Mar 17, 2020
ஆசிரியர் பக்கம்
அன்பானவர்களே வணக்கம்!
மரபு கவிதைகள்,
இலக்கண, இலக்கியக் கட்டுரைகள்,
சிறுகதைகள் எனப் பல
பயனுள்ள தகவல்களைத் தாங்கிவரும்
பைந்தமிழ்ச் சோலையின் தமிழ்க்குதிர் - பதினைந்தாவது
மின்னிதழ் வழியாக உங்களைச்
சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
உலகமெல்லாம் தற்போது பரபரப்பாகப்
பேசப்படும் செய்தி கொரோனா
(Corona) என்னும் தொற்றுநுண்மி தொற்றிப் பரவுதலைப்
பற்றியே. உலகச் சுகாதார
நிறுவனத்தின் (World Health
Organization) செய்திப்படி இதுவரை 148 நாடுகளில் இது
பரவியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர்
எண்ணிக்கை 1,68,000+. இறந்தவர்களின் எண்ணிக்கை 6,600+. மக்கள்
தத்தம் வீடுகளிலேயே முடங்கும்
நிலைமை ஏற்பட்டுள்ளது.
இத்தொற்று நுண்மியினும் விரைவாகப்
பரவுவது அதைப் பற்றிய
செய்திகளே. அதிலும்
போலிச் செய்திகள் பலவும்
விரைவாகப் பரவித் தொல்லையை
ஏற்படுத்துகின்றன. சமூக வலைத்தளங்கள்
நன்மை தருவனவாயிருந்தாலும் அந்த
அளவுக்குக் கெடுதலைச் செய்யவும் வழி
செய்கின்றன.
சிலப்பதிகாரத்தில் உள்ளதாகக் குறிக்கப்பட்டுப் பாடல்
என்ற பெயரில் புலனத்திலும்
முகநூலிலும் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு
போலிச் செய்தி மேலும்
வெறுப்பைக் கூட்டுகிறது. அதைப் பற்றிச்
சிந்திக்காமல் பகிர்வோரின் அறியாமையை என்னவென்று
சொல்வது? நம் மக்களுக்கு
அவ்வளவு இலக்கிய அறிவு
இல்லாமால் போய்விட்டதா? இது போன்ற
போலிச் செய்திகளைச் சற்றும்
சிந்திக்காமல் பகிரும் அளவுக்கு நம்முடைய
சிந்தனை வளம் தேய்ந்துபோய்விட்டதா?
ஒரு செய்தியைப் பகிரும்
முன், அதன் உண்மைத்
தன்மையை ஆய்ந்து பகிர்தல்
நலம். அல்லது பகிராதிருத்தல்
நலம்.
சிந்தித்துப் பகிர்வோம்! சிறப்பாக
வாழ்வோம்!
தமிழன்புடன்
மரபு மாமணி
பாவலர் மா.வரதராசன்
நெய்தல் நிலம்
பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா
சிவராசசிங்கம்
விடிகாலைக் கதிரவனின் கதிர்கள்
மின்ன
மெல்லென்று
பூங்காற்றுத் தவழ்ந்து செல்லும்
கடலலைகள் காதலொடு கரையைத்
தொட்டுக்
கடலுக்குள்
மீண்டெழுந்து பாய்ந்து செல்லும்
படருகின்ற கொடியெல்லாம் மணலில்
சாயப்
பசுமையாகக்
காட்சிதரும் நெய்தல் மண்ணும்
மடல்களினுள் வண்டினமும் மொய்த்து
நிற்கும்
மதிமயங்கித்
புன்னைமரம் தலையை ஆட்டும் 1
ஆடியோடும் சிறுவரெல்லாம் கூடி
நின்றங்(கு)
அசைந்தோடும்
நண்டுகளை விரட்டி யோடப்
பாடியாடி மணலினிலே செய்த
வீடு
பாதங்கள்
பட்டதுமே இடிந்து வீழும்
ஓடியோடி உழைப்போரும் கரையில்
தங்கி
ஓய்வெடுத்தே
அமர்ந்திருப்பர் இன்பம் பொங்க
நாடிவரும் கொக்குகளும் வட்ட
மிட்டு
நண்டுகளை
மெல்லெனவே தூக்கிச் செல்லும் 2
செல்கின்ற படகுகளை அணியஞ்
செய்யச்
செங்கதிரும்
மேற்கினிலே மறைந்து போகும்
புள்ளினங்கள் சிறகடித்துக் கூட்டை
நோக்கிப்
புடைசூழப்
பறந்திடுமே மெல்ல வானில்
சில்லென்று வீசுகின்ற தென்றல்
காற்றும்
சிந்தைதனை
