'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 14, 2019

நஞ்சில் உயிர்க்கும் நாகரிகம்


 (மாறுரையும் நேருரையும்)

கவிஞர் பொன். இனியன்

நாகரிகம் எனுஞ்சொல் விரிந்த பொருளுடையது. இதற்கான கருத்துரு வரலாற்று ஆசிரியர்களிடம் ஒன்றாகவும் சமூகவியலார்களிடம் வேறொன் றாகவும் உள்ளது.

உலகெங்கணும் காணப்படும் பல்வேறு நாகரிகங்களும் நதிக்கரைகளிலேயே தோன்றி வளர்ந்துள்ளதாக வரலாற்றாசிரியர்கள் உறுதிப் படுத்துகிறார்கள். நீர் வளத்தால் பயிர் விளைவு செழிக்க உணவு தேவை பூர்த்தியாவதால் அங்கேயே நிலையாகத் தங்கி வாழவும் தங்கிய இடத்தைச் சீரான ஒரு நகராக ஆக்கிக் கொள்ளவும் முடிந்தது. இவ்வாறு வாழ்ந்த மக்கள் தங்கள் வாழிடத்திற்கு ஏற்ற அனுபவங்களைக் கொண்டு தங்களிடையே ஏற்படுத்திக் கொண்ட பல்வேறான பழக்க வழக்கங்களை உடையவர்களானார்கள். அவற்றோ டுடனான வளர்ச்சி மற்றும் முன்னேறிய வாழ்வியல் முறையையே நாகரிகம் எனக் குறிக்கின்றனர் வரலாற்றியலார்.

ஒரு சமூகத்தின் நாகரிக வளர்ச்சியென்பது அம்மக்களின் வேளாண்மை, நகரியம், தொழில், வணிகம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இவற்றோடு கல்வி, கலை, ஆட்சி, விஞ்ஞானம் எனப் பல்வேறு கூறுகளையும் உள்ளடக்கியதாகிறது. சமூகவாழ்வியல் தொடர்புட னான எல்லாக் கூறுகளையும் உள்ளடக்கிய முன்னேற்றத்தைக் குறிப்பதே நாகரிகம் எனும் சொல்லாகும். இதனை, ஒழுங்குற அமைந்த ஒரு சமூகத்தின் மேம்பட்ட ஒட்டுமொத்த பண்பாட்டு நிலை எனக் குறிக்கலாம். நகரிகம் என்பதன் திரிபாக நாகரிகத்தைக் குறிக்கிறார் மகரிஷி வேதாத்தரி சுவாமிகள். நகர + இகம் = நாகரிகம். ஆங்கில மொழியில் நாகரிகத்தைக் குறிக்கும் சொல் (இலத்தீனிலிருந்து பெறப்பட்ட) நகர்ப் பெயரினின்று தோன்றியதே. நாகரிகம் என்ற சொல் 15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் ஆங்கில மொழியில் இடம் பெற்றது. ஆனால் மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரேயே தமிழில் அது இடம் பெற்றிருந்தது என்பதை நமது இலக்கியங்கள் வாயிலாக அறியக் கிடக்கிறது. இது கொண்டே தமிழர் தம் நாகரிகச் சிறப்பின் தொன்மையை அறியலாகும்.

நாகரிகம் என்பது ஒரு நாட்டின் செல்வச் செழிப்பு மற்றும் பிற எந்த வளர்ச்சியையும் விட அந்நாட்டு மக்களின் மனையியல் மற்றும் மனவியலைப் பெரிதும் சார்ந்து நிற்பதாகிறது. வாழ்க்கை வளப்பெருக்கங்களை மட்டும் பொருத்ததன்று; மனவிரிவைக் காட்டுவதொன்றாகும் இது.  மக்களின் பண்பட்ட  நடத்தை மற்றும் ஒழுகலாற்றைக் குறிப்பதாகவே இதைச் சமூகவியலார் கருதுகின்றனர்.
சமூக ஒழுகலாற்று நடைமுறை ஒன்றைக் குறித்த கருத்துடையதாகக் கண்ணோட்டம் அதிகாரத்தின் கடைசிப் பாடலாக  அமைந்துள்ள,  
பெயக்கண்டும்  நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்             (580) 
எனும் குறட்பாவுக் கமைந்த உரைகளிலுள்ள வேறுபாடுகளும் குறட்பொருளோடு அவை கொண்டுள்ள மாறுபாடுகளும் பற்றிய ஓர் அலசலாக அமைகிறது இக்கட்டுரை.  

நாகரிகம் எனற்கு அறம் பொருளின்பத்தின்கண் நற்குணங்கள் பலவும் உடைமை எனக் காட்டுகிறார் மணக்குடவர். நாகரிகம் என்பது கண்ணோட்ட மாதல் எனுங் கருத்துடையவராகிறார் பரிமேலழகர். கண்ணோட்டத்தை நாகரிகப் பண்பெனக் குறிக்கிறார்  பாவாணர்.

