இசைக்கவி ரமணன்
இசைபாடும் தமிழ்க் கவிஞர். சிறந்த எழுத்தாளர். உளமீர்க்கும் இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவாளர். ஆங்கிலத்திலும் சிறந்த சொற்பொழிவாளர், எழுத்தாளர். திறமிக்க தொகுப்பாளர், அற்புத நடிகர், புகைப்படக் கலைஞர்... இப்படி அடுக்கிக்கொண்டே போனால் பட்டியல் நீளும். மொத்தத்தில் பல்கலை வித்தகர். முத்தமிழையும் தன்வசப்படுத்தித் தேமதுரக் குரலால் முத்திரை பதித்துத் தமிழ் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் இவர் யார் ?
இவர்தான் "இசைக்கவி ரமணன்". தாமிரபரணி தவழ்ந்தோடும் நெல்லையில் 1954-ல் பிறந்தவர். இவர் பெற்றோர் திரு. அனந்தராம சேஷன், திருமதி. சாவித்திரி. இவர் தந்தையார் ஞான பண்டிதர். வடமொழியில் ஆசுகவி. மூன்று தமக்கையர், ஒரு தங்கையுடன் பிறந்தவர். ‘தி இந்து’ பத்திரிகையில் (சென்னை – பெங்களூரு – மதுரை – பெங்களூரு – சென்னை - விசாகப் பட்டினம்) என்று 27 ஆண்டுகள் பணியாற்றியவர்.
இவருடைய வெற்றிகளுக்கு உற்ற துணையாக இருப்பவர் இவர்தம் அன்பு மனைவி திருமதி. அனுராதா. இரட்டை மகன்கள் ஆனந்த், விக்ரம்... இவர்களின் துணைவியர் ப்ரியா, தீப்தி மற்றும் பேரக் குழந்தைகளுடன் இவர் குடும்பமே கலைக் குடும்பம்.
‘தேசமே கோயில்; தர்மமே தெய்வம்’ என்னும் கொள்கையுடைய ஆன்மிகப் பயணியான இவர் 34 முறை இமயத்தின் பல பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டு இயற்கையொடு கலந்த இறையனுபவத்தை நுகர்ந்தவர். விசாகப் பட்டினத்திற்கு அருகிலுள்ள பீமுனிப்பட்டினத்தில் வாழ்ந்த சற்குரு ஸ்ரீ சிவானந்த மூர்த்தி அவர்களின் அன்பிற்கினிய சீடர். குருமொழிகளைச் சிரமேற் கொண்டு அதன்படி வாழ்பவர். காளியின் மேற்கொண்ட காதலால் ஆத்மார்த்தமாக அன்னையுடன் கவிதைகளால் உரையாடும் பக்தன்!
இயல்பாக இசையோடு கவிதைகளை இசைப்பதில் இவருக்கு நிகர் இவரே! அபார நினைவுத்திறன் கொண்டவர். கம்பன், பாரதி, கண்ணதாசன் மீது தீராக் காதல் கொண்டவர். இவர்தம் நெடுங் கவிதைகளைச் சரளமாக உணர்ச்சிப் பெருக்கோடு தேன்மழையாய்ப் பொழிகையில் அவையோர் இமைபனிக்கும்; மெய்சிலிர்க்கும்; உளம்நனையும் சுகானுபவத்தை உணரலாம். சொற்பொழிவுகளில் கவிப்பொழிவும், இசைப் பொழிவும் சேர்ந்தே உறவாடும். பக்க வாத்தியங்கள் இல்லாமலேயே பாட்டு கேட்போரை வசியப் படுத்தும் வல்லமை இவர் குரலுக்கு உண்டு. இசைக்கருவிகள்கூட இவர் குரலோடிணைய ஏக்கத்துடன் காத்திருக்கும் என்பதே உண்மை.