மகிழ்வித்துத் தழுவிப் போகும்
ஒல்லென்று கடலலைகள் ஒலித்துப்
பாய
உறங்காமல்
மீனவர்கள் செல்வர் சேர்ந்து
3
துன்பங்கள் சூழ்ந்துவரும் பரவர்
வாழ்வில்
துணிவுடனே
மீன்பிடிக்க நாளும் செல்வர்
கண்களிலே உறக்கமின்றி உள்ளம்
வாடக்
காத்திருப்பர்
கரையினிலே பெண்க ளெல்லாம்
விண்மீன்கள் கண்சிமிட்டும் வானில்
நின்று
விரைவாக
நகர்ந்துசெலும் நிலவும் நீந்தி
வெண்ணிறத்து முகிலெல்லாம் சூழ்ந்து
நின்று
விழிக்கின்ற
மங்கையரைக் காத்து நிற்கும் 4
நிற்கின்ற நேரமெல்லாம் இறையை
வேண்ட
நெஞ்சமது
நிம்மதியைத் தொலைத்து நிற்கும்
பொற்கரங்கள் நீட்டுகின்ற பரிதி
வானில்
பொன்னிறமாய்
மின்னிவரும் வேளை தன்னில்
வெற்றியுடன் திரும்பியவர் பாய்ந்த
ணைத்து
விருப்புடனே
காட்டிடுவார் மீன்கள் கூடை
சுற்றிவரும்
காகங்கள் வட்ட மிட்டு
துடிக்கின்ற
மீன்களதைக் கவ்வ எண்ணும் 5
எண்ணிறைந்த மீனவரின் நெஞ்சில்
என்றும்
ஏக்கங்கள்
வேதனைகள் படர்ந்து நிற்கும்
கண்காணா இடங்களிலும் படகு
போகும்
கலக்கமுடன்
அலைந்திடுவார் கரையைத் தேடி
உண்ணாமல் உறங்காமல் மனத்தில்
தாக்கம்
உள்ளமெல்லாம்
கலங்கிடவே கண்கள் ஏங்கும்
கண்மயக்கம் அடைந்திடவே கிடப்பர்
வீழ்ந்து
கண்டவர்கள்
உதவிவிட்டால் கிடைக்கும் வாழ்வு 6
வாழ்வினிலே போராட்டம் தொடரும்
நாளும்
வருணதேவன்
துணையிருப்பான் என்று நம்பி
ஆழ்கடலில் மீன்பிடிக்கத் துணிந்து
செல்வர்
ஆபத்து
வரும்போது தம்மைக் காப்பர்
கீழ்வானம் சிவந்திடவே வலையில்
பட்ட
கெண்டைமீன்கள்
சுறாக்களுடன் வந்து சேர்வர்
வாழ்வரசி வரவேற்று வாழ்த்துக்
கூற
மகிழ்ச்சிபொங்க
அணைத்திடுவார் உள்ள மேவ
7
உள்ளத்தை மகிழ்விக்க இசைப்பர்
நற்பாட்(டு)
உன்னதமாய்
வாசிப்பர் விளரி யாழை
கள்ளவிழிப் பார்வையினால் துணையை
பார்த்துக்
காதலினைச்
சொல்லிடுவார் மகிழ்ச்சி பொங்கப்
பிள்ளைகளைக் கற்பிக்கப் பணமும்
சேர்ப்பர்
பிள்ளைநிலை
உயரவைக்கப் படுவார் பாடு
கல்வியிலே சிறப்புறவே தம்மை
வாட்டி
காலமெல்லாம்
உழைத்திடுவார் கடலில் என்றும்
8
என்றென்றும் கருவாட்டைக் காய
வைப்பர்
ஏற்றுமதி
வியாபாரம் செய்வர் நன்கு
புன்னைமர நிழலினிலே உப்பும்
விற்பர்
பூக்கின்ற
பூக்களையும் பறித்து நிற்பர்
துன்பங்கள் வரும்போது கண்ணீர்
சிந்தித்
துயரதனைத்
துணிவுடனே கடந்து செல்வர்
இன்பங்கொண் டாடிடுவார் விழாக்கள்
யாவும்
இன்னிசைகள்
பாடியாடிப் போற்று வாரே 9
ஏற்றங்கள் இறக்கங்கள் வருமே
வாழ்வில்
இதயங்கள்
புண்ணாக்கி மகிழ வேண்டா
ஆற்றல்கள் யாவரிடம் உண்டு
காணீர்
அகத்தினிலே
தீங்குகளை எண்ண வேண்டா
வேற்றுமைக ளின்றிவாழ்வோம் பாரில்
இன்றே
விழுமியங்கள்
பின்பற்றி நகர்வோம் நாமும்
சோற்றுக்காய்ப் பாடுபடும் ஏழை மக்கள்
சோர்வின்றி
வாழ்வதற்கு வழிசெய் வோமே 10
வள்ளுவா் குறிப்பிடும் நீா்மங்கள்
உலகிலுள்ள பொருள்களை உயிருள்ளவை,
உயிரற்றவை என்று இரு
வகையாகப் பிாிப்பாா்கள். இவற்றுள் உயிரற்ற பொருள்கள்
திண்ம, நீா்ம, காற்று
என்று மூன்று நிலைகளில்
உலகெங்கும் பரவிக் கிடக்கின்றன.