கண்ணோட்டமாவது

இற்றை நாள் வழக்கில் கண்ணோட்டம் என்பது (In his view) சிந்தனைக் கோணம் எனும் கருத்தில் பயிலப்படுவதொன்றாகிறது. வள்ளுவர் இதனைப் பரிவு, கருணை எனும் பொருள்படவே குறளில் வைத்தாண்டுள்ளார். கல்லாதவர் முகத்திரண்டு புண் (393), கண்ணோட்டம் இல்லாத கண் புண் (576) ஆகிய இரு பாக்களையும் கொண்டு கருதின்,  கண்ணோட்டம் இல்லாதவர் கற்றிருந்தும் கண்ணில்லாதவரே யாவர் என்பது பெறப்படும். இதனை விரித்துக் கூறின் பிற உயிர்கள் படுந்துயர் காணின் உடன் சென்று உதவும் பண்பு எனவும் ஆம். கனிவுடைய நெஞ்சினார் தம் கால்கள் செல்வதினும் முந்து கண்கள் சென்று தம் பார்வையால் பரிவு காட்டுதலின் கண்ணோடுதல் எனப்பட்டது.

பரிவாவது பயன் கருதாததும், உறவு முறை பாராட்டாது யாவர் மாட்டும் கொண்டு செலுத்தற்குரிய ஒன்றாகும். இதனைத் தன்னோடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியன மறுக்க மாட்டாமை எனப் பரிமேலழகர் சுருங்கச் சொல்லியதும், தன் உறவினரும் நண்பரும் தன்னோடு பழகியவரும் தன்னோடு தொடர்பு உடையவரும் தனக்கு உதவினவரும் எளியவரும் ஆனவர்க்கு நன்மை செய்வதை மறுக்க முடியாத அன்பு எனப் பாவாணர் விரித்துக் காட்டியதும் பொருந்தாதனவாம். என்னை, இது எவர்மாட்டும் செல்லற்குரிதாம் என்பதை, ‘அறிவினா லாகுவ துண்டோ பிறிதின்நோய் தன்னோய் போல் போற்றாக் கடை’ என்பது கொண்டு உறுதி கொள்க.

மேலும், ‘கண்ணோட்டத்துள் நடுநிலை திறம்பியதும் திறம்பாததும் என  இரு வகைத்தாம்’ எனக் குறித்து அதற்கு  ஓர்ந்து கண்ணோடாது எனும் குறட்பாவைச்  சான்று காட்டுவார் பாவாணர். அற்றன்றாம். நடுநிலை நின்று முறை செய்வான் தம் சுற்றம், வேண்டாதார் என்றாங்கு யார்மாட்டும் கண்ணோடாமையை ஈண்டு சான்று காட்டியது பொருந்தாதென்க. அன்பிற்கு அடைக்குந் தாழ் இன்மை பற்றி பரிவுக்கும் வேண்டியவர் வேண்டாதார் என்னும் வேறுபாடின்மையை ஓர்ந்துணர்க.

‘நஞ்சு பெயக்கண்டும் அதனை மாற்றாது உண்டு அமைவர் எல்லோராலும் விரும்பத் தக்க நாகரிகத்தை விரும்புவார்’ என்பது மணக்குடவர் உரை, ‘பயின்றார் தமக்கு நஞ்சிடக் கண்டுவைத்தும் கண்மறுக்க மாட்டாமையின் அதனை யுண்டு பின்னும் அவரோடு மேவுவர் யாவராலும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தினை வேண்டுபவர்’ என்கிறார் பரிமேலழகர். தம்மோடு தொடர்பு உடையார் எனப் பரிமேலழகர் காட்டியதைப் பகைவர் எனக் காட்டுகிறார் பரிதியார். மேலும் சொர்க்கம் வேண்டியும் பூமி வேண்டியும் (அவ்வாறு) இருப்பர் என்பது எவ்வாறு நாரிகத்தோடு இயைபுடையது என்பது விளங்குமாறில்லை.

‘தம் நண்பர் தமக்குத் தம் கண்முன் நஞ்சிடக் கண்டும் அதை மறுக்காது உண்டு பின்னும் அவரோடு அன்பாய்ப் பொருந்துவர்’ என உரை செய்த பாவாணர் நண்பரிட்ட உணவாதலால் அது அவர் அறியாது இட்ட நஞ்சென்றும், நட்பு பற்றிய கண்ணோட்டத்தினாலேயே அது உண்ணப் பெறும் என்றும் அதுவும் இயற்கைக்கு விஞ்சியதால் ‘நயத்தக்க’ என்னும் அடை பெற்றதென்றும் அறியப்படும் என ஓர் மேல் விளக்கத்தை வைத்துக் காட்டுகிறார்.

