இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா
வேங்கடந் தொட்டு
விரிநீர்க் குமரியொடு
நீங்கிலா நின்று
நிலைத்த புகழ்விளங்க
வோங்கு மலையடுக்கத்
தொண்ணீர் கரையகலத்
தேங்கிலா நன்னீர்
தினைசெறிக்க வெம்மனோர்
வீங்கு புகழொடும்
வீழா வறிவொடும்
பூங்காற்றின்
சீரியக்கத் தோடிணைந்த வானியல்பை
வாங்கித் திறத்தோடு
வாகாய்ப் பிரித்தறிந்த
பாங்கை அறிந்தினிக்கப்
பாடேலோ ரெம்பாவாய்! - க
வான்மண் டலத்தியல்பை
வாகாகத் தானறிந்து
கோண்மீன் கொண்டவுரு
கண்டுணர்ந்து நாட்பிரித்து
ஆண்டுக் கறுபொழுதாய்
நாளுக் கறுபொழுதாய்
நீண்டாறு பஃதொடு
நேரத்து நாழிகையாய்க்
காண்ட மணித்துளிகள்
நாலாறாய்க் கொண்டபடி
ஆண்டபரு வத்தை
இரண்டிரண்டாய் ஆக்கிவைத்து
வேண்டுவளங் கூட்டுஞ்
சுறவத் தொடக்கத்தை
ஆண்டென்று கொண்டோமென்
றாடேலோ ரெம்பாவாய்! - ௨
பத்திரண்டு திங்களை
ஆறிரண்டாய்ப் பங்கிட்டு
வைத்துச் சுறவம்முன்
னாற்சிலை பின்னிற்க
வித்திடும் நெல்கம்பு
மீண்ட சுறவத்தில்
நத்தும் விழவெல்லாம்
நாடிப் புரிந்தினிக்கும்
சொத்தோடு நல்லபல
சொந்தங்கள் கூடிவரும்
மெத்த மகிழ்வூட்டும்
மேன்வாழ்வைக் கூட்டிவரும்
மொத்தத்தி லிச்சுறவ
மின்பத்தி லாழ்த்துமென்
றெத்திக்கும்
போற்ற எடுத்தோதீ ரெம்பாவாய்! -
௩
வாய்ச்ச மனையாளை
வாடவிட்டுப் பாழுங்கள்
பீய்ச்சு மவலப்
பிணியாளைச் சேர்வபோல்
காய்ச்ச பலாவிருக்கக்
காதலித் துண்ணாமல்
ஈச்சம் பழமுண்ண
இன்னலுறு வாரென
மூச்சாக நின்றசுற
வத்தை முனைந்தோட்டிக்
கூச்சமே யின்றிக்
குறும்பாட்டை முன்பென்னும்
பேச்சொழித் தெம்மாண்டு
பீடுசுற வம்மென்று
வீச்சோடு பாடி
மிளிர்வோமே எம்பாவாய்! -
௪
சூரியனின் அச்சில்
சுழலும் புவிப்பந்தின்
ஓரியக்கம் கீழ்முடிந்து
முத்திங்கள் தான்கடந்து
பேரியக்கந் தென்னிருந்து
போகும் வடசெலவில்
சீராய்ச் சுறவத்
துடுகுறிக்குட் செம்பரிதி
தேரேறிச் செல்லும்
திருநாள் சுறவமாம்
பேருடைய திங்கள்
முதனாளே புத்தாண்டாம்
சீரதிகம் பெற்றுச்
சிறந்தோங்கச் செய்வதனால்
நேரில்லை என்று
நினையேலோ ரெம்பாவாய்.! -
௫
ஏமாப் புடையரசில்
இன்னலென வொன்றுண்டோ?
பூமாரி யாகி
உலகு புரந்தளித்து
நாமார்க்கு மஞ்சி
யடங்காத வாழ்வளிக்கும்
சீர்மாண்ட திங்கள்
சுறவத் திருமகளைத்
தேமாங் கனியிருக்கத்
தேடிப் புளியுண்ணப்
போமா றலைவாரைப்
புன்மை நினைவோரை
நேர்மாறாய்ச்
சிந்தித் திருப்போரைச் சீராக்கும்
ஏமமென் றேத்தி
வழுத்தேலோ ரெம்பாவாய்! -
௬
தண்ணீரைக் கொண்டுவாய்
கொப்பளிக்க ஏலாமல்
வெந்நீரைக் கொண்டயரும்
வீணர்கள் கோடையினை
நன்னாளாய்க்
கொண்டு நயப்பர் அறிவிலிகாள்
உண்ணீரு மற்றெங்கு
மெந்நீரு மில்லாமல்
முன்விதைத்த
லின்றி முனைப்பின்றி வாழுங்கால்
என்னென்று கொண்டாட?
