'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 14, 2019

நடுப்பக்க நயம் - கம்பன் கவிநயம்


மரபு மாமணி
பாவலர் மா.வரதராசன்
  
கண்களால்

கல்வியிற் பெரியவன் கம்பன் என்பார் அவர்தம் காவியச் சுவையில் மூழ்கித் திளைத்தே சொல்லியிருப்பர் போலும். என்னே சொல்லாட்சி. கம்பரின் எழுத்தாளுமைக்குப் பல்வேறு துறைசார்ந்த பாடல்களை எடுத்துக்காட்டிக் கொண்டேயிருக்கலாம்.

ஏறத்தாழ 12000 பாடல்களைத் தன் இராம காவியத்துள் வைத்து நடாத்திய கவியேறு கம்பர்பிரான் சொல்லின்பம் மிக்க பல பாடல்களைக் கதைப்போக்கில் கொடுத்துக் கொண்டே செல்கிறார். அந்தப் பாடல்களி லிருக்கும் நுட்பத்தை உய்த்துணர்ந்து சுவைப்பதும், ஆய்வுகளுட் செலுத்துவதும் அப்பாடல்களின் சிறப்பாக அமைவதுண்டு. அப்படியான ஒரு பாடலைத்தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.
***
இராமாயணத்தின் சிறப்புமிக்க வரிகளில் "கண்டேன் சீதையை" என்ற வரியும் அடக்கம். அனுமனின் சொல்லாட்சிக்குப் பெருமை சேர்த்து அவனுக்குச் சொல்லின் செல்வன் என்ற திருப்பெயரை இராமனின் வாயாலேயே கொடுத்த வரிகளில் இதுவுமொன்று.

சீதையைக் காணாமல் தவித்த இராமனின் துயரைப் போக்கும் பொருட்டு ஆளுக்கொரு திசையாய்த் தேடித் திரிகின்றனர். அனுமன் தென்திசை நோக்கிச் செல்கிறான். அப்படி அவன் போகும் முன்பு இராமன் அவனிடம், இன்னும் ஒரு திங்களுக்குள் நீ நல்ல செய்தியுடன் திரும்பவில்லையேல் என்னுயிரைத் துறப்பேன் என்று கூறுகிறேன்.

சீதையைத் தேடிச் சென்ற அனுமன் இலங்கையின் பலவிடத்தில் தேடிப் பின் இறுதியாக அசோக வனத்தில் சீதையைக் காண்கிறான். இராமன் குறிப்பிட்ட அத்தனை அடையாளங்களும் பொருந்தியிருந்தது மட்டுமன்றி ஏதோ இனம் புரியாத தெய்வீகத் தன்மைக் காரணமாக அனுமனின் உள்ளத்தில் இவர்தான் சீதை என்று உணர வைத்தது. சீதையை அவன் காணும்போது இராவணன் சீதையிடம் தன் ஆசைக்கு இணங்குமாறு கெஞ்சிக் கொண்டிருந்தான். (இந்தக் காட்சியை நினைவில் நிறுத்துங்கள்.)

எப்படித் தெரியுமா?
"குடிமை மூன்றுல கும்செயும் கொற்றத்தென்
அடிமை கோடி; அருளுதி யால்'எனா,
முடியின் மீது முகிழ்த்துயர் கையினன்,
படியின் மேல்விழுந் தான்,பழி பார்க்கலான். (கம்.சுந்.காட்சிப்.111)

இம்மூன்றுலகையும் தன் ஆளுகையால் அடக்கியாண்ட இராவணன் தன் ஆசைக்கு இணங்குமாறு, தன் குலத்துக்கே இழிவு வந்துசேரும் என்ற பழியையும் சிந்தியாமல் சீதையைக் கெஞ்சிக் கொண்டிருந்தான்... அதுவும் மணிமுடி தரையில் தோய சீதை அமர்ந்திருந்த படியில் தன் தலைவீழ்ந்து கெஞ்சிக் கொண்டிருந்தான். (இராவணனுக்கு வேகவதி என்னும் பெண்ணால் சாபம் ஒன்றிருந்தது. "விருப்பமில்லாத பெண்ணை நீ தொட்டால் தலைவெடித்துச் சாவாய்" என்பது சாபம்.)

