'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 15, 2020

ஆசிரியர் பக்கம்


அன்பானவர்களே வணக்கம்!

மரபு கவிதைகள், இலக்கண, இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள் எனப் பல பயனுள்ள தகவல்களைத் தாங்கிவரும் பைந்தமிழ்ச் சோலையின் தமிழ்க்குதிர் மின்னிதழ் தமிழ்ப்புத்தாண்டுச் சிறப்பிதழாக வெளிவருகிறது.

அறிவியலுக்கொவ்வாத சித்திரை 1  (ஏப்ரல் மாதம்... கடுங்கோடைக் காலம்) தமிழ்ப் புத்தாண்டென்று நுழைக்கப்பெற்று அதை இன்றளவும் ஏற்றுக் கொண்டாடும் தமிழர்காள்!

ஆடியில் விதைத்துச் சுறவத்தில் (தைத்திங்கள் என்னும் சனவரியாம்... வாழ்வின் மலர்ச்சிக் காலம்) அறுத்து இந்த உலகத்திற்கே சோறிடும் நம் பண்டைய முன்னோர் கண்டறிந்த வானியற் கூற்றின்படி நமக்கெல்லாம் இன்றுதான் தமிழ்ப்புத்தாண்டாம்.!

இக்கருத்தை வலியுறுத்தும் முகத்தான், இத்திங்கள் முழுமையும் புத்தாண்டாகக் கொண்டு, திருப்பாவை, திருவெம்பாவை வரிசையில்...

எந்தமிழர் இனமோங்க, எந்தமிழின் புகழோங்க, நம் புத்தாண்டான சுறவம் திங்களைப் பாவையாக முன்னிறுத்தித், தமிழ்கூறு நல்லுலகில் முதன் முதலாக நான் படைத்தளிக்கும் சுறவம்பாவை பனுவலை உள்ளே சுவைத்து மகிழலாம். இக்கருத்தியல் எம் பெருமையை மீட்டெடுக்கக் கூடிய போர்வாள்.

உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

வாழ்க தமிழ்! பரவுக மரபு!

தமிழன்புடன்
மரபு மாமணி
பாவலர் மா.வரதராசன்

No comments:

Post a Comment