சிந்தை தெளிமினோ
நன்மைகள் கூடிநல்
வாழ்வளிக்கும் நன்னாளே
பொன்னேர்புத்
தாண்டென்று போற்றேலோ ரெம்பாவாய்! - ௭
ஏய்ந்த பழனத்துள்
ளிட்டவை பொன்னாகத்
தேய்ந்த வறுமை
திரண்மாடாய் நின்றிணைய
வாய்ந்த செயலெலாம்
வாகாகச் செய்துவப்பர்
காய்ந்த பழனங்கள்
வாழ்க்கைக்குக் காட்டாகும்
சீந்தவு மின்றித்
திகைத்தேங்கி நின்றோரும்
தாந்தம் பொருளாலே
தன்னிலை தானுயர்த்தி
மாந்தித் திளைக்கின்ற
மாண்புடை நற்சுறவ
மேந்தும்புத்
தாண்டென் றியம்பேலோ ரெம்பாவாய்! -
௮
குச்சிக்கு மாற்றிக்
குடியேற மாட்டாமல்
பச்சைக்குத்
தோதின்றிப் பார்த்துப் பரிதவிக்கும்
வச்சிருந்த தெல்லாம்
வரிசையாய்ப் போய்ச்சேரும்
நச்சாகிச் சொந்தங்கள்
நாடிக் குறைசொல்லும்
மிச்சமீதி யின்றி
மிகுக்கும் வறுத்தெடுக்கும்
உச்சத்துச் சூரியனாய்
உள்ளத்தைப் புண்ணாக்கும்
இச்சிக்க லெல்லாமும்
சித்திரையில் என்றோர்ந்தே
இச்சியோ மென்று
நிலையேலோ ரெம்பாவாய்! -
௯
நாவற் பழமுண்ண
நாடிப்போய்க் காடலைந்து
சீவற்கா யுண்டு
சிவத்தலால் யாதுபயன்?
தாவத்தைத் தீர்த்துத்
தணிக்காத நீராலே
பாவத்தைத் தீர்த்துப்
பயனளிக்க ஏலாதே
ஆவதெல் லாம்நன்றாய்
ஆகுஞ் சுறவத்தில்
போவதெல் லாம்போகும்
புண்ணாக்கும் தீதொழிந்து
காவலா யாகுஞ்
சுறவத் தலைநாளே
தேவையாம் புத்தாண்டென்
றாடேலோ ரெம்பாவாய்! - க0
மேகக் குடமெடுத்து
முந்நீர்க் கடன்முகந்து
வாகுடன் வானத்தாய்
வாஞ்சையொடு நீர்தெளிக்க
ஆகுங்கா லாகிவிளை
யங்கழனி கோலமிட
வேகமாய்க் கீறி
விளைவித்த காளைக்கும்
போகுமிட மெங்கும்
புரைதீர் கதிருக்கும்
தோகைக் கரும்பொடும்
துய்யநறும் பொங்கலொடும்
ஓகையுடன் வந்தித்
துளமார் கடனாற்றும்
ஈகைக்குக் கைம்மாறென்
றேத்தேலோ ரெம்பாவாய்! - கக
கையால் விதைதூவிக்
காலான் மிதிப்பினும்
மெய்நோத லின்றி
மிகுக்கு முவகையால்
நெய்யிட்டுச்
சோறுண்ணும்
மேன்மை யளிக்கின்ற
தையலாம் வானமகள்
தானின்று கொட்டுகின்ற
உய்விக்கும்