இது கொண்டு நண்பரிட்டது உணவா நஞ்சா அல்லது உணவிற் கலந்த நஞ்சா எனும் மயக்குத் தருவதாகிறது உரையோடுடனான இவ்விளக்கம்.    நண்பரிட்டது உணவாயின் அது நஞ்சான தெவ்விதம் என்பது விளங்குமாறில்லை. இட்டவரே  அது நஞ்சென்று அறியாத நிலையில்  உண்பவர்க்கு அது தெரிந்த தெங்ஙனம் என்பதும், உண்டது நஞ்சாமாயின் பின்னும் (பொருந்தி) இருப்பர் என்றது எப்படி என்பதும், பெயல் என்பது மட்டுமே குறளில் குறித்திருக்கப் பெய்தவரை நண்பராக் கொள்ளுதற்காம் ஏது என்னாம் என்பதும் உரை விளக்கத்திலும் காட்டாது போனார்.

இடுக்கண் களைவதே நட்பு

‘முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்’ எனும் நற்றிணை அடிகளை மேற்கோள் காட்டுவாருமுளர். நண்பர்களின் மனப்பிணிப்பு மற்றும் அவர்களுக்கிடையேயான உறவு நெருக்கம், நம்பிக்கையின் உறுதிப்பாடு ஆகியவற்றைச் சிறப்பிக்கும் வகையிலான வேறொரு சூழலிற் கூறப்பட்ட அக்கருத்து ஈண்டு பொருந்துவதின்றாம். ‘அழினவை நீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதே நட்பு’ (787) என்பதாயிருக்க, அழிவினதாகிய நஞ்சினை நண்பர் ஒருபோதும் ஊட்டுதல் இல்லை. ஊட்டுவராயின் அவர் தீநட்பினராவர். அத்தகைய பண்பிலார் கேண்மை குன்றலினிது (811) எனக் குறிக்கிறது குறள். அதனால் அவரிட்ட நஞ்சினை எதன் பொருட்டும் உண்ண வேண்டுவதின்றாம் . 

நஞ்செனப்படுவது

நஞ்சு எனற்கு உயிர்க்கொல்லி எனும் பொதுக்கருத்து உண்டெனினும் எல்லா நஞ்சும் உயிர் நீக்குவன வாதல் இல்லை. மாந்தர்  தம் உண் பொருட்களுள் உடல்நலம் பேணற்குத் துணையாயும் உயிர்க்குறுதி பயப்பனவுமானவை அமுதம் எனவும் உடற்குத் தளர்ச்சியும் நோயும் உண்டாக்குவன நஞ்செனவும் நோய் நீக்கியாக அமைவன மருந்து என்றும்  குறிக்கப்படும். ஆக்கமும் கேடும் அதனால் வரும் எனச் சொல்லைக் குறித்தாற் போல உணவே நஞ்சாகவும் அமைதல் உண்டு. திருக்குறள் இதை மாறுபாடு(டைய) உண்டி (945) எனக் குறிக்கிறது. எஞ்ஞான்றும் கள்ளுண்பவர் நஞ்சுண்பவர் (926) என்பதில் உடல் நலத்துக்கு ஊறு தருவதாகிய உண்பொருளே நஞ்சாதலை ஓர்க. இற்றை மருத்துவம் இதை ஒவ்வாமை எனக் குறிப்பிடுகிறது.

உண்ணுநெறி

மாறுபாடுடைய உணவை மறுத்துண்ணல் (945) என்பது தன் உடல் நலங்கருதி ஒவ்வொருவரும் மேற்கொள்ளத்தக்க ஒரு நெறியாகும். தத்தம் மனையிருந்து உண்ணுங்கால் ஒழுகுதற்கு எளிதாய் இயலுவதாகிய இது தன் மனையின் நீங்கிப் பிறர் இல்லிற் போயிருந்து உண்ணும்போதும் கூட்டு உணாக்களின் போதும் கடைப்பிடித்தற்கு ஏலாது போம்.

விருந்தோம்புவார் தம் இல்லத்திலுள்ள பண்டங்களைக் கொண்டே உணவை ஆயத்தப் படுத்த வேண்டியவராகிறார். அவற்றுள் ஏதேனு மொன்று உண்பவர்க்கு ஒவ்வாது போதலை அறியாதவராகி அதைப் பரிமாறுகிறார். அவ்வாறானதொன்று தமக்குப் பெயக்கண்ட போதும் அதை(யும்) விலக்காது உண்பதே பண்பென இக்குறளில் காட்டப்பட்டது. என்னை? விருந்தோம்புவார் விழைவோடு பெய்ததொன்றை விலக்கியுணின் அது ஊட்டுவார்க்கு ஒரு நிறைவின்மையை உண்டாக்கும் என்பதானாலாம். பரிந்தூட்டுவார் மனம் குழையச் செய்தல் பண்புடைமை யாகாதென்க.

