'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Apr 14, 2020

குதிர்2-கதிர்6-மீனம்

 குதிர்2-கதிர்6-மீனம்

ஆசிரியர் பக்கம்


அன்பானவர்களே வணக்கம்!

மரபு கவிதைகள், இலக்கண, இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள் எனப் பல பயனுள்ள தகவல்களைத் தாங்கிவரும் பைந்தமிழ்ச் சோலையின் தமிழ்க்குதிர் - பதினாறாவது மின்னிதழ் வழியாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

உலகமெல்லாம் பரபரப்பாகப் பேசப்படும் செய்தி கொரோனா (Corona) என்னும் தொற்றுநுண்மி தொற்றிப் பரவுதலைப் பற்றியே. உலகச் சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) செய்திப்படி உலகத் தொற்றாக (Pandemic) மாறி இதுவரை இருநூற்றுக்கும்மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பதினைந்து இலட்சத்தைத் தாண்டியுள்ளது. ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர்.

இந்தியாவில் இதுவரை ஏழாயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவின் காரணமாய் 21 நாள்கள் வீட்டினுள்ளேயே அடைந்து கிடக்கிறோம். அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆயினும் இந்நோய் ஓய்ந்த பாடில்லை. இது மேலும் பரவாமல் தடுப்பது நம் கையில்தான் உள்ளது. ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இயற்கையைக் கெடுத்த மனிதனுக்குத் தரப்படும் தற்காலிக தண்டனையாக இதை ஏற்போம்.

தேவையின்றி வெளியில் சுற்றித் திரியாமல் இருப்பதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும்  இந்நோயைத் தவிர்க்க நாம் மேற்கொள்ளும் தவம் ஆகும்.

வந்தபின் காப்பது மருத்துவர் கையில்.
வருமுன் காப்பது நம் கையில்.
                                                                                                                                                                                   தமிழன்புடன் 
                     மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

அன்னை அந்தாதி


பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்



ஒருபா ஒருபஃது

உனையலா லிங்கெமக் குற்றதுணை யில்லை
நினைந்துருகி யன்பில் நெகிழ்ந்தேன் - வினைசூழ்
உலகினைக் காக்க உளங்கனிந் திங்கே
மலர்ந்த முகத்துடன் வா                                                1

வந்தெம் துயர்துடைத்து வாழ வழிகாட்டு
சிந்தை தெளிவித்துச் சீராக்கு - கந்தனின்
அன்னையே தூயவளே ஆதிபரா சக்தியே
என்றும் கதிநீ இனி                                                         2

இனியவளே உன்னை இசைத்தமிழால் போற்றித்
தனியாய்ப் பிதற்றுகிறேன் தாயே - பனியாய்
உருகி யிடர்கழுவி யூக்கந் தரவே
அருகிருப் பாயா வமர்ந்து                                             3
  
அமர்ந்திருக்கும் கோவில் அடைத்துவிட் டேயாம்
அமைதியைத் தேடி அலைந்தோம் - உமையே
இமவான் மகளே இதமாய் அணைத்தே
இமைபோலும் காப்பாய் எமை                                     4

எமைப்பாதிக் குந்தொற்றை ஈவிரக்க மின்றி
இமைப்போதில் தாக்கி யெரிப்பாய் - நமனை
விரட்டும் வழியை விரைந்தெமக்குச் சொல்ல
மரகதமே ஓடிவரு வாய்                                                  5

வாய்த்தநல் வாழ்வு வரமாய்நீ தந்ததன்றோ
பேய்த்தன மாய்ப்பரவும் பீதியால் - தேய்ந்துளம்
நோகின்றோம் அம்மம்மா நொந்தது போதுமே
சாகுமச் சத்தைத் தடு                                                    6

தடுத்தாட் கொளமறுத்தால் தாயேயென் செய்வோம்
நடுக்கத்தி லேயுழன்று நைந்தோம் - இடுக்கண்
களைந்தெம் உயிர்களைக் காசினியில் காக்க
வளைகுலுங்க சிம்மத்தில் வா                                      7

வாரா திருந்தால் வருந்தி அழைத்திடுவேன்
தீராதோ அல்லலெனத் தேம்பிடுவேன் - பாரா
முகமாய் இருந்திடிலோ முத்தமிழில் பாடி
அகங்குளிர வைப்பேன் அணை                                   8

அணைப்பில் அடங்கிடும் ஆட்டிப் படைத்த
பிணியும் விலகிப் பிரியும் - அணிந்தநின்
வேப்பிலை யாடையால் மேனி சிலிர்த்திடும்
காப்புநீ யென்றாடும் கண்டு                                        9

கண்டதும் தாரையாய்க் கண்ணீர் பெருக்கெடுக்கும்
வண்ண மலர்தூவி வாழ்த்துமுளம் - பொன்னொளியே
கள்ளங் கபடமிலாக் கன்னல் மொழியாளே
உள்ளத்தில் வைத்தே னுனை                                        10

மடியின்மையும் மாவலியும்


(மாறுரையும்  நேருரையும்)
கவிஞர் பொன். இனியன்
kuralsindhanai@gmail.com
8015704659


மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான்
றாஅய தெல்லா மொருங்கு                (610) 
என்பது  மடியின்மை அதிகாரத்தில் இறுதிக் குறளாக அமைந்துள்ளது.

இதற்கு, முன்னை ஆசிரியர்களான மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர், பரிமேலழகர் ஆகியோர் அடியளந்தான் தாஅயது எல்லாம் மடியிலா மன்னவன் ஒருங்கு எய்தும் எனும் பொருள்கோள் வைப்புக்கொண்டு, மடித்தலில்லாத அரசன், அடியளந்தானா(கிய விட்டுணுவா)ல் தாவப்பட்ட மூவுலகையும் ஒருங்கே பெறுவான் என உரை வரைந்தனர். பின் வந்தோரும், அதை அடியொற்றிய வாறே தம் உரையை அமைத்துக் காட்டினர். இவ்வுரைகள் நம்முள் இரண்டு கேள்விகளைத் தோற்றுவிக்கின்றன.

1) சோம்பலற்றவனாக மட்டும் இருந்துகொண்டு படைவலியும் போர்த்திறமும் இல்லாத மன்னவனால் ஒரு பெருநிலப் பரப்பைத் தன்வயமாக்கற்கு ஏலுவதாமா?
2)   வாமனன் நிலத்தைப் பெற்றது வஞ்சனையாலும் வார்த்தைச் சாதுரியத்தாலுமே. அதனைச் சோம்பலில்லாதவன் (தன்னூக்கத்தால்) பெறுதற் குரியவற்றோடு உவமித்தல் தகுவதாமா?       

இவ்விரு ஐயங்கட்கு விடை காணுமுகத்தான்  முன்னோர் உரைகளை ஒப்புநோக்கி அவற்றுள் குறள் குறிப்பிற்கு இயைபுடையனவும் மாறாயினவும் குறித்துக் காட்டியும் பல்வேறு உரைக் கருத்துகளின் போக்கைச் சுட்டியும் இக்குறட்பாவுக்கான பொருள் தெளியக் காண்போம்.

