின் அனுமதியினைப் பெற்றுப் பயிற்சியினை அளித்ததோடு குறுகிய காலத்திற்குள் டெனிஷ் குடியுரிமையினையும் பெற்றுக் கொடுத்தது. அதே ஆண்டு நடைபெற்ற உலக விளையாட்டுப் போட்டியிலும், அதன்பின் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் வில்சன் மூலம் 800 மீட்டர் ஓட்டத்திற்கான தங்கப் பதக்கத்தினைப் பெற்றுக் கொண்டதும் டென்மார்க் இதன்மூலம் பெருமை கொண்டதும் இதற்கு எடுத்துக் காட்டாகும்.

நான் குடும்பத்துடன் இங்கு வாழ்ந்து கொண்டிருந்த காலப் பகுதியில் எனது மூத்த மகன் தற்காப்புக் கலையினைக் (Taekwondo) கற்றுக் கொண்டிருந்தான். இவனின் திறமையினால் தேசிய தற்காப்புக் கலைக் கழகத்திற்குத் தேர்வு செய்யப்பட்டான். இக் கழகத்தில் இணைக்கப்படுவதாயின் டெனிஷ் குடியுரிமையுள்ளவராக இருக்க வேண்டும் என்பது சட்டம். எங்களுக்குக் குடியுரிமை இல்லாம லிருந்ததால் அவர்கள் மூலமாக எனது மகனுக்கு ஒரு வாரத்திற்குள் குடியுரிமையும் கடவுச்சீட்டும் வழங்கப்பட்டது. இதுநடந்து 3 ஆண்டுகளின் பின்னரே எனக்குக் குடியுரிமை கிடைத்தது. சரி எப்படிக் கிடைத்தது என்பதனை இனி விளக்குகின்றேன்.

இந்நாட்டின் குடியுரிமைச் சட்டம், ஏதிலியாக இருக்கும் ஒருவர் குடியுரிமை பெற வேண்டுமாயின் அவர் தேவையான அனைத்தையும் உள்நாட் டமைச்சிற்கு முறையாகக் கையளிக்க வேண்டும். அதாவது அரசப் பள்ளிக்கான 9 ஆம் வகுப்பிற்கான டெனிஷ் மொழிக்கு ஈடான பரீட்சையில் சித்தி பெற்றிருக்க வேண்டும். மேலும் டெனிஷ் மொழி உரையாடலின் தரமும் உரியவர் மூலம் உறுதி செய்யப்பட்டு உள்நாட்டமைச்சிற்கு அனுப்பி வைக்கப்படும். இவ்விண்ணப்பங்கள் உரியவர்க ளால் பரிசீலிக்கப்பட்டுப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும். ஒவ்வோ ராண்டும் இத்தெரிவுக்குழுவானது ஒப்புதல் அளிப்பதன் மூலம் குடியுரிமை வழங்கப்படும்.

குடியுரிமை பெற்ற ஒருவருக்கு 18 அகவைக்குட்பட்ட பிள்ளைகளிருப்பின் அவர்களும் தாமாகவே குடியுரிமை பெற்றுக் கொள்கின்றார்கள்.

டென்மார்க் கிறிஸ்தவ மதத்தவர்களின் நாடாக இருப்பினும் மதம், இனம் என்னும் வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதத் தன்மையினை மதிக்கும் நாடாக விளங்கி வருவதினைப் பறைசாற்றுகின்றது.

No comments:

Post a Comment