'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 15, 2020

இற்றைத் திங்கள் இவரைப் பற்றி


கவிமாமணி
இலந்தை சு.இராமசாமி

கட்டுரையாக்கம்:
பைந்தமிழ்ச் செம்மல் விவேக்பாரதி

கவிமாமணி, கவி வேழம், சந்தத் தமிழ்க் கடல் என்றெல்லாம் மரபு கவிதை உலகத்தில் பாராட்டப்படுபவர் இலந்தை சு.இராமசாமி அவர்கள். தேர்ந்த மரபு கவிஞர், சொற்பொழிவாளர், கவிதை, நாடகங்கள், நாவல், சிறுகதைகள், வில்லுப்பாட்டு, கட்டுரைகள் என்று படைப்பின் எல்லாப் புலத்திலும் செயல்படும் தீவிரமான படைப்பாளி இலந்தை சு.இராமசாமி.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறுக்கு அருகில் தெற்கிலந்தைக்குளம் என்னும் கிராமத்தில் 1947 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி பிறந்தவர். இவரது தந்தையார் சுப்பையர், தாயார் பொன்னம்மாள். இவர்களுக்கு இவர் எட்டாவது மகனாகப் பிறந்தார். கயத்தாறில் கட்டபொம்மன் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சிறு வயதிலிருந்தே படிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் படித்த மாணவர், தம்முடைய பள்ளி முதல்வர் மூலம், ’நாணல்’ என்ற புனைப்பெயரில் அப்போது எழுதிவந்த அ.சீனிவாச ராகவனிடம் அறிமுகமானவர். அதன் விளைவாக அ.சீ.ரா முதல்வராக இருந்த தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் கணிதவியல் இளங்கலைப் பட்டம் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.

அ.சீ.ரா. மூலம் கவிதை எழுதும் ஆற்றலையும் இவர் வளர்த்துக் கொண்டார். 1958 ஆம் ஆண்டு கல்லூரி படிக்கும்போது ’மஞ்சரி’ இலக்கிய இதழில், வாகீச கலாநிதி கீ.வா.ஜ. எழுதிவந்த ‘கவிபாடலாம்’ என்ற தொடரின் மூலம் கவிதை இலக்கணம் கைவரப் பெற்றார்.

1962-65 வரை வ.உ.சி கல்லூரியில் ஆங்கிலத் துறையில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு இந்தியத் தபால் தந்தித் துறையில் சிறப்புத் தேர்வு செய்யப்பட்டு, 1966 இல் பொறியியல் மேற்பாற்வையாளராகப் பதவி யேற்றார். அங்கே பணிசெய்து கொண்டே பொறியியல் கற்று மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியலில் பட்டம் பெற்றார். அதில் பெற்ற சிறப்பு வித்தகத்தால் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு மையத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அதே துறையில் சென்னை, பம்பாய், டெல்லி, மற்றும் வடக்கு ஏமன் நாட்டிலும் பணிபுரிந்தார். பின்பு உதவிப் பொது  மேலாளராகப் பணிபுரிந்து, பணி ஓய்வு பெற்றார். இவரது மனைவி பானுமதி. இவரது மகன் சீனிவாச ராகவன். மகள் கவிதா ராமசாமி.

பேராசிரியர் அ.சீ.ரா தலைமையில், 1962-இல் முதல் கவியரங்கத்தில் கலந்துகொண்டார். சென்னையில் பாரதி கலைக்கழகத்தின் பல கவியரங்குகளில் இவர் பங்கேற்றுள்ளார். குழந்தைகளுக்கான கவிகள் இயற்றும் ஆர்வம் அவருக்கு கவியரங்குகளில் கலந்து கொண்ட ஆரம்ப கால கட்டங்களிலேயே இருந்தது. இன்று வரை 2000க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியிருக்கும் இவரது கவிதைகள் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. நூற்றுக்கணக்கான கவியரங்குகளில் கலந்து கொண்டுள்ள இவர் 200க்கும் மேற்பட்ட கவியரங்குகளுக்குத் தலைமைப் பொறுப்பேற் றிருக்கிறார். ஏமன் நாட்டில் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மாநாட்டில் இருமுறை கவியரங்கத்தலைமைப் பொறுப்பேற்றுள்ளார். இந்தியாவின் பல பாகங்களிலும் இவர் கவியரங்குகளில் பங்கேற்றிருப்பதோடு, சொற்பொழிவுகளும் நிகழ்த்தியுள்ளார். சிங்கப்பூர், அமெரிக்கா, ஏமன் ஆகிய நாடுகளில் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.