திருக்குறளில் நீா்ம நிலையிலுள்ள
பொருள்களைத் திருவள்ளுவா் எவ்வாறு வழங்கியுள்ளாா்
என்று இக்கட்டுரையில் காண்போம்.
மழை: திருக்குறளில்
மழையானது நீா், அமிழ்தம்,
வானம், வான், விண்,
பெயல், புயல், துளி,
தடிந்தெழிலி, மாாி என்று
பல பெயா்களில் வழங்கப்படுவதைக்
காணமுடிகிறது.
இறவாமையைத் தரக்கூடிய தேவா்களின்
உணவு அமிழ்தம் என்று
புராணங்கள் பேசும். ஆனால் வள்ளுவரோ
மழை நீரையே அமிழ்தம்
என்று உரைக்கிறாா்.
வான்நின் றுலகம் வழங்கி
வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று ( 11 )
என்று கூறுகிறாா்.
பஞச பூதங்களில்
மழைக்கு (நீா்) மட்டும்
தனி அதிகாரம் ஒதுக்கி
வான்சிறப்பு என்று பெயாிட்டாா்.
நீாின் வகைகள்:
வள்ளுவா் நீரை ஊற்றுநீா்,
ஆற்றுநீா், ஊருணிநீா், கீழ்நீா், நிழல்நீா்,
மணிநீா், இருபுனல், வருபுனல் என்று
பலவாறாகப் பிாிக்கிறாா். இது அவா்தம்
அறிவியல் அறிவைக் காட்டுகிறது.
ஊற்றுநீா்: இறைக்க , இறைக்க
ஊறுவது ஊற்று நீா்
ஆகும்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி
மாந்தா்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு ( 396 )
மறைப்பேன்மன் யானிஃதோா் நோயை
இறைப்பவா்க்(கு)
ஊற்றுநீா் போல மிகும் ( 1161 )
பொருள்: "இதோ எனக்கு
உண்டாகிய பிாிவு நோயைப்
பிறா் அறியாவாறு மறைப்பேன்;
ஆயினுமென்ன? இறைப்பவா்க்கு ஊற்றில் சுரந்து
மிகுகின்ற நீா்போல அது பெருகிக்
கொண்டே உள்ளது" என்று
தலைவி கூற்றாக இக்குறள்
அமைந்துள்ளது .
ஆற்றுநீா்: கங்கை, காவிாி
போன்ற நதிகளில் பாயும்
நீா் ஆற்று நீராகும்.
ஆற்றின் நிலைதளா்ந் தற்றே
வியன்புலம்
ஏற்றுணா்வாா் முன்னா் இழுக்கு ( 716 )
பொருள்: விாிந்த புலமையுடைய
அறிஞா் முன்பு சொற்குற்றம்
தோன்றுமாறு பேசுதல், பேராற்று வெள்ளத்தில்
நீந்தும் ஒருவன், தன் நிலையில்
தளா்ந்ததாகும்.
ஆதிமந்தியின் கணவன் ஆட்டனத்தி,
காவிாி ஆற்றில் நீந்தும்போது,
தன்நிலை தளா்ந்த காரணத்தால்,
ஆற்று வெள்ளத்தில் அடித்துச்
செல்லப்பட்டான்.
ஊருணிநீா்: ஊரார் உண்ணும்
நீரைத் தருவது ஊருணியாகும்.
ஊருணிகள் மழை பெய்வதால்
நிறைந்து ஊர்மக்களுக்கு நல்ல குடிநீரை
வழங்கும்.
