'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2021

ஆசிரியர் நன்னாள்

பாவலர் தங்கமணி சுகுமாரன் 
(கட்டளைக் கலித்துறை)

நல்லுல கத்தினை நன்னெறி தன்னில் நடத்துவதும்
புல்லறி வாளனின் புத்தியைத் தீட்டிப் புதுக்குவதும்
சொல்லறி விப்பதும் நல்லறி விப்பதும் தொண்டெனவே
அல்லும் பகலும் அமைத்துக் கொளுதல் அவரறமே

பெற்றதும் பெற்றோர் பெருங்கடன் யாவும் பெரிதுடனே
முற்றின அத்துடன் முப்பொழு தும்தம் முயற்சியிலே
கற்றவர் ஆக்கக் கடமையை ஆற்றும் கருத்தமைந்தோர்
கொற்றம் புகழ்ந்து குவிவோம் கரங்களைக் கும்பிடவே

பிரம்பினைக் கையில் பிடித்துநல் மாணவப் பிஞ்சுகளைக்
கரம்பிடித் தேதங்கள் கண்மணி போலவே காத்திருந்து
வரம்போடு தங்களை வார்த்தறி வூட்டிதன் வாழ்க்கையிலே
வரம்தரு தெய்வங்கள் மண்மிசை ஆசானை வாழ்த்துதுமே

தொடராதொழிப்போம் தொற்று

பைந்தமிழ்ப் பாமணி இரா.அழகர்சாமி
குறள் வெண்பா


மூக்குடன் வாயையும் மூடினால் நோயதன்
தாக்கம் தணிவைத் தரும்

தருமருந் தெல்லாம் தகைமை தருமோ
அருமருந் தாமடங்கல் ஆம்

அறிந்தோ அறியாமலோ ஆபத்தைத் தீண்ட
உறுகண் பெறுவா யுடன்

உடனே உடலில் உண்டாக்(கு) எதிர்ப்பைத்
தொடராம லோடுமே தொற்று

தொற்றினைத் தொற்றா தொழிக்கலாம் சொல்வதைப்
பற்று படராது பார்

பார்வைக்குக் கிட்டாமல் பாயும் கிருமியினைத்
தீர்க்கத் தனிமையே தீர்வு

தீர்வு கிடைக்காமல் திண்டாடும் மக்களை
யார்வந்து காப்பார் இனி

இனியும் பயமின்றி எல்லோரும் கூடத்
துணியுமே தொற்றும் தொடர்ந்து

தொடர்ந்து நம்மைத் துரத்துமிந் நோய்நாம்
தொடுதல் அதற்கொரு தோது

தோதகன் விட்டவோர் தும்மலால் நோயுன்னை
மோதுமுன் மூடிவை மூக்கு

தோதகன்-ஒழுக்கமற்றவன்
உறுகண்-நோய்

இலக்கணப் பேழை

பேரா.கு.இராமகிருட்டினன்

தான், தாம், தாங்கள் எனும் பெயர்கள்:

தமிழில், தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூவிடம் உண்டு,

தன்மைப் பெயர்கள்: யான்( நான்) , யாம் (நாம்), நாங்கள் ,

முன்னிலைப் பெயர்கள்: நீ,நீர் நீயிர்( நீவிர்), நீங்கள்.

படர்க்கைப் பெயர்கள்: அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை, அவைகள் ( காண்க; நன்னூல்287).

இவை தவிர, 'தான், தாம், தாங்கள்' என்பனவும் படர்க்கைப் பெயர்களாக (படர்க்கைப் பெயர்ப் பதிலிகளாக- தெ.பொ.மீ.)) உள்ளன.

எழுவாயாகப் பயன்படுபவை: நான், நாம், நீ,நீர், நீயிர், நீவிர், தான், தாம், தாங்கள், இவை வேற்றுமை உருபுகளை அவ்வாறே ஏற்கா. திரிந்த வடிவங்களைப் பெற்று வேற்றுமை உருபுகளை ஏற்கும்.

இவை வேற்றுமை உருபேற்கத் திரிந்த வடிவங்களைப் பெறும்:

என், எம்( நம்), நின்,உன், நும், உம், உங்கள், தன், தம், தங்கள். (காண்க நன்னூல் 247.) என்பன.

எ.டு. என்னை, உன்னால்...

அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை

தன் நிலையிலேயே வேற்றுமை உருபுகள் ஏற்கும்.

எ.டு. அவனை, அவளால், அதை, அவைகளை (அவற்றை)...

தான், தாம், தாங்கள் எவ்வாறு பெயர்ப் பதிலிகளாக வரும் ?.

தான் அன்பது அவன், அவள், அது என்பனவற்றுக்கு மாற்றாக வரும்.

தாம் என்பது அவர்,அவை(அவைகள்) என்பனவற்றுக்கு மாற்றாக வரும். தாங்கள் என்பது அவர்கள் , அவை, அவைகள் என்பனவற்றுக்கு மாற்றாக
வரும்.

எ.டு: தான் நல்லவன் என்றான்,

தான் ஐந்தாவது படிப்பதாகக் கூறினாள்,

தான் படுத்தே இருக்கும் அந்த நாய்.,

தாம் பெரியவர் என்பதை அவர் புலப்படுத்தினார்.

தாங்கள் தமிழர் என்று அவ்வூரார் பெருமைப்பட்டனர்.

தான், தாம், தாங்கள் என்பன வேற்றுமை உருபுகள் ஏற்கும்பொழுது தன், தம், தங்கள் என முதல் குறுகி நிற்கும்.

எ.டு: தன், தன்னை, தன்னால், தனக்கு, தன்னிடம்...

தம் தாயை வழிபட்டார். ( தாங்கள் தங்கள் என்பன தற்காலத்தில் முன்னிலையிலும் பயன்படுத்தப்படுகின்றன. எடு: தாங்கள் யார்? தங்கள் பெயர் என்ன?

தம், நம், நும் ஆகியவை சாரியைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன(தெ.பொ.மீ. தமிழ் மொழி வரலாறு பக்.131)

மேலும் ' அவன்தான் கூறினான், அவர்தாம் செய்தார், அவர்கள்தாம் தமிழர்' எனும்பொழுது தான், தாம் என்பன ஒன்றை வலியுறுத்திக் கூறப் பயன்படுகின்றன.

