மழையளிக்கும் முகிலினங்கள் பெய்வ தற்கு,
மாற்றுதவி எதிர்பார்க்கும் வழக்கம் உண்டோ?
குழையமுதைக் கொட்டுகின்ற நிலவும் அந்தக்
குளிரொளியை விலைசொல்லி விற்ப துண்டோ?
விழைவுடனே உலகமெலாம் சுற்றிச் சுற்றி,
வெம்மையுடன் ஒளிபரப்பும் கதிரும் என்றும்
உழைகூலி கேட்பதுண்டோ? உயர்ந்த சான்றோர்,
ஒருநாளும் கைம்மாறு கருதல் உண்டோ?
பூக்களெலாம் பணம்வாங்கி மலர்வ துண்டோ?
புவிநம்மை வாடகைதான் கேட்ப துண்டோ?
கூக்குவென வைகறையில் பாடு் தற்குக்
குயிலினங்கள் பரிசிலெதும் பெறுவ துண்டோ?
ஏக்கமின்றிக் கரிவளியை மரம்வி ழுங்கி
எஞ்ஞான்றும் உயிர்வளர்க்கும் வளிய ளிக்க,
ஊக்குதொகை கேட்பதுண்டோ? உயர்ந்த சான்றோர்,
ஒருநாளும் கைம்மாறு கருதல் உண்டோ?
-- தில்லைவேந்தன்