பைந்தமிழ்ச் செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணி
பாரு தம்பி பாரப்பா
பாரதி யாரைப் பாரப்பா
கேளு தம்பி கேளப்பா
பாரதி சொல்லைக் கேளப்பா
பாரதி யாரோ? அருந்தமிழர்
பாரத விடுத லைக்கவிஞர்
சாரதி என்றால் மிகையாகா;
தமிழ்த்தேர் ஓட்டும் பெருந்தமிழர்
இளமை வயதே கவித்தமிழை
இனிமை என்று கருதியவர்
இளமை யில்பா ரதியானார்
இவர்பார் அதிசின் னப்பயலோ?
பாப்பா பாட்டு பாடினார்
பாழும் அடிமை சாடினார்
பாரத விடுதலை நாடினார்
பெண்ணின் விடுதலை தேடினார்
விடுதலை அவர்தம் உயிர்மூச்சாம்
உயர்ந்த தமிழே அவர்பேச்சாம்
கொடுந்தளை அடிமைத் தனமெல்லாம்
கும்பிட்டு விட்டோ டிப்போச்சே
கண்ணன் பாட்டும் குயில்பாட்டும்
கவித்தமிழ்ச் சோலையின் எழில்பாட்டாம்
பண்ணெனும் இசைப்பா வல்லவராம்
பறவைகள் பாசமும் சொன்னவராம்
சிந்துப் பாவில் புதியதமிழ்
சாதனை படைத்த புதியதமிழ்
அந்தம் இல்லா அழகுதமிழ்
அவரால் பிறந்த அழகுதமிழ்
பாரத வளர்ச்சி பலதொழில்கள்
வளம்பெற வேண்டுவ(து) அவர்கனவு
பாரதி யாரைப் போற்றுவோம்
பண்ணரும் செயல்களும் ஆற்றுவோம்
No comments:
Post a Comment