அன்பு தெய்வம் அன்னை (வளையற் சிந்து)

கவிஞர் சொ. சாந்தி

ஐயிரண்டு திங்களாக
அன்னைக்கருக் கூட்டில் - பின்
அவளின்மடிச் சூட்டில் - கண்
அயர்ந்தோம்தா லாட்டில் - அந்த
அன்புமனம் கொண்டவளை
அலங்கரிப்போம் பாட்டில். !

பனிக்குடத்தில் சுமந்தபோதும்
பாசங்குறைய வில்லை - தாய்
பரிவுக்கேது எல்லை - அவள்
பார்வைக்குநாம் கிள்ளை - நாம்
பணியவேண்டும் அவளையன்றி
பாரில்தெய்வ மில்லை..!

காய்ச்சல்பிணி கண்டுவிட்டால்
கண்ணுறக்கம் விட்டு - நமைக்
காக்கப்பாடு பட்டு – அன்னை
காய(ம்) நலங் கெட்டு - உயிர்
கரைந்தாலும் காத்திடுவாள்
கடவுள்நிலைத் தொட்டு..!

கல்சுமப்பாள் மண்சுமப்பாள்
கண்ணீரோடு அன்னை - தன்
கடமையிலேத் தென்னை - நமைக்
கரைசேர்க்கத் தன்னை - தீயில்
கரைந்துருகி யாகினாளே
காலந்தோறும் வெண்ணெய். !

இல்லமதி லுள்ளகடவுள்
ஈடுயிணை யில்லை - அன்னை
இருக்கவுண்டோத் தொல்லை - அவள்
இருக்குமிடம் மல்லை - நாம்
எந்தநாளும் அவளன்பால்
ஈட்டுமின்பம் கொள்ளை..!

சிந்துப் பாடல்களின் சீர்கள்

பாவலர் மா.வரதராசன்.

அன்புடையீர். வணக்கம்.


1.சிந்துப் பாடல்களின் சீர்கள் இரட்டைப்படையில்தான் வரும்....ஒற்றைப்படையில் வராது.

2.வளையற்சிந்து பாடலில் 24 சீர்கள்தாம் வரும். 15 சீர்கள் வரவே வராது.

3. இவற்றையறியாமல் முகநூலில் பிழையாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.(அலைபேசியில் கேட்டது)



"ஐயா....இது சரியா.? நீங்கள் சொல்வது சரியா? " எனப் பைந்தமிழ்ச்செம்மல் மன்னை வெங்கடேசன் என்னைக் கேட்டார்.

முதலிரு கருத்துகள் மட்டும் என்றால் இந்த விளக்கத்திற்கு தேவையேயில்லை. ஆனால், முகநூலில் என்னைத் தவிர வேறு யாரும் கடந்த ஐந்தாண்டுகளில் கற்பிக்கவில்லை என்பதாலும், ஒரு மாணவரின் ஐயத்தைப் போக்குவது ஆசிரியனின் கடமையென்பதாலும் நான் இவற்றிற்கு விளக்கம் சொல்லவேண்டியதாயிற்று.

சிந்துபாடுக என்னும் பயிற்சியைத் தொடங்கும்போதே இவ்வாறான வசவுகள் வரும் என்று எதிர்பார்த்தே ...

""இந்தப் பயிற்சிப் பகுதி புதிதாகப் பாப்புனைவோர் அஞ்சியொதுங்கா வண்ணம் எளிமையாகவும், பாப்புனைய தேவையான குறிப்புகளோடும் தொடரும்.

சிந்துப் பாடல்களின் இலக்கணங்கள் முனைவர் இரா.திருமுகன் அவர்களின் "சிந்துப் பாவியல் " நூலை அடியொற்றியும், என் சொந்தப் பயிற்சியைக் கொண்டும் கூறப்படுகின்றன."

என்ற முன்குறிப்புடன் வழங்குகிறேன்.

என்சொந்தப் பயிற்சியென்பது அவ்விலக்கணத்தை நான் கற்கப்பட்ட பாட்டையும், பின் ஏற்பட்ட புரிதலையும் உணர்த்தும். அப்புரிதலின்
விளைவாக ஏற்பட்ட தெளிவே என் குழுவில் நான் பாடம் நடத்தும் முறையாகும்.

சிந்துப் பாவியல் நூலைப் படித்தாலோ அல்லது அப்படியே தொடர்ந்தாலோ யாரொருவரும் புரிந்துகொள்ளவியலாது. அதைப் புரிந்து தேர்ச்சிபெற எளிமையும், நல்லாசானும், அவருடைய வழிகாட்டலும் கட்டாயம் தேவை.

சான்றுக்குப் ...

பின்வரும் பகுதியைப் படித்துப் பாருங்கள்.

"சிந்துப் பாடல்கள் தாள அடிப்படையில் அமைக்கப்பட்டு உள்ளதால்தான் மற்ற பாக்களான இயற்பா, சந்தப்பா, வண்ணப்பாக்களுக்கான அசை, சீர், அடி, தொடை, மாத்திரை முதலியன இதற்கு ஒத்துவராமற் போகின்றன.

தாள அடிப்படையில் அமைந்த சிந்துப்பாடல்களில் உள்ள அசைகளையும், சீர்களையும் உணர வேண்டுமெனில் முதலில் தாளத்தையும் அதன் உள்ளுறுப்புகளையும் உணர வேண்டும். தாளம் ஏழு: அவை: துருவம், மட்டியம், ரூபகம், சம்பை, திருபுடை, அட, ஏக என்பனவாகும். இவற்றில்ன் உள்ளுறுப்புகள் மூன்று; அவை: கோல் (இலகு) - சுழி (திருதம்) - அரைச்சுழி (அனுத்திருதம்).

கோல் 1 என்றும், சுழி 0 என்றும், அரைச்சுழி அரைவட்ட வடிவிலும் குறிக்கப்பெறும்.

சுழி இரண்டு எண்ணிக்கையுடையது. அரைச்சுழி ஒர் எண்ண்ணிக்கை உடையது. இவையிரண்டும் எண்ணிக்கையில் மாறாதவை. கோல் மட்டும் இனத்தைப் பொறுத்து எண்ணிக்கை மாறக் கூடியது.

கோலும் இனங்களும் (சாதிகளும்):

மேற்குறித்த ஏழு தாளங்களுக்கும் இனங்கள் உண்டு. அவை மும்மை (திசிரம்), நான்மை (சதுசிரம்), ஐம்மை (கண்ட), எழுமை (மிசிரம்), ஒன்பான்மை (சங்கீரணம்) என ஐந்தாகும். இவற்றின் எண்ணிக்கை முறையே மூன்று, நான்கு, ஐந்து, எழு, ஒன்பது என்பனவாகும்.

ஒரு தாளத்தில் உள்ள கோல் இந்த ஐந்து இனத்துக்குரிய எண்ணிக்கைகளைத் தனித்தனியே பெறும்போது அத்தாளம் ஐந்து வகையாகிறது. இப்படியே ஏழு தாளங்களும் (7 தாளம் x 5 இனம்)= 35 வகையாகும். எடுத்துக்காட்டாகத் திரிபுடைத் தாளம் மும்மை இனமாயின் ‘மும்மையினத் திரிபுடை’ (திசிர சாதித் திரிபுடை) என்று பெயர்பெறும். அதனை ‘1300’ என்று குறிப்பார்கள். இதன் மொத்த எண்ணிக்கை (3+2+2) ஏழாகும். இதே திரிபுடைத் தாளம் நான்மை இனமாயின் நான்மைத் திரிபுடை (சதுசிர சாதித் திரிபுடை) என்று பெயர்பெறும். அதன் குறியீடு ‘1400’ ஆகும். இதன் மொத்த எண்ணிக்கை (4+2+2) எட்டாகும். இப்படியே முப்பத்தைந்து தாளத்துக்கும் கணக்கிட்டுக் கொள்ளவேண்டும்.

வட்டணை (ஆவர்த்தம்)

நான்மை இனத் திரிபுடைத் தாளத்திற்கு நடைமுறையில் ஆதி தாளம் என்று பெயர் வழங்கப்படுகிறது. ஒரு தாளத்தின் முழுநீளம் ஒரு வட்டணை எனப்படும்.

தாளம் போடும் முறை:

கோல் - ஒரு தட்டுத் தட்டி அதற்குரிய எண்ணிக்கை (தட்டுடன் சேர்த்து) எண்ண வேண்டும். சுழி - ஒரு தட்டுத் தட்டித் திருப்ப வேண்டும். அரைச்சுழி - ஒரு தட்டுத் தட்ட வேண்டும்.

சிந்துப் பாடல்களில் பெரும்பாலன ஆதி தாளத்தில் அடங்குமாறு அமைந்துள்ளன. அவற்றைப் பாடும்போது அடியின் முற்பகுதி ஒரு கோலிலும், 14 அடுத்தபகுதி இரண்டு சுழிகளிலும் ‘00’ அடங்குகின்றன. இப்படித் தாளத்தின் ஒரு வட்டணையிலோ, பல வட்டணைகளிலோ ஓரடி அடங்குகிறது.

1 2 3 4

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் . ப ரா சக்தி

5 6 7. 8

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் . . . . .

(அசை நீட்டங்கள் புள்ளிகளால் குறிக்கப்பட்டுள்ளன)

மேற்காட்டிய கோலிற்குரிய நான்கு எண்ணிக்கையில் முதல் அரையடியும், இரு சுழிகளுக்குரிய நான்கு எண்ணிக்கையில் அடுத்த அரையடியும் ஆக ஓர் ஆதிதாள வட்டணையில், இதன் ஓரடி முழுவதும் அடங்குவதைக் காணலாம். எட்டாம் எண்ணிக்கையில் எழுத்துகளே இல்லையென்றாலும் எழாம் இடத்தில் இறுதியாக வரும் அசை எட்டாம் சீராக நீண்டு இசைக்கிறது. இந்த இரண்டு வரிகளும் சேர்ந்து ஓரடி. எனவே இவ்வடியில் 8 சீர்கள் உள்ளன. இதனை எண்சீர்க் கழிநெடிலடி எனலாம். இந்தப் பாடலில் ஒவ்வோரடியும் ஓர் ஆதிதாள வட்டணையில் அடங்குகிறது.

இந்தப் பாடலில் கோடிட்டுக் காட்டியபடி 8 சீர்கள் உள்ளன. ஒற்று நீக்கிய உயிர்நெடில், உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் ஆகிய பதினெட்டு உயிரெழுத்துகள் (சிந்துப்பாடலில் உயிரும் உயிர்மெய்யும் உயிராகவே கொள்ளப்படும்) எட்டு சீர்களாக இசைக்கின்றன.



நண்பர்களே!

இதே முறையில் சிந்து இலக்கணத்தைக் கற்பித்தால் எத்தனை பேருக்குப் புரியும்.? இசைப்பயிற்சி வகுப்புக்குச் செல்வோர்க்கு மட்டுமே புரியும். அதைத்தான் நான் இயல்பாகவும் எளிமையாகவும் வடிவமைத்திருக்கிறேன்.

எப்படி...?

திசிரம் - மும்மை -

சதுசிரம் - நான்மை -

கண்ட - ஐம்மை -

மிசிரம் - எழுமை -

என்பனவற்றை,

மூன்றெழுத்து

நான்கெழுத்து

ஐந்தெழுத்து

ஏழெழுத்து

என்றவாறு எழுத்துக் கணக்கிலேயே புரியவைத்திருக்கிறேன். மேலும் ஒரெழுத்தையே அசையாகக் கொள்வது கற்பவர்க்கு குழப்பமுண்டாக்கும் என்பதால் அவற்றையும் நெறிப்படுத்தினேன்.

இரா.தி. இசையில் பயிற்சியுடையவர் என்பதாலும், இசையில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பதாலும் அவர் இசைநோக்கில் அணுகிய சிந்துப்பாடலை நான் சற்றே எளிமைப்படுத்தினேன். அவ்வளவே. மற்றபடி ...இலக்கணமேதும் இம்மியளவும் மாறாது.

அடுத்து...

சிந்துப் பாடல்களில் இரட்டைப்படையில்தான் சீர்கள் வரும்.ஒற்றைப்படையில் வராது.

ஆம். உண்மைதான்.

வளையற் சிந்து

. இதன் சீர் மும்மை நடையினதாக அமைந்திருக்கும். 1,5, 9, 13, 17, 21 ஆம் சீர்களில் மோனை அமைந்திருக்கும் 7, 11, 15, 23 ஆம் சீர்களில் இயைபுத் தொடை அமைந்திருக்கும்.