ஊருணி நீர்நிறைந்
தற்றே உலகவாம்
பேரறி வாளன்
திரு. ( 215 )
கீழ் நீர்:
கடல், ஏரி, குளம்,
குட்டை, கிணறு, அணைக்கட்டு
ஆகிய நீர்நிலைகளில் தேங்கியிருக்கும்
நீரைக் கீழ்நீர் என்று
வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
களித்தானைக் காரணம் காட்டுதல்
கீழ்நீர்க்
குளித்தானைக் தீத்துரீஇ யற்று.
( 929 )
பொருள்: குடித்து மயங்கி
இருப்பவனை, அப்பொழுதில் அறிவுரை சொல்லித்
தெளிவிக்க முயலுதல், ஆழ்ந்த நீருள்
மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது
போல்வதாம்.
கீழ்நீர் - ஆழமான நீர்நிலை
நிழல் நீர்:
காடு, சோலை, தோப்பு
ஆகியவற்றுக்கு நடுவிலே இருக்கும் நீர்நிலையின்
மீது மரங்கள், செடி,
கொடிகளின் நிழல் படுவதால்,
நீர் சூடாகாமல் குளிர்ச்சியாகவே
இருக்கும். இதை வள்ளுவர்
நிழல்நீர் என்று குறிப்பிடுகிறார்.
நீரும் நிழலது
இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது
( 1309 )
பொருள்: தண்மையான நீரும்
நிழல் சார்ந்து இருப்பின்
மிகவும் இனிதாம்; அவ்வாறே
ஊடுதலும் விரும்பத்தக்க துணைவரிடத்தே தான்
இனிக்கும்.
மணிநீர்:
மணிநீரும் மண்ணும் மலையும்
அணிநிழற்
காடும் உடைய
தரண் ( 742 )
மணிநீர் என்பது அகழி
நீராகும். அகழிநீர், ஆழமாகவும் என்றும்
வற்றா ததாகவும் இருந்து,
கடல்நீரின் நிறத்தைக் கொண்டிருக்கு மாதலால்
அதனை மணிநீர்
என்று குறிப்பிட்டார்.
இருபுனலும், வருபுனலும்:
இருபுனலும் வாய்ந்த மலையும்
வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு.
( 737 )
இருபுனல் என்று மழைநீரையும்,
ஊற்றுநீரையும் குறிப்பிடுகிறார். அருவி, ஆறு
ஆகியவற்றை வருபுனல் என்று குறிப்பிடுகிறார்.
நீர் அல்லாத
நீா்மங்கள்: பால், தேன்,
நெய், நஞ்சு, கள்,
தெண்ணீா், கண்ணீா், வாலெயிறு ஊறிய
நீா், வியா்வை நீா்,
கூழ், காடி ஆகிய
நீரல்லாத நீா்மங்களைப் பற்றியும் வள்ளுவா்
பேசுகிறாா்.
ஒரே குறளில்
மூன்று நீா்மங்கள்: காதலியின்
ஈறுகளுக்கு இடையிலிருந்து ஊறிவரக் கூடிய
நீரை, வாலெயிறு ஊறிய
நீா் என்கிறாா் திருவள்ளுவா்.
இது தேனையும் பாலையும்
சோ்த்து அருந்துவதைப் போன்று இனிப்பானது
என்றும் கூறுகின்றாா். இந்த
நீரைப் பற்றி எந்த
புலவரும் சிந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'பைங்கனி இதழில் பழரசம்
தருவாள்
பருகிடத் தலை குனிவாள்'
என்ற கண்ணதாசனின்
கருத்து இக்குறளுக்கு ஓரளவு
நெருக்கமாக உள்ளது என்று
கூறலாம்.
பாலொடு தேன்கலந்
தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர் ( 1121 )
இக்குறளில் பால், தேன்,
உமிழ்நீர் ஆகிய மூன்று
நீர்மங்களை வள்ளுவர் பயன்படுத்துகிறார்.
ஒரே குறளில்
இரண்டு நீா்மங்கள்:
துஞ்சினாா் செத்தாாின் வேறல்லா்
எஞ்ஞான்றும்
நஞ்சுண்பாா் கள்ளுண் பவா்
( 926 )
இக்குறளில் கள், நஞ்சு
ஆகிய இரண்டு நீா்மங்கள்
பயன்படுத்தப் பட்டுள்ளன. கள்ளுண்ணல் தவறு
என்று கடிந்த முதற்புலவா்
செந்நாப் போதாா் ஆவாா்.