மடித்த புத்தியில்லாத அரசன் பெறுவன் மகா விட்டுணுவின் பாதத்திலே அடங்கின உலகம் என்பது பரிதியார் உரை. தன் அடியால் எல்லா உலகையும் அளந்த திருமால் நடந்த பரப்பு முழுவதையும் மடியில்லாத அரசன் அடைவான் என்பது இலக்குவனார் உரை. திருமால் தாண்டிய உலகம் முழுதும் சோம்பலில்லா மன்னவன் அடைவான் என்பது வ. சுப. மாணிக்கனார் உரை.

திருமால் மூவுலகையும் அளந்ததாகச் சொல்லப் படும் வாமனாவதாரக் கதையை உட்கொண்ட வாறாகவே, ‘அடியளந்தான்’ என்பதற்கான கருத்து உரைகளில்  அமைந்துள்ளது.

அவ்வாறான உரைகளில் அது மூவடியா ஈரடியா என்பதில் ஓர் உறுதியற்ற தன்மை காணப்படுகிறது. ‘மூன்றடிகளால் இவ்வுலகம் முழுவதையும் கடந்த வாகுனன்’  என்பது ச.வே.சு உரை. இரண்டடியால்  மூன்று உலகையும் அளந்த திருமால் என்கிறார் பெரியண்ணன். எண்ணிக்கை காட்டாமலேயே,  ‘திருமால் தன் அடியால் அளந்த எல்லா நிலத்தையும் ஒருங்கே’ என உரைக்கிறார் குன்றக்குடி அடிகளார்.

பிற்கால உரையாசிரியர்களுள் இறைமறுப்புச் சிந்தனையுடைய ஒரு சாரர் திருக்குறள் புராணக் கட்டுக்கதையைச் சுட்டுவதாகப் பொருள் கோட லாகாது எனும் நோக்கில் அதைத் தவிர்க்கக் கருதித் தம் போக்கில் பொருளுரைக்க முற்பட்டு அடியளந்தான் எனுந் தொடரைப் பிறநாட்டின் மீதான படையெடுப்பு என்பதான ஒரு கருத்தாகக் காட்டுவாராயினர். ஆனால் அவ்வாறு கொளற்குரிய குறிப்பேதும் குறளில் இல்லை என்பதால் இது புறத்திருந்து கொண்டு வந்து பொருத்தியதாகும். 

அடியளத்தல் என்பது கடற்பாறையில் அடிச் சுவட்டைப் பொறித்து அதனால் வென்று கொண்ட நில வெல்லையின் அளவைக் காட்டுதல் எனும் கருத்து உடையவராகிறார் இராகவையங்கார்.

இதில் வரும் அடியளந்தான் எனுஞ் சொல் பழந்தமிழ் வரலாற்றில் சிறப்புற்று விளங்கிய திருவிற் பாண்டியனைக் குறிப்பது எனத் திருக்குறள் திறவு எனும் நூலில் க. நடேசன் உடையார் காட்டுகிறார்.

இக்கருத்தை யுட்கொண்டார் போலும் குழந்தை யுரையைத் தழுவியவாறாகவும் சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒருமன்னன் அவன் சென்ற இடமனைத்தும் தன்  காலடி எல்லைக்குள் கொண்டுவந்ததைப் போன்றதாகும்  என்கிறார் கலைஞர் கருணாநிதி.

அடியளத்தல் எனும் குறட்குறிப்பைக் காலடி எல்லைக்குள் எனக் காட்டியது பொருந்தியது போலத் தோற்றினும் அது படைத்திறத்தின்பாற் படுவதாகு மன்றி மடியின்மையாக் கொளற்காகா தென்க.

சோம்பலற்ற வேந்தன் உலகோரின் தாயமாகிய அனைத்தையும் பெறுவான் என்கிறார் நன்னன். இதில், ‘அடியளந்தான்’ என்பதை ‘உலகோர்’ எனக் கொண்ட தெவ்வாறு என்பது அறியக் கூடவில்லை.   சோம்பலில்லாத ஆள்வோன் உலகம் எல்லாம் தன் குடைக்கீழ் பெறுவான் என்பது ஜெகத்ரட்சகன் உரை.

ஒரு சிலர் அடியளந்தான் என்பதைப் பொருட்டாக் காதும் (Ignored & skipped) உரை செய்துள்ளனர். குறளடிகளிற் குறிக்காதவற்றைப் புறத்திருந்து கொண்டுவந்து பொருத்துதல் எத்துணைப் பொருத்தம் இல்லதோ அதனினும் பொறுத்தற் கியலாத ஒன்று அதில் குறித்துள்ளவற்றுக்குப் பொருள்காட்டாது தவிர்த்து உரை செய்தலுமாகும்.  அதனால் அவை நிறையுரையாதல் இல்லை.

சோம்பலில்லாத அரசன், சோம்பலடைந்ததால் முன்பு தன்னைவிட்டு நீங்கிய செல்வத்தை யெல்லாம் ஒருங்கு அடைவான் என்பது குழந்தையுரை. இவ்வுரையில் ஒருவன் உற்ற அனுபவமும் அதன்வழி பெற்ற பாடமும் விளங்குவதல்லால் மடியின்மையின் சிறப்பு மையப் படுத்திக் காட்டப்படவில்லை என்பதோடு இழந்த ஆட்சி என்னாது இழந்த செல்வம் எனக் காட்டியது இயல்பாயில்லை.

இவற்றுக்கிடையில், குறள் தோற்றரவுக் கதைக்கு மூலம் என்று பாவாணர் ஒரு புதுக்கருத்தை முன்னிறுத்துகிறார். சோம்பலில்லாத அரசன் கதிரவன் மூவெட்டாற் கடந்த மாநிலம் முழுவதையும் ஒருமிக்க அடைவான் என்று உரை செய்த பாவாணர், கதிரவன் இயக்கம் கீழிருந்து மேலும் மேலிருந்து மேற்கும் மீண்டும் மேலிருந்து கீழுமாக மூவெட்டுப்போற் புறக் கண்ணிற்குத் தோன்றுவதால், அது மூவெட்டால் ஞால முழுவதையும் கடப்பதாகச் சொல்லப்பட்டது எனக் காட்டுகிறார்.

கதிரவனின் இயக்கத்தை ஈரெட்டாகவோ அல்லது நாலெட்டாகவோ கொளற்குரியதாவதன்றி எவ்வாற் றானும் அது மூவெட்டாதலில்லை. கிழக்கிலிருந்து மேற்கிற்கு ஈரெட்டாகவும் மேற்கிலிருந்து மீண்டும் கிழக்கிற்கு ஓரெட்டாகவும் அவர் குறித்தது அளவைப் பொருத்தமின்றாம். ஆதலின் இதுவும் ஒப்புமா றில்லை.

இவ்வதிகாரம் மக்களனைவர்க்கும் பொது. குறிப்பாக அரசர்க்கும் உரியது என்பதை மன்னவன் என இக்குறளில் குறித்ததன் மூலம் தெரிகிறது என்கிறார்  அறவாணன். நாடொறும் நாடி முறைசெய்தல் (553) என்பதிலும் எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை வல்அறிதல் (582) என்பதிலும் மன்னனின் மடியின்மை சிறப்பாக வைத்துக் காட்டப்பட்டது. தன்னாட்சியைத் தக்கவைத்துக்கொள்ளக் கருதும் மன்னன் மடியிலனா யிருக்கவேண்டும் என்பதைத், தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் ஆள்பவர்க்கு நிலன் நீங்கா (389) என இறைமாட்சியிலேயே அமைத்துக் காட்டியுள்ளார்.