காட்டு : 24 சீர் அடி

வாரு மையா வளையல் செட்டி

வளையல் விலை கூறும் - சீர்

மகிழ்ந்து மேகை பாரும் - பசி

வன்கொ டுமை தீரும் - எந்த

மாந கரம் பேர்இ னங்கள்

வகை விபரம் கூறும்.

இப்பாடலை நன்கு நோக்குங்கள்.

23 சீர்கள் தாமே உள்ளன? ஏன் ஒற்றைப்படையில் வந்திருக்கிறது.? அப்படியானால் இப்பாடல் பிழையா?

இல்லை. பாடல் சரிதான். 24 ஆவது சீர் இசைநீட்டமாக அமையும். அஃதாவது 23 ஆம் சீரை இன்னும் இருமாத்திரையளவு நீட்டிப் #பாடிக்கொள்ளவேண்டும். ஆனால் எழுதும் போது அந்த இடத்தில் எந்த எழுத்தும் இருக்காது.

மேற்கண்ட விளக்கத்தை நன்றாகப் பாருங்கள்.

7, 11, 15, 23 ஆம் சீர்களில் இயைபுத் தொடை அமைந்திருக்கும்....

என்ற குறிப்பை நோக்குங்கள். 23 ஆவது சீருடன் பாடல் முடியும். 24 ஆவது சீர் எழுத்தேயில்லா இசைநீட்டம் மட்டுமே.

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் /// என்ற பாடலையும் அதன் விளக்கத்தையும் பார்க்க. அதிலும் 8 ஆவது சீரில் எழுத்தேயில்லா இசைநீட்டம் மட்டுமே வரும்.

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் . ப ரா சக்தி

5 6 7 8

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் . . . . .

(அசை நீட்டங்கள் புள்ளிகளால் குறிக்கப்பட்டுள்ளன)

எனவே, பயிற்சியின் எளிமைக்காக அந்த எழுத்தில்லாச் சீரைப் பற்றி நான் குறிப்பிடவில்லை.

இதனைச் சிந்துப்பாவியல் கூறுவதைக் காண்க.

"தனிச்சொல் முன்னரும் அரையிடை இறுதியும்

அடியின் இறுதியும் அமையும் அசைகள்

இரண்டிறந் திசைத்தலும் இயல்பா கும்மே."

(சி.பா. 10)

கருத்து : சிந்துப் பாடல்களில் தனிச் சொல்லுக்கு முன்னரும் அரையடியின் இறுதியிலும், அடியின் இறுதியிலும் அமைந்திருக்கின்ற அசைகள் இரண்டு அசை நீளத்திற்கு மேல் நீண்டு இசைத்தலுமுண்டு

காட்டு : ஓர் ஆதிதாள வட்டணையில் அடங்கும் அடி

ஓம் சக் தி ஓம் சக்தி ஓம் . ப ரா சக் தி

ஓம் சக் தி ஓம் சக்தி ஓம் . . . . .

(அசை நீட்டங்கள் புள்ளிகளால் குறிக்கப் பட்டுள்ளன.)

எட்டாம் எண்ணிக்கையில் எழுத்துகளே இல்லை என்றாலும் ஏழாம் இடத்தில் இறுதியாக வரும் அசை எட்டாம் சீராக நீண்டு இசைக்கிறது. இந்த இரண்டு வரிகளும் சேர்ந்து ஓரடி.

(சி.பா. 28 இன் விளக்கம்)



அடுத்து...

15 சீர்களில் வளையற்சிந்து அமையாது...என்பதற்கான விளக்கம்.

"வளையல் வாணிகம் வழங்கும் பாவகை

எண்சீர் அடிகள் இரண்டினும் மூன்றினும்

தனிச்சொல்லும் இயைபும் தான்மிகப் பெற்றே

ஓரடிக் கண்ணியாய் பேரளவியன்று

மும்மையின் விரைவில் செம்மையாய் நடக்கும்" (சி.பா. 37)


இந்நூற்பாவில்

எண்சீரடிகள் இரண்டினும், மூன்றினும்

என்னும் அடியைக் காண்க.

எண்சீரடிகள் இரண்டு - 16 அடிகள்

எண்சீரடிகள் மூன்று - 24 அடிகள்.

எனவே, 16 சீர்களிலும் வளையற்சிந்து அமையலாம் என்பதை அறிந்துகொள்க.

என்னுடைய பாடத்தில் 15 சீராகக் குறிக்கப்பட்ட ஈற்றசையை எழுத்தில்லா இசைநீட்டமாகப் பாடவேண்டும். வாருமையா வளையற்செட்டி பாடலின் 23 ஆவது சீரை நீட்டிப் பாடுவது போல்.

அவ்வாறாயின் என்னுடைய பாடல் 16 சீர்கள் கொண்டது தானே.?

அன்றியும்,

வாரு மையா வளையற் செட்டி // என்ற பாடலை என் பயிற்சியின்படி 15 சீர்களாகக் காட்டலாம். (எளிமையாகப் புரியும்படி)

1. வாருமையா

2. வளையல்செட்டி

3. வளையல்விலை

4. கூறும் -

5. சீர்

6. மகிழ்ந்துமேகை

7. பாரும் -

8. பசி

9. வன்கொடுமை

10.தீரும் -

11. எந்த

12. மாநகரம்

13. பேரினங்கள்

14. வகைவிபரம்

15. கூறும்.

இந்த முறையில்தான் என் பயிற்சிகள் அமைகின்றன.



அல்லது

என் பாடலை 24 சீர்களாகக் காட்ட முடியும்.

1. சதியெ

2. னவே

3. பிரித்த

4. னரே

5. சாதி

6. யினை

7. இங்கு -

8. மதச்

9. சாய்க்க

10.டையின்

11. பங்கு -

12. துயர்

13. சாய்த்தி

14. டவே

15. தங்கு -

16. நாம்

17.தகர்த்தெ

18.றிய

19.பலத

20.டைகள்

21.தழைத்தி

22.ருக்கு

23.மிங்கு.

24 ........

(24ஆவது சீர்க்குப் புள்ளிகள் வைக்கப்பட்டிருக்கும்)




ஒரு கணித ஆசிரியர் 22×10 என்பதை,

2×10 = 20

2×10= 20

--------

220

--------

என்று மாணவர்க்குச் சொல்லிக் கொடுப்பார்.

இன்னொரு ஆசிரியர் சற்றே எளிதாக, பத்தில் இருக்கும் சுழியத்தை 22 உடன் சேர்த்து

22×10= 220 என்று சொல்லிக் கொடுப்பார்.

வழிமுறை வேறுவேறு. ஆனால் பயனோ ஒன்றே.



நன்று...நண்பர்களே!

ஐயங்கள் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்.

தமிழன்புடன்

மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

இற்றைத் திங்கள் இவரைப்பற்றி

பைந்தமிழ்ச்செம்மல்
உமாபாலன் சின்னதுரை

இலங்கையின் வடபகுதியில் சைவமும் செந்தமிழுஞ் செழித்தோங்கப் பெருஞ்சிறப்புடைத்த பெருநகர் யாழ்ப்பாணம். அந்நகரில் வரலாற்றுப்புகழொடு திகழ்கின்ற முருகன் கோயில் கொண்ட மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சின்னத்துரை உமாபாலன். தமிழும் சைவமும் இருகண்ணெனக் கொண்ட ஆறுமுகநாவலரின் நேரடி மாணாக்கரான உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளையின் (நாவலரின் வழிகாட்டலில் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையின் தலைமையாசிரியராகப் பணிபுரிந்தவர்) வழித்தோன்றலான இவர்,
அரங்க அறிவிப்பாளராக, நாடக எழுத்தாளராக, கவிஞராக, பாடலாசிரியராக, பட்டிமன்றப் பேச்சாளராக அறியப்பட்டவர். இவர் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவராவார்.

1980 – 87ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றிய சின்னத்துரை உமாபாலன், 1987ஆம் ஆண்டு நள்ளிரவுச்சூரிய நாடெனும் நோர்வே நாட்டுக்குப் புலம்பெயர்ந்திருந்தார். அங்கு லோறன்ஸ்கூக் (Lørenskog) நகரசபையில் தொழில்நுட்பவியலாளராகப் பணிபுரிந்துவரும் இவர், தமிழாசிரியராக, தமிழர் அமைப்புகளின் நிர்வாகியாகத் தமிழ்ப்பணியிலும் ஈடுபாடு காட்டி வருபவர்.

போட்ஸ்பியூர்ட் (Båtsfjord) தமிழ்ச்சங்கம், பின்மார்க் தமிழர் ஐக்கிய முன்னணி, லோறன்ஸ்கூக் தமிழர் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றின் தலைவராக அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தின் லோறன்ஸ்கூக் வளாகப் பொறுப்பாளராக, அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடங்களின் கலைப்பிரிவு இணைப்பாளராகக் கடமையாற்றிய இவர் தற்போது நடேஸ்வரா பழையமாணவர் சங்கம் - ஐரோப்பாவின் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.

அண்டம் வலையொளியின் (Andam media) ஊடாகத் தமிழ்ச் சைவம் எனுந்தலைப்பில் தொடர்பதிவுகள் செய்துவரும் இவரது கவிதை நூல்களான தமிழ்ச் சைவம், வாலி காவியம் ஆகியவை விரைவில் வெளியாகவுள்ளன.

நம்முடைய பைந்தமிழ்ச்சோலையின் உறுப்பினரான இவர் சோலையின் பட்டத்தேர்வெழுதிப் பைந்தமிழ்ச்செம்மல் என்னும் உயரிய பட்டம் பெற்றவர்.

இவரது ஆக்கங்கள்:
2011ஆம் ஆண்டு வெளியீடு - மாவை மான்மியம்
(மரபுக்கவிதையிலமைந்த மாவிட்டபுர வரலாற்றுத் தொகுப்பு)

(சாற்றுகவி)

மாவைப் பதிதன்னின் மாணுயர் மக்கள் நலமறிந்து
மாவைக்கோர் மான்மியம் மன்பதை போற்றக் கொடுத்தமைந்த
மாவைப் பதிபிறந்த மாண்பார் உமாபாலன் நம்மனதிற்
காவிற் கனிந்த பழமாய்க் கனிச்சாறாய்க் கூடினனே!
.. .. .. .. ..- பண்டிதர் ம. ந. கடம்பேசுவரன்

2016ஆம் ஆண்டு வெளியீடு - நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள்
(நோர்வேவாழ் தமிழர்களின் வரலாற்றுத் தொகுப்பு 1956 – 2016)


(அணிந்துரை)
பன்னருங் கல்விப் பரம்பரை வந்த
என்னரும் மருகன் மாவைப் பதியின்
சின்னத் துரைமகன் சீர்உமை பாலன்
.. .. ..
செந்தமிழ் கமழும் சீரிய நடையில்
தேனினும் இனிய கவிதைகள் மேவிட
.. .. .. .. .. .. .. .. வெளிவந் ததுவே!
- புலவர் ம. பார்வதிநாதசிவம்

வண்ணப்பாடல்

அரசி.பழனியப்பன்

தனதன தத்தத் தத்தன தத்தத்
தனதன தத்தத் தத்தன தத்தத்
தனதன தத்தத் தத்தன தத்தத் தனதான

தலையெழு துற்றுப் பற்றொடு கொட்டத்
தரசிய லெட்டித் தப்பித முற்றத்
தனநிறை யுற்றுச் சத்தொடு சுற்றித் திரிவாராம்

தறிகெடு மெத்தர்க் குற்றிடு நட்புக்
களமதி லுற்றுப் பத்திமை முற்றித்
தமதுறு கட்சித் தற்குறி வெற்றிக் கலைவாராம்

கலைபல கற்றுச் சொற்றிற முற்றுத்
தலைமையை எட்டச் சத்தியு மற்றுக்
கவலையை உற்றுச் சித்தமொ டுக்கித் திகழ்மேலோர்

களிமன முற்றுக் கற்றது வைத்துத்
தொகுநிதி முற்றத் தெற்றென விட்டுக்
கனிவொடு மக்கட் பொற்பணி மெச்சப் புரிவாராம்

தலையுயர் வுற்றுப் பொற்றர மெட்டக்
களைகளு முற்றத் தட்டிய ழித்துத்
தகுதியில் மிக்கத் தக்கவ ருய்த்துத் துணையாகத்

தலமுறை நிற்றுச் சக்திகொ ழிக்கத்
தருமிறை மொத்தச் சக்திபெ ருக்கித்
தழையருள் கொட்டப் பொற்பினை யுற்றுச் சமுதாயம்

குலமுறை யற்றுப் பொற்றமிழ் வைத்துத்
தலைமுறை தொட்டுத் தக்கன வுற்றுக்
குடிமுறை மொத்தத் தொற்றுமை யுற்றுப் புகழ்சேரக்

கொடியுய ருச்சிக் குற்றிட வெற்பிற்
படைமற முற்றக் கொற்றவர் பற்றக்
கொழிதமி ழெச்சத் துத்திற லுற்றுத் திகழ்வோமே!


