'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 15, 2019

விதியோடு விளையாடு


மணிமாறன் கதிரேசன்
பட்டயக் கணக்காளர் (Chartered Accountant)

மாலை ஒரு 4 மணியளவில் மலரின் அம்மா தன் வீட்டு வாசலின் படியில் நின்றுகொண்டு அவளுடைய பக்கத்து வீட்டு நண்பர்களிடம் அவர்களின் குழந்தைகள் எடுத்த மதிப்பெண் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். ஆமாம், அன்றுதான் 11-ஆம் வகுப்புத் தேர்ச்சிப் பட்டியல் வெளியீடு. பேசிக்கொண்டிருக்கும்பொழுது மலரின் வீட்டிற்குப் பின் இருக்கும் கிணற்றில் ஒரு பேரிரைச்சல் கேட்டது. கேட்ட மறுநொடியில் மலரின் அம்மா தன்னிலை மறந்து என்னவென்று புரியாது கிணற்றை நோக்கிப் புறப்படுகிறாள்.

அவளுக்குள் ஏற்பட்ட பயம் அளவில்லாதது. ஏனென்றால் மலர் 11-ஆம் வகுப்பில் தேர்வாக வில்லை. மலரின் அம்மா அவளை அவமரியாதை படுத்திவிட்டாள். மலரை மற்றவர்களோடு உவமைப்படுத்தி அவளின் மனத்தைக் காயப் படுத்திவிட்டாள். அந்தச் சிறிய மனம் எப்படி இவ்வளவு துயரத்தைத் தாங்குமென அந்த 30 நொடிகள் பல்வேறு காரணங்களால் ஓடிக் கொண்டிருக்கின்றன. மலரின் அம்மாவை அவள் மனத்தாலே சமாதானப்படுத்த முடியவில்லை. அனைத்துக்கும் காரணகர்த்தாவாகக் குற்ற உணர்ச்சியுடன் தோன்றி நின்றாள் அவள் மனத்தில். என்ன ஆனதோ ஏது ஆனதோ என்ற பயத்திலேயே கிணற்றை அடைந்தாள். அங்கு மலர் இல்லை. கிணற்றின் உள்ளே நீரலைகள் வந்துவந்து மோதின. அதனைப் பார்த்த மலரின் அம்மா தன்னிலை அறியாது கத்தித் தீர்த்தாள். கிணற்றின் அருகே அழுதுபுரண்டு கூப்பாடிட்டாள்.

இதைக்கண்டு என்னாயிற்றோ ஏதாயிற்றோ எனப் பக்கத்தில் குடியிருப்போரும் தெருவில் சென்று கொண்டிருந்தோரும் வீட்டிற்குள் விரைந்தனர். என்ன ஆயிற்று எனக் கேட்க, அவளும் நடந்ததை அழுதுகொண்டும் புலம்பிக்கொண்டும் சொல்லிக் கொண்டிருந்தாள். மக்களும் அவள் மகளைக் காப்பாற்ற முற்படும்போது அவளது வீட்டின் கழிவறையிலிருந்து பதறிக்கொண்டு வெளியே வந்தாள் மலர், என்ன நடந்ததென்று அறியாமல். மலரோ அம்மாவை நோக்கிஎன்னாயிற்று அம்மா?’ என்று கேட்க, பக்கத்தில் உள்ளவர்களும் தெருவிலிருந்து வந்தவர்களும் மலரின் அம்மாவைப் பார்த்துச் சிலர் முறைத்தும் சிலர் நிம்மதியடைந்தும் இன்னும் சிலர் முனுமுனுத்தும் சென்றனர். இன்னும் மலருக்கு என்ன நடந்தது என்று விளங்கவில்லை. மலரின் அம்மா அவளிடம் என்ன நடந்தது என்பதைக் கூற அவளோ மிகப்பெரிய சிரிப்பொலியுடன் தன் தாயைப் பார்த்தாள்.

அந்தச் சிரிப்பை அடக்க முடிந்தும் முடியாதவளுமாய் அவள் அம்மாவின் வழியும் கண்ணீரைத் துடைத்தவாறு நான் ஒருபோதும் அந்தத் தவறு பண்ண மாட்டேன் என்று உறுதி கொடுத்தாள்.

மலரின் அம்மாவிற்கு ஒரே ஆச்சரியம், எப்படி இது சாத்தியம்? அதுவும் மலரிடமிருந்து. இதுவரை அழுது புலம்பி வீட்டிற்குள் வீண்பழி சுமத்தியும் வீண்விவாதம் செய்தவளிடம் மனத்தளவில் தளர்ச்சி அடைந்து பலவாறு பெற்றோரிடம் பேசியதைக் கண்டு பயந்த மலரின் அம்மாவுக்கு இப்போது பேசும் வார்த்தைகள் அவளிடம் மிகப்பெரிய ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் உணர்த்தியது. எப்படி இது நடந்தது? என வினவ, மலர் தான் ஆசிரியரைச் சந்தித்தாகவும் அவர் கொடுத்த ஊக்கந்தான் என்னை மாற்றிய தென்றும் கூறினாள். மலரின் அம்மா பொறுமை யிழந்தவளாய்,என்ன சொன்னார்?’ என்று வினவ மலர் சொல்லத் தயாரானாள்.