திருவள்ளுவர் காலத்தில் தெய்வநம்பிக்கை / ஊழின் வலிமை /  மறுபிறப்பு /  நரக-சுவர்க்கம் /  தேவர் - அசுரர்கள் பற்றிய நம்பிக்கைகள் பலவும் இருந்தன. அதனால் திருவள்ளுவர் தமது குறட்பாக்களில் புராண இதிகாசக் கருத்துகளைக் கையாண்டுள்ளார் எனக் குறிக்கிறார் அரங்கன். ‘நம்பிக்கைகள் இருந்தன’ என்பது உண்மையே; ஆயினும் அவை எல்லாவற்றையும் வள்ளுவர் தம் கருத்தாக்கிக் காட்டினாரில்லை என்பதே ஈண்டு நாம் உணர்ந்தறிய வேண்டியதொன்றாகும்.

சங்க இலக்கியம் யாவிலும் கட்குடியும் கணிகையர் உறவும் விரிந்து காணப்படுகிறது. குறள் ஒன்றே அவற்றைக் கடிந்துரைத்த முதல் தமிழிலக்கியமாகத் திகழ்கிறது. பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டப்பட்ட அன்றைய சமூகச் சூழலில் பிறப்பொக்கும் என ஓங்கிக் குரலெழுப்பிய முதற் பாவலராக திருவள்ளுவர் திகழ்கிறார். ‘மழித்தலும் நீட்டலும் போன்ற’ புறச்சடங்குகளில் மூழ்கிப்போய் அகத் தத்துவங்களை விட்டுவிடாதே எனச் சீர்த்திருத்தம் பேசுகிறார். ‘உழுவார் உலகத்துக் காணி’ எனக் காட்டிய ஒரு நூல் திருக்குறளைத் தவிர்த்து உலக இலக்கியத்தில் வேறொன்றானு மில்லை. ஊழிற் பெருவலி யாதுமில என்றாலும்; அதைச் சாக்கிட்டு முயற்சியை ஒருபோதும் விட்டுவிடாதே என ஊக்கமூட்டுகிறார். தெய்வ நம்பிக்கையை விடவும் உன் உழைப்பை நம்பு; அது ஒருபோதும் உன்னைக் கைவிடாது என்கிறார்.

வள்ளுவர் ஓர் சீர்த்த அறிஞர்; முன்னேற்றச் சிந்தனையாளர்; புதுநோக்குடையவர் என்பதைக் குறட்பாக்கள் பலவும் நமக்குக் காட்டுகின்றன. குறள் எழுந்ததன் நோக்கமே புத்தாக்க முனைப்புதான் என்பதைக் குறளின் பல்வேறு பாடல்களால் அறியமுடியும்.

சங்க கால இலக்கியங்கள் பலவற்றிலும் தலைவன் அரசனின் பெயர் ஆகியன குறிப்பிடப்பட்டு  இருக்கின்ற நிலையில் திருவள்ளுவர் ஒரு புதிய நடைமுறையைத் தோற்றுவிக்கின்றார். முதற் பாயிரத்தில் கடவுட் டன்மையை மட்டுமே முன்னிருத்தி அமைத்துள்ளது மட்டுமன்றி ‘கடவுள்’ என்ற சொல்லாட்சியையே தவிர்த்துவிட்ட வள்ளுவர் ஒருசார் இன மக்களின்  நம்பிக்கைச் சார்புடைய செய்தியைத் துணைகொண்டு இக்குறள் யாத்தார் எனக் கொள்ளுதல் பொருந்தா.

உலக வழக்காற்றில் தமக்கு உடன்பாடுடையவற்றை ‘என்ப வழக்கு’ எனவும், பிறர் கூற்றில் பிழைபாடானவற்றை ‘என்ப அறியார்’ எனவும், தாம் கற்றுத் தொகுத்துரைத்தவற்றைப் ‘பன்னூல் துணிபு’ எனவும், தாம் கண்டுணர்ந்து தெளிந்த கருத்து முடிபுகளின் திறத்தை ‘யாமறிந்த வற்றுள்’ எனவும் வைத்தமைத்துள்ள சொல்நடையை உற்றுக் கருதக், கட்டுக் கதைகளையும் வெற்று நம்பிக்கைகளையும் தம் கருத்துரைக்குத் தாங்காகவும் முட்டாகவும் திருவள்ளுவர் கொண்டார் எனற்கு இடமில்லை யென்க.

இவை இவ்வாறாகப், புறத்துணை ஏதுமின்றிக் குறளடிகளிற் குறித்தவற்றை மட்டும் உட்கொண்டு தக்கவாறு பொருள் காண முயலுவோம்.

திருக்குறளின் சிறப்புகளில் தலையாயதாய் இருப்பது அதன் பொதுமைப் பண்பேயாகும். குறளில் எவ்விடத்தும் தனித்தவோர் இன மொழி கால பேதங்களைச் சுட்டுமாறில்லை. இறைவன், மன்னன், உழவன், ஒற்றன் எனப் பொதுவில் தொழிற் பெயராலேயே  அதில்  குறித்துக் காட்டப்படுகின்றன.

அவ்வாறான அடியளந்தான் என்பதை வாளா பெயராய் நின்றது எனவும், தாயது என்பதைத் ‘தாவியது’ என்பதன் இடைக்குறையாகவும் பரிமேலழகர் சுட்டுகிறார். ஆன்றது – ஆன்றாயது என நின்றது எனக் குறிக்கிறார் குழந்தை. இவற்றுக்கிடையில், ‘படியளந்தான்’ எனும் பாடமோதிக் காட்டுகிறார் ஞானபூபதி.

தக்க சொற்பகுப்பு மற்றும் பொருள்கோள் வைப்பில் ‘மன்னவனும் தாவலும்’ மறைந்து ‘அடியளந்தான்’ என்பது ‘ஆன்றாயதாகி’  நிற்றலையும் காண்க.

மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான்
றாய தெல்லா மொருங்கு          
என்பது  குறளின்  மூலம்.

“மடியிலா மன் அவன் எய்தும் அடியளந்து ஆன்றாயது எல்லாம் ஒருங்கு” எனும் சொற்பகுப்பில், மடியிலா மன் அவன் அடியளந்து ஆன்றாயது எல்லாம் ஒருங்கு எய்தும் எனும் வைப்பு கொளற்குரியது.

மடியிலா மன் அவன் – மடியிலனாயின்  அஃது ஒழித்தவன். அதாவது தூக்கங் கடிந்து (668) இடைகொட்காது (663) தொடர்ந்து ஊங்குபவன். மன் - இடைச்சொல்.