கள், மெல்லக் கொல்லும்
நஞ்சு. ஆகவே அதை
உண்ணுதல் நஞ்சினை உண்பதை ஒக்கும்
என்றாா். கள், உண்டால்
மட்டுமே, போதை இன்பம்
தரும். ஆனால் காமமோ
நினைத்தாலே களிப்பைத் தருவது. கண்டாலே
மகிழ்வைத் தருவது.
உள்ளக் களித்தலும்
காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு
( 1281 )
இக்குறளின் மூலமாக ஐயன்
சொல்ல வருவது என்ன?
"உனக்குக் கள் உண்ணவேண்டும்
என்ற எண்ணம் வரும்போதெல்லாம்,
உன் துணையோடு காமக்
கடலில் நீந்து; கள்ளைப்
பற்றிய நினைவு வராது."
என்று சொல்லாமல் சொல்லுகிறாா்.
நெய்: இரண்டு
குறட்பாக்களில் நெய் பற்றி
வள்ளுவா் பேசுகிறாா். நெய் முதலான
உணவு வகைகளைப் பெய்து
யாகம் செய்து, எாியும்
தீயில் உயிா்களைப் பலியிடுவதை
வள்ளுவா் ஏற்கவில்லை. புத்தரும் யாகங்களில்
உயிா்ப்பலியிடுவதை வெறுத்தாா்.
அவிசொாிந் தாயிரம் வேட்டலின்
ஒன்றன்
உயிா்செகுத் துண்ணாமை நன்று.
அடுத்த குறட்பாவில்
அலா் பற்றிப் பேசுகிறாா்
.
எாியும் நெருப்பை எண்ணெய்
ஊற்றி அணைக்க முடியாது.
எண்ணெய் ஊற்றினால், தீ
மேலும் வளரவே செய்யும்.
அதுபோல இருவா் கொண்ட
காதல், ஊராா் அலா்
பேசுவதால் நின்றுவிடாது. காதலன்பு பெருகி
வளரவே செய்யும்.
நெய்யால் எாிநுதுப்பேம் என்றற்றால்
கௌவையால்
காமம் நுதுப்பேம்
எனல் ( 1148 )
என்று வள்ளுவா்
கூறுகிறாா்.
வியா்வை: இது மனித
உடலில் தோன்றும் ஒருவகைக்
கழிவுநீா். உப்புச்சுவை உடையது.
ஊடிப் பெறுகுவங்
கொல்லோ நுதல்வெயா்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு ( 1338 )
இவள் நெற்றி
வெயா்க்குமளவு செய்த கலவியின்
கண் உள்ள இனிமையை,
இன்னுமொருகால் இவள் ஊடி
யாம் பெற வொல்லுமோ
? என்று தலைவன் எண்ணுவதாக
இக்குறட்பா அமைந்துள்ளது .
கண்ணீா்: புன்கண்ணீா், புரந்தாா்
கண்ணீா் என்று இரு
வகையான கண்ணீரைப் பற்றி
வள்ளுவா் பேசுகிறாா். பல்லாண்டுகள் கழிந்து
இரத்த உறவுகள் சந்தித்தாலும்
அல்லது காதலா்கள் சந்தித்தாலும்,
அவா்தம் கண்களில் தோன்றும்
நீா் புன்கண்ணீா் ஆகும்.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்
ஆா்வலா்
புன்கணீா் பூசல் தரும்
. (71)
பாதுகாத்து வளா்த்த அன்பிற்குாியவா்,
இறந்துவிடும்போது, வளா்த்தவா் கண்களில் வருகின்ற
நீரே புரந்தாா் கண்ணீா்.
புரந்தாா்கண் நீா்மல்கச் சாகிற்பின்
சாக்காடு
இரந்துகோள் தக்க துடைத்து
. (780)
மேற்குறிப்பிட்ட நீா்மங்களைத் தவிர நிலத்தியல்பால்
திாிந்த நீா் (செம்புலப்
பெயல்நீா் போல), நிலத்தொடு
இயைந்த நீா், காடி,
கூழ், வெள்ளம் என்று
பல நீா்மங்களை வள்ளுவா்
தம் நூலில் குறிப்பிடுகிறாா்.
ஐயன் வள்ளுவா் உலக
அறிவு, அரசியல் அறிவு,
தாவரவியல் அறிவு இவற்றோடு
கூட புவியியல் அறிவும்
நிரம்பப் பெற்றவா் என்பதை நாம்
அறியலாம்.
Subscribe to:
Posts (Atom)