Jun 14, 2020
ஆசிரியர் பக்கம்
அன்பு நண்பர்களே! அருமைத் தமிழோரே!
அனைவரையும் அடுத்த மின்னிதழின்
வழியாகச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இலக்கணம் மீறப்பட்டாலோ பின்பற்றப்படாமல்
போனாலோ ஒன்றின் தனித்தன்மையும் அது எழுந்த காரணமும் வரலாறும் காணாமல் போய்விடும். தொல்காப்பியம்
நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வரமாகும். பிற்காலத்தில் வடவெழுத்துகளையும் தமிழோடு சேர்க்க
வேண்டும் என்ற கொள்கையெல்லாம் நிற்காது தொல்காப்பியம் சொன்ன வழியே தமிழ் இன்றளவும்
வழங்கிவருகிறது. இலக்கணத்தை மீறி வடமொழி ஒலிகளை ஏற்றுக்கொண்டவை இன்று வெவ்வேறு மொழிகளாயின
என்பதே இதற்குச் சான்றாம். தமிழ் எழுத்துகள் முப்பஃதே. தமிழைத் தவிர மற்ற இந்திய மொழிகள்
எல்லாம் சற்றேறக்குறைய ஐம்பது எழுத்துகளைக் கொண்டவை. இதிலிருந்தே தமிழின் தனித்தன்மை
விளங்கும். தமிழைச் சிதையாமல் காக்கும் வழி இலக்கணத்தைக் கடைப்பிடிப்பதே ஆகும்.
அண்மையில் நம் தமிழகத்து அரசு
ஊர்ப் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதும்போது தமிழின் ஒலிப்பு மாறாமல் எழுத வேண்டும் என்னும்
ஆணை பிறப்பித்து, ஒரு பட்டியலையும் தந்துள்ளது. இது வரவேற்கத்தக்கதே. ஆனால் மிகவும்
தேவையான மற்றொன்றையும் அரசு கருத வேண்டும். அஃதென்னவெனில், தற்போது பல ஊர்ப் பெயர்கள்
பேச்சுவழக்கால் பொருள் புரியாத அளவுக்கு மாறிவிட்டன. இதனால் அவ்வூர்களின் பெயர்க் காரணமும்
வரலாறும் மறக்கப்பட்டு மறைந்து போகின்றன. இவற்றை மீட்டெடுக்கும் பொருட்டு ஊர்களின்
பெயர்களைச் சரியாக எழுத வேண்டும். காட்டாகச், செங்கழுநீர் நிறைந்திருந்த பகுதி செங்கழுநீர்பட்டு
என்றிருந்தது. இன்று செங்கற்பட்டு ஆகி நிற்கிறது. மயிலாப்பூர் - மயில் ஆர்ப்பு ஊர்
- மயிலார்ப்பூர் என வழங்க வேண்டும். இத்தகு
மாற்றத்தால் மறைந்துபோன நம் வரலாற்றை மீட்டெடுப்பது நம் கையில்தான் உள்ளது.
என்றும்
தமிழன்புடன்,
பாவலர்
மா.வரதராசன்
மரபைக் காப்போம்!
பாவலர்
கருமலைத்தமிழாழன்
1. மரபு பாட்டே தமிழ்ப்பாட்டு
தாலாட்டும் ஒப்பாரிப் பாட்டும்
வாழ்ந்த
தமிழர்தம் பண்பாட்டைக் கூறும் பாட்டு
காலாட்டிக் கையாட்டி வயலில்
வேலை
களைப்பின்றிச் செயப்பாடும் நாற்றுப் பாட்டும்
கோலாட்டிக் கிணற்றுநீரை
இறைப்ப தற்குக்
கோவணத்தில் நின்றிசைக்கும் ஏற்றப் பாட்டும்
நூலாக வாராமல் வரலா றாக
நின்றொலித்து நமைமயக்கும் நாட்டுப் பாடல்! 1
ஆயிரங்கள் இரண்டிங்கே கடந்த
பின்பும்
ஐந்துபெரும் காப்பியங்கள் உள்ள தின்றும்
பாயிரமாய்ச் சங்கத்துப்
பாக்க ளெல்லாம்
பைந்தமிழின் பெருமையினைச் சொல்லு தின்றும்!
தாயினுடைப் பால்போன்ற குறளின்
முப்பால்
தமிழுக்கு வலுவூட்டி நிற்கு தின்றும்
சேயிக்கு நாளையுமே சொல்லும்
வண்ணம்
செம்மாஅந்(து) இருப்பதெல்லாம்
மரபு பாட்டே! 2
காட்டாகச் சொல்வதெல்லாம்
பத்தை எட்டை
கண்முன்னே காட்டுவது கம்பன் பாட்டை
ஊட்டுதற்கே அறவொழுக்க நூல்க
ளாக
உரைப்பதெல்லாம் பதினென்கீழ்க் கணக்கைத் தானே !
ஏட்டினிலே இருந்தபோதும்
புதுமை ஐக்கூ
எடுத்துரைக்க இயலாத சொற்கோ லங்கள்
நாட்டினிலே என்றென்றும்
வரலா றாக
நமக்குதவ நிற்பதெல்லாம் மரபு பாட்டே ! 3
2. மரபே மாத்தமிழின் மாண்பு
படித்தவுடன் நெஞ்சத்தை
ஈர்க்க வேண்டும்
பதிந்துநெஞ்சில் கல்வெட்டாய்த் திகழ வேண்டும்
இடித்துரைக்கும் கருத்தெனினும்
இனிய சொல்லில்
இதமாக எடுத்துரைத்தே உணர்த்த வேண்டும்
வடிக்கின்ற சொல்லெல்லாம்
பொருள்பொ திந்து
வாழ்க்கைக்கு நல்வழியைக் காட்ட வேண்டும்
படித்தவரும் பாமரரும் புரிந்து
கொள்ளும்
படிச்சொற்கள் எளிமையாக இருக்க வேண்டும்!
4
புதுக்கவிதை எனவிங்கே எழுத்தைக்
கூட்டிப்
புரியாமல் எழுதுவது கவிதை யன்று
மதுக்கவிதை எனமரபில் சொன்ன
போதும்
மயக்கத்தைத் தாராத தெளிவு வேண்டும்
எதுகவிதை மரபுபுது எதுவென்
றாலும்
எழுச்சியுடன் வீச்சினிலே தைக்க வேண்டும்
பொதுமையெனும் பயிர்வளர்த்துப்
புரட்சி செய்யும்
போர்ப்பாட்டே கவிதையாக நிலைத்து நிற்கும்!
5
சொந்தக்கால் இல்லாமல் நடத்தல்
போல
சொல்யாப்பில் அமையாமல் எழுதும் பாக்கள்
செந்தமிழ்க்குச் செம்மொழியின்
தகுதி யெல்லாம்
செம்மையாப்பு சங்கத்துப் பாக்க ளாலே
எந்தமொழி வந்தபோதும் இலக்க
ணத்தின்
எயிலாலே தனித்தமிழாய் உள்ள தின்றும்
நந்தமிழா யாப்பறிந்து கவிதை
பாடு
நறுந்தமிழும் வாழுமுன்றன் பெயரும் வாழும்! 6
3. மரபு கவிதையே மாத்தமிழைக் காக்கும்
முகநூலில் நட்புதனை வளர்த்தல்
போல
மூத்தமொழி முத்தமிழை வளர்க்க வேண்டும்
அகநூலில் அன்புதனை வளர்க்கும்
போதே
அகிலத்தார் மனிதரென்று மதிப்பர் ஏற்பர்
தகவுடைய இலக்கணத்தில் எழுதும்
போதே
தரமான கவிதையென உலகோர் சொல்வர்
நகமகுடம் விரற்களிக்கும்
உறுதி போல
நல்யாப்பே கவிதையினை நிலைக்க வைக்கும்!
7
சங்கத்துப் பாட்டெல்லாம்
கட்ட மைப்பில்
சருக்காமல் சாயாமல் அமைந்த தாலே
பொங்குகடல் அழித்தபோதும்
களப்பி ரர்கள்
பொலிவிழக்க வைத்தபோதும் மாய்ந்தி டாமல்
செங்கதிராய் இன்றளவும்
ஒளிர்ந்து நின்று
செம்மொழியாய் உலகோரை ஏற்க வைத்தும்
மங்காத முதன்மையினம் தமிழ
ரென்று
மார்தட்டிச் சொல்வதற்கும் நிற்கு திங்கே!
8
புதுக்கவிதை என்பதெல்லாம்
அகவல் தானே
புதுமையெனச் சொல்கின்ற ஐக்கூ கூட
முதுகுறள்பா வடிவம்தான்!
ஏழு சீரில்
முழுக்கருத்தைச் சொல்வதுபோல் சொல்லும் பாதான்
எதுகுறும்பா குறுந்தொகையின்
பாட்டெல் லாமே
எடுத்துரைக்கும் குறும்பாவின் வடிவ மென்றே
மதுமயக்கி அறிவிழக்க வைத்தல்
போன்று
மாத்தமிழை வெறுஞ்சொல்லால் தாழ்த்திடாதீர்! 9
கணினிக்கே ஏற்றமொழி என்று
ஞாலக்
கல்வியாளர் போற்றுகின்ற செம்மைத் தமிழை
மணியான அறிவியலின் கருத்தொ
லிக்கும்
மணித்தமிழைக் காப்பதுநம் கடமை யன்றோ
திணித்தபோதும் வடமொழியைத்
தூக்கெ றிந்து
திகழ்கின்ற தனித்தமிழை நலிவு செய்து
பிணிசெய்யும் ஆங்கிலத்தைக்
கலந்தி டாமல்
பிற்காலம் போற்றுமாறு மரபைக் காப்போம்! 10
மாடல்ல மாண்பு
கவிஞர் பொன். இனியன்
kuralsindhanai@gmail.com
8015704659
மாறுரையும் நேருரையும்)
கேடில் விழுச்செல்வங்
கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை (400)
எனுங் குறட்பாவுக்கான
பல உரைகள் மாடு என்ற சொற்குச் செல்வம் என்ற பொருள் காட்டியவா றாகவே எழுதப் பட்டிருக்கின்றன.
வெகு சிலரால் அது பெருமை சிறப்பு எனவும் காட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த ஓர் அலசலாக
அமைகிறது இக்கட்டுரை.
முதற்கண் நாமறிந்த
உரைகள் சிலவற்றைத் தொகுத்துக்கொண்டு அவற்றில் கூறப்பட்டுள்ள கருத்துகளைக் குறித்துச்
சிந்திப்போம்.
மணக்குடவர்: ஒருவனுக்குக் கேடில்லாத சீரிய பொருளாவது கல்வி, மற்றவையெல்லாம் பொருளல்ல.
குழந்தை: கல்வியே சிறந்த பொருளாகும். மற்றவை யெல்லாம் பொருளல்ல.
பரிமேலழகர்: ஒருவனுக்குச் சீரிய செல்வமானது
கல்வி; அஃதொழிந்த மணியும் பொன்னும் முதலாயின செல்வமல்ல.
பாவாணர்: ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே; மற்ற பொருட்செல்வங்க
ளெல்லாம் சிறந்த செல்வங்களாகா.
க ப அறவாணன்
: கல்வி யல்லாத ஏனைய மண்ணும் பொன்னும் செல்வங்களல்ல.
வ சுப மாணிக்கனார்: அழியாத சிறந்த செல்வம் கல்வியே; பிற பொருட்கள் செல்வமல்ல.
முனுசாமியார்: ஒருவனுக்கு அழியாத சீரிய செல்வமானது கல்வியேயாகும். அஃதல்லாமல் மற்றைய
செல்வங்களெல்லாம் பெருமையானவை யல்ல.
ஞா மாணிக்கவாசகன்: ஒருவர்க்கு நிலையான செல்வம் கல்வியறிவேயாகும்; மற்ற செல்வங்க ளெவையும்
அத்தகைய சிறப்புக்குரியவை ஆகா.
‘மாடல்ல’ மற்றையவை
என்பதனை மற்றவை யெல்லாம் பொருளாகா என மணக்குடவரும், மணியும் பொருளும் முதலாயின செல்வமாகா எனப்பரிமேலழகரும்,
மற்ற செல்வங்களெல்லாம் பெருமையானவையல்ல என முனுசாமியாரும், சிறப்புக்குரியனவாகா என
மாணிக்கவாசகனும் குறித்திருக்க இவற்றின் தொகுப்பே போல மற்ற பொருட்செல்வங்களெல்லாம்
சிறந்த செல்வங்க ளாகா என்கிறார் பாவாணர்.
மற்ற செல்வங்கள்
தன்னிடம் நிலைக்க மாட்டா என வெ.ராமலிங்கமும் தொடர்ந்து துணை செய்வன அல்ல என மு வரதராசனும்
குறித்தனர்.
உரைக்கருத்தினூடே,
கு.ச.ஆனந்தன், குழந்தை போன்றோர் மாடு=பொருள் எனவும், மாடல்ல= செல்வமாகா என கோபாலகிருட்டினன்
முதலானோர் குறித்துக் காட்டியிருக்க, முற்காலத்தில் ஆவுங் காளையும் எருமையும் ஆகிய
‘மாடுகளே’ செல்வமாகக் கருதப்பட்டதினால் மாடு எனும் பெயர் செல்வப் பெயராயிற்று எனும்
விளக்கத்தையும் வைக்கிறார் பாவாணர்.
இக்கருத்தியல்
ஏற்புடையதாகவே தோற்றினும் மாடு என்ற சொல், வள்ளுவம் எழுந்த காலத்தில் செல்வம் என்ற
பொருளில் வழக்கு பெற்றிருந்ததா என்பது தனி ஆய்வுக்கு உரியதாகிறது. `
சங்க இலக்கியங்கள்
பிற எதனிலும் மாடு என்பது செல்வம் எனப் பொருள் குறித்தவாறு ஆளப்பட்ட தாகத் தெரியவில்லை.
அத்துடன் தமிழகராதிகள் அல்லது நிகண்டு ஆகிய எதனிலும் அவ்வாறான பொருள் குறிப்பில்லை என்பதும் நினைதற்குரியது.
இவை யிவ்வாறாக,
இக்குறட்பாவை நமக்குத் தெரிந்தவாறாக அணுகுவோம்.
கேடில் விழுச்செல்வங்
கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை
கல்வி என்பது
ஏகாரந் தொக்கது.
இக்குறளில் குறித்த
மாடு என்பதன் பொருள் கோபால கிருட்டினன் போன்றோர் காட்டிய செல்வம் என்பதோ, குழந்தை,
கு.ச.ஆனந்தன் முதலானோர் காட்டிய பொருள் என்பதோ அன்றாம்.
ஞா மாணிக்கவாசகன்
மற்றும் முனுசாமியார் போன்றோர் குறித்த பெருமை / சிறப்பு எனும் பொருள் பற்றியதாம்
என்க.
கோணல் / கோணிய
/ வளைந்த எனும் பொருள்படக் கூர்ங் கோட்டது யானை (599), யாழ்கோடு (279) என்றும் கோணாமை
/ சாயாமை எனலை கோல் கோடாது (549) என்பதுங் காண்க.
கம்பராமாயணம்
(மந்திரப்படலம் 1483) ‘உதவும் மாடுயர் பார்கெழு
பழமரம் பழுத்தற்றாகவும்’ என்பதில்
‘ஓங்கி யுயர்ந்த’ பழமரம் எனப் பொருளாதலை ஒப்பு நோக்குக. மாட்சியாவது உயர்வு மேன்மை பெருமை எனும் பொருள் பற்றியாம்.
கோணு(தல்) - கோடு(தல்) என்பது போல மாணுதல் மாடுதலாயிற்று.
மாணுதல் மதிக்கப்பெறுதல்.
சிறப்பெய்துதல் எனும் பொருள். செய்த நன்றி சிறிது எனினும் காலத்தினால் மாண ஞாலத்தின்
பெரிது (102) என்பதில் காலத்தைக் கொண்டு மதிப்பிட எனும் பொருளாதலை உன்னுக.
அவ்வாறாகவே இக்குறளில்
மாணல்ல என்பதும், கேடில் என்ற முதற்சீருக்கு எதுகை நயந்தோன்ற வலித்து மாடல்ல என நிற்பதாயிற்று.
கல்வி(யே) ஒருவர்க்கான
அழிவற்ற சிறந்த செல்வமாகும். மற்ற எதுவும் (அவ்வாறு) மதிக்கத்தக்கனவன்றாம் என்பது இதன்
நேரிய பொருளாகிறது.
பெறத்தக்க செல்வங்களை,
நோயின்மை, கல்வி, தன, தானியம், அழகு, புகழ்,
பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலி, துணிவு, வாழ்நாள், வெற்றி, ஆகுநல்லூழ், நுகர்ச்சி
பதினாறு பேறும் எனத் தொகைப்படுத்துகிறது அபிராமி அந்தாதி பதிகப் பாடலொன்று.
இவற்றுள் ஒன்றாகிய கல்வியின் சிறப்பு, பிற எல்லாச் செல்வங்களினும்
மேலானதாக இப்பாவில் விதந்தோதப்பட்டது.
பிற செல்வங்களின்
போக்கு கூத்தாட்டு அவைக் குழாத்தற்றாம் (332). அருகுவதும் அரும்புவதுமாக (248) மாறி
மாறி வருவன. ஆனால் ஒருமைக்கண் கற்ற கல்வி எழுமையும்
ஒருவற்கு ஏமாப்புடையது (398) என்பதனால் கேடிலதாகக்
குறிக்கப்பட்டது.
இதன் கேடின்மையை,
வெள்ளத்தா லழியாது வெந்தழலால் வேகாது வேந்தராலுங்
கொள்ளத்தா னியலாது கொடுத்தாலுங் குறைபடாது கள்ளத்தா ரெவராலுங் களவாட முடியாது கல்வி’
என்னும் விவேக சிந்தாமணிப் பாடல் நன்கு காட்டும். கேடறியாதது எனும் விழுப்பத்துக்குரியது
கல்விச் செல்வமே.
‘பொருளில்லார்க்
கிவ்வுலகமில்’ என்பதும் ‘பொருளல்லவரை(யும்) பொருளாகச் செய்வது பொருள்’ என்பதும் உலகியன்
நடையே. ஆயினும், செல்வர்க்காம் சீர்த்தி மற்றும் சிறப்பினும் மேலாயதான பேரும் புகழும்
கற்றவர்க்குண்டாம்.
மற்ற செல்வங்கள்
ஒருவனின் துய்ப்புக்கும் அநுபோகத்துக்கும் துணையாயிருப்பினும் கல்வியே அவன் செல்லு
விடமெல்லாம் சிறப்பை யீட்டுதலான் அது மாட்சியுடையதாயிற்று.
நலன் உடைமை என்னும்
நாநலம் அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று (641) என்றது போல, இக்குறட்பா மற்ற செல்வங்கள்
எதனாலும் எய்தற்- கரிதான மாட்சியைத் தருவது கல்வி எனக் காட்டுகிறது.
இக்குறட்பாவிற்குரிய
நேர்ப்பொருள், நண்ணுதற்கு உரிதான (171) செல்வங்கள் அனைத்தினும் கல்வி(யே) பெரிதும்
மதித்துப் போற்றுதற்குரிய தொன்றாம் (என்றவாறு).
மாரீசன் கூடலிலே
கவிஞர் அபூ முஜாஹித்
மாரீசன் கூடலிலே மாஞ்சோலைச் சந்தியிலே
மாதாவின் மணியோசை
கேட்கும்
தேரூரும் வீதியிலே தெம்மாங்குப் பாடலிலே
தேனாறு வந்து
செவியேறும்
நீராழி மண்டபத்தில் நீலாட்சம் வந்தமர்ந்து
நீலாம்பரி யிசைத்துக்
களிக்கும்
நீராம்ப லிதழ்தழுவி
நின்றாடும் வண்டிரண்டு
நெஞ்சார நின்றுகவி
படிக்கும்
செந்தாழை மொட்டெடுத்துச் செந்தூரப் பொட்டுவைத்து
வந்தாயென் வாசலுக்கு
வடிவே
முந்தானை காற்றசைய முந்நூறு பாடல்வர
முன்னாடி வந்ததென்ன
முகிலே
சிந்தாத செம்பவழஞ் சிரித்தாடுஞ் செங்கரும்பு
தந்தாயே தங்கரதத்
தமிழே
எந்நாளு முன்னையெண்ணி யென்வான மெங்குமள்ளி
ஏலேலோ பாடுவதென்
எழிலே
பேராலைப் பெருநிழலில் பெருமாளு னைநினைத்து
பேரோதிப் பெருந்தவத்தில்
கிடப்பேன்
பேராசை யறுத்தெறிந்து பேறாக உனையடைய
பெருஞ்சோதி உன்நினைவில்
பொழிவேன்
போராடும் மனத்தினிலே பூவான கருணையினால்
பூந்தா(து) ஊற்றுகநீ
பொலிவே
மாராட்டம் மண்டியிட மகிழ்ந்தோடி மாலைவர
மாவேந்தே மடிவரித்துக்
கிடப்பேன்.
மூடி மறைத்த உண்மை
கவிஞர் மெய்யன் நடராஜ்
சூடான செய்திகளை வானொலி தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்கள் மூலமாகப் பெற்றுக் கொள்ளும் மக்கள் மொத்தமாக இந்த இரண்டு மாத ஊரடங்கு காலத்துக்குள் எல்லாப் பத்திரிகை களையும் மறந்தே விட்டிருந்தனர் என்பது மறக்க முடியாத உண்மை. அரசாங்கம் ஊரடங்கை மெல்லத் தளர்த்திய இந்தச் சூழ்நிலையில் மறுபடியும் பணியைத் தொடர ஆரம்பித்த அந்தப் பத்திரிகை அலுவலகம், ஒரு குறிப்பிட்ட அளவு பத்திரிகைகளை மட்டும் அச்சடித்து விநியோகிக்கத் தொடங்கியிருந்தது. விநியோகம் தொடங்கி ஒரு வாரமாகியும் விற்பனை அதிகமாக இல்லாமல் அச்சடித்த பத்திரிகைகளில் ஒரு கணிசமான தொகை விற்பனை ஆகாமல் திரும்பி வந்தும் இருந்தன. இது அந்த பத்திரிகையின் மீது மக்கள் கொண்ட அபிமானக் குறைவால் ஏற்பட்ட குறை இல்லை. இரண்டு மாதத்திற்கு மேலாக வருமானம் எதுவும் இல்லாமல் வீட்டுக்குள் அடைந்தபடி வாழ்க்கையை ஓட்டவே படாத பாடுபட்ட மக்களின் கைகளில் பத்திரிகை வாங்கக்கூடப் பணம் இல்லாத குறை என்றால் அது மிகை இல்லை.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாளில் இருந்து மக்கள் தங்கள் குடும்பத்தின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் போராட்டத்தில் குதித்திருந்தனர். ஒருசிலர் தங்களிடம் இருக்கும் தங்க ஆபரணங்களை அடைவு வைத்துப் பணம் பெறுவதற்காக வங்கிகளுக்கும் அடைவு கடைகளுக்கும் அலைந்து திரிந்தனர், ஒருசிலர் வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களைத் தேடி அலைந்து திரிந்தவண்ணம் இருந்தனர். மேலும் பலர் வீட்டில் மனைவி மக்களின் காது, கழுத்தில் பித்தளை ஆபரணம்கூட இல்லாமலும், நம்பிக் கடன் கொடுக்க எவரும் இல்லாமலும் குழந்தைகளின் பசிபோக்க வழியற்றும் இருந்தனர். இந்தத் தருணத்தில் மக்கள் மத்தியில் பத்திரிகை ஒரு அத்தியாவசியமானதாக இல்லாமல் போனது.
ஊரடங்கில் மூடப்பட்ட பல நிறுவனங்கள் மூடப்பட்ட நிறுவனங்களாகவே மாறிப் போயும் விட்டதால் மேலும் பலர் தொழில் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டும் விட்டனர். இப்போதைய நிலையில் புதுத்தொழில் கிடைக்கும்வரை குடும்பத்தைப் பட்டினி என்ற புயலடித்துச் சாய்த்துவிடாமல் காப்பதற்கானபோராட்டங்களில் பலர். இன்னும் சம்பளம் கிடைக்காமல் தவிக்கும் பலர். ஒரு சூறாவளியைப்போல் எல்லா மட்டத்தினரையும் வேரோடு சாயத்துவிட்டிருந்த கொரோனா இப்போதைக்கு வயிற்றுப்பாட்டைக் கவனிக்க வேண்டியதே முக்கியம் என்பதை உணர்த்தி எல்லோரையும் ஓட்டப் பந்தயத்துக் குதிரைகளாக மாற்றி விட்டிருந்தது.
இந்நிலை பத்திரிகைத் துறையினரையும் விட்டுவைக்கவில்லை. பத்திரிகை விற்பனையின் மந்தப் போக்கை மாற்றுவதற்காக அந்தப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சக அலுவலகத்தில் பணிபுரியும் உதவி ஆசிரியர்கள் ஒன்று கூடலுக்கு ஏற்பாடு செய்திருந்தார். கூட்டத்தில் மறுபடியும் பத்திரிகை விற்பனை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார். நரைவிழுந்த வயதும் அனுபவமும் முதிர்ந்த செயலும் ஒருங்கிணைந்த ஆசிரியரின் கேள்விக்குப் பலரும் பலவித ஆலோசனைகள் வழங்கினார்கள். சிலரது நல்ல ஆலோசனை ஏற்கப்பட்டும் பலரது சுமாரான ஆலோசனைகள் நிராகரிக்கப்பட்டும் முடிவுக்கு வந்த நிலையில் இறுதியாகப் பத்திரிகையின் சிறுகதைக்குப் பொறுப்பான ஆசிரியர் தமிழ்மணியிடம் வந்தார்.
“நீங்க என்ன செய்யப் போறீங்க?”
“நான் எல்லோரும் விரும்பக்கூடிய ஒரு நல்ல சிறுகதையைப் பிரசுரிக்க விரும்புகிறேன் சேர்”
“எல்லோரும் விரும்புவது மட்டுமல்ல. இந்தச் சூழ்நிலைக்கு ஏற்றதாக ஒரு கதையைத் தெரிவு செய்து போடுங்க அதுதான் நல்லது”
“இப்போகூட ஒரு நல்ல கதையை வாசித்துக் கொண்டிருந்தேன். நல்ல விறுவிறுப்பான நடையில் ஒருத்தர் எழுதியிருக்கார். சேர் மீட்டிங்கிற்கு கூப்பிட்டதால் வாசிக்கிறதைப் பாதியிலே நிறுத்தி வச்சிட்டு வந்திருக்கேன் சேர்”
“கதையின் கரு?”
“கதாசிரியர் இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்திலேயே இடம்பெற்ற சம்பவங்களை வைத்து எழுதி இருக்கிறார் சேர்”
“நல்லது. கதையை முழுசா வாசித்து ரொம்பப் பொருத்தமாக இருந்தா அச்சுக்கு அனுப்பிடுங்க. இந்த ஞாயிறு பத்திரிகை மூலம் நாம் மறுபடியும் வாசகர்களையும் பழைய மார்க்கெட்டையும் பிடித்தே ஆகவேண்டும்” உத்தரவிட்டார் ஆசிரியர்.
“சரி சேர்”, தலையாட்டிய தமிழ்மணி தன்னுடைய இருப்பிடம் நோக்கி நடந்தார்.
ஒரு சிறுகதையாக இருந்த போதும் நாட்டு நடப்பை டிஜிட்டல் கேமராவால் படம்பிடித்ததுபோல் எழுதப்பட்ட அந்தக் கதையின் சுவாரசியம் உடனே முழுக்கதையையும் பார்த்து முடித்துவிட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது தமிழ்மணிக்கு. இரண்டு பக்கத்தை வாசித்தபோதே இந்தக் கதைதான் இந்த வாரத்துக்குப் பொருந்தும் என்ற நம்பிக்கையை விதைத்துவிட்டது. முடிவு எப்படி அமையுமோ எண்ணிக் கொண்டே தனது இருக்கையில் அமர்ந்து அந்தக் கதையை எடுத்து வாசிக்க முற்பட்டார். ஆனால் சற்றுமுன் வாசித்து விட்டுச் சென்ற அந்தக் கதையை அங்கே காணவில்லை. ஒருவேளை ஆசிரியர் அழைத்ததனால் அவசரமாக ஓடியபோது மேசையில் வைத்த கதை நழுவி கீழே விழுந்திருக்குமோ என எண்ணி மேசைக்குக் கீழே பார்த்தார். அங்கும் காணவில்லை. மேசையின் மீது கிடந்த வேறு கதைகளுக்கிடையில் சிக்கி யிருக்கலாம் என்று ஒவ்வொரு கதையாக எடுத்தும் தேடினார். ஆனால் அவை எதற்குள்ளும் அந்தக் கதை இருக்கவில்லை.
‘என்னடா இது… ஒரே மாயமா இருக்கே... இப்போதுதான் வாசித்து வைத்துவிட்டுப் போனேன் அதற்குள் எங்கே போயிருக்கும்?’, தனக்குள்ளே கேட்டுக் கொண்டவர், ‘ஒரு வேளை கையோடு மீட்டிங் நடந்த இடத்திற்குக் கொண்டு சென்று அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டேனோ?’ என்றவாறு மறுபடியும் எழுந்து மீட்டிங் நடந்த அறைக்குச் சென்றார்.
நீண்ட செவ்வக மேசையைச் சுற்றிலும் நாற்காலிகளும் சுழற்சியை நிறுத்திக் கொண்ட மின்விசிறிகளையும் தவிர சுத்தமாக இருந்த அந்த அறையில் எல்லாப் பக்கமும் சுற்றிப் பார்த்தார். ‘கீழே விழுந்திருக்குமா?’ என்று குனிந்தும் பார்த்தார். அங்கும் இல்லை. ‘அலுவலகப் பையன் குப்பை வாளியில் ஏதும் எடுத்துப் போட்டிருப்பானோ?’ ஆலோசனை முடியுமுன் கால்கள் குப்பை வாளி வைத்திருக்கும் இடத்திற்கு நகர்ந்தது. ஊரடங்கு நேரத்தில் கொலைப் பட்டினியாய்க் கிடந்த தெருநாயின் வயிறாய் காலியாக இருந்தது அது. அங்கும் இல்லை. ‘அப்படியென்றால் அந்தக் கதை எங்கே போயிருக்கும்?’ நல்ல கதை. ‘உண்மை’ என்ற தலைப்பிற்கேற்ப ஊரடங்கு நேரத்தில் மக்கள் வாழ்க்கையில் மூடி மறைக்கப்பட்ட ஓர் உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிய வரிகள். அனுபவித்து எழுதியிருந்தார் கதாசிரியர்.
இப்போது என்ன செய்வது? இனி வேறு ஒரு கதையை வாசித்துத் தெரிவு செய்ய வேண்டும். அதுவும் காலத்திற்கேற்ற கதையாக இருக்க வேண்டும். இப்போதே நேரம் பதினொரு மணி. மூன்று மணிக்குள் கதையை அச்சுக்கு கொடுக்க வேண்டும். அதற்கு முன் ஆசிரியரின் ஒப்புதல் வாங்க வேண்டும். நேரத்தை வீணாக்கக் கூடாது. அறிவுறுத்தியது மூளை. மறுபடியும் தனது கேபினுக்குள் நுழைந்த தமிழ்மணி மீண்டும் ஒருமுறை அந்தக் கதையைத் தேடித் பார்த்துவிட்டு எழுத்தாளர்கள் அனுப்பிவைக்கும் கதைகளைப் போட்டுவைக்கும் அந்த பலகைப் பெட்டியை பார்த்தார். இவ்வாரம் பிரசுரிக்கவுள்ள கதையைத் தெரிவு செய்வதற்காகச் சற்றுமுன் திறந்து மூடாமல் இருந்த அந்தப் பெட்டிக்குள் குவிந்து கிடந்த கதைகளில் ஒன்றை எடுத்தார். வாசித்தார். மாற்றி வைத்தார். மற்றொன்றை எடுத்தார், வாசித்தார், மாற்றி வைத்தார். இப்படி ஒன்றன் பின் ஒன்றாகச் சுமார் இருபது கதைகள் மட்டும் வாசித்திருப்பார். ஒன்றிலும் அவரது மனம் ஒன்றவில்லை. கதைகள் எல்லாம் நல்ல கதைகளாக இருந்தாலும் அவை இந்தச் சூழ்நிலைக்குப் பொருத்தமற்றவையாக இருக்கவே மாற்றி மாற்றி வைத்துக் கொண்டே இருந்தார். இப்போதும் முதலில் வாசித்த அந்தக் கதையைப் பற்றியே நினைவாக இருந்தது அவருக்கு. என்ன அருமையான கதை. எப்படி அது காணாமல் போயிருக்கும். நான் மீட்டிங்கில் இருந்த நேரம் வேறு யாராவது கேபினுக்குள் நுழைந்து கதையை எடுத்துப் போயிருப்பார்களோ…? அப்படி அந்தக் கதையை எடுத்துப்போய் என்னதான் செய்ய முடியும். அலுவலகத்தில் எதிரிகள் யாராவது இருந்தால் எடுத்துப் போயிருப்பார்கள் என்று சொல்லலாம். எல்லோரும் நண்பர்களே... அவரவர் வேலையை அவரவர் செய்வதற்கே நேரமில்லாத நிலையில் கேபினுக்குள் நுழைந்து கதையை எடுத்துப் போகக் கூடிய வகையில் எவரும் இல்லை. அப்படியானால் அந்தக் கதைக்கு நடந்ததுதான் என்ன? மண்டையைப் போட்டுக் குடைந்து கொண்டிருந்தார்.
யாரிடமும் கேட்கலாம் என்றாலும் யாரிடம் கேட்பது? கேட்டால் என்ன நினைப்பார்கள். இல்லாவிட்டால் உன் காபினுக்கு நான் ஏன் வரப்போறேன் என்ற பதிலைத்தான் கூறுவார்கள். இல்லாவிட்டால் என்ன கதை? எப்படியான கதை? யார் எழுதியது? என்றெல்லாம் குடைந்து எடுப்பார்கள். தடியைக் கொடுத்து அடி வாங்குவதைவிடக் கேட்காமல் இருப்பதே நல்லது. நேரத்தைப் பார்த்தார். ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. இது சாப்பாட்டு நேரம். இனி சாப்பிட்டுவிட்டு வந்து பார்ப்போம். உணவுப் பொட்டலத்தை எடுத்துக்கொண்டு கேன்டீனுக்குள் நுழைந்தார். மனைவியின் சமையல் மூக்கைத் துளைத்தது. அருகில் அமர்ந்து சாப்பிட உட்கார்ந்த அலுவலகப் பையன், “சேர். இன்றைக்கு அக்கா கோழிக்கறி சமைச்சிருக்காங்கபோல?”
“ஆமாம் இந்தா எடுத்துக்கோ” அவனுக்கும் கொடுத்துவிட்டு சாப்பிட்டபோதும் மனம் சாப்பாட்டில் லயிக்கவில்லை. இன்னும் அந்தக் கதையைப் பற்றிச் சிந்தித்த வண்ணமே இருந்தது. உண்மை என்ற தலைப்புடன் நடந்த உண்மைகளே கதையாகக் கிடைத்தும் அந்தக் கதை காணாமல் போனது ஒரு துரதிர்ஷ்டம்.
இரண்டு மாதம் யாரையும் எங்கேயும் செல்லவிடாமல் வீட்டுக்குள் முடக்கிப் போட்ட ஊரடங்கு காலத்தில் தலைநகரில் சிக்கிக்கொண்டு சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்த இளைஞர்களின் துயரத்தின் ஒரு துளி. கொழும்புக்குத் தொழிலுக்காக வந்து தொழில் ஓரிடம், சாப்பாடு ஓரிடம், தங்குமிடம் ஓரிடம் என்று வாழ்ந்த மலையக இளைஞர்கள், அறையை விட்டு வெளியே வர முடியாமலும், கையில் பணமிருந்தும் சமைத்துண்ண வழியின்றிச் சாப்பாட்டிற்கு அலைந்த பரிதாப நிலை. இதற்கிடையே சாப்பாடு தேடி அலைந்தவர்களை ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களாகக் கருதி கைது செய்து அடைத்த கொடுமை. என்றெல்லாம் தொடக்கத்திலேயே வரிகளில் சுவாரசியம் மிகுந்திருந்தது அந்தக் கதையின் முதற்பக்கம்.