அடியளந்து – உண்ணலில் (943) தொடங்கி  ஊடுதல் (1302) வரையிலும் எல்லா நிலையிலும் அளவறிந்து வாழ்தலையும் (479) எவ்விடத்தும் அளவின்கண் (அமைந்து) நிற்றலையும் (286) ஓர் ஆற்றலாகவும் (287) ஒழுக்காறாகவும் (286)  திருவள்ளுவர் குறிக்கிறார். ஈண்டு, அடியளந்து என்றது நிதானமும் உறுதியுடனும் (Slow but Steady) வினைமேற்கொளலை. இது வினைவலியும் தன்வலியும் துணைவலியும் மாற்றாம் வலியும் தூக்கிச் (471) செய்தல் என்க.

ஆன்றாயது எல்லாம் ஒருங்கு - பெரிய, மேலான, மாட்சிமைப்பட்ட அனைத்தையும். ஈண்டு அரியதும் பெரியதுமான எதனையும் எனும் பொருளில் வைத்து ஆளப்பட்டது. “ஞாலங் கருதினும்” (484) எனப் பிறிதோரிடத்தில் குறித்தது போலவாம்.

எய்தும்  -    கைவரப் பெறும்.

சோம்பல் இல்லாதவனாயின் தன்னளவில் (தொடர்ந்து) முயன்று பெரும்பேறான எல்லாவற்றையும் அடைய முடியும் என்பது இதன் பொருள்.

அதாவது, முயற்சியின் அளவு சிறிதேயாயினும் சோம்பலின்றித் தொடர்ந்து மேலூங்குவா னாயின் எத்துணை அரிய பெரிய செயலையும் செய்வது இயலும் என்பதாயிற்று.

அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை யெண்ணி யிடத்தாற் செயின் (497)
என்றது போல, சோம்பல் ஒன்றை (மட்டும்) தவிர்த்து விட்டால் எதையும் அடைய ஏதுவாகும் என்றவாறு.

பொச்சாவார்க்கே புகழ்மை யுண்டாம் (533) என்றாங்கு மடியிலார்க்கே மாண்புகள் எய்தும் என்றவாறு.  இது மக்களைக் கருதியுரைத்ததேயாம்.

மடியின்மை அதிகாரப் பாக்களின் வரிசையை உற்றுக் கருத, மடியால் உண்டாம் கேடு, மடியின்மையாலாம் குடியுயர்வு ஆகிய இரண்டையுங் காட்டி, மடியின் கூடாமையை வற்புறுத்தி, ஈற்று முடிபாக மடியிலனாயின் அரியனவெல்லாம் ஆற்றுதல் முடியும் என ஊக்குவிக்கிறார். வேதகால விட்டுணுவையோ விரிநில வேட்கையுடைய வேந்தனையோ இக்குறள் குறிக்கவில்லை என்பதும் பெறப்படும்.

நம்மைக் காப்போம்


பைந்தமிழ்ச் செம்மல்
நிர்மலா சிவராசசிங்கம்
  
ஒருபா ஒருபஃது - அறுசீர் விருத்தம்

இயற்கை மௌனம் காக்காமல்
    இயங்கிக் கொண்டே இருக்கிறது
தயக்கம் மனத்தில் எதுவுமின்றித்
    தாண்டிச் செல்லும் காலங்கள்
வியக்க வைக்கும் நிலைமைகளும்
    விடியல் நோக்கி எதிர்பார்க்கத்
துயரம் நீங்க ஊஞ்சல்கள்
    தூக்க மற்று விழித்திருக்கும்                      1

விழிகள் பார்க்கும் தகவல்கள்
    விரைவில் நீங்கி அகலுமன்றோ
தொழில்கள் இயக்கம் நின்றதென்று
    துயரம் வேண்டாம் மனத்தினிலே
சுழலும் உலகில் நவீனங்கள்
    தூய்மை கெடுத்துச் சென்றதினால்
தொழுவோம் இறைவன் திருவடிகள்
    துன்பம் நீங்கும் விரைவினிலே                   2

விரைவில் அடங்கும் கிருமியெல்லாம்
    வெறுமன் பேச்சு வேண்டாமே
திரையில் காணும் செய்திகளில்
    சிறிதும் உண்மை இல்லையன்றோ
துறையில் சிறந்த நிபுணர்கள்
    சுத்தம் காக்கச் சொல்கிறார்கள்
மறைந்து செல்லும் துன்பங்கள்
    மண்ணில் யாவும் அடங்கிடுமே                 3

அடங்கிச் செல்லும் எல்லாமே
    அகலும் அச்சம் மனத்தினிலே
இடர்கள் நிலைத்து நிற்பதில்லை
    எதுவும் கடந்து போகுமன்றோ
உடலில் எதிர்ப்புச் சக்தியினை
    உடனே சேர்க்கச் செயல்படுவோம்
தொடரும் நிலைகள் மாற்றமுறும்
    தொல்லை நீங்கும் உலகினிலே                 4            

உலகில் எல்லாம் நன்மைக்கே
    உழன்று மடியும் விரைவினிலே
கலங்கித் தவித்தே உள்ளத்தில்
    காயப் படுத்த வேண்டாமே
நிலவும் ஒருநாள் மறையுமன்றோ
    நெஞ்சில் கலக்கம் கொள்ளாதே
புலரும் பொழுதில் நன்மையெலாம்
    புதுமை காட்டி வருமன்றோ                                      5

வருமுன் காப்போம் நாமெல்லாம்
    வாடித் தளர்ந்து நிற்காமல்
அருகிப் போகும் தொற்றுநோய்கள்
    அச்சம் வேண்டாம் உள்ளத்தில்
மருகி மறைந்த நோயெல்லாம்
    மண்ணில் மடிந்து சென்றதல்லோ
திருப்பம் வாழ்வில் வருமன்றோ
    தீமை என்றும் நிலைப்பதில்லை                               6

நிலையாய்க் கிருமி நிற்பதில்லை
    நிறுத்த வைப்பர் மருத்துவர்கள்
கலையும் கலக்கம் விரைவினிலே
    கனலும் தணியும் ஒருநாளில்
அலைகள் கரையில் நிற்பதில்லை
    அனைத்தும் அடங்கிப் போகுமன்றோ
சிலையாய் நின்று கலங்காமல்
    தெய்வத் துணையை நம்புவோமே                           7

ஏக்கம் மனத்தில் வேண்டாமே
    எதிலும் தூய்மை காப்போமே
தாக்கும் கிருமி மாண்டுவிடும்
    தனித்து வாழப் பழகிவிடு
தூக்க மின்றிப் போராடும்
    தூணாய் நிற்கும் மருத்துவர்கள்
காக்கும் கரங்கள் அவர்களன்றோ
    கனிவு பொங்க வாழ்த்துவோமே                              8

ஏழை பசியில் வாடுகின்றார்
    எங்கும் அமைதி நிலவுகையில்
சாழை யின்றித் தெருவினிலே
    சாய்ந்து மடிந்து போகின்றார்
நாழி விரைந்து செல்கிறது
    நலிந்து மெலிந்து மாள்கின்றார்
கீழே விழாமல் காப்பாற்றிக்
    கிடைக்கும் உணவைப் பகிர்ந்திடுங்கள்                 9

பகிர்ந்தே உண்போம் என்றென்றும்
    படரும் நோய்கள் வீழ்த்தாது
நெகிழ்ந்து வணங்கி மகிழ்வார்கள்
    நெஞ்சம் அமைதி கொள்ளுமன்றோ
விகிர்த மின்றி உதவிசெய்தால்
    வினைகள் மறையும் அவனியிலே
இகழ்தல் இல்லா வாழ்வினிலே

