'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 15, 2019

தமிழ்க்குதிர் - 2050 கடக மின்னிதழ்

 தமிழ்க்குதிர் - கடக மின்னிதழ்

ஆசிரியர் பக்கம்

அன்பானவர்களே வணக்கம்!

மரபு கவிதைகள், இலக்கண, இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள் எனப் பல பயனுள்ள தகவல்களைத் தாங்கிவரும் தமிழ்க்குதிரின் எட்டாம் மின்னிதழ் வழியாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

பன்முகத் தன்மை கொண்டது நம் பாரத நாடு. அதன் ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு மொழி, பண்பாடு,  கலையொழுக்கம் கொண்டது என்பது நாம் அறிந்ததே. ஆதலின், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நம் அரசியலமைப்புச் சட்டம் நமக்கு அறிவுறுத்தும் பாடம்.

எல்லாவற்றிலும் வேற்றுமை கொண்ட மக்களிடம் காணும் பல்வேறு முறைமைகளைக் கருத்தில் கொள்ளாமல் ஒற்றுமைப்படுத்துகிறேன் என்று கூறிக்கொண்டு பன்முகத் தன்மையை அழிக்கும் வழிகளை வகுப்பதும், ஒரு சார்புத் தன்மையோடு செயல்படுவதும் அரசனுக்கு அழகன்று. அது சரியான தீர்வாகாது. இது நாட்டில் குழப்பத்தையே ஏற்படுத்தும். குடிகளிடையே பகைமையுணர்வை விதைக்கும். அக்குடிகளையே அழிக்கும். குடிதழீஇக் கோலோச்சாது முறைகோடும் மன்னனால் தமக்குத் தாமே அழிவைத் தேடிக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவோம்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்

என்பது வள்ளுவம்.  நாம் என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவு நமக்கு வேண்டும். வாழ்க தமிழ். வாழ்க பாரதம்.

தமிழன்புடன்
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

பெற்றோரை மறவேல்

பைந்தமிழ்ச் செம்மல் 
மன்னை வெங்கடேசன்

எண்சீர் விருத்தம் (காய் காய் மா தேமா)

பெரிசென்றும் பைத்தியங்கள் இவர்கள் என்றும்
    பிடிவாதக் காரரென்றும் ஏச்சுப் பேச்சால்
பரிபவந்தான் செய்கின்ற பலரும் உண்டு
    பாவமங்கு முதியோரின் வருத்த மெல்லாம்
புரியாத மானிடரும் மனிதர் தாமோ
    புவியிவரைத் தாங்குதலும் சரியோ என்றே
எரிகின்ற வென்னெஞ்சு பொறுக்கு தில்லை
இங்கென்றன் ஏக்கத்தைப் பகிர்ந்து கொள்வேன்
                                                                                            1
 கருத்தோடே தம்புதல்வர் கல்வி கற்கக்
    கழனிவிற்றுக் காசாக்கி யன்பு கொண்டே
தெருத்தெருவாய்த் தாமுழைத்துத் துயரம் கண்டு
    சிறிதேனும் அஞ்சாமல் தம்பிள் ளைகள்
வருங்காலம் நன்றாக இருக்க மேனி
    வருத்தியவர் பின்னாளில் வருந்து மாற்போல்
இருக்கின்ற நிலைகண்டு நெஞ்ச மெங்கும்
    எரிதணலா லெரிப்பபோலே கொதிக்கு தன்றோ
                                                                                                2
 தாய்ப்பாலில் அன்பென்னும் அமுதம் சேர்த்துத்
    தானூட்டும் அன்னையவள் பாதம் தொட்டு
வாய்ப்புற்ற போதெல்லாம் வணங்கி நிற்க
    மனமில்லா மக்களவர் மக்கள் அல்லர்
பேய்பிடித்த கயவரென்றே சொல்வேன் இங்கே
    பின்னுமவர் உண்ணவரும் சோற்றை யெல்லாம்
நாய்க்கிடுவீர் நன்றியுள்ள அவற்றைக் கண்டு
    நலம்பெறட்டும் அவருடைய மனநோய் ஆங்கே!
                                                                                               3
ஒருசிலரும் இருக்கின்றார் உலகில் இங்கே
    உருவாக்கி விட்டோரை உடன்வைத் துள்ளார்
இருந்துமங்கே பெற்றோரைத் தம்ப ணிக்கே
    ஏவலராய் வைத்திருந்து கொடுமை செய்வார்
அருமையெனப் பிள்ளைகளை வளர்த்தோர் தம்மை
    அடிமைகளாய் வைத்திருக்கும் பாவி மைந்தர்
இருந்துமிங்குப் பயனென்ன எமனென் பானே
    எடுத்துப்போ அவருயிரை எனவென் பேனே!     4

(வேறு)
(நிலை மண்டில ஆசிரியப்பா)

எந்தவொரு செடிக்கும் ஏற்றவேர் இல்லையேல்
இந்தப் புவியினில் ஏது வளர்ச்சி?
தந்தைதாய் இல்லையேல் தரணியில் ஏதுசேய்
இந்தவோர் உண்மையை எதிர்ப்பவர் உண்டோ?
பாலினை ஊட்டிப் பாசத்தைக் காட்டி            5
நுலினைப் போல நொசிந்தவள் தாயென்றால்
பள்ளியில் சேர்த்துப் பயிலச் செய்து
வெள்ளிபோல் மின்னுமால் வைப்பவர் தந்தையே
இல்ல மரமதில் இவர்கள் வேரெனில்
நல்ல பிள்ளைகள் நயத்தகு விழுதன்றோ!          10
ஆல மரத்தினை அழகுறக் காத்திடும்
நீள விழுதினை நிகர்த்திடும் பிள்ளைகள்
எம்மைக் காப்பரென இருந்திடும் பெற்றோர்க்கு
நன்மை செய்வதே நன்றிக் கடனாம்
என்பதை உணர்வீர் இவ்வுல கோரே           15
மன்பதை சிறக்க வாழ்ந்திடு வீரே!

தீதும் நன்றும்...

பைந்தமிழ்ச் செம்மல் 
ஆதிகவி (எ)  சாமி சுரேசு

இளவேனிற்கால மாலை நேரம். தெற்கிலிருந்து தென்றல் மெல்லென வீசிக் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் அலுவலகத்திலிருந்து இல்லம் திரும்பி உடைமாற்றி வடக்குப் பார்த்துக் கட்டப்பட்ட வீட்டின் சனி மூலையின் முற்றத்தில் ஓய்வாக அமர்ந்தான் அரங்கன். நடுத்தர வயது. நெடுநெடு உயரம். இரட்டை நாடி தேகம், மாநிறம், அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தலைமுடியில் எட்டிப் பார்க்கும் நரைமுடி என ஒரு சராசரித் தமிழர்க் கூட்டத்தில் ஓர் ஆளாகக் காட்சியளித்தான். வழக்கம்போல, வந்தவனுக்குச் சூடான தேநீர் நீட்டினாள் அவன்மனைவி மகிழினி. சமகால இல்லத்தரசிகளின் இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாய் இருந்தாள் அவள்.

