பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவை - திருவண்ணாமலை
பைந்தமிழின்
இலக்கணம், இலக்கியம் மற்றும் மரபு கவிதைகளை இணைய வழியிலும் இலக்கியக் கூடல்களிலும்
பரப்பிவரும் பைந்தமிழ்ச்சோலை திருவண்ணாமலைக் கிளையின் பத்தாம் கூடல் 24-11-2019 அன்று
திருவண்ணாமலை மாவட்டம் ஆவணியாபுரம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் பைந்தமிழ்க் கதிர்
பாவலர் எ. மோகன் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்புற நடைபெற்றது.
பள்ளி மாணவர்கள்
தமிழ்த்தாய் வாழ்த்திசைக்க விழா இனிதே தொடங்கியது. பைந்தமிழ்க்கதிர் சுதா செயராமன்
அவர்கள் அனைவரையும் வரவேற்றார். முத்தமிழ் வித்தகர் பைந்தமிழ்க்கதிர் மோகன் தலைமையுரையாற்றினார்.
தொடக்க வுரையாற்றிய கவிஞர் பாரதி, பல்வேறு சான்றுகள்வழியாகத் தமிழின் சிறப்புகளை எடுத்தியம்பினார்.
பள்ளியின் தலைமையாசிரியர் தமிழ்த்திரு கு.முருகவேல் அவர்கள் முன்னிலை யுரையாற்றினார். தமிழ்த்திரு மு.செல்வக்குமாரி,
தமிழ்த்திரு வெ.மாசிலாமணி, தமிழ்த்திரு சு.முருகன், தமிழ்த்திரு வ.செயராமன், முனைவர் உமாராணி ஆகியோர் சோலைக்கு வாழ்த்துரைத்தனர்.
முதல் நிகழ்வாகப்
பைந்தமிழ்ச்சோலை திருவண்ணாமலைக் கிளையின் தலைவர் முனைவர் அர.விவேகானந்தன் அவர்கள் எளிமையான
வகையில் யாப்பிலக்கணம் பயிற்றுவித்தார். அதனையொட்டி, நிகழ்வில் கவிஞர்களும், மாணவர்களும்
உடனுக்குடன் மரபு கவிதை எழுதிக் கற்றனர். சிறந்த கவிதைகளை எழுதியோர் பரிசுகள் வழங்கிச்
சிறப்பிக்கப் பட்டனர்.
இரண்டாவதாகக்
கவிஞர் மாலவன் அவர்கள் 'இயற்கை' எனும் தலைப்பில் கவித்தமிழைப் பொழிந்து இன்புரையாற்றி
அனைவரையும் மகிழ்வித்தார்.
சிறப்பு நிகழ்வாக, பட்டிமன்ற நடுவர் இலக்கியப் பேச்சாளர்
தமிழ்த்திரு மா.ஏழுமலை அவர்கள் 'தமிழால் வாழ்வோம்
தமிழோடே வாழ்வோம்' எனும் தலைப்பில் வீரவுரை நிகழ்த்தி அனைவரையும் வியப்பிலாழ்த்தினார்.
தமிழின் சிறப்பு, தொன்மை, எளிமை ஆகியவற்றை இயம்பித் தமிழர்களின் கடமைகளைப் பட்டியலிட்டு,
வருங்கால இளைஞர்களின் உள்ளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பொருள் செறிந்த சிறப்புரையால்
அனைவரையும் கட்டிப் போட்டார்.
இறுதியாகப் பள்ளியின்
தமிழாசிரியர் தமிழ்த்திரு வே.அழகேசன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
தமிழுணர்வோடு நடந்த இவ் விழாவினைத் திரளான தமிழ்ச்சான்றோர்களும் மாணவச் செல்வங்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மொத்தத்தில் அன்றைய பொழுது இலக்கியப் பொழுதாக, இனிய பொழுதாக அமைந்தது. சோலையின் பத்தாம் கூடலைச் சிறப்பாக்கித் தந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment