'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 14, 2019

புலம்பெயர் நாடும் வாழ்வும் - பகுதி 7


பைந்தமிழ்ச்செம்மல் இணுவையூர் வ.க.பரமநாதன்

டென்மார்க்கிலிருந்து...

மத நம்பிக்கையும்
மக்கள் செயற்பாடும்

இம்மாதம் கிறித்தவ மதத்தவர்களுக்கான சிறப்பு மாதமாக விளங்குவதனால் இக்கட்டுரை பொருத்த மானதாக இருக்கும் என நம்புகின்றேன்.

இந்நாட்டு மக்கள் 100 வீதம் கிறித்தவ மதத்தவர்களாக இருப்பினும் மத நம்பிக்கை யுள்ளவர்களாக இருக்கிறார்களா என்பது கேள்விக் குறியே!

இந்நாட்டவரின் பெரும்பான்மையான மக்கள் தேவாலயங்களை நாடிச்சென்று வழிபடுவதில்லை. இவர்களைக் கோயிலுக்கு வரவேண்டுமென்று யாரும் கட்டாயப் படுத்துவதுமில்லை. தனிமனிதக் கோட்பாடுகளுக்கு இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதனால் இதனைப் பிரச்சனையாக யாரும் கருதுவதுமில்லை. பாடசாலையில் மதம் ஒருபாடமாகக் கற்பிக்கப்பட்டாலும் அதனை வலுக்கட்டாயமாகத் திணிப்பதில்லை.

12  அகவையினை எட்டும் எல்லோருக்கும் அவர்கள் வாழும் பகுதியிலுள்ள தேவாலயத்தில் மதத்தினை ஏற்றுக் கொள்கிறேன் என்ற உறுதி வழங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். எனினும் இதனை ஏற்றுச் செயற்படுத்தவேண்டு மென்ற கட்டாயமில்லை.

எது எப்படியோ தங்கள் மதம் தொடர்ந்து பேணப்பட வேண்டும் என்பதில் அக்கறையுள்ளவர்களாகவே இருக்கின்றார்கள். இதன்பொருட்டுப் பெரும் பான்மையோர் தேவாலயத்திற்காகக் குறைந்தளவு வரியினைச் செலுத்துகின்றார்கள். அப்படிச் செலுத்துவோர் தேவாலயத்தில் அங்கத்தவராக இணைக்கப்படுவார்கள். அப்படி இணைந்தாலும் அவர்கள் ஆலய வழிபாட்டிற்குப் பெரும்பாலும் செல்வதில்லை.

அங்கத்தவராக இருந்தால் மட்டும் அவர்களுக்கான திருமணம், பிள்ளைகளுக்கான பெயர் சூட்டு நிகழ்வு மற்றும் மரணம் சம்பவிக்குமிடத்து மரணச் சடங்குகளும் தேவாலயத்தில் கட்டணமின்றி நிறைவேற்றப்படும். இப்படியான வாய்ப்புகள் மற்றவர்களுக்கு மறுக்கப்படும்.

மிகவும் எண்ணிக்கையில் குறைந்த அளவினரே தேவாலய வழிபாட்டினை அவ்வப்போது மேற்கொள்கின்றனர். ஆயினும் நத்தார்ப் பண்டிகையினை முன்னிட்டுப் பெரும்பாலான மக்கள் கோயிலுக்குச் செல்வதனையும் வழமையாகக் கொண்டுள்ளனர். இதற்குக் காரணம் பயபக்தி என்று அறுதியிட்டுக் கூறமுடியாது. இது ஒரு நிகழ்வு அவ்வளவுதான்.  

இந்நாட்டுச் சட்டத் திட்டத்திற்கு அமைவாக மத விவகாரங்களுக்கான அமைச்சு செயற்படுகின்றது. இவ்வமைச்சின் அங்கீகரத்துடன் மத நம்பிக்கை யினைப் பேணும் புலம்பெயர் நாட்டவர் அமைப்பினையும் பதிவு செய்து கொள்ளலாம்.

மதங்களுக்கான அமைச்சின் சட்டவாக்கத்திற்கு அமைவாக விபரங்கள் சமர்ப்பிக்கப்படுமிடத்து, பதிவு செய்யப்பட்டு அமைச்சின் ஒப்புதலைப் பெற்றுக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக இந்துக் கோயில் ஒன்றினை அமைச்சு ஏற்று அனுமதி அளித்தால் அக்கோயிலில் பூசை செய்பவருக்கான மாத ஊதியத்தினை வழங்கவும், அனைத்துக் கொள்வனவுக்கான வரி விலக்கினைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

தேவாலயத்திற்கான வரியினை மக்களில் பெரும்பாலானோர் எவ்விதக் கட்டாயத் திணிப்பு மின்றித் தாமே முழுவிருப்புடன் செலுத்து கின்றார்கள். இப்பணத்தின் மூலமாகக் கோயில் பராமரிப்பு மற்றும் பாதிரியாருக்கான ஊதியம் அனைத்தும் வழங்கப்படுகின்றது. 2017 ஆம் ஆண்டிற்கான வரியானது 6.8 மில்லியன் டெனிஷ் குறோனர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவப் பெருநாட்கள் அனைத்தினையும் கொண்டாடவும் அதற்காக அனைவரும் தேவாலயம் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவுமில்லை. எனினும் மத நம்பிக்கையில் அதிக ஈடுபாடுள்ளவர்கள் தேவாலய வழிபாட்டினை மேற்கொள்வதனையும் காண முடிகிறது.

உலகக் கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25-ஆம் திகதி நத்தார்ப் பண்டிகையினைக் கொண்டாடினாலும், டென்மார்க் நாட்டவர், நத்தார்ப் பண்டிகையினை டிசம்பர் 24-ஆம் திகதியே கொண்டாடுகின்றனர். அனைவரும் இந்நாளை மிகச்சிறப்பாகக் கொண்டாடிக் களிக்கிறார்கள். நம்பிக்கைகள் எதுவாக இருப்பினும், நத்தார்ப் பண்டிகையும் புத்தாண்டும் அனைவருக்கும் உரிய கொண்டாட்டமாக மாறியுள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை.

No comments:

Post a Comment