மாதச்சம்பளம் பெற்றுச் சொற்ப நாட்களே நகர்ந்திருந்ததால் கடுகடுப்பிற்கும் வெறுப்பிற்கும் அங்கு வேலையில்லாமல் இருந்தது. தேநீரை உறிஞ்சிக் கொண்டே அலைபேசியில் முகநூலை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான். அவனருகில் நின்றபடி மகிழினியும் பார்த்துக்கொண்டிருந்தாள். பளிச்சென்று ஒரு தம்பதியரின் புகைப்படம் அவன் கண்ணில்படவே மீண்டும் திரையை விரலால் மேலே தள்ளிப் பார்த்தான். யாரோ ஒரு தம்பதியருக்கு இவனது நட்பிலிருக்கும் ஒருவர் வாழ்த்துச் செய்தியோடு அவர்களின் பக்கத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட அவர்களின் புகைப்படத்தையும் போட்டிருந் தார்கள். விருப்பங்கள் முந்நூற்றைக் கடந்திருந்தன. பின்னூட்டங்களும் பெருமளவு இருந்தன. ஒன்றிரண்டு பகிர்வுகளும் இருந்தன.

சில வினாடிகள் படத்தை நோக்கியவன் மேலே செல்ல யத்தனித்தான். மகிழினி கையமர்த்திவிட்டு அரங்கனிடம் கேள்விகளைக் கேட்கலானாள்.

'அந்தப் பொண்ணு பார்க்கறதுக்கு மூக்கும் முழியுமா நல்லா இலட்சணமாத்தானே இருக்கு?'
'ஆமாம்'
'எவ்வளவோ பேர் விருப்பம் தெரிவித்துள்ளார்கள் இல்லையா?'
'ஆமாம்'
'பின்ன, நீங்க மட்டும் எதுவும் செய்யாமல் அப்படியே போறீங்களே, ஏன்? படத்தைப் பதிவேற்றிய உங்கள் நண்பர் அதிக விருப்பங்களைப் பெற்றுவிடக்கூடாது என்கிற காழ்ப்புணர்வா?' எனக் கேட்டாள் மகிழினி.
வெள்ளந்தியாய்க் கேட்டவளைப் பார்த்து வெடிச் சிரிப்புச் சிரித்தான் அரங்கன். இவன் சிரிப்புச் சத்தத்தைக் கேட்ட பக்கத்து வீட்டுப் பெண்கள் திரும்பி இவனைப் பார்த்தனர். அப்படி அவன் சிரித்தது அவளுக்கு எரிச்சலை உண்டாக்கியதால் கடுப்புடன் கேட்கலானாள்.

'இப்ப எதுக்கு இந்தச் சிரிப்பு?' அவள் முகம் சற்று வதங்கியிருந்தது.

தொண்டையைச் செருமிக் கொண்டு அரங்கன் பேசத் தொடங்கினான். 'முண்டம்... முண்டம்... உன்னோட அறிவு இவ்ளோதானா? நான் காழ்ப்புணர்வால் விருப்பமோ பின்னூட்டமோ இடுவதில்லை என்றால் அவனின் எந்தப் பதிவுக்குமே அதைச் செய்யணுமே. ஆனால் நான் அப்படியா செய்கிறேன்? நல்ல பதிவுகளுக்கு எப்போதும் விருப்பங்களைத் தெரிவித்தே இருக்கிறேன். அதற்காக இது நல்ல பதிவு இல்லையா என்று கேட்காதே. நிச்சயமாய் இது நல்ல பதிவுதான். எனக்குப் பிடிக்கல, அதான்' என்றான்.

'உங்களுக்கு எதுதான் பிடிச்சிருக்கு?' எனக் கேட்டு முக்கினாள். பின்பு அவளே தொடர்ந்தாள். 'என் சிநேகதிகள் எல்லோரும் அவர்களது புகைப்படத்தை முகநூலிலும் புலனத்திலும் பதிவேற்றி மகிழ்கிறார்கள். ஏன் உங்கள் தம்பி மனைவிகூட அடிக்கடி படத்தை மாத்தி மாத்திப் போடுறா. என் படத்தை என்றாவது ஒரு முறையாவது போட்டிருக்கிறீர்களா? என்று வினாவினாள்.