பாட்டி வைத்தியம்

மணிமாறன் கதிரேசன்

பட்டயக் கணக்காளர்
(Chartered Accountant)

தனக்கு முதல் குழந்தை பிறந்து ஆறு மாதம் முடிந்த நிலையில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையை அவனுடைய சொந்த ஊரான பரமக்குடியிலிருந்து தான் வேலை செய்யும் ஊரான சென்னைக்குக் கூட்டிச் செல்ல வந்திருந்தான். அவனுக்குள் ஏகப்பட்ட மகிழ்ச்சி. தன்னுடைய குழந்தையுடன் நேரங்களைக் கழிப்பது பற்றிக் கற்பனை வளர்த்துக் கொண்டவனுக்கு இதோ இந்நாள் ஒரு பொன்னாள் போலத் தோன்றியது. தன் மனைவி மற்றும் குழந்தையைக் கூட்டிச் செல்வதற்கான அனைத்து வசதிகளையும் முன்னேற்பாடு செய்திருந்தான்.

அவனுடைய கனவு பலித்தது. அவன் அவனுடைய குடும்பத்தோடு சென்னையில் வசிக்கும் வீட்டிற்குக் காலையில் வந்து சேர்ந்தான். வீட்டிற்குத் தன் குழந்தையைக் கூட்டி வருகின்றோம் என்பதனால் அவனுடைய வீடு முழுவதும் வேலையாட்கள் வைத்துச் சுத்தம் செய்யப்பட்டிருந்தது. சாதாரணமாக வீட்டைக் கழுவி மட்டும் விடவில்லை. முழுவீட்டையும் அங்கிருந்து அத்துணைப் பொருட்களையும் துடைத்துத் துப்பரவு பணி மேற்கொண்டதைக் கண்டு அவனுடைய மனைவி ஆச்சரியம் கொண்டாள். அவன் மனைவி, “நானும் ஊரிலிருந்து வரும்போதல்லாம் செய்யாத இந்த தூய்மைப்பணி இப்பொழுது மட்டும் எதற்காக?” எனச் சிறு கோபத்துடன் பேச்சை முடித்துக் கொண்டாள்.  அதற்கோ அவன் “அட  பைத்தியமே இந்தத் தூய்மைப் பணி நமக்காக இல்லை, நம் குழந்தைக்காக, நாம் இருந்தவரை ஏதும் பிரச்சினை இல்லை. இருப்பினும் தன் குழந்தைக்கு இச்சூழலில் பழகுவது கடினம்தான். ஆகையால்தான்” என்றான். அவளும் சமதானம் ஆனது போன்று முனங்கிக் கொண்டே தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். அவனோ தன்னை மறந்தவாறு தன் குழந்தையிடம் விளையாடிக் கொண்டிருந்தான். அவனுடைய குழந்தையைக் காண அவனுடைய நண்பர்கள் வீட்டிற்கு வந்த வண்ணம் இருந்தார்கள். அவனோ தன் நண்பர்களிடமும் தன் குழந்தையிடமும் மாறி மாறி நேரத்தைக் கழிப்பதைக் கண்டவள், சிறிது சத்தமாக “என்னங்க, இப்பொழுது மணி ஒன்பதரை ஆச்சு, நீங்க இன்னும் குளிக்கலை, உங்களுக்கு இன்னும் நேரம் போவது தெரியவில்லையா? அலுவலகத்திற்கு போகனுமே” யென்றாள். அதைக் கேட்டவன், தான் இன்றும் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்ததாகக் குறைந்த சத்தத்தில் அவளுக்குக் கேட்காதவாறே தன் வாய்க்குள் முனங்கிக் கொண்டிருக்கையில், அவனின் மனைவி  ‘என்ன சொல்கிறார்’ என்று கேட்டவாறே  அவனின் பக்கம் வந்து நின்றுகொண்டு அவனின் நோக்கத்தை அறிந்து கொண்டாள். இருப்பினும் அவனோ அலுவலகத்திற்குப் போனால் வீடு வர நேரமாகும் ஆகவே இன்றொரு நாளும் விடுமுறை எடுத்ததாகக் கூறினான். அவளும் தன் கணவனின் ஆசையைக் கண்டு மெச்சிச் சிறு புன்னகையுடன் அவனை மோகப் பார்வையிட்டு அடுப்பாங்கறை சென்றாள்.

தான் தன் குழந்தையைக் கூட்டி வருவதை முன்கூட்டியே தன் நண்பர்களிடமும், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடமும் சொன்னதால் அவனுடைய குழந்தையைப் பார்க்க ஒருவர் பின் ஒருவராக வந்துகொண்டிருந்தார்கள். அவனுடைய குழந்தையை அவனது நண்பர்கள் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்ச ஆரம்பித்தார்கள். அக்குழந்தை அவனைப் போலவே இருப்பதாய்ச் சொல்லச் சொல்ல, அவனுக்குள் ஒரு மிகப்பெரிய பேரானந்தம் பரவியது. அவனுக்குள்ளே அப்படியொரு இன்பம் அவன் வாழ்நாளில் பார்த்திராததொரு இன்பம் என்றே சொல்லலாம். இப்படியே அவனுடைய நேரம் கடந்தது. அவனுக்குக் காலை உணவு, மதிய உணவு இவையெல்லாம் இருந்தும் எடுபடவில்லை. காரணம் மகிழ்ச்சியின் உச்சம். இவ்வாறே அன்று மாலை நேரம் வந்தது.

சரியாக ஆறு மணியளவில் அவனுடைய குழந்தை அழ ஆரம்பித்தது. அவன் மனைவியும் தன் குழந்தை வழக்கம் போல பசிக்குத்தான் அழுகிறது என்று எண்ணி குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துப் பசியாற்றிவிட்டு வந்து மீண்டும் அவனிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டுஉட்கார்ந்திருந்தாள். ஆனாலும் குழந்தை அழுகையை விட்டபாடில்லை. அவனுக்கும் அவனது மனைவிக்கும் ‘ஏன் இப்படி அழுகிறான்’ என்பது புரியவில்லை. இதைப் பார்த்த அவனுடைய நண்பனின் மனைவி ஒருவேளை குழந்தைக்கு வயிற்றுவலியாகக்கூட இருக்கலாம் என்றாள். ஆகவே அதற்கான மருந்தைக் கொடுங்கள் என்று அறிவுரை சொல்லிவிட்டு வீட்டிலிருந்து நகர்ந்தார்கள்.  உடனே அவனோ தன் மனைவியை அழைத்து வயிற்றுவலிக்கு மருந்து கொண்டு வந்ததை ஞாபகப் படுத்தினான். ஆனால் அவனுடைய மனைவியோ ‘சிறிதுநேரம் பொறுத்திருந்து பார்ப்போம்’ என்றாள். அதே நேரத்தில் அவனது குழந்தையும் அழுகையை விட்டதாக தெரியவில்லை. இவனுக்கோ ஒருவித பயம் வந்துவிட்டது.