வண்ணப்பாடல் 2

தானா தானா தானா தானா
தானா தானத் தனதான

வீழா நாடாய் வாழ்வோர் பீடாய்
வீறாய் வாழத் தகுமாறு
மேலாய் ஆள்வோர் தானாள் வாரேல்
மேனாள் போலத் திகழாதோ?

நாளோ கோளோ வேறே தேதோ
நாடா தோடித் தொலையாதோ?
நாவார் தேனாய் மூவா தேவாழ்
தாய்நேர் வேதத் தமிழாலே

வாழ்வோ ரூடே மேல்கீழ் சாதீ
பாரா தோடித் தொலையாதோ?
மாதே ஆனார் தீதே வாழ்நாள்
வாரா தேமப் படுவாரோ?

மேலோய் !பாலா! சீலா! நூலோர்
மேலா யோதத் தகுகோவே!
வேலா! பாராய்! வேலால் தீராய்!
வேளே! தேவப் பெருமாளே!

பாசமே பெரிது

பைந்தமிழ்ப் பாமணி
சரஸ்வதி பாஸ்கரன்

தாய்தந்த பாசத்தால் தரணி ஆளும்
------- தக்கதொரு குடும்பத்தை நாமும் காண்போம் .
காய்க்கின்ற மரம்கூட மறத்தல் உண்டு .
------- கனிவான தாய்க்குநிகர் எவரும் உண்டோ .
சேய்களையும் செம்மையாகக் காக்கும் போக்கில்
-------- செங்குருதிச் சிந்திடவும் தயக்க மின்றி
வாய்நிறைய தன்பெண்டு பெருமை யாவும்
-------- வாழ்வினிலே சொல்லிடவே ஆசை கொள்வாள் !

தந்தையரின் பாசத்தில் மூழ்கிப் போவோம்
-------- தன்னலமும் இல்லாது பிள்ளை தன்னை
விந்தைபல செய்திடுவார் உலகம் தன்னில்
------- வித்தகராய் வளர்த்திடவே பாடு பட்டு
முந்துகின்ற வாழ்வுநெறி முழுதும் போற்ற
-------- முத்தாக பிள்ளைகளைப் பேணு கின்ற
அந்தமிலா வாழ்வினிலே ஆண்மை யோடே
-------- அரவணைக்கும் தந்தையரை எங்கும் காண்போம் !

மகனுடைய பாசத்தால் மலரும் வாழ்வு
-------- மங்காத குடும்பத்தின் மகிழ்ச்சி வெள்ளம் .
அகவையிலே சிறியோனாய் இருந்தும் கூட
------- அகத்தினிலே அன்பினிலே ஆள்வான் வீட்டை .
நிகழ்கின்ற இன்பதுன்பம் அனைத்தும் சீராய்
------- நிறைகின்ற வாழ்வியலை கற்றும் தந்தே
முகவரியை குடும்பத்தில் பதித்தே நிற்பான்
-------- முகிலாகி வான்மழையாய்ப் பாசம் தன்னில் !

விஞ்சுகின்ற மகளினுடைப் பாசம் கண்டு
--------- வியன்பொருளாய்ப் பெற்றோரும் பெருமை கொள்வார் .
பஞ்சுமனம் நிகர்த்ததொரு மென்மை உள்ளம்
------- பரிதவிக்கும் பாசத்தால் கள்ள மின்றிக்
கொஞ்சுகின்ற மொழியாவும் நலத்தை நோக்கி
-------- கோமகளும் சொல்லிடுவாள் உறவை நோக்கி .
தஞ்சமென வாழ்வினிலே தரத்தைப் பார்க்கும்
-------- தாய்தந்தை மகனோடு மகளின் பாசம் !!

உடன்பிறப்பு வழங்குகின்ற பாசத் தாலே
------- உருவாகும் உணர்வான மனத்தின் நேசம் .
கடல்கடந்து வாழ்ந்தாலும் பாசம் தன்னைக்
------- கரைசேர்க்கும் உடன்பிறப்பும் உலகில் உண்டு .
மடல்களுமே வனைந்திடுவான் நலத்தை நாடி
-------- மலர்ந்திடுமே அன்பும்தான் மறுத்த லுண்டோ !
தடங்கல்கள் வந்தாலும் தாவி யோடித்
-------- தடுக்கின்ற அணையாக நிற்பா னன்றோ !

கூட்டாகப் பாசத்தால் வெல்வார் தம்மைக்
-------- குடும்பத்தின் உறவாக பார்ப்போம் நாமும்
தோட்டத்தில் மலர்களுமே பலவும் உண்டு .
-------- தோற்றுவிக்கும் நறுமணத்தில் மாற்ற முண்டோ .
நாட்டத்தால் நல்லறமும் நடப்ப துண்டு .
-------- நன்மைகளும் அதனாலே என்றும் உண்டு .
காட்டுகின்ற பாசத்தில் குறைவு மில்லை .
-------- காலத்தால் பிரிவினைகள் ஏது மில்லை !

பெற்றவர்க்கு ளொளிர்வாயே!

பைந்தமிழ்ச் செம்மல்
செல்லையா வாமதேவன்

வண்ணப்பாடல்

தனந்த தந்த தத்த தத்த
தனந்த தந்த தத்த தத்த
தனந்த தந்த தத்த தத்த தனதானா

மனஞ்சி னந்து புத்தி கெட்டு
மறந்த ரண்டு நட்ட முற்று
மலர்ந்து வந்த மொட்டு வெட்டி - எறியாதே

மனங்க னிந்து சத்தி பெற்று
மருங்கெ ழுந்த யுத்தி பற்றி
மறங்க லந்து கற்று முற்று - மறிவாயே

இனங்க டிந்து சுத்த மற்றும்
இழிந்த சந்தில் வட்ட மிட்டும்
இருண்டு பொன்ற ழித்து விட்டு - மலறாதே

இதங்க லந்து சுத்தி யுற்றும்
இலங்கு மன்பில் அட்டி தட்டி
இயங்கி முந்தி வெற்றி பெற்று = மெழுவாயே

வனந்தி ரிந்து வற்பு முற்று
வயின்பி ரிந்து தொற்று முற்று
வறந்தி ரண்டு பொற்பு மற்று - முழலாதே

வனஞ்சி றந்து பட்டி தொட்டி
வரங்க னிந்து நட்ட மிட்டு
வளங்கு விந்த வத்தி நித்த - முறுவாயே

தனஞ்சி றந்து சட்ட மிட்ட
தடம்பு ரண்டு கொட்ட மொட்டு
தரங்கு றைந்து கெட்டு முட்டி - யழியாதே

தவங்கி டந்து பெற்றெ டுத்த
தலந்தொ டர்ந்து பத்தி யுற்ற
தடம்பொ லிந்து பெற்ற வர்க்கு - ளொளிர்வாயே!