பொதிகை, ஸ்ரீ சங்கரா, மக்கள் தொலைக் காட்சிகளில் 1200-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை வழங்கியவர். அகில இந்திய வானொலி நிலையத்திலும் பல சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். இவர் வழங்கும் தொடர் நிகழ்ச்சிகளில் அரங்கம் நிரம்பி வழியும். சான்றாக, "காலங்களில் அவன் வசந்தம்" நிகழ்ச்சியைச் சொல்லலாம். நான்காண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்நிகழ்ச்சி இரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நிகழ்ச்சி!
உச்சம் தொட்டாலும் பகட்டில்லாப் பண்பாளர். பழகிட இனியவர். பிறர் திறமைகளைத் தட்டிக் கொடுத்து ஊக்குவிப்பவர்.
தமிழகத்தில் மட்டுமன்றி, பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டினம், மும்பை, தில்லி முதலிய ஊர்களிலும், கனடா, அமெரிக்கா, ஸ்காட்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, அபுதாபி, மஸ்கட், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் அன்னைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் சொற்பொழிவுகள் நிகழ்த்தி மக்களின் மனத்தைக் கவர்ந்துள்ளார். ஸ்ரீ பக்தராஜ் மகராஜ் (இந்தோர்) என்ற மஹானைப் பற்றி இந்தியிலும் பாடல்கள் புனைந்துள்ளார். மூவாயிரம் குறட்பாக்களைக் கொண்ட "யோகக்குறள்" என்ற மெய்நெறி விளக்கத்தை வழங்கியுள்ளார்.
இசைக்கவி இயற்றிய கவிதை நூல்கள்
1. கோடுகள் இல்லா உலகம்
2. அகத்தியர் அந்தாதி
3. பிள்ளைப் புலம்பல்
4. மனோன்மணி மாலை
5. ரமணனைக் கேளுங்கள்
6. வண்டி போய்க்கொண்டிருக்கிறது
7. மரியன்னை பதிகம்
8. அராளகேசி அருட்பாமாலை
9. ஸ்ரீ சாரதாம்பிகை பதிகம்
10. துர்கா சப்தஸ்லோகி
11. நதியில் விழுந்த மலர்
12. அபிராமி அம்மை பதிகம்
உரைநடை நூல்கள்
1. எந்த வானமும் உயரம் இல்லை
2. இமயம்: அந்தரங்கத்தின் பகிரங்கம்
3. எல்லோர்க்கும் தந்தை இறைவன்
4. மனம் செய விரும்பு
5. என் குருவே என் இறைவன்
6. திருமணம் என்பது
7. சிகரம் - இயக்குனர் சிகரம் திரு. கே . பாலசந்தர் அவர்களின் வாழ்க்கை வரலாறு
இவற்றைத் தவிர, 2 ஆங்கில நூல்களும், 3 மொழிபெயர்ப்பு நூல்களும் படைத்துள்ளார். குறுந்தகடுகள் 10 வெளிவந்துள்ளன. முத்தமிழில் மூன்றாம் தமிழான நாடகத் தமிழும் இவரை ஆரத் தழுவிக்கொள்ள, சில நாடகங்களிலும் நடித்துள்ளார். எஸ்.பி. கிரியேஷன்ஸ் தயாரிப்பில் "பாரதி யார்?" மகாகவியின் வாழ்க்கை வரலாறை நாடகமாக்கி, வசனமெழுதி, பாரதியாக நடித்து வருகிறார். இந்த நாடகம் இவர் வாழ்வின் திருப்புமுனையாகவே அமைந்து விட்டது எனலாம். பாரதியைக் கண்முன் காட்டித் தமிழர் நெஞ்சங்களில் பாரதியாகவே சிம்மாசனமிட்டு வீற்றிருக்கிறார் இசைக்கவி ரமணன் அவர்கள். சென்னை தவிர, தஞ்சை, அரியலூர், மதுரை, கோவை, குற்றாலம், கடையம், ராஜபாளையம் ஆகிய ஊர்களிலும் மஸ்கட், மெல்போர்ன், சிங்கப்பூர் ஆகிய வெளி நாடுகளிலும் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிநடை போட்டது இந்நாடகம்! இன்னும் இன்னும் பலநாடுகளில் நடைபெற உள்ளது.