பாரதி வரலாற்று வில்லுப்பாட்டு, ஐயப்பன் சரிதை வில்லுப்பாட்டு ஆகியவற்றை இயற்றியுள்ள இவர் வில்லுப்பாட்டுக் குழு அமைத்துத் தமிழகத்திலும் ஏமன் தலைநகர் சன்னாவிலும் அமெரிக்காவில் நியுஜெர்சி தமிழ்ச்சங்கத்திலும் முழுநேர வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளாக நடத்தியுள்ளார். இவருடைய மெல்லிசைப் பாடல்கள் பல வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பாடப்பட்டுள்ளன. அமெரிக்காவில் நியூயார்க்கிலிருந்து வெளிவந்த “தி தமிழ் டைம்ஸ்” என்னும் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக இரண்டாண்டுகளுக்கும் மேல் பொறுப்பேற்று நடத்தியிருக்கிறார். அமெரிக்காவில் நடந்த முதல் பன்னாட்டுப் புறநானூற்று மாநாட்டில் ’புறநானூற்றில் வாழ்த்து’ உத்திகள் என்னும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார். மிச்சிகன் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம், நியூஜெர்சி, இண்டியானா போலிஸ், சிக்காகோ, ஹூஸ்டன் பாரதி கலா மன்றம், நியூயார்க், ஃபெட்னா (மூன்று முறை) டொரொண்டோ தமிழமைப்பு, உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை போன்ற அமைப்புகளில் பல சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.

இணையத்தில் ”சந்த வசந்தம்” என்னும் கூகுள் குழுமத்தை 2001 ஆம் ஆண்டு தொடங்கினார். 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு அக்குழுமம் சிறப்பாக இயங்கிவருகிறது. அதில் கவியரங்குகள், கவிதைப் பட்டிமண்டபம் ஆகியவை நடத்தப்படுகின்றன. அது தவிர, மரபு கவிதை இலக்கண ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன. ஆங்கிலத்திலிருந்து பல புதிய இலக்கண மரபுகளைத் தமிழுக்குக் கொண்டுவரும் தொண்டு வெகுவாகப் பாராட்டப்படுகிறது. முதல்முதலாக விழியக் கவியரங்கம் நடத்திய பெருமை இன்று சந்த வசந்தம் குழுமத்திற்கு உண்டு. மின்னஞ்சல் மூலம் மரபு கவிதைகளை அந்தக் குழும உறுப்பினர்களுக்கு அவர் சொல்லிக் கொடுக்கிறார்.

உலகம் முழுவதும் உள்ள கவிஞர்களுக்கு மரபு இலக்கணமும், செய்யுள் இலக்கணமும் தெரிந்து கொண்டு தாம் கற்றதைப் பயிற்சி செய்யும் தளமாக இன்று சந்தவசந்தம் வளர்ந்துள்ளது. இக்குழுமத்தின் நீட்சியாக முகநூலிலும் தமிழ்ச் செய்யுள் இலக்கணம், தமிழ் மரபு கவியரங்கங்கள் நடந்த வண்ணம் உள்ளன. ‘விருத்தம் எழுத வருத்தம் எதற்கு’ என்னும் இலக்கணத்தொடர் வெளியாயிற்று.

இவர்
1. இலந்தை சு இராமசாமி,
2. காகுத்தன்,
3. வீரபத்ர வில்லவராயன்
போன்ற பல புனைப்பெயர்களில் எழுதி வருகிறார்.

இவர் படைத்திருக்கும் நூல்கள்:
கவிதை நூல்கள்:
1.       ஸ்ரீதேவி கருமாரி அந்தாதி
2.       ஸ்ரீ ஐயப்பன் சிந்து
3.       சைதை சிவசுப்பிரமணியன் நான்மணி மாலை
4.       கானூர் பிரளய விடங்கேசர் இரட்டை மணி மாலை
5.       கயத்தாறு அகிலாண்டேஸ்வரி இரட்டைமணிமாலை
6.       பேராசிரியர் அ.சீ.ரா இரட்டைமணி மாலை
7.       முத்தமிழ் மும்மணிச்சிந்து
8.       தெற்கிலந்தைக்குளம் ஸ்ரீ வீரபத்ரர் இரட்டைமணிச்சிந்து
9.       பொருநை வெள்ளம்
10.     சந்த வசந்தம்
11.     அப்பாலுக்கப்பால்
12.     வள்ளுவ வாயில்
13.     காரைக்காலம்மையார் காரிகை
14.     கண்ணன் ஏன் தேம்பித்தேம்பி அழுகிறான்
15.     ஏனிந்த மாட்டுப் பொங்கல்?
16.     இலந்தைக் கவிப்பெட்டகம் 1- சொல்லத்தான் நினைக்கிறேன்
17.     வாரிக்கொடுப்பாள் வாராகி
18.     இலந்தைக் கவிதைப் பெட்டகம் 2 - அளவு மீறினும் அமுதம்.

கட்டுரை நூல்கள்:
1.       பாரதி வாழ்வும் வாக்கும்
2.       அன்றாடம் மலரும் அறிவியல் பூக்கள்
3.       அலாஸ்கா- பயண நூல்
4.       கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் எடிசன்
5.       ஹென்றி ஃபோர்ட்
6.       ஐயர் தி கிரேட் - வ.வே சு ஐயர்
7.       வீர் சாவர்க்கர்
8.       மகாகவி பாரதி
9.       பனிகண்டேன் பரமன் கண்டேன் (கைலாய யாத்திரை)
10.     மைக்கேல் பாரடே
11.     அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்
12.     படைத்தளித்த பதின்மூன்று - அமெரிக்க வரலாறு
13.     இலக்கியச் சீனி அ.சீ.ரா வாழ்வும் வாக்கும்
14.     திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும்
15.     பாரதியில் அறிவியல்
16.     இந்திய சுதந்திரப் போராட்டம்
17.     கீத கோவிந்தம் உரை மொழியாக்கம்
18.     பஜகோவிந்தம், கனகதாரா- மொழியாக்கம்
19.     விடுதலை வேள்வியில் தொட்டதும் சுட்டதும்
20.     புறநானூற்றில் வாழ்த்து உத்திகள்
21.     விருத்தம் எழுத வருத்தம் எதற்கு?
22.     மூவேந்தரைப் போற்றிய முத்தொள்ளாயிரம்

வில்லுப்பாட்டு நூல்:  பாரதி வில்லுப்பாட்டு
சிறுகதை நூல் : விண்ணோக்கிய வேர்கள்
தொகுத்த நூல்: கவிதையில் சித்திர விசித்திரம்.

இவர் பெற்றிருக்கும் விருதுகளும் பரிசுகளும்:
1.       கவிமாமணி - சென்னை பாரதி கலைக்கழகம் வழங்கியது.
2.       சந்தத் தமிழ்க்கடல் - கவியோகி வேதம் நடத்தும் சக்தி யோகா நிலையம் வழங்கியது
3.       கவிவேழம் – சந்த வசந்தத்தில் கவிஞர் புதுச்சேரி தியாகராஜன் வழங்கியது.
4.       அமுத சுரபி நடத்திய குறுநாவல் போட்டியில் முதற்பரிசு
5.       அமுதசுரபி நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு
6.       கலைமகள் பத்திரிகை நடத்திய கி வா.ஜ நூற்றாண்டு விழாக் கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு
7.       முனைவர் க. தமிழ்மல்லன் நடத்தும் ’வெல்லும் தூய தமிழ்’ பத்திரிகை நடத்திய தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு.
8.       இவர் எழுதியுள்ள மகாகவி பாரதி வரலாறு புத்தகத்திற்குத் திருப்பூர்த் தமிழ்ச்சங்கத்தின் பரிசு
9.       இலந்தைப் பெட்டகம் முதல் தொகுதி நூலுக்கு நல்லழகம்மை செல்லப்பன் அறநிலையம் நடத்திய மரபுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு - 2018
10.     கவிதை உறவு நடத்திய மரபுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு - 2018
11.     சேஷன் சன்மான் விருது -2018

சந்த வசந்தம் கூகுள் குழுமத்தின் மூலம் எண்ணற்ற மரபு கவிஞர்களை உருவாக்கியவர். கனடாவைச் சேர்ந்த புலவர் பசுபதி, கவிஞர் அனந்த நாராயணன், கவிஞர் ஹரிகிருஷ்ணன், கவிஞர் சிவசிவா சுப்பிரமணியன், கவியோகி வேதம், இசைக்கவி ரமணன், கவிமாமணி வ.வே.சு, கவிமாமணி கே.ரவி என்ற நட்பு வட்டத்துடன் அடிக்கடி இணைந்து பல இலக்கிய ஆராய்ச்சிகளில் சந்த வசந்தம் குழு தொடர்ந்து செய்து வருகிறது.
 
கவிமாமணி இலந்தை சு. இராமசாமியைத் தொடர்பு கொள்ள:
இலந்தை சு.இராமசாமி,
பாரதி இல்லம்,
29ஆவது தெரு,
தில்லை கங்கா நகர்,
சென்னை – 600061

மின்னஞ்சல் முகவரி - kavimaamani@gmail.com

1 comment:

  1. ரொம்ப நல்ல கட்டுரை விவேக். வாழ்க நீயும் வேழமும்
    கவியோகி

    ReplyDelete