அவன் தன் மனைவியை அழைத்தான், வயிற்றுவலி மருந்தைக் கொடுக்குமாறு அறிவுறுத்தினான். அவளும் அதற்கேற்றவாறு மருந்தைச் சரியாக ஏழு மணியளவில் கொடுத்தாள். குழந்தையும் வயிற்று வலி மருந்தைச் சாப்பிட்ட அடுத்த அரை மணி நேரத்தில் தூங்கிவிட்டது. இதைப் பார்த்ததும் அவனுக்கும் அவளுக்கும் ஒருவகையில் நிம்மதி அடைந்தாலும், குழந்தையின் பக்கத்திலேயே குழந்தையை நோட்டமிட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான். தூங்கிக் கொண்டிருந்த குழந்தை சில மணித்துளிகளில் மீண்டும் அழத் தொடங்கியது. இருப்பினும் தூக்கத்திலிருந்து மீளவில்லை. இவ்வாறிருக்க, இவனுக்கும் ஒன்றும் புரியவில்லை. செய்வதறியாது அவனுடைய மனைவியை அழைத்து இவ்வாறு என்றாவது செய்திருக்கிறானா என்று வினவினான். அவளுக்கும் இது புதியதாகவும் மேலும் புதிராகவும் இருந்தது. இதைப் பார்த்த அவனுக்குள் ஒருவித பயம்.

அவனுடைய அம்மா அவனிடம் சொன்னது ஞாபகம் வந்தது. அவனுடைய அம்மா, “இன்னும் ஆறுமாத காலம் நம் வீட்டில் இருக்கட்டும், பிறகு நானே கூட்டிவந்து விடுகிறேன். உங்களுக்கு அங்கே உதவவோ அல்லது குழந்தையைக் கவனிக்கவோ பெரியவர்கள் இருக்க வேண்டும். என்னால் தற்பொழுது வந்து இருக்க முடியாது. ஆகவே சிறிது காலம் பொறுத்துப் போ” என்ற அறிவுரை அவனைத் தட்டியெழுப்பியது. அவனுக்கு இதுவே முதல் குழந்தை. மேலும், அவள் மனைவிக்கும் அக்காள் தங்கை குழந்தைகளை வளர்த்த அனுபவம் இல்லை. காரணம் இவள் ஒருவளே அவள் வீட்டின் வாரிசு.  இவற்றையெல்லாம் தாண்டி, அம்மாவை ஒருவகையில் சமாதானப்படுத்தி, அவர்களைச் சென்னைக்கு அழைத்து வந்தான். அழைத்து வந்த முதல் நாளே இவ்வாறு நடப்பதால் அவனுக்குள் மேலும் மேலும் மிகப்பெரிய பயத்தை உண்டு பண்ணியது. இவ்வாறு நடந்தது என்பதை அவன் அம்மாவிடம் சொல்வதற்குத் தயங்கி நின்றான். இருப்பினும் வேறு வழயில்லாமல் நடந்தவற்றைத் தன் தாயிடம் கூறுவதற்காகத் தன்னுடைய தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.

அம்மாவின் தொலைப்பேசி எண்ணுக்கு அழைத்துத் தன் அம்மாவிடம் நடந்ததைக் கூறினான். தன் அம்மா, ‘பயணப்பட்டு வந்ததால் குழந்தைக்கு உடல்வலியாக இருக்கலாம் எனவும், அதைப்பற்றிக் கவலை வேண்டாம் எனக் கூறித் தொலைப்பேசியைத் தன் மருமகளிடம் கொடுக்கச் சொன்னாள். இவனும் ஒருவிதக் கலக்கத்துடனும், குற்றம் புரிந்துவிட்டோமோ என்ற மன உளைச்சலிலும் மேலும் தன் கேள்விக்கு விடை கிடைக்காதவனுமாய்த் தொலைப்பேசியைத் தன் மனைவியிடம் கொடுத்தான்.

அவன் மனைவி தொலைப்பேசியை வாங்கியவுடன், அவனுடைய தாய் சில கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தாள். ‘குழந்தை சரியாகப் பால்குடித்தானா, மலம் சரியாகக் கழித்தானா, சிறுநீர் சரியாகக் கழித்தானா?’ இப்படியாகச் சில கேள்விகளுக்குப் பதிலும் சொன்னாள். மேலும் ‘குழந்தையை மற்றவர்கள் தூக்கினார்களா’ என்றாள் அவள் அம்மா. அவளும் அவருடைய நண்பர்கள் வந்ததாகவும், அவர்கள் குழந்தையைத் தூக்கிவைத்து விளையாடியதாகவும் சொன்னாள். அதன்பின் அவனுடைய அம்மா, “குழந்தையைத் தூக்கினால் அழுகிறானா, இல்லை… படுத்திருக்கும் போதே அழுகிறானா?” என்றாள். அவளும் தன் குழந்தை தூக்கத்திலிருக்கும்போதே அழுகிறான் எனவும் இருப்பினும் தூக்கத்திலிருந்து விலகவில்லை என்றும் கூறினாள். இதைக் கேட்டதும் அவளுடைய அம்மா ‘குழந்தைக்குக் கழுத்தில் உரை (சுளுக்கு) விழுந்திருக்கிறது’ என்று கூறினாள். ‘குழந்தையைத் தூக்கத் தெரியாதவர்கள் தூக்கினால் இப்படி நடக்க வாய்ப்புண்டு’ என்றும் சொன்னாள். ஆகவே குழந்தையைத் தூக்கத் தெரியாதவர்களிடம் தூக்கச் சொல்ல வேண்டாமென்றும் அறிவுரை கூறினாள். மேலும் யாரேனும் வயதானவர்கள் இருந்தால் அவர்களிடம் கூட்டிச் சென்று உரை (சுளுக்கு) எடுக்குமாறு கூறினாள்.

அவனுக்கோ பல நிமிடங்களாக அவர்களின் உரையாடல் தொடர்ந்ததால் என்ன ஏதென்று தெரியாமல் மனத்தளவில் பலவிதக் கேள்விகளுடன் தனக்குத்தானே கேட்டுக்கொண்டு பதிலும் சொல்லிக் கொண்டிருந்தான். தன் மனைவி தொலைப்பேசியைத் துண்டித்தவுடன் சிறிதும் தாமதிக்காமல், ‘என்ன சொன்னார்கள்?’ என்று வினவினான். அவளும் தன் மாமியார் சொன்னதைச் சொல்லித் தன் கணவரிடம், “இங்கு யாரேனும் வயதானவர்கள் இருக்கிறார்களா?” என்று வினவினாள்.

அவனுக்கு உடனே ஞாபகம் வந்தது. அவன் அவனது நண்பனுக்குத் தொலைப்பேசியில் அழைத்து, “நண்பா! உன் வீட்டில் உன்னுடைய பாட்டி இருக்கிறார்களா?” என்றான். அதற்கு மறுமுனையில் அவன் “இல்லையடா, ஏன் தீடிரென என் பாட்டியைப் பற்றிக் கேட்கிறாய்?” என்றதும், அவன் நண்பன் “எனக்குத் தெரிந்து, நாங்கள் இதுவரை மருத்துவ மனைக்குக் கூட்டிச் சென்றே பார்த்திருக்கிறோம், மாறாக, என் பாட்டியும் இது பற்றிச் சொன்னதில்லை, நானும் கேள்விப்பட்டதில்லை” என்றான். எனக்குத் தெரிந்து நீ உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் செல் என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கான மருத்துவமனை எங்கு உள்ளது என்றும் சொன்னான்.