நண்பர்களோடு தேர்ச்சிப் பட்டியல் பார்க்கச் சென்றவளுக்கு மிகப்பெரிய வருத்தம். ஆம், இந்தமுறை அவள் தேர்வாகவில்லை. அவளின் கண்களிலிருந்து மாலைமாலையாகக் கண்ணீர் ஊற்றெடுத்தது. அவளுக்கு அவளின் முகத்தைக்கூடப் பார்க்கப் பிடிக்கவில்லை. அவளுக்கு அவளிடம் எந்தக் கேள்விகளும் இல்லை, மாறாகக் குறைகளே சூழ்ந்துகொண்டிருந்தன. அவளுடைய நண்பர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று 12-ஆம் வகுப்புக்குச் செல்கிறார்கள். ஆனால் இவளோ தேர்வில் தோல்வி. இந்தத் தோல்வியைத் தாங்காதவளாய்ப் பள்ளியிலிருந்து வேகமாக வெளியேற அவளது நண்பர்கள் தடுத்தும் நிற்காதவளாய்ச் செல்கிறாள். வழியில் அவளுடைய ஆசிரியர் அவளைக் கூப்பிட்டு என்னவாயிற்று என்று கேட்க, அவரிடம் எதுவும் சொல்ல இயலாத நிலையில் வெட்கித் தலைகுனிந்து நின்றாள். இந்த நிலையைக் கண்ட ஆசிரியருக்குப் புரிந்தது.

அவளை அங்கிருந்து தனது வகுப்பறைக்குக் கூட்டிவந்து அவளிடம் தனக்கு நடந்ததைச்  சொல்லத் துவங்கினார்.
“மலர்! நானும் உன்னைப்போல் பத்தாம் வகுப்பில் தேர்வில் வெற்றி பெறாமல் தோல்வியடைந்தேன். எனக்கும் உன்னைப்போல் பல எண்ணங்கள் மேலோங்கின. தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு எதுவும் சரியான முடிவாகத் தெரியவில்லை. தற்கொலை பண்ண முடிவெடுத்த போது எப்படி தற்கொலை செய்வதென யோசனையில் எல்லாத் தற்கொலைக்குமே ஒருவகையில் துணிச்சல் தேவைப்பட்டது. தற்கொலை செய்துகொள்வதற்கே நமக்குத் துணிச்சல் தேவைப்படும்போது வாழ்வதற்கு ஒவ்வொரு நிமிடமும் துணிச்சல் தேவையெனப் புரிந்துகொண்டேன். அதே துணிச்சலுடன் என் விதியோடு விளையாடினேன். ஆமாம், நாம் விதியோடு விளையாடியே ஆக வேண்டும். விதியோடு விளையாடினால்தான் யார் வெற்றி பெற்றவர்கள் என்பது புலப்புடும். விதியோடு விளையாடித் தோல்வியுற்றதற்காக விளையாட் டிலேயே பங்கு பெறாமல் போவது நல்லதல்ல. எத்தனை முறை இந்த விதி நம்மை வென்றுவிட முடியும்? நாம் திடத்துடன் இருந்தால் இந்த விதியும் நம் வெற்றிக்காகப் பணி மேற்கொள்ளும். அந்தத் திடத்துடன் இருந்த நான் உன்முன் இதே பள்ளிக்குச் சிறந்த ஆசிரியராக இருக்கிறேன். இதுவரை நான் உருவாக்கிய மாணவர்கள் ஆயிரம் ஆயிரம் இருந்தும் உன்னைப்போல் தளர்வு கொண்ட மாணவர்களை ஊக்குவிப்பது என் தலையாய கடமை. தளர்ந்துவிடாதே!

விதியோடு விளையாடு! போராடி விளையாடு! வெற்றியைக் கொண்டாடு!” என என் மனதில் மூழ்கி இருந்த அறியாமை என்னும் மிகப்பெரிய கல்லைக் கண்டுபிடித்துவிட்டார்.

“சரி, நானும் என் நிலை அறிந்தவாறு என் அறியாமை என்னும் கல்லைக் கொலைசெய்யும் நோக்கில் பெரிய கல்லை எடுத்துக் கிணற்றில் போட்டேன். இதோ என் அறியாமை இறந்துவிட்டது. நான் தன்னிலை அறிந்தவளாய்” எனக் கூற, மலரின் அம்மா அவளைக் கட்டியணைத்தபடியே அவளின் ஆசிரியருக்கு மனத்திற்குள் வாழ்த்தைத் தெரிவித்தாள்.

விதியோடு விளையாடு, போராடி விளையாடு, வெல்லும்வரை போராடு, வென்றதைக்  கொண்டாடு.

4 comments:

  1. Nice motivation for entire situation Sir 😊

    ReplyDelete
  2. Anna, great.. It's a nice and powerful motivation.. keep rocking

    ReplyDelete
  3. பட்டய கணக்காளர் பட்டையை கிளப்பிட்டார்.
    அருமை.

    ReplyDelete