இந்தக் காட்சியைக் கண்ட அனுமனுக்கு அவள் சீதையே என்று உறுதியாகத் தெரிந்து பிறகு சீதையிடம் தன்னைப் பற்றியும், இராமனின் நிலையையும் எடுத்துக் கூறிப் புறப்படச் சொல்கிறான். ஆனால் அது இராமனின் வீரத்துக்கு இழுக்கு. இராமனே என்னை வந்து மீட்டுச் செல்லட்டும் என்று சொல்லிச் சீதை வர மறுக்கவே அனுமன் மீண்டும் இராமனிடம் திரும்புகிறான்.

இப்போதுதான் அந்த அரிய பாடல்.
ஆம்...
கொடுத்த கெடு முடிந்தும் இன்னும் அனுமனைக் காணவில்லையே என்று துடித்துக் கொண்டிருந்த இராமனிடம் திரும்புகிறான் அனுமன். வான்வழி வந்ந அனுமன் கரையில் வந்ததும்... சீதை வாராமல் தான் மட்டும் வருவதைக் கண்டால் இராமன் ஏதாவது தவறான முடிவுக்குச் செல்வான் என்றஞ்சிதென்திசை நோக்கி மண்டியிட்டுத் தொழுகிறான். இதைக் கண்ட இராமனுக்கு. 'சீதை இன்னும் உயிரோடிருக்கிறாள்' என்று தெரிந்து மகிழ்ச்சி யேற்படுகிறது.

அப்போதும் நிறைவேற்படாமல் அனுமன், தொலைவிலிருந்த படியே...
"கண்டேன்" என்கிறான். பார்த்துவிட்டேன் எந்த ஆபத்துமில்லையப்பா என்பது குறிப்பு.
அப்படியானால் ஏன் அவள் வரவில்லை..? கற்பினுக்கேதும்... என்று ஐயுறுவானோ இராமன்? என்று எண்ணும் அனுமன், அடுத்துக் கூறுகிறான்... "கற்பினுக்கு அணியை" என்கிறான். சரி... கற்புக்கும் எந்த பாதிப்புமில்லை. இருப்பினும் அவள் கற்போடுதான் இருக்கிறாள் என்பதை இவன் எப்படிப் பார்த்தான்? கற்பைக் கண்களால் பார்க்க முடியுமா? என்ற ஐயம் எழுந்துவிடுமோ? என்றஞ்சிய அனுமன், "கண்களால் நானே பார்த்தேன்" என்கிறான்.

இவ்வாறாகக் கரையிறங்கியவுடனே இராமனின் மனத்துயரைப் போக்கும் விதமாக அவனுடைய மனமறிந்து அதற்கேற்பச் சொற்களைப் பெய்து அனுமனைப் பேசவைக்கிறார் கம்பர்பிரான்.

கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால்
தெண்டிரை அலைகடல் இலங்கைத் தென்னகர்
அண்டர்நா யகஇனித் துறத்தி ஐயமும்
பண்டுள துயருமென் றனுமன் பன்னுவான்
(கம்ப.சுந்.திருவடி. 25)

கண்டேன்... கற்பினுக்கு அணியைக் கண்டேன்... கண்களால் கண்டேன்... என்று அடுக்கும் அனுமன் இராமனின் உள்ளத்து ஏக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு, உன் துயரையும், ஐயத்தையும் விடுவாயாக... என்று தேற்றுகிறான்.

கற்பினுக்கு அணியை என் கண்களால் பார்த்தேன் என்னும் அனுமனின் சொல்லில்தான் எத்துணை நேர்த்தி..! கண்களால் காணவியலாத கற்பைக் கண்டேன் என்னும் அவனது கூற்றின் உட்பொருள் இராமனுக்குப் புரிந்துவிட்டது. சீதை கற்புடன்தான் இருக்கிறாள் என்பதை அனுமன் தன்னிடம் முழுமையாகக் கூறுவான் என்றெண்ணிய இராமன் அவன் வந்ததும் ஆரத்தழுவி "என்னுயிரை மீட்டாய்" என்று மகிழ்கிறான்.

கண்களால் என்ற சொல்லை வைத்துப் பலரும் பலவிதமான பொருளைச் சொல்வர். ஆனால் நேரடியாகச் சென்று அசோக வனத்தில் அனுமனே கண்ட காட்சிதான்... சீதையிடம் இராவணன் மன்றாடிய காட்சி. அது போதாதா? அவள் கற்புடன்தான் இருக்கிறாள் என்பதற்கு…?

ஒரே வரியில் சீதையின் நிலை முழுவதையும் சொன்னதுடன் இராமனின் மனத்திற்கேற்ப சொல்லிய "கண்களால்" என்னும் ஒருசொல் போதாதா? அனுமன் "சொல்லின் செல்வன்" என்பதற்கு!

No comments:

Post a Comment