அரங்கன் மெல்லிய புன்முறுவலோடு பதில் கூறினான். 'இதோ பார் மகிழு! அவனவன் அவன் பொண்டாட்டி படம், பொண்ணுங்க படம், மருமகள் படம்னு முகநூலில் போட்டு அதிக விருப்பங்களைப் பெற்று மகிழ்கிறார்கள். அந்த அதிக விருப்பங்க ளெல்லாம் அவனுக்குக் கிடைத்தவை என்றா நினைக்கிறாய்? இல்லை. நிச்சயமாய் இல்லை. அதெல்லாம் அந்தப் பெண்களுக்கு விழுந்தவை. அதன் பின்னணி இரகசியம் என்ன தெரியுமா?' எனக் கேட்டுப் பொருள்பொதிந்த பார்வை பார்த்தான்.

ஏதோ புரிந்தவளாய், 'அழகைப் பாராட்டி ஆராதித்திருப்பார்கள், இதிலென்ன தவறு?' என வேண்டுமென்றே கேட்டாள்.

அவளின் மனவோட்டத்தை அறிந்தவன், அறியாதவன் போலும் பதில்மொழி உரைத்தான். 'நீ சொல்வது சரிதான். அழகைப் புகழ்வதில் தவறில்லைதான். ஆனால், தன் மனைவியின் அழகை ஊரார் புகழ்வதும், இரசிப்பதும், நயந்து விருப்பமிடுவதும் நல்லாவாயிருக்கு? அதுக்குப் பேர் வேற' எனச் சொல்லி முடித்தான்.

'விருப்பத்திற்குப் பின்னால் இவ்ளோ இருக்கா?!' என விழி விரித்தாள்.
'ஏன் உனக்குத் தெரியாதா? புலனத்தில் பதிவேற்றிய படங்களைத் தரவிறக்கி உன் சினேகிதியை ஒருவன் மிரட்டியது?'
'ஆமாம்... ஆமாம்'
'அதிலிருந்து அவள் விடுபடுவதற்கு எத்தனை பாடுபட்டாள்?'
' '
'அதெல்லாம் நமக்குத் தேவையா?'
'ஐயையோ... வேணாம் வேணாம். இருக்கிற கண்ணாறே போதும்'
'இப்போ தெரியுதா... ஏன் உன் படங்களைப் போடுவதில்லை என்று?'
'ம்'

'இந்த மாதிரி பதிவுகளையும் நான் ஊக்கப் படுத்துவதில்லை'
'சரிதான்' என்றவள் 'பெண்களே நிறைய படங்களைப் போடுகிறார்களே?' என அப்பாவியாய்க் கேட்டாள்.
'அதில் பாதி, உண்மை முகவரி கிடையாது. ஆண்களே பெண்கள் படத்தைப் பயன்படுத்தி விருப்பப் பிச்சை எடுப்பது. மேலும் சைபர் கிரைம் போலிஸாரும், பலரைக் கண்காணிப்பதற்காகப் பெண்கள் ஐடியில் உலவுகிறார்கள். நிறைய கம்பளைண்ட் இருக்கிறது. அதாவது எதிலும் சிக்காத வரையில் எந்தச் சிக்கலும் இல்லை. மாட்டிக்கிட்டா மீளுவதென்பது குதிரைக் கொம்புதான்' என நீண்ட விளக்கம் கொடுத்தான்.

'தன் மனைவியின் படத்தைப் போடும் கணவன்மார்களுக்கு இதெல்லாம் தெரியாதா?'
'தெரியலாம். தெரியாமலும் இருக்கலாம்' என்று மையமாகப் பதிலிறுத்தான் அரங்கன்.
சற்று அமைதியடைந்தவள் தொண்டையைச் செருமிக் கொண்டு மீண்டும் அவனைச் சீண்டலானாள்.

'சரி.. நீங்கள் சொல்லும் சமாதானம் சற்று ஏற்றுக் கொள்ளத்தக்கதுதான். இருப்பினும்.. என்று இழுத்தாள்'
'என்ன.. என்ன.. இருப்பினும்' என்று விழியுