'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 15, 2019

அம்மா


பைந்தமிழ்ச்செம்மல் அழகர் சண்முகம்

அன்பின் மொழியாலே ஆரத் தழுவிடுமென்
என்புதோள் போர்த்த எழிலிறையே நின்பெயரை
ஏட்டில் எழுத இயலாமல் என்னுயிர்க் 
கூட்டினுள் வைத்தேன் குறித்து!

ஊட்டி வளர்ப்பாளாம் ஊரடங்கும் வேளையிலும்
ஈட்டி விழியாலே ஈயெறும்பை ஓட்டி
உறங்காமற் காத்தாளின் உண்மைத் தவமே
அறத்தில் சிறந்த அறம்!

உழைத்துக் களைத்தாலும் உண்ணஅமர்ந் தாலும்
அழைத்து மடியமர்த்தும் அன்பாம் இழைத்துச்
செதுக்கிடும் சிற்பமாய்ச் செம்மை யுறச்சேய்
ஒதுக்காள் தனக்கென ஓய்வு!

கருவில் சுமந்தாளைக் காத்தகரத் தாளைத்
தெருவில் அலையவிட்டுத் தெய்வம்இருக்கும்
இடந்தேடிக் காசை இறைத்திடும் மாந்தர்
நடமாடும் மானிட நச்சு!

ஒழுகுமண் வீட்டில் ஒருவாய்ச்சோ றின்றி
அழுதிடத்தந் தாயே அமுது-முழுதாக
மாடி மனையிருந்தும் மாதாவைக் காணாமல் 
தேடியதே னும்கசக்கு தே!

நித்தமொரு ஆடைகட்டி நின்றாலும் இந்நாளில் 
அத்தனைக்கும் ஏதுமணம் அந்நாளின் -சொத்தான
உன்சேலை வாசம் உயிரில் கலந்திணைந்(து
என்மூச்சோ(டு)இன்றும் இருக்கு!

கட்டிக் கரும்பென்றும் கண்ணின் மணியென்றும்
தொட்டில் நிறைந்தாடத் தூயதமிழ்-கொட்டித்தா
லாட்டில்பண் பாட்டை அழகாய்  விதைப்பாளே
ஏட்டைப் படிக்காத ஏடு!

கல்லிலும் முள்ளிலும் காலிணை தேய்ந்திடக்
கல்வியெனும் கண்கொடுக்கக் காடளந்தே-அல்லும்
பகலும் அயராமல் பாதைதந்தா ளுக்கு
நிகரிலை யென்றுணர்  நீ!

பெற்றாள் நலத்தினைப்  பேண மறந்தவர்
கற்றிருந்தும் காணுமிரு கண்ணிலரே-பெற்ற
பெருஞ்செல்வம் ஊர்போற்றப்  பேர்தரலாம் ஆனால்
அருள்தாரா(து)என்றும் அறி!

உண்மையின் நற்கருவை உள்ளிருக்கும் போதிலே 
எண்ணில் நிறைந்திட ஏற்றுவாள்-விண்ணிலே
எண்ணிலாத் தெய்வங்கன் எத்தனை யானாலும்
மண்வணங்கும் தெய்வமம் மா

இற்றைத் திங்கள் இவரைப் பற்றி…


சேலம் பெற்றெடுத்த எண்ணற்ற இலக்கியவாதிகளின் பட்டியலில் கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டு தனித்தன்மையில் மிளிர்பவர் ஐயா கவிமாமணி சேலம்பாலன் அவர்கள். அவரே இம்மாத நடுப்பக்கத்தை அலங்கரிக்கும் நாயகராவார்.

விடுதலைப் போராட்ட வீரர் .பழனியப்பன்வீ.மாரியம்மாள் தம்பதியருக்கு 15.09.1951 அன்று சேலம் அம்மாப்பேட்டையில் பிறந்தவர்.

பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்தாலும் தன்ஆற்றலால்  அறிவால் இளம் தலைமுறைக்குத் தானொரு பல்கலைக் கழகமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

கைத்தறி, விசைத்தறி ,தையல் தொழில், கூரியர் எனப்பல்வேறு தொழில் செய்தாலும் தமிழன்னை மீதுகொண்ட அளவில்லாக் காதலால் கவிதைகளின் பக்கம் காலடி வைத்தவர். பின்னாளில்

ஈரோடு தமிழ்ச்சங்கத்தின் தலைவராகத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டு தமிழறிஞர்களைத் தேடித்தேடிக் கௌரவித்ததோடு மட்டுமல்லாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருதுகளை வழங்கிப் பெருமைப்படுத்தியவர்.

இதழ்ப்பணி :

·        தமிழ்மலர் ,இதய தாகம் 1982 83 .
·        துணையாசிரியர்
·        துளி ஆசிரியர் 1986 முதல் 30 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தியவர்
·        குந்தர் குரல் ஆசிரியர்.
·        பொறுப்பாசிரியர் :தமிழ் மலர் ,
·        மடிகாரர்முரசு .செங்குந்தர் முரசு ஆசிரியர்

      எனப்பல்வேறு இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர்

பெற்ற விருதுகள் :

தமிழக அரசின்
·        அகவை முதிர்ந்த தமிழறிஞர்.
·        கவிமாமணி
·        செந்தமிழ்ச்செயல்மணி
·        இலக்கியக் காவலர்
·        கவியரசர்
·        விழா வேந்தர்
·        பைந்தமிழ்க்குவை மற்றும் முப்பதுக்கு மேற்பட்ட விருதுகளைப்பெற்றவர்

படைப்புகள் :

·        காமராசர் பிள்ளைத் தமிழ் 1982;
·        குமரகிரி குமரன் அந்தாதி 1983
·        மாண்புமிகு மனைவி தியாகி 2001
·        திருப்பூர் குமரன் தேன் கவிமாலை 2004
·        வியன் திருக்குறளும் விருத்தப்பா உரையும் 2009
·        ஏறத்தாழ 1000 க்கும் மேல் கவியரங்கம் கண்டு தமிழ்ப்பணி செய்தவர்.
·  300க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தவர்.

ஓய்வென்பது இல்லாமல் தமிழ் தமிழென்று ஓடியோடி உழைத்துக் கொண்டிருக்கும் அறுபத்தேழு வயது இளைஞர் அவர் அவர்வாழும் காலத்திலே அவரோடு பயணிக்கின்றோம் என்பதிலே நாம் பெருமை கொள்ளலாம்.

பழக எளிமையும், பண்பும், ஓயாத சமூகசேவையும், தமிழ்ப்பற்றும் கொண்டிலங்கும் சேலம்பாலன் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து தமிழ்த்தாய்க்கு மென்மேலும் சிறப்புகள் செய்ய வேண்டுமென வாழ்த்துவதில் தமிழ்க்குதிர் பெருமை கொள்கின்றது.

பீஷ்மர்கள்

சரஸ்வதிராசேந்திரன்

நண்பர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். "என்னாப்பா அநியாயமா இருக்கு, இந்த பெண்களோட மனசைப் புரிஞ்சுக்கவே முடியலப்பா" வரது பேசினான்

"என்னடா திடீர்னு பெண்கள்மேட்டருக்கு போனே, என்ன விஷயம்?" கேட்டான் விஷால்.

"அதற்கு முன்பெல்லாம் ஆண்கள்தான் கண்டிஷன் போட்டாா்கள். பெண்கள்னா இப்படி இப்படியெல்லாம் இருக்கணும்னு, இப்ப அவா்கள் போடுற கண்டிஷனைக் கேட்டால் நம்ம ஒருத்தனுக்கும் கல்யாணம் நடக்காது போல இருக்கு" வரது விரக்தியா பேசினான்.

"என்ன நடந்தது,விவரமா சொல்லு"

"நம்ம கோபால் இருக்கானே, அவனுக்கென்ன குறைச்சல்? நல்ல வேலை, நல்ல படிப்பு, ஆளும் அழகாத்தான் இருக்கான், அவன் பெற்றோர் அவனுக்கு பெண்பார்த்தார்கள், அந்தப் பெண் இவனைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு விட்டு, கடைசியா உன்கிட்ட கார் இருக்கா, ஏன்னா நான் வெளியிலே போனா காரிலேதான் போவேன்" என்று பெண்ணே கேட்க, கோபமடைந்த கோபால், நீ  கார் வைச்சிருக்கவனா பார்த்து கட்டிகோன்னு சொல்லிவந்துட்டான்".

அவனுக்கு வயது ஆகுதேன்னு பெற்றோர்கள், காலம் மாறிட்டு; காரும் ஒரு ஸ்டேட்டஸ் போல பயந்து, வேறொரு இடத்தில் பெண்பார்க்கப் போவதற்குள் கடனை உடனை வாங்கி விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி நிறுத்தினர்.

சில நாட்களில் ஒரு வரன் வந்தது. பெண் குடும்பம் சுமாரான குடும்பமா இருந்தாலும் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறிய குடும்பம். பெண்ணும் நன்றாக இருந்தாள். கோபாலுவின் பெற்றோருக்கு இடம் பிடித்து இருந்தது. எளிமையான குடும்பம். பிரச்சனை இல்லை என எண்ணி முயற்சி செய்தார்கள்.

கோபாலின் படிப்பு, வேலை எல்லாம் பெண்வீட்டுக்குப் பிடித்திருந்தது, அந்த பெண்ணின் சம்மதம் கேட்டனர் பெற்றோர். அவள் சொன்னாள் "இது சரியா வராது அப்பா" என்றாள்.

"ஏம்மா, நீ கேட்ட படிப்பு இருக்கு, வேலை இருக்கு, அப்புறம் என்ன?"

"அவர் ரொம்ப செலவாளியா இருப்பார் போலிருக்கு, சொந்தமா வீடுகூட இல்லே. இதிலே காா் என்ன வேண்டிக்கிடக்கு? நாம சிக்கனமா வாழ்ந்து முன்னேறியவங்க, இவர் படாடோபம் உள்ளவர் போல. ஊர் பெருமைக்காக வாழற குடும்பம் போலேயிருக்கு. வேண்டாம்ப்பா, நம்மளைப்போல் எளிமையா இருக்கிறவங்கதான் தேவலாம். சிறுக கட்டிப் பெருக வாழணும். அதுதான் என்றும் நிலைக்கும், மன்னிச்சுக்குங்க அப்பான்னு சொல்லி இந்த இடம் வேண்டாம்னு சொல்லிட்டாளாம்.

"இது எப்படி இருக்கு? கடலாழத்தைக்கூடக் கண்டுபிடிக்கலாம்; பெண்களின் மனதைக் கண்பிடிக்க முடியாது போலேயிருக்கே, நாமெல்லாம் பீஷ்மரா இருக்கவேண்டியதுதானோ? என்ன நடக்குது நாட்டிலே?"

தமிழ்க்குதிர் - 2050 சிலை இதழ் (முன்னட்டை)


தமிழ்க்குதிர் - 2050 சிலை இதழ்


தமிழ்க்குதிர் - 2049 நளி இதழ் (முன்னட்டை)


புலம்பெயர் நாடும் வாழ்வும் - முன்னுரை

இணுவையூர் --பரமநாதன்

(என்னைப்பற்றி...)

புலம்பெயர் நாடும் வாழ்வும் எனும் தலைப்பில் டென்மார்க் நாட்டின் வாழ்வியலை இயன்றவரை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இப்பகுதிக்குள் நுழைவதற்கு முன் என்னைப் பற்றியும், பூர்வீகம், அயலகம் சென்ற சூழல், வாழ்வியலை அமைத்துக் கொள்ள ஏதுவாக அங்கு அமைந்த சூழல் போன்றவற்றைச் சுருக்கமாக எடுத்துக் கூறவிழைகிறேன்.

ஈழத்தின் வடபகுதியில் அமைந்துள்ள இணுவில் என்னும் ஓர் அழகிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். தாய்மொழிக் கல்வி கற்பித்தல் மொழியாக இருந்தததினால் தமிழ்மொழியில் கல்வியினைக் கற்றேன்.  பதிமூன்றாம் வகுப்புத் தேர்வில் பெறுபேற்றினைப் பொறுத்தே பல்கலைக்கழக அனுமதி இருந்த போதும், தரப்படுத்தல் என்னும் புதிய சட்டவாக்கத்தின் படி அதிக புள்ளிகள் உள்ள தமிழ்ப்பிள்ளைகளே பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள். எனக்குரிய புள்ளிகளைக் கொண்ட சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல.. என்போன்ற அனைத்துத் தமிழ் மாணவர்களுக்கும் அவ்வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதன் தொடக்கமாக அரசியல் சூழல் வெகுவாக மாறத் தொடங்கியதும், இளையோர்கள் ஆயுதப் போரட்டத்தைக் கையிலெடுத்ததையும் அனைவரும் அறிவர்.

தொழில்வாய்ப்பில்லாமல் சில காலம் கழிந்தாலும் 1980 இல் மருத்துவமனையில் கதிரியலாளர் (Radiographer) பயிற்சி நெறியைப்பெற்று என் பணியைத் தொடங்கினேன்.

இப்பயிற்சியின் போது எனக்குத் தெரியாத சிங்கள மொழியிலே கற்பித்தல் நடைபெற்றமை வேதனைக்குரியது. அக்காலத்தில் போர்மேகங்கள் அனைத்துப் பகுதியையும் சூழ்ந்திருந்தது. தமிழ் இளைஞர்கள் புலி என்றே அடையாளப் படுத்தப்பட்டார்கள். அவற்றை விரிவாக இங்கு எழுதத்தேவையில்லை என எண்ணுகிறேன்.

சிங்களவர், தமிழர், முஸ்லீம் மக்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் கடமைக்காக நியமிக்கப்பட்டேன். அங்குப் பணியிலிருந்த போது தமிழன் எனும் உணர்வோடு இயங்கத் தொடங்கியதும், இந்திய அமைதிப்படை நாட்டைவிட்டு வெளியேறிய போது அதன் விளைவு எவ்வாறு அமையும் என்பதை முன் கூட்டியே அறிந்திருந்ததால் எந்தாய் மண்ணை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது.

நான் அப்பகுதியில் இருந்து வெளியேறிய பின் என்னாருயிர் வைத்திய நண்பன் கொலை செய்யப்பட்டான். நான் அங்கிருந்திருந்தால் நண்பனுக்கேற்பட்ட அதே நிலை எனக்கும் ஏற்பட்டிருக்கும்.

1991 இல் இலங்கையை விட்டு வெளியேறினேன். எங்குச் செல்ல வேண்டும் என்னும் ஆசையிருந்தாலும் இறுதியில் டென்மார்க் நாட்டிற்கு என் மனைவி பிள்ளைகளுடன் வந்து சேர்ந்தேன். இந்நாட்டிற்குள் நுழைந்ததும் டென்மார்க் நாட்டின் ஏதிலிகள்  தங்குமிடத்தில் ஏதிலியாகப் பதிவு செய்து கொண்டேன்.

அங்கிருக்கும் காலத்தில் எமக்குத் தேவையான அனைத்தையும் உடனடியாக வழங்கினார்கள்,ஓராண்டிற்குப் பின் ஏதிலியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இங்கு நிரந்தரமாக வாழ்வதற்கும், பணிபுரிவதற்குமான  அனுமதியைப் பெற்றுக் கொண்டேன்.

ஏதிலி அனுமதி கிடைத்ததும் எமக்குத் தனியான வீடு, விட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்கான பண உதவி மற்றும் மாதம் தோறும் ஒரு குடும்பத்திற்கென நிர்ணயிக்கப்பட்ட உதவித் தொகை என்பன வழங்கப்பட்டது.

எனது பிள்ளைகளைப் பாடசாலையில் அனுமதித்ததோடு  எனக்கும் மனைவிக்கும் டெனிஸ்மொழியைக் கற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்து தந்தார்கள். எமக்குரிய அனைத்தையும் அப்பகுதி நகரசபையே பொறுப்பேற்றுக் கொண்டு செயற்பட்டது.

மூன்று ஆண்டுகள் அரச உதவியுடனேயே எவ்வித குறையுமின்றி எனது குடும்பத்தோடு வாழ்ந்ததினை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றேன். .

டெனிஸ்க்கல்வியைக் கற்றுக் கொண்ட பின்னர் எனது தொழில் இந்நாட்டுத் தொழில் முறையோடு ஒத்துப் போகின்றதா என்பதை அளவீடு செய்வதற்காக மருத்துவமனை ஒன்றில் கதிரியலாளராக(Radiographer) இணைக்கப்பட்டேன். மூன்று மாதங்களுக்குப் பிறகு நிரந்தரப் பணியாளராக நியமிக்கப்பட்டேன். அங்குப் பணிபுரிந்த காலப்பகுதியில் சில பொறுப்பான பதவிகளையும் பெற்றுக் கொண்டேன். மேலும் சொந்தமாக வீடு, மகிழுந்து மற்றும் அனைத்துத் தேவைகளையும் என் உழைப்பின் மூலமாகப் பெற்றுக் கொண்டேன். சொந்தமாக என்பதைவிட இத்தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்கான பண உதவியினை வங்கிகள் தந்துதவும். இதுபற்றித் தனிப்பதிவினைப் பின்னர் எழுதுகிறேன்.

இருபது ஆண்டுகள் பணிக்குப் பின் பார்வைக் குறைபாட்டினால் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளேன். எனது பிள்ளைகள் தகுந்த உயர் பட்டங்களைப் பெற்றுப் பணிபுரிகின்றார்கள். உலகிலேயே மகிழ்ச்சியான நாடு எனக் கொண்டாடப்படும் நாடுதான் டென்மார்க்.. என் உறவினரும், ஊரவரும் இல்லையே என்னும் குறையினைத்தவிர வேறு எதுவும் எமக்கிருந்ததில்லை. இனிவரும் பகுதிகளில் இந்நட்டு வாழ்வுடன் இணைந்த  அனைத்தையும் இயன்றவரை முழுமையாகப் பதிவிடுகின்றேன்.

தொடரும்...

Jan 14, 2019

ஆசிரியர் பக்கம்

ஆசிரியர் பக்கம்

 
அன்பானவர்களே! வணக்கம். எம்முடைய முதல் மின்னிதழின் வழியே உங்களைச் சந்தித்த மகிழ்;ச்சியின் தொடர்ச்சியாக இரண்டாவது இதழின்வழியே மீண்டும் சந்திக்கிறேன்

நினைவில் நீயே

நினைவில் நீயே

நினைவில் நீயே நிதமும் நிற்கிறாய்
நின்னைக் காணா நாளும் வாட்டமே
கனவில் வந்து தொல்லை தருகிறாய்
காதல் வடிவம் இதுவோ அறியேன்
மனத்தில் நீங்கா நிலையாய் நிற்கிறாய்
மதுவைப் போல மயக்கம் தருகிறாய்
தினமும் என்னைச் சுற்றி வருகிறாய்
திகைப்பில் நானும் மருண்டு நிற்கிறேன்

தனியே நின்று புலம்பி நிற்கிறேன்
தவிப்பை மறைக்க வேடம் மாற்றினேன்
கனிவாய் உன்னைப் பார்த்து ரசிக்கிறேன்
காலம் எம்மை இணைத்து வைக்குமோ
தினமும் தென்றல் தீண்டும் போதுநீ
தீயாய் வந்து வாட்டி வதைக்கிறாய்
இனிய அன்பில் நனையத் துடிக்கிறேன்
எதிரே என்னைத் தேடி வருகுவாய்

நிர்மலா சிவராசசிங்கம்