மகிழ்ந்திருப்போம்

பைந்தமிழ்ச்சுடர்
மெய்யன் நடராஜ்

அடுப்பேறிய விறகானது அனலாவது போலே
   அடியோடெமை கரியாக்கிட அடிக்கோடிடும் நோயைத்
தடுப்பூசியை எடுத்தாயினும் தடுத்தேவிட வென்று
   தவித்தேயலை வதுவேயொரு தொழிலானது இன்று
கடுப்பேறிய மனதோடலை யெனவேயிதைத் தந்து
   கரையேறிட முடியாநிலை தனையேநமக் கிட்டு
எடுப்பாரினி நமக்கேதென இறந்தேயழி தற்கு
   இழிவாயொரு பெருநோயினை இறையேன்பரி சளித்தான்?

ஒருநாளிலை யொருநாளிது ஒழிந்தேவிடு மென்றால்
   உயிர்வாழ்வது சுகமேயெனவுளமோடொரு எண்ணம்
வருதேயிதை நிலையாக்கிட வரமாயொரு காலம்
   வருமோவினி யொருபோதிலும் வரலாறென வாழ்வில்
பெருநோயிது பலர்வாழ்வினை பிரியாவிடை செய்து
   பெரிதாகிய தொருசோதனை யிதுமாறிட விட்டு
உருவாகிடு மொருகால மதையேவர மாக்கி
   உயிரோடமை விடுமேயெனி லதுபோதுமெ மக்கே!

வருமோயிலை விடுமோவெனு மனநோயினை தந்து
    வரவானது குறைவாகிட செலவானதை நீட்டி
கருவாடென உயிர்வேரது கரியாகிடச் செய்து
   கரையேறிட முடியாநிலை யதையேதினம் காட்டி
உருவாகிய பிணியாமிது உலகாடிடு மின்றில்
   உறவானதும் பகையாகிட உயிர்வாடுது நாளும்
மருந்தேதெனு மிருந்தாலிதை மறந்தாடிட லாமே
   மறுவாழ்வினை யடைவோமென மகிழ்ந்தேயிருப் போமே!

முருகாதலம்

பைந்தமிழ்ச் செம்மல் 
தமிழகழ்வன் சுப்பிரமணி

தலையெழுத் தாவதென் றாலெழுத் தாவதென் றானீன்றதாங்
கலையெழுத் தாவதென் காலெழுத் தாவதென் கானீன்றதாம்
நிலையெழுத் தாவதென் நீளெழுத் தாவதென் நீயென்னுடைத்
தலையெழும் அல்லலைத் தாளிடு மல்லலைத் தாருமையே 21

தருகென்று வேண்டித் தமிழ்பாடி னேனைத் தரமுயர்த்தி
முருகா தலமென் முனைப்பை யளிப்பாய் முழுமுதலே
உருகா உயிரும் உலகினில் உண்டோ உனையகலேன்
பொருந்து மறிவால் புரிவன தந்தழி பொய்ம்மையையே 22

பொய்யா யுலகில் பொழுதினைப் போக்கும் பொருளெனவோ?
செய்யத் தகாதன செய்யத் துணிவார் செயல்களெலாம்
ஐயோ கொடுமை அறமிலச் செய்கை அழிதலுக்கே
ஐயா அருள்வேலா! ஆறுத லீவாய் அகத்தினுக்கே 23

அகத்திற் பொருந்திணை அத்தும்பை ஆகலான் ஆறுறுத்திப்
பகலவ னாலே பனிபடும் பாடாய்ப் பணித்துறுமா
அகலாத் துயரெலாம் ஆட்டங் கொளச்செய் அருந்தமிழா!
துகளாய்த் தொடங்கி முயல்வான் துணையெனச் சூழ்ச்சியில 24

சூழ்ந்தியான் செய்யத் துணிந்தன யாவும் துயர்விலக்கும்
ஆழ்ந்தியான் செய்ய அகத்தில் மகிழ்வால் அமைதியுளன்
தாழ்ந்துவ ணங்கித் தலைமேல் திருவடி தாங்குவனே
ஆழ்ந்தார்ந் திருக்கும் அடியர்தம் ஆர்வத் தருவிளக்கே 25

விளக்காய் விளங்கி வியனுல கெல்லாம் ஒளியருளும்
அளக்க வியலாப் பெரும்புகழ் கொண்ட அருந்தமிழைப்
பிளக்கும் வகையாய்ப் பிணக்குறு வார்தம் பிழைகளினை
உளங்களைந் தோட்டுக ஓரா நிலையவர் ஊழ்வினையே 26

ஊழ்வினை யாவும் உமதருட் பார்வை ஒளிபடவே
வாழ்வினை மேன்மை வழியிற் செலுத்தும் வளத்துடனே
ஆழ்வினை தன்னில் அகம்பொருந் தட்டும் அதுமகிழ்வு
பாழ்வினை யாற்றாப் பணிவுடை நெஞ்சம் படைத்தருள்வாய் 27

படைவீட் டெழுந்து பகைதீர்த் தருளும் பகலவனே!
தடைவீட் டிருந்து தடுத்தாண் டருள்க தமிழமுதம்
உடைவீட் டினிலே உவகை பெருக உமதடியார்
அடைவீட் டெழுக அவருளங் கொள்வதென் ஆழ்வதுவே! 28

ஆழ்ந்தொரு செய்கை அகத்தில் நிறைத்தியான் ஆற்றுதற்காய்ச்
சூழ்ந்து முனைவேன் சுடர்நெடு வேலோய்! துணையிருந்து
வீழ்ந்து விடச்செய் வினையெலாம் போக்குக மீப்பயனாய்
வாழ்ந்து மறைந்தார் வழிநிலை ஆய்ந்தெழ வாழ்த்துகவே 29