இரண்டாவது பக்கத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு உரிய காலத்தில் தேர்தல் நடத்த முடியாத நிலையும் அதற்கான எதிர்கட்சிகளின் நிலைப்பாட்டையும், சட்டத் திட்டங்களையும் எடுத்துக் கூறப்பட்டதோடு இந்தக் கொரோனா நோயை வைத்து அரசியல் நாடகமாடும் சிலரின் சுயநலத்தை வெளிக்காட்டும் வேதனையும் காட்டப்பட்டிருந்தது. கொரோனா நோயில் இறந்தவர்களை எரிப்பதே நல்லது இல்லை; மதச் சம்பிரதாயங்களுக்கமைய புதைப்பதே நல்லது என்ற கருத்தை வலியுறுத்தும் சிந்தனைகளும் கொரோனா உதவித் தொகை பெரும்பாலானவர் களுக்குக் கிடைக்காததையோ, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் அது உரிய வகையில் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்ததாகவோ இல்லை. ஒரு மாதத்திற்கு ஐயாயிரம் உதவித்தொகை கொடுத்துவிட்டு இரண்டு மாதத்திற்கு மேலாக அடைத்து வைத்திருக்கும் சில மாகாண மக்களின் மனக்குமுறலோ எடுத்துக் கூறப்பட்டிருந்தது .
மூன்றாம் பக்கத்தை வாசிக்க, முன் வந்த மீட்டிங் அந்தக் கதை காணாமல் போவதற்கான குழியைப் பறித்து விட்டது. சமகாலத்து மக்களின் துயரத்தை அரசுக்கு எடுத்துச் செல்லும் ஒரு பாலமாகவும் இருந்திருக்கக் கூடியது. இப்போது காணாமல் போய்விட்டது. அதற்கு நிகராக இன்னொரு கதையைக் கொடுக்கலாம் என்றாலும் அதற்கும் வழியில்லை. ஆசிரியரிடமும் இந்தக் கதைபற்றி வேறு சொல்லியாகிவிட்டது. இந்நிலையில் மேலும் ஒரு சில கதைகளை வாசிக்க வேண்டியுள்ளதே என்றவாறு கையைக் கழுவிவிட்டு மறுபடியும் வந்து கேபினுக்குள் நுழைந்தார் தமிழ்மணி.
ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையின் விளம்பர பக்கங்களையும் சஞ்சிகைகளையும் முன்னதாகவே வடிவமைத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கும் எல்லாப் பத்திரிகைகளைப் போலவே அந்தப் பத்திரிகையும் வழக்கப்படி கவிதை, கதை, துணுக்குகள், குறுக்கெழுத்துப் போட்டிகள் மற்றும் இலக்கியம் சார்ந்த சஞ்சிகையை வடிவமைத்துக் கொள்ளும் முன்னெடுப்புகளில் மூழ்கியிருந்தது. எல்லோரும் அவரவர் பங்களிப்பினைச் சரியாக வழங்கத் தயாராகி முழுமூச்சுடன் இயங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு திரும்பியிருந்த தமிழ்மணி மறுபடியும் ஒருமுறை அந்தக் கதையைத் தேடிவிட்டு நாற்காலியில் அமர்ந்தார். அவர் அமர்ந்த நேரம் நல்ல நேரமாக இருந்தது. அவர் அடுத்து வாசிக்கக் கையில் எடுத்த கதை ஒன்று சமகாலத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கதையாக அமைந்திருந்தது. அந்தக் கதையின் ஓட்டத்திற்கு நிகராக இல்லை என்றாலும் இது வேறு கோணத்தில் இருந்தது. ஒரு நல்ல கதை காணாமல் போனதிலிருந்து தப்பித்துக் கொள்ள இப்போதைக்கு இந்தக் கதை லாட்டரி டிக்கட்டில் இலட்சங்கள் அடித்தது மாதிரி இருந்தது. இப்போதைக்கு இது போதும். ஆசிரியரிடம் சொன்ன வாக்கைக் காப்பாற்றிவிடலாம் என்று பெருமூச்சு விட்டார்.
அந்தக் கதையைப்போல் இந்தக் கதையும் காணாமல் போய்விடக்கூடாது என்று கவனமாக அதை எடுத்து மாற்றி வைத்துவிட்டு, இதுவரை வாசித்த கதைகளை எல்லாம் கதைகளை இட்டுவைக்கும் அந்தப் பெட்டியிலேயே வைத்தவர் பெட்டியை மூடுவதற்காக அதற்கான மூடியை எடுத்தார். என்ன ஆச்சரியம். ஒரு மூன்று நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் தேடவைத்து மனத்தை அலைக்கழித்த அந்த “உண்மை” நடந்தது எதையும் அறியாத ஒரு அப்பாவியைப் போல் அங்கே சிரித்துக்கொண்டிருந்தது… ஆம். “உண்மை” என்ற அந்தச் சிறுகதையை இதுவரையிலும் பெட்டியின் மூடியல்லவா மறைத்திருந்தது. எல்லா இடத்திலேயும் தேடிய கதை அவசரத்தில் மின் விசிறியின் காற்றுக்குப் பறந்துவிடாமல் இருக்கப் பெட்டியின் மூடிக்கடியில் வைத்தது அப்போதுதான் நினைவுக்கு வரச் சிரித்துக்கொண்ட தமிழ்மணி, ‘சரி, இனி என்ன செய்வது. இப்போதாவது கிடைத்ததே’ என்ற சந்தோசத்தில் இதுவரையில் மூடி மறைத்திருந்த ‘உண்மை’ என்ற அந்தக் கதையின் தொடர்ச்சியையும் வாசிக்கத் தொடங்கினார்.
Subscribe to:
Posts (Atom)