மாரிக்கும் ஒப்பில் லவளுக்கும்
பொய்யின்றி யுள்ளத்
தொருசே ருணர்வோடு
நெய்யிட்ட பொங்கல்
நினைந்தளிக்கும் நன்னாளே
வையப்புத் தாண்டென்று
வாழ்த்தேலோ ரெம்பாவாய்! - க௨
ஆகின்ற தென்னென்
றயராமல் இன்னலெலாம்
போகின்ற வாகளித்துப்
புத்தாக்கஞ் செய்யுந்தாய்
தேய்கின்ற தின்றிச்
செழுமை விளைத்தலால்
ஆய்கின்ற வாழ்வுற்றோர்
அன்பொழுக ஏர்கொண்டு
வேய்கின்ற கோடுகளே
மேன்மை முகவரியாய்
ஆகின்ற நன்னிலத்திற்(கு)
அச்சுவெல்லப்
பொங்கலிட்டுத்
தோகையிஞ்சி யோடுதொழும்
தொன்மைச் சுறவந்தான்
ஆகின்ற புத்தாண்டென்(று)
ஆடேலோ ரெம்பாவாய்! - க௩
எல்லாள னிவ்வுலக
மெல்லாங் கதிர்பாய்ச்சி
நில்லாம லோடி
நியதி வினையாற்றிப்
பொல்லாங் கறுத்துப்
பொழுதாகிக் காரிருளை
இல்லாத தாக்கி
எழும்புஞ் செடிக்கெல்லாம்
நல்ல உணவீந்து
நன்மை பயக்கின்ற
வல்லாளன் யாவர்க்கும்
வாய்த்த கதிரோனைச்
சொல்லாலே வந்திக்கும்
நன்னாளே புத்தாண்டாய்ப்
பல்லாண்டு பாடிப்
பணியேலோ ரெம்பாவாய்! -
க௪
இடிஞ்சி லொளிர்ந்தும்
எரிகொள்ளி நாடி
விடிஞ்ச தறியார்
விளக்கினில் வீழ்ந்து
படிஞ்சிங்கு
வாழ்கின்றார் பாராய்நீ பாவாய்
முடிஞ்ச தறிந்து
முறைவாழ்வை நச்சிக்
கடைந்தேற்றங்
காணக் கதிரவன் றன்னால்
அடைந்த கடனீரின்
ஆவியான் மேகம்
உடைந்தொழுகக்
கண்டீர் உடையநல் வாழ்வும்
அடைந்தோமே என்றறைந்
தாடேலோ ரெம்பாவாய்.! - க௫
அஞ்சி யடங்கி
யடிமையாய் வாழாமற்
றஞ்ச மளித்துத்
தகவோடு வாழ்கின்ற
நெஞ்சத்தா ரெல்லாம்
நெருங்கி வினையாற்றி
மஞ்சதன் மேனி
மிளிரச்செய் தன்போடு
கொஞ்சிக் கதைபேசிக்
கூடி விளையாடி
எஞ்சும் மகிழ்வெய்தி
எம்வீரத் தைக்காட்டும்
விஞ்சுபுகழ்
கூட்டும் சுறவத் தலைநாளே
கொஞ்சும்புத்
தாண்டென்று கூறேலோ ரெம்பாவாய்! -
க௬
காளை சிலிர்த்துழைக்கக்
காணும் வளங்கூடக்
காளை சிரித்துவரக்
கட்டழகி மையலுறும்
தாளைப் பிடித்தொருபால்
தக்கநிலை நாட்டுவதால்
தாளைப் பிடிக்காத்
தகுவாழ்வை நாட்டுவரே.
பாளைச் சிரிப்போடு
பண்படுத்தி நீர்பாய்ச்சி
வேளைக்குத் தக்க
வினையாற்றுங் கண்டீரால்
நாளைக்கும் வேண்டி
நலஞ்சேர் சுறவத்து
நாளைப்புத் தாண்டென்று
நாட்டேலோ ரெம்பாவாய்! - க௭
பெண்கொண்ட பிள்ளை
பிணங்கவும் அம்மாமன்
என்னென்று கெஞ்சி
இழுத்தெண்ணெய் வைக்கவும்
கண்ணரக்கும்
போதில் கனிவாய் வழித்தெடுத்துத்
தண்ணீரின் வெம்மை
தரஞ்செய்ய அப்பிள்ளை
நன்னீரி லாடியபின்
நல்லாடை பூண்டமர
நன்மைக்கு நன்றிசொல்லி
நல்லரிசிப் பொங்கலிட்டு
விண்ணதிரப் போற்றி
விடியாளை வந்திக்கும்
நன்னாளே புத்தாண்டென்
றேலேலோ ரெம்பாவாய்! - க௮
மூண்டபல நன்மை
முகிழ்க்கும் திருநாளில்
நீண்டுறை கின்ற
நிலைசொந்தம் ஆங்குவரும்
சீண்டி விளையாடுஞ்
சின்னஞ் சிறுசுகளின்
தாண்டாக் குறும்புகள்
தாழா மகிழ்வூட்டும்
வேண்டும் விழாக்கள்
விரைந்தே அரங்கேறும்
ஆண்டுக் கொருநாள்
அனைவரும் கூடுவரால்
நீண்ட பிரிவை
யொழிக்கும் சுறவத்தை
மீண்டபுத் தாண்டாய்
விளம்பேலோ ரெம்பாவாய்! - க௯
புத்தாடை கட்டிப்
பொலியாரந் தாஞ்சூடி
அத்தானைச் சுற்றிவரும்
அல்லி மலரனையார்
சுற்றத்தா ரோடு
சுழன்றாடு வார்கொலோ
முத்துச் சிரிப்பாலே
மூளை நிலைகலங்கி
நத்தை யெனவூர்ந்து
நாடுமக் காளையோ
'பொத்தென்று
' வீழ்வான் பொலிந்த விடைச்சுழலில்
இத்தன்மைத் தான
சுறவத் தெழினாளே
புத்தாண்டாய்க்
கொண்டோமென் றாடேலோ ரெம்பாவாய்! - ௨௰
கூடிநின்ற சுற்றம்
குறையா மகிழ்வோடு
பாடிக் களித்துநிற்க
இல்லக் கிழவியவள்
கூடுமுக்கல்
கூட்டில் வறாட்டி யடுக்கிப்பின்
கேடிலா மாவோ
டெரிக்கப் பலகிளையும்
தேடிக் கொடுவந்து
தீமூட்டிப் பானைவைத்து
ஈடிலாப் பச்சை
யரிசியிட்டு நெய்பெய்ய
மூடிப் பிளந்துவரப்
பொங்கலோஒ பொங்கலென்று
கூடிக் குலவையிட்
டாடேலோ ரெம்பாவாய்! -
௨க
அள்ளிநீ ராட்டி
அழகாய் மெருகேற்றி
வெள்ளிப் பளிங்கன்ன
மெல்லாடை தான்பூட்டிச்
சல்லிகட்டிச்
சங்கு சரப்பூவால் மாலையிட்டுப்
புள்ளிமஞ்சள்
குங்குமத்தாற் பூரிக்க ஊர்வலமாய்த்
துள்ளிவருந்
தங்கள் குலதெய்வக் கானடைக்கு
வெல்ல முளுந்துமா
வெண்ணரிசிப் பொங்கலிட்டுக்
கள்ளமிலா வன்பால்
கலந்து படைத்தேத்தும்
தெள்ளியபுத்
தாண்டென்று தேற்றேலோ ரெம்பவாய்! -
௨௨
முப்போகத் திற்கும்
முழுதாய் உழைத்தயர்ந்து
நிற்பானுக் காக
விளையாட் டுவப்பரால்
தப்பாமற் றாவித்
திமிலைத் தழீஇய
அப்பிள்ளை யோடு
திமிர்ந்தோடுங் காளைக்கும்
அப்பப்ப வென்றூக்கி
ஆடி மகிழ்வரால்
துப்பாகி நின்ற
துணையாமக் காளையை
அப்பா அரணே அருள்வா
யெனவேத்தித்
தப்பாமற் றாட்போற்றித்
தாழேலோ ரெம்பாவாய்! - ௨௩
சீறுங்கொல் லேற்றைச்
சிதறா தடக்கிப்பின்
னேறித் தழூஉத
லேறு தழுவலாம்
ஆறுகொளக் காஅளை
அம்மங்கை கைகொள்ளும்
வீறுட னோடி விதிர்க்கும்
திமிலணைத்தல்
தேறுவீர் மஞ்சு