அவனும் அவன் மனைவியும் தன் குழந்தையை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். மருத்துவ மனையில் நல்ல கூட்டம். மருத்துவரை உடனடியாகப் பார்க்க வேண்டுமெனவும் தன் குழந்தை அழுதுகொண்டே இருக்கிறதென்றும் செவிலியரிடம் கெஞ்சிக் கூத்தாடி உடனே மருத்துவரைப் பார்ப்பதற்கு வழி செய்தான்.

தன் குழந்தையை மருத்துவரிடம் காட்டினர். அவர் இரண்டு மூன்று கேள்விகள் கேட்டுவிட்டுப் பிறகு மூன்று விதமான மருந்துகள் எழுதிக் கொடுத்து விட்டு, “மூன்று நாட்கள் கழித்து வாருங்கள், அதுவரை இந்த மருந்தைத் தொடர்ந்து எழுதியபடித் தவறாமல் கொடுங்கள் என்றார். தன் குழந்தைக்கு என்னவென்று கேட்பதற்குள்ளாகவே அவர் மற்றொருவரை அழைத்துவிட்டார். ஆக, அவனுக்கு மருத்துவரிடமும் விடை கிடைக்கவில்லை. அவன் குழந்தைக்கு அம்மருந்தைக் கொடுத்தான், கொடுத்த சிறிது நேரத்தில் அக்குழந்தை தூக்கத்தில் ஆழ்ந்தது. அக்குழந்தையின் வலியை மறைக்கும் வண்ணம் அம்மருந்து இருந்ததாகவே கருதினான்.

இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு அவனுக்கு அவனுடைய பாட்டியின் ஞாபகம் வந்தது. ஆமாம்… அவனுடைய பாட்டி கைவைத்தியத்தில் தேர்ந்தவள். அவன் ஊரில் எந்தக் குழந்தைக்கு உரை விழுந்தாலும் அவன் பாட்டியிடம் கூட்டிச் செல்வார்கள். அவனது பாட்டியோ சற்றும் தாமதிக்காமல் அக்குழந்தையை வாங்கி உடனே வைத்தியம் பார்த்துவிடுவாள். ஆமாம்… எனக்குத் தெரிந்து எந்தக் குழந்தைக்கும் சுளுக்கை எடுக்காமல் கொடுத்ததில்லை அவனுடைய பாட்டி.

அவன் பாட்டியிடம் வரும் குழந்தைக்கு வைத்தியம் பார்ப்பதற்கு முன்னர், குழந்தையைக் கொண்டு வந்தவர்களிடம் 1 ரூபாய் அல்லது 5 ரூபாய் காணிக்கை வாங்கி அந்த காணிக்கையைக் குல தெய்வமான பாகம்பிரியாளை வேண்டி முடிந்து வைத்துவிடுவாள். அப்படி வாங்கும் எல்லாக் காணிக்கையும் அக்கோவிலுக்கே சேரும். மாறாக, அதை எடுத்துச் செலவிடமாட்டாள். மேலும் பார்க்கும் வைத்தியத்திற்கும் பணம் வாங்க மாட்டாள்.

தன் குல தெய்வத்திற்குக் காணிக்கை முடிந்ததும், தன் வைத்தியத்தைத் தொடங்குவாள். தொடங்கியதிலிருந்து அவ்வைத்தியம் முடியும்வரை அவள் வாயிலிருந்து பாகம்பிரியாளின் நாம வழிபாடு வந்து கொண்டேயிருக்கும். முதலில் அக்குழந்தையைச் சொளகில் (முறத்தில்) போட்டு இந்தப் பக்கம், அந்தப் பக்கமெனப் பக்குவமாக உருட்டியெடுப்பாள். அந்தச் சொளகில் குழந்தையை உருட்டும்பொழுது அக்குழந்தையின் அழுகை மிக வேகமாக இருக்கும். இருப்பினும் சிறிதும் அதைச் சட்டைசெய்யாமல் வைத்தியத்தில் முழுகவனத்தையும் வைத்திருப்பாள்.

இவ்வாறாகச் சொளகில் உருட்டப்பட்ட குழுந்தை சிறிது நேரத்தில் தன் அழுகையை விட்டுவிட்டுத் தொட்டிலில் ஆட்டியது போல உறங்குவதற்குத் தயாராகும். அதற்கடுத்தபடியாகக் குழந்தையின் இரு கால்களை மட்டும் பிடித்துக் குழந்தையைத் தலைகீழாகத் தன் கையின் மூலமாகத் தொங்கவிட்டு அவளது வைத்தியத்தை ஆரம்பிப்பாள். அப்படிச் செய்தவுடன் அக்குழந்தை தன் வாயை முன்பைவிட மிக அதிகமாக திறந்து கூச்சலிடும். இப்படியாக ஒரு மூன்று தடவை செய்து அக்குழந்தையின் உரையை நீக்கிவிடுவாள் அவன் பாட்டி. இவற்றையெல்லாம் பார்க்கும்போது பெருமையாகவும் அதே சமயம் பயமாகவும் இருக்கும்.

‘இப்படிப்பட்ட பல கைவைத்தியங்களை நாம் யாரும் கற்றுக் கொள்ளவில்லை. என் அம்மா சிறிதளவு கற்றுக் கொண்டாலும் முழுவதுமாக கற்றுக் கொள்ளவில்லை. இன்று என் பாட்டியிடம் கற்றுக் கொண்டவர்களில் சிலர் இன்றளவும் இவ்வைத்தியத்தைச் செய்தாலும் தன் குடும்பத்தில் ஒருவர்கூட இப்படிப்பட்ட கைவைத்தியத்தை கற்றுக் கொள்ளவில்லை’ என்ற ஏக்கம் அவனிடம் தோன்றியது. ‘அவ்வாறு கற்றுத் தேர்ந்திருந்தால் இன்று நானே என் குழந்தைக்கு இச்சுளுக்கை எடுத்திருப்பேன். மாறாக, நானும் மருத்துவரை அணுகி மருந்து கொடுத்துக் கொண்டிருக்கிறேன்’ என்று வருத்தப்பட்டான். இன்றைய சூழ்நிலையில் அவன் பாட்டியிருந்திருந்தால் கண்டிப்பாக அவ் வைத்தியக் கூறுகளைக் கற்றுத் தெரிந்திருப்பான். ஆனால் அது சாத்தியமற்றது. ஏனெனில் அவன் பாட்டி கடந்த இரண்டு மாதங்கள் முன்பே காலமானார். தன் பாட்டியை நினைவலையில் அசை போட்டுக்கொண்டே அவனுடைய குழந்தையின் அருகிலேயே அவனையும் அறியாமல் தூங்கினான்.

