'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 15, 2019

அன்பால் உலகை வெல்லலாம்


பைந்தமிழ்ச்   செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்

சேர்த்து வைத்த பணமெல்லாம்
    சேற்றில் புதையு மொருநாளில்
கோத்து விட்ட மணிகள்போல்
    குறைகள் இடரும் பொழுதினில்
தீர்த்து வைப்பர் மனக்கவலை
    சிக்கல் தோன்றும் வேளையிலும்
பார்த்துப் பார்த்திங்(கு) உதவுவரே
    பாச முள்ளோர் அறிவாயே                         1

அறிவாய் அகிலம் சொல்லுமென்றும்
    அன்பால் உலகை வென்றிடலாம்
குறளில் சொன்னார் வள்ளுவரும்
    குறைகள் களைவர் உறவுகளே
சிறக்கும் இல்லம் என்றென்றும்
    தீங்கும் மறைந்து போய்விடுமே
நிறைகள் தருமே வாழ்வினிலே
    நெஞ்சம் மகிழும் ஆன்றோரால்                 2

ஆன்றோர் வகுத்த நெறிகளினில்
    அன்பின் மகிமை புலப்படுமே
சான்றோர் பாடிய பாக்களிலும்
    சான்று பலவும் காண்போமே
ஈன்ற தாயும் அன்பாலே
    என்றும் உன்னை ஆட்கொள்வாள்
மேன்மை நிலையை அடைந்திடவே
    மெய்மை என்றும் பகருமன்றோ               3

பகரும் வரிகள் சாற்றிடுமே
    பாசம் என்றும் மாறாது
அகமும் மலரும் அன்பாலே
    அச்ச மில்லா வாழ்வுவரும்
நகுதல் இல்லா உறவுகளில்
    நன்மை நடக்கும் என்றென்றும்
மகிமை பெருகும் வாழ்வினிலே
    மகிழ்ச்சி நிலைக்கும் அறிவாயே              4

அறிவார் செல்வம் நிலையில்லை
    அன்பு மனத்தை ஆற்றிடுமே
நெறியில் பிறழா மகத்துவத்தை
    நிலையாய்க் கொள்ளும் நற்குணமே
சிறப்பைத் தேடித் தருமன்பே
    சிதறிச் செல்லா உறவுகளால்
குறைகள் தீரும் உலகினிலே
    குற்றம் மறையும் அணைப்பதினால்        5

அணைத்து முத்தம் கொடுப்பதினால்
    அன்பை உள்ளம் யாசிக்கும்
உணர்வில் என்றும் மகிழ்விருக்கும்
    உள்ளம் துள்ளிக் குதிக்குமன்றோ
குணத்தில் சிறந்த யாவருமே
    கூட்டு வாழ்வு வாழ்ந்திடுவார்
பணத்தால் அன்பைப் பெறலாமோ
    பண்பால் விலகும் துன்பமெல்லாம்           6

துன்பம் கொடுக்கும் செல்வங்கள்
    துயரைத் தீர்க்கும் அன்பொன்றே
இன்பம் கொடுக்கும் காலமெல்லாம்
    எதிலும் மகிழ்ச்சி பொங்குமன்றோ
மின்னல் போன்றே போம்பொருளும்
    மீட்டுத் தாரா இழந்தவற்றை
முன்னோர் கூறினர் பாக்களினில்
     முடிவில் அன்பால் துயர்மறையும்            7

துயரம் தீர்க்கும் அருமருந்தாய்
    துடிக்கும் உறவே அறிவீர்கள்
தயங்கி நிற்கக் கரங்கொடுக்கும்
    தஞ்ச மளித்து மகிழ்வுறுமே
உயர்வு கொள்ள எந்நாளும்
    உதவி செய்யும் அன்புள்ளம்
வியக்க வைக்கும் உலகினிலே
    விழுந்தால் தூக்கி நின்றுதவும்                    8

நின்று தவுமாம் இறுதிவரை
    நிலையை உயர்த்த வழிசெய்யும்
தொன்மை நூல்கள் பற்பலவும்
    தொல்லை யில்லா அன்பினிலே
நன்மை பலவும் உண்டென்றார்
    நாடும் மேன்மை அடையுமென்றார்
இன்னல் தீர்க்க உதவுபவர்கள்
    இன்ப உறவே செல்வமன்று                        9

செல்வம் நிறைவு காணுமன்றோ
    சிந்தை மகிழும் தருணத்தில்
இல்லம் சிறக்கும் புன்னகையால்
    இன்பம் பிறக்கும் இல்வாழ்வில்
மெல்ல மனத்தில் நம்பிக்கை
    மீட்டுத் தருமே அன்புள்ளம்
உள்ளம் மலரும் பண்பாலே
    உவகை யடையும் பாரினிலே                    10

No comments:

Post a Comment