விரட்டென் றுரைமினோ
வேறுண் டுரிகயிற்றால்
மேற்கட்ட முன்னின்று
மீறிக்கொம் பைப்பற்ற
லுண்டா மிவையெலாம்
கூறுமெம் மாற்றலெனக்
கூறேலோ ரெம்பாவாய்! - ௨௪
வெற்றி வலம்வருங்
காளைகள் தாவிமகிழ்ந்
துற்ற பரிசிலா
லூக்கம் மிகக்கொளும்
இற்செறிந்த நங்கை
இணையவக் காளையன்
வெற்பன்ன தோளும்
விடைத்த வகலமும்
சொற்கொண் டுரைக்க
வியலாதே யம்மவோ
மற்றையெங் குண்டிச்
செறிந்தவிழா சொன்மினோ
பெற்றோம் சுறவத்
திருநாளைப் புத்தாண்டாய்
உற்றோமுற் றோமென்
றுணரேலோ ரெம்பாவாய்! - ௨௫
கட்டிய பெண்ணுமவ்
வூர்கலந் தார்களும்
மட்டில் மகிழ்வுட
னாற்றினீ ராடுவர்
பொட்டொடு பூநிலை
பெற்றுப் பொலிவுறத்
தொட்டுப் பணிகுவர்
ஏற்றிய தோர்குடத்
திட்ட கழஞ்செடுப்
போர்பனை யேறுவர்
கட்டுளி மாந்திக்
களிப்பெய்தி யாடுவர்
எட்டலை வீழவும்
எங்கு மிடமின்றி
முட்டுந் தலைகூடி
மூழ்குங்கா ணெம்பாவாய்! -
௨௬
மக்க ளுளமகிழ்வே
மாநிலத்து நல்லாட்சி
சிக்கல் மிகுத்திருப்பின்
சீரிலை யாமென்ப
தக்க வழியின்றித்
தான்வெய்யோன் வாட்டுங்கால்
இக்குமுகத் திற்கு
விழவுக் கியலாதாம்
மிக்க வறட்சியில்
மேன்மை யிழப்பவர்
தக்கதென் றெண்ணியுள்
ளோர்வரோ ஓர்மினோ
துக்கத்தை யோட்டுஞ்
சுறவத் தலைநாளே
தக்கநற் புத்தாண்டாய்ச்
சாற்றேலோ ரெம்பாவாய்! - ௨௭
கண்ணகையீர் கண்கள்
விழிமின்னீர் பெய்தின்முன்
மின்னற் கொடியை
மிளிர்க்கவே! பூநாணும்
மென்னலத்தீர்
சுற்றந் தழுவி விருந்தாக்கி
இன்னலஞ்செய்
தின்புறுவீர்! மாமடந்தை நாணுமெழிற்
சொன்னகையீர்
சொத்தாம் திருக்குறளைப் பாடுமினோ!
பொன்னகையு நாணுமிதழ்ப்
புன்னகையீர் முத்தமிழின்
சொன்னடைக்கூத்
தாடுமின் சொக்குவிதம் பாடுமினோ!
இன்னவிதம் புத்தாண்டென்
றேலேலோ ரெம்பாவாய்! - ௨௮
கட்டுக் கடங்காத
காளையீர் வான்குமுகை
வெட்டி நிறுத்துமின்
ஆண்வாழை தென்னையொடு
பட்டுக் கரைவேட்டி
பாங்காய்க் கதரங்கி
கட்டிக் கொளுமினோ
கன்னித் தமிழாலே
நட்டார்க்கு
மட்டுமின்றி நாடார்க்கும் வாழ்த்துமலர்
கொட்டி யணைமினோ
கூத்தாடிப் பாடுமினோ
தொட்ட விடமெல்லா
மின்பந் தொடர்ந்துவரக்
கொட்டுமுர சென்று
குலவேலோ ரெம்பாவாய்! -
௨௯
கொட்டுமுர சோங்கக்
குறிமின் விடுமுறையாய்
மட்டுறுத்த லாகா
பிறர்புத்தாண் டைமன்னே
கட்டிறுக்கச்
செத்துக் கழிவதனால் யாதுபயன்
கட்டிய தீங்கறுத்துக்
காப்போம் வருமினத்தை
நட்ட கனிமரத்
தின்பயனை நத்துதற்கு
இட்டுரத் தோடுநீர்
ஏற்ற லறிவுடைத்தாம்
பொட்டுரைக்க
வெல்லார்க்கும் புக்க விளக்கீரென்
றொக்க வுணர்ந்தெழுந்
தூட்டேலோ ரெம்பாவாய்! - ௩௰
நூற்பயன்
ஏதுக்க ளோடு
மியல்பின் முறையோடும்
வாதுடைத்துத்
தந்த பனுவலிதைக் - கோதின்றி
முன்னெடுப்பீர்
நம்மினத்தின் மூச்சாய்க் கொளுமினோ
இன்னலழி ஏம மிது!
No comments:
Post a Comment