கவிஞர் சிதம்பரம் சு. மோகன்
‘ஆள் பாதி ஆடை பாதி’ என்கிறார்களே…
அதன் மெய்ப்பொருள் என்னவென்று கேட்டால், சிலர் மட்டுமே சரியான விடையைச் சொல்வார்கள். ஆடை என்பது அந்தஸ்துக்கு உரியது என்ற எண்ணமே அனைவரிடமும் இருக்கிறது. ஆளும், ஆடையும் இணைந்த திருந்திய தோற்றமே உயர்ந்த மதிப்பைப் பெற்றுத்தரும் என்பார்கள். தமது செல்வத் தகுதியைத் தாம் உடுத்தும் ஆடைகளே பிரதிபலிப்பதாக நம்புவோரும் உண்டு. இதன் மெய்ப்பொருளைக் காண்பதற்குக் கம்பன் கூறும் ஒரு காட்சியைக் காண்போம்.
“ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என் சேய் குலமாள்வது; சீதை கேள்வன் ஒன்றால் போய் வனமாள்வது” - என்பதே கைகேயி கேட்ட புகழ்பெற்ற இரண்டு வரங்கள். பின்னர் அவ்வரங்களை இராமனிடம் அவள் கூறும்போது, “ஆழி சூழுலக மெல்லாம் பரதனே யாள; நீ போய் தாழிருஞ் சடைகள் தாங்கித் தாங்கருந் தவமேற்கொண்டு; பூழிவெங் கானம் நண்ணிப் புண்ணியப் புலன்க ளாடி; ஏழிரண் டாண்டின்
வா” என்று சொல்கிறாள். கானகம் செல்ல வேண்டும் என்பதே தசரதனிடமிருந்து அவள் பெற்ற வரம். ஆனால் "இப்படித்தான் செல்ல வேண்டும்" என்று வரையறை செய்து இராமனின் தோற்றத்தை மாற்றுவதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தால் ஒன்று விளங்கும்.
உடை என்பது ஒருவர்பால் நன்மதிப்பை உண்டாக்குவதேயெனினும், ஒவ்வொரு உடையும் ஒவ்வொரு விதமான சிந்தனைகளை அவரவர்களுடைய உள்ளத்தில் விதைக்கும். போருக்கான உடை அணிந்தால் மனத்தில் வீரம் கொப்புளிக்கும். காவலர்கள் தமது சீருடையால் மனத்திலே துணிவும் எண்ணத்தில் ஊக்கமும் பெறுகிறார்கள். பல்வேறு தொழில்துறை சார்ந்த பணியாளர்கள் தமக்குரிய சீருடை அணிந்த நிமிடம் முதல் அவர்கள் உள்ளத்தில் அவர்கள் செய்யும் தொழிற்குறித்த சிந்தனையே மிகும். அலுவலக உடை அணிந்த பின்னர் மனையாள் பேசும் எதுவுமே செவியில் ஏறாது சிலருக்கு. எது சொன்னாலும் சரி சரி என்பார்கள். ஆனால் என்ன சொன்னாள், என்ன கேட்டோம் என்பதெல்லாம் மனத்தில் ஏறாது. பள்ளிச் சீருடைகளுக்கான நோக்கமும் இது போன்றதே. இளஞ்சிறார்களின்
மனத்தில் ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ எண்ணத்தைத் தோற்றுவிப்பதற்காக.
எனவே, இளவரசனுக்கு உரிய உடையோடு இராமன் கானகம் சென்றால், ஒருவேளை அவன் உள்ளத்தில் நாடாள வேண்டும் என்ற ஆசை இருந்துகொண்டே யிருந்தால் அது பரதனுக்கல்லவா தீமையாக முடியும்? அதன் காரணமாக மிகவும் கஷ்டப்பட்டு வாங்கிய வரங்கள் பயனற்றுப் போகுமோ என்று எண்ணுகிறாள் கைகேயி. மரவுரி அணிகின்ற நிலையில் அறச் சிந்தனைகளும், துறவு மனப்பான்மையுமே ஓங்கும். நாட்டாசை வாரா. பற்றற்ற உள்ளத்தை ஆழமாக விதைத்துவிட்டால், தான் பெற்ற வரத்திற்கு எந்நாளும் கேடில்லை என்று அவளுக்குப் புரிந்திருக்கிறது.
“ஏய வரங்கள் இரண்டில் ஒன்றினால் என்சேய் அரசாள்வது” என்று கேட்காமல், குலமாள்வது என்று முன்யோசனையுடன் கேட்ட வரத்தின்படி வழிவழியாகப் பரதனின் மைந்தர்களே ஆள வேண்டுமாயின் அதற்கு என்றுமே எந்தவிதமான குறுக்கீடும் இராமனால் தோன்றக் கூடாதல்லவா? ஆகையால் பணிப்பெண்கள் மூலமாக வற்கலை கொடுத்தனுப்பி, உடுக்கச் செய்து அரசுரிமையின் மீதான ஆளுமை எண்ணத்தை அங்கேயே கிள்ளி அழித்து அனுப்புகிறாள். அன்னை தந்த சீதனமாக வந்த "சீரத்தை"
மகன்கள் இருவருமே பெற்றுக் கொள்கிறார்கள். சீதை உடுத்திக் கொண்டதும் அதுவே என்பது நம் உள்ளத்தை நெகிழச் செய்வது.
எனவே, உடை என்பது இன்றுமுதல் நமது எண்ணத்தை வளர்ப்பதாகவும் உயர்த்துவதாகவும் இருக்கட்டும், சிந்தனையில் ஏற்றத்தைத் தருவதாக இருக்கட்டும். “கந்தலானாலும் கசக்கிக் (தூய்மையாக்கி) கட்டிக்கொள்” என்று ஒளவையார் கூறியது உயர்வான தோற்றம் பெற வேண்டும் என்பதற்கு மட்டுமன்று. உள்ளத்திலும் தூய சிந்தனை பிறக்க வேண்டும் என்பதற்கே.
“வானுயர் தோற்றம் எவன்செய்யும்; தன் நெஞ்சம்
தானறி குற்றப் படின்?”
என்று கேட்டார் வள்ளுவர். சிந்திப்போம்.
என்று கேட்டார் வள்ளுவர். சிந்திப்போம்.
No comments:
Post a Comment