'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 14, 2019

கடலும் காட்சியும்


கவிஞர் மதுரா

 (அறுசீர் விருத்தம் - விளம் மா மா)

துள்ளியே குதிக்கும் அலைகள்
      தொடுமவை கரையை மெல்ல
அள்ளியே அணைக்க வெண்ணும்
      ஆழ்கட லதனை நிலமும்.
வெள்ளையாய் நுரையின் பூக்கள்
     விழிகளின் விருந்தாய் மாறப்
பிள்ளைபோல் மனமும் துள்ளும்
     பிடித்திட ஆசை கொள்ளும்

தங்கமாய் நிலவும் மின்னித்
    தவழுதே அழகாய் நீரில்
பங்கிட வதனை மீன்கள்
     பற்றுமாம் உணவா யெண்ணி
அங்கமும் குறைந்து போன
     அரைநில வழகாய்த் தோன்றும்
இங்கதன் எழிலாம் காட்சி
     இயற்கையும் விரிப்ப தென்னே!

நண்டுகள் நடந்து செல்லும்
    நல்மணல் வெளியி லாங்கே
கண்டதைப் பிடிக்க எண்ணும்
    கவினுறு மழலைக் கூட்டம்
கொண்டலும் தூதாய் வந்து
    குளிர்மழை பெய்யச் செய்யும்
கண்டுநாம் மகிழ விங்கே
    கடைவிரித் தாட்சி செய்யும்

No comments:

Post a Comment