இன்றைய சூழ்நிலையில் நாம் நம் பாரம்பரியத்தை மறந்துவிட்டோம். மாறாக, பயத்திற்கே நம்மை விலைபேசி விற்றுவிட்டோம். நமது பாரம்பரிய வைத்தியமான கைவைத்தியம், சித்த மருத்துவம் எல்லாம் நம்மை விட்டே நீங்கிவிட்டது. எதற்கும் நாம் மருத்துவரை அணுகி அவர் தரும் மருந்தைச் சாப்பிடப் பழகிக் கொண்டோம். நம் பாரம்பரியத்தின் பழமொழியான உணவே மருந்தை மறந்து மருந்தையே உணவாக உட்கொள்ளும் நிலைமை வந்துவிட்டது.  

பாட்டியின் கைவைத்தியம் நம் பாரதத்திற்கு தேவை. இதுவே சத்தியம்.    

நடுப்பக்க நயம் - கம்பனைப் போலொரு... பகுதி 1


மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

முகநூலில் அண்மையில் ஒரு கீழ்மகன் "கம்பனின் மொத்தக் கவிதையும் கம்பன் எழுதியதில்லை என்றும், தம்மிடம் பயின்ற மாணாக்கரை எழுதச் சொல்லித் தொகுத்தவை" என்றும் தன்னை ஒரு மாமேதையாக நினைத்துக்கொண்டு ஆணவத் துடன் கூறினான். அந்த முட்டாள் தானொரு முழுமூடன் என்பதை மறந்தான்.
இன்னும் சிலரும் கம்பரின் புகழையும், கவிதைத் திறனையும் கொச்சைப்படுத்தியும், கீழ்த் தரமாகவும் வசைபாடி வருவதைக் கண்ணுற்றதால் இந்தக் கட்டுரை எழுவதாயிற்று.
இக்கட்டுரையின் மூலம் அவர்களின் வசவுகளை நீர்க்கச் செய்தும், தலைகுனியச் செய்தும் கம்பரின் புகழை நிலைத்ததாய் நிறுவுவதுமே இக்கட்டுரையின் நோக்கம்
* * *
கம்பனைப் போலொரு... (1)

'கல்வியிற் பெரியவன் கம்பன்' என்று போகிற போக்கில் சொல்லிவிடவில்லை நம் முன்னோர்.
வெல்லத்தை விடவா சீனி நன்மை தரக்கூடியது?
மிளகை விடவா மிளகாய் நன்மை தரக்கூடியது?
எல்லாவற்றையும் உய்த்துணர்ந்து, ஆய்ந்துணர்ந்து சொன்னவர்களின் கூற்றை நாம் மறுத்துப் புறம் தள்ளுவதில்லை. ஏனெனில் அவர்தம் கூற்றில் துய்ப்பு கரணியமாக இருந்தது. அந்தத் துய்ப்பே அவர்களை அவ்வாறு சொல்ல வைத்தது.
அவ்விதமே கல்வியில் பெரியவன் கம்பன் என்றதும் கம்பனை ஆழமாகத் துய்த்ததால் அவர்கள் அப்படிச் சொன்னார்கள்.
கம்பனை ஒதுக்கிவிட்டுக் கவிதையைத் துய்த்தலென்பது குழம்பை நீக்கிவிட்டு வெற்றுச் சோற்றைத் தின்பது போலாகும்.
கம்பன் ஒரு கவிதைச்சோலை. அதில் பல்வேறு மணம்வீசும் சந்தங்களைக் காணவியலும்.
கம்பன் ஒரு கவியருவி... அதில் பல்வேறு வகையான யாப்புநதிகள் வந்து கலந்திருக்கும்.
கம்பன் ஒரு கவியாலை... அதில் பல்வேறு சுவைமிக்க கனிகளின் சாற்றினை அள்ளிப் பருகவியலும்.
கம்பன் ஒரு கவித்தேர்... கட்டுப்பாடான இலக்கண வரம்புகளுக்குட்பட்டு அதில் பயணிக்கலாம்.
கம்பன் ஒரு பழத்தோட்டம்... முக்கனி மட்டுமன்றித் தேனிலூறிய செந்தமிழ்க் கனிக்கூட்டங்களைப் பறித்துத் துய்க்கலாம்.
எதுகைக்கும் மோனைக்கும் இடர்படாத சொல்லாட்சியும், புதிய புதிய சொல்லீட்டமும் மிளிரும் காவியச் சுவையில் கட்டுப்படுத்த வியலாத கவிச்சக்ரவர்த்தியவர்.
எத்தனை யெத்தனை யாப்புகள். . எத்தனை யெத்தனை சந்தங்கள்... எத்தனை யெத்தனை சொல்லோவியங்கள்...
அறிவியல், ஆன்மீகம், அரசியல், வரலாறு, சமூகம், பண்பாடு, குடும்பப் பண்புநலன்கள், பொதுமை, புதுமை.... இன்னும்... இன்னும்...
சொல்லிக்கொண்டே போகலாம் கம்பரின் ஆளுமையை.
தமிழென்றால் இனிமையென்பது கம்பன் காவியத்தால் அறியப்படும்.
தமிழென்றால் அமிழ்தமென்பது கம்பன் சொல்லோட்டத்திலும், உவமையாட்சியிலும் பெறப்படும்.
தமிழென்றால் இளமையென்பது கம்பனது எழுத்தாளுமையாற் பெறப்படும்.
தமிழென்றால் முதுமையென்பது கம்பனின் காவியப் போக்கினால் பெறப்படும்.
தமிழென்றால் உணர்வென்பது கம்பனின் கவிதைச் சுவையால் பெறப்படும்.
இவற்றையெல்லாம் அறியாமலா முண்டாசுகாரன் சொன்னான்.?
"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவன்போல் 
இளங்கோ வைப்போல் 
யாங்கணுமே யாம்கண்டதில்லை...." என்று.!
"பத்தா யிரம்கவிதை முத்தாக அள்ளிவைத்த
சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும்
வித்தாக வில்லையென்று பாடு"

என்று மகுடம் சூட்டும் கவியரசரின் வாழ்த்தைப் புறந்தள்ளிவிட முடியுமா?
"எண்ணியெண்ணித் திட்டமிட்டு எழுதி னானோ?
எண்ணாமல் எங்கிருந்து கொட்டி னானோ?"
என்ற நாமக்கல்லாரின் வியப்பை மறுக்கத்தான் முடியுமா?
இவ்வாறாக நந்தமிழ் நாட்டோர் நனிமிகக் கொண்டாடி மகிழும் கம்பனின் கவிச்சுவையை அறிய மாட்டாமலும், அவருடைய புகழிற்குக் காரணமான கவிதையை விடுத்து அவர் எடுத்துக் கொண்ட கருவை மையப்படுத்தி அவரைக் கொச்சைப்படுத்துவதும் இற்றைநாள் வழக்க மாகிப் போனது.
நுளம்பின் ஒளியையே ஒளியென்றெண்ணி மருளும் மடயர் தம் சிற்றறிவால் வானிலாவின் ஒளியைத் துய்க்கவா முடியும்.?
கல்லில் செதுக்கிய காரிகையின் மார்பைக் காமத்துடன் பார்க்கும் கயவர்க்குக் கலையின் மாட்சியா தெரியப்போகிறது.?
தாயை அன்புடன் அரவணைக்கும் பாசத்தைத் தாரத்தின் அணைப்போ டிணைத்துப் பார்க்கும் கயவர்தம் அறியாமையே இது.
.... வளரும்...