படிக்கும் மாணவ, மாணவியர் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய நாடகம் இது. இந்த நாடகத்தைப் பார்த்து மெய்மறந்து உணர்ச்சிப்பெருக்கில் மக்கள் நேரமாகியும் வீடு திரும்பவேண்டும் என்ற எண்ணமின்றி அமைதியாய்ப் பேச்சிழந்து நிற்கும் காட்சியை ஒவ்வொரு அரங்கிலும் காணலாம். இது இசைக்கவிக்குக் கிடைத்த மகத்தான வெற்றி!
இவர் பெற்ற விருதுகள்
1. சென்னை கம்பன் கழக விருது
2. அம்பத்தூர் கம்பன் கழகத்தின் தமிழ்ச்சுடர் விருது
3. பாரதி இலக்கியச் செல்வர்
4. ஸ்ரீராம் குழுமத்தின் பாரதி விருது
5. பொற்றாமரை விருது
6. நெமிலி பாலா பீடத்தின் "பாலரத்னா" விருது
7. நேதாஜி நாட்டுப் பற்றாளர் விருது
8. ரோட்டரி கிளப் வழங்கிய விருது
9. பாரதியார் சங்கம் / ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கிய பாரதி சேவைச் செம்மல் விருது
10. உறவுச் சுரங்கம் / ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கிய படைப்புலகச் சிற்பி விருது
11. சிவநேயப் பேரவையின் அருட்திலக மாமணி விருது
12. சிலம்புச் செல்வர் ம.பொ.சி விருது
13. சென்னை பாரதி சங்கம் வழங்கிய பாரதி சேவைச் செம்மல் விருது
14. பாரத் கலாச்சார் வழங்கிய கவிகலா பாரதி விருது
15. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கிய நல்லோர் விருது
16. இலக்கிய பீடம் - சிவா சங்கரி விருது
17. மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் அறிவுக்களஞ்சியம் விருது
18. டி.கே.எஸ். குடும்பத்தார் வழங்கிய நாடகச் செல்வர் விருது
19. துறையூர் ரங்கா நுண்கலை மையம் வழங்கிய கவிமுகில் விருது
20. வல்லமை.காம் வழங்கிய வல்லமையாளர் விருது
21. மஸ்கட்டில் திருக்குறள் பாசறை வழங்கிய "வாழும் பாரதி" விருது
22. ராமு அறக்கட்டளை சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது
23. மற்றுமோர் வாழ்நாள் சாதனையாளர் விருது
24. தமிழ்நாடு அரசு 2018- கலைமாமணி விருது
25. ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் - பாரதிவிழா விருது
26. வடசென்னை தமிழ்ச் சங்கத்தின் பாரதி பணிச்செம்மல் விருது
இசைக்கவியின் வெற்றி மகுடத்தில் ஒளிவீசும் மாணிக்கப் பரல்களாய் இந்த விருதுகள் தம்மை அழகு படுத்திக் கொள்கின்றன.
பைந்தமிழ்ச்சோலையின் சார்பில் நாமும் இசைக்கவியின் ஈடில்லாத் தமிழ்ப்பணியும், இசைப்பணியும், நாடகப் பணியும் நூறாண்டு தொடர மனம் நிறைந்து வாழ்த்துவோம்!!
-
- பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா இராசசேகர்
இசைக்கவியைப் பற்றி மிக விரிவான அறிமுகவூரை மற்றும் சிறப்புரை என்று கூறலாம் . மகத்தான மாமனிதர் . பன்முகம் கொண்ட வித்தகர் . அவரைப்பற்றி அறிந்திட எங்களுக்கு உதவியதற்கு மிக்க நன்றி . ஐயா இசைக்கவி அவர்கள் நலமுடன் மேலும் புகழுடன் பல்லாண்டு வாழ்ந்திட வாழ்த்துகிறேன்
ReplyDeleteஇந்த அற்புதமான அறிமுகத்திற்கு மனமார்ந்த நன்றி.
ReplyDelete