வாழ்த்துக ஊக்குக வாய்மலர்ந் தென்னை வருவழியில்
தாழ்த்தும் உளமொடு தாக்கும் கருத்துறை தன்னலத்தார்
ஆழ்த்துமச் சூழ்வலை ஆயன வெல்லாம் அறுத்தெறிந்தவ்
வீழ்த்தும் நிலைகளை யான்கடந் தேறும் விளைவருளே!   30

------ நிறைவுற்றது-----

பாலையில் பாடுகிறேன்

பைந்தமிழ்ச்சுடர் 
அபூ முஜாகித்

பாலையில் பாடுகிறேன்
பாடம் படிக்கையிலே உனது
பார்வை படம்பிடித்தேன்
கூடச் சுவரிலெலாம் உனது
கோலம் வரைந்துவைத்தேன்

வேதத் திருக்கையிலும் உனது
பாதம் பணிந்திருந்தேன்
சீதத் தமிழழகே உன்னில்
சிந்தை பறிகொடுத்தேன்

சோலைப் பசுங்கிளியே துயிலும்
சோகக் கதைசொல்லவா
பாலைப் பெருவெளியில் எனது
பாதை தொடர்கதையா

ஆனந்த மோகனமே என்னை
ஆளும் மலர்ச்சரமே
ஏனிந்த மௌனமன்பே என்னை
இன்னலில் வாட்டுவதேன்

மோகனம் பாடுகிறேன் உன்னை
மூச்சிலும் வாங்குகிறேன்
தாகத் துடன்தமிழை என்றும்
தாங்கியே வாழுகிறேன்

சித்திரைக் குயிலெனவே உந்தன்
சித்தத்தில் கூவுகிறேன்
சத்தமிலா திருந்தால் எந்தன்
சங்கதி என்னவென்பேன்

உருளும் விழிகளினால் எழிலாய்
ஓவியம் தீட்டுகிறாய்
அருளுமுன் ஆசியினால் அதிசய
ஆனந்தம் பாடுகிறேன்

பூமழை போலஉந்தன் புதிதொரு
புன்னகை பார்த்திருந்தேன்
பாமக ளோடிவிட்டாய் அதனால்
பாலையில் பாடுகிறேன்

காத்திருத்தல்

பைந்தமிழ்ச் செம்மல்
நிர்மலா சிவராசசிங்கம்

நெஞ்சத்தில் வந்தவளே என்னைநீ நித்தமும்
கெஞ்சிட வைப்பதே னோ

காதலின் தீபத்தை ஏற்றிய பெண்ணே
நோதலில் மாய்ப்பதே னோ

நானுன்னைச் சந்திக்க ஆர்வத்தால் வந்ததும்
நாணத்தால் கண்களை மூடிவிட் டாய்

நடமாடிடும் அழகேதினம் வருவாயென மனமேகிட
நல்வாக்குச் சொல்லாமல் ஓடிவிட் டாய்

கன்னியுன் எண்ணமே என்றனின் நெஞ்சத்தில்
காற்றாய்த் தீண்டவே மாள்கின்றே னே

கனியேதினம் மனவாசலில் ஒளிவீசிட வருவாயென
கற்பனை வாழ்வினில் வாழ்கின்றே னே

என்றனின் காதலை ஏற்றதும் உன்றனின்
எண்ணத்தில் என்றென்றும் நானிருப்பேன்

இனியாவது மகிழ்வாயெனை நலமேதினம் தருவாயென
இன்பத்தில் நானென்றும் காத்திருப்பேன்

ஆசிரியர் பக்கம்

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து. (குறள் 551)

"குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்" என்கிறார் ஐயன்.

மிகக்கொடிய நோய்த்தொற்றால் இந்தியா அழிந்துகொண்டிருக்கிறது. எங்குப் பார்ப்பினும் பிணக்குவியல். பிணங்களைக் குப்பையை வீசுவதுபோல் ஆற்றில் வீசும் இழிநிலை. கணக்கின்றி எரிக்கும் பிணங்களன்றி இவை எரிக்கவியலாமல் வீசிச்சென்ற கொடுமை.

ஒரு மாநில. முதல்வர் மாட்டுக்குப் பரிவுகாட்டி மாந்தரை மறக்கிறார். இன்னொருவர், யாகம் செய்கிறார். இன்னொருவரோ பாதிப்பேருக்கு அறிவியல் மருத்துவமும், பாதிப்பேருக்கு காயத்ரி மந்திரமும் சொல்லிச் சோதனை செய்கிறார். இவர்களையும், மக்களையும் வழிநடத்திக் காப்பாற்ற வேண்டிய அரசன் ஆட்சி செய்யும் கட்டடம் கட்டிக் கொண்டும், யோகாசனம் செய்துகொண்டுமிருக்கிறார்.

ஆனால் இதுநாள் வரை மக்களுக்காக இறங்கி வேலை செய்யாமல் காணொலி மூலமே ஆட்சி செய்கிறார். தன் கையாலாகாத் தன்மையை மறைத்துக் கொண்டு அதற்கு மக்களைப் பலிகொடுக்கும் இந்த ஆட்சியும், அரசும் இன்னும் நீடிப்பதென்பது, எரியும் தீயில் இறங்குவதொக்கும்

.மற்ற நாடுகள் முதல் அலையிலிருந்து தக்க பாடம் கற்றுக்கொண்டு இரண்டாம் அலையில் மீண்டெழுந்துவிட்டன. ஆனால், நாமோ உலகமே கான்றியுமிழும் ஒரு ஆட்சியை இன்னும் தூக்கி வீசாமல் வைத்துக் கொண்டிருக்கிறோம். அல்லது அஞ்சியொடுங்கிக் கிடக்கிறோம்.

மக்களே! உண்மையை உணர்வதெப்போது?

விழித்தெழுவோம்! விடியல் காண்போம்!

அன்புடன்
பாவலர் மா.வரதராசன்.

தமிழ்க்குதிர் மேழம் 2052 முன்னட்டை


தமிழ்க்குதிர் மேழம் 2052


https://drive.google.com/file/d/1jDWVDVvmnz1ok1EwZw4D8OwA-qF8JT7Z/view?usp=sharing