பலரோடு கொள்ளும் கூட்டுணாப் போதுகளில் பரிமாறப்படும் உணவு வகைகள் அறுசுவைச் செறிவுடையனவாயிருக்கும். விருந்தினரானோர் பலராயிருக்கவும் அவருள் ஒவ்வொருவர்க்கு ஒரு சுவையுணவு ஒவ்வாது போதலும் கூடும். காட்டாக, நீரிழிவு  நோயுடையவர்க்கு இனிப்பும் இரத்த அழுத்த நோயுடையவர்க்கு உப்பும் எனவுமாம். இவ்வாறு ஒவ்வொரு சுவை ஒருவர்க்கு ஆகாதவாறாகில் பொதுவில் ஒரு உணவைச் சுவையோடு சமைப்பது என்பதே ஏலாத ஒன்றாதலைக் கருதுக.

மேலும், விருந்துண்பார் தாம் வேண்டுவனவற்றைத் தயங்காது கேட்டுண்பதையே விருந்தோம்புவார் மனங்கொள்ளும் இயல்பாகும். ஒருவர் ஒன்றை மறுத்துண்ண அடுத்திருப்பார்க்கு அது வேண்டப் படுவதொன்றாயினும் அவரும் அதைக் கேட்டுப் பெறத் தயங்கக் கூடும். அதனால் அவ்வாறு  மறுப்பது ஓம்புவார்க்கு மட்டுமன்றி உடனிருந்து உண்பார்க்கும் ஒரு (Embarrassing) மன இறுக்கத்தை உண்டாக்கும்  என்பதும் கருதத் தக்கதாம்.

அமுதும் நஞ்சும் அதுவேயாக

ஊட்டுவார் கொள்கலத்தில் உள்ளது அனைவருக்குமானதொரு அறுசுவை அமுதமே. ஒவ்வாதவர்க்கு முன் உள்ளவர் இலையில் இட்டபோதும் அடுத்துள்ளவர்க்கு இடும்போதும் அது அமுதமேயாகிறது. இவர்க்குப் பெயப்படும்போது (மட்டுமே) அது நஞ்செனப் பெயரியதாகிறது என்பதே ஈண்டு உன்னி யுணர்தற்குரிய தொன்றாகும்.  உண்பவர்க்கே அது நஞ்செனக் கண்டுகொள்ளத் தக்கதாகி பெய்பவர் அறியாதவ ராகிறார். அதனாலேயே பெய்தும் என்னாது  பெயக்கண்டும் என்றதாம்.

கண்டும் எனுஞ் சொல்போன்றே ஈண்டு வைத்தாளப் பட்டுள்ள ‘அமைவர்’ என்பதும் எண்ணுதற்குரிதாம்.  நாணால் உயிரைத் துறப்பர் (1017) என்றவர் ஈண்டு  நஞ்சுண்டும் அமைவர் என்றது காண்க. உண்டது உயிர்க்கொல்லி யன்றாமாதலின் அது நோய் செய்யு மென்பதறிந்தும் அதனைப் பொறுத்துக்கொண்டு உண்பர். அமைவர் என்றது அவரோடு பொருந்தி யிருப்பர் எனல் அன்றாம். அச் சூழலுக்கும் இடத்துக்கும்; பொருந்த ஒழுகுதலைக் குறித்தேயாம். உளந்தூய்மை வாய்மையான் காணப்படுமாறு போல ஒருவனது அமைந்தொழுகும் பண்பால் அவனின் நாகரிகம் வெளிப்பட்டுத் தோன்றும் என்பதும் அவ்வொழுக்கம் (அனைவராலும்) நயக்கப்படுவதாமென்பதும் குறிப்பு.
 
நாகரிகம் வேண்டும் நயத்தக்கவர் பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர் எனும் பொருள்கோள் வைப்பில், நாகரிகத்தை விரும்புகின்ற நயனுடைவர் தன் கலத்திற் பெய்தது தனக்கு ஒவ்வாத ஒரு பண்டம் என்பதறிந்தும் மறுதலிக்காது அதையும்  உண்டமைவர் எனப் பொருள் படுவதாகும்.

சாவா மருந்தெனினும் விருந்து புறத்ததாத் தானுண்ணாமையை (82) ஓர் இல்லறத்தானின் பண்பாகக் குறித்த வள்ளுவர், விருந்துண்பான் கடைப்பிடித்தொழுகத் தக்கதொரு பண்பாக இதைக் குறித்துக் காட்டினார். இக்குறட்பாவுக்கான நல்லதொரு இலக்கியச் சான்றாக குகன் தந்த மீனை இராமன் உண்டு நயந்ததைக்  காட்டலாம்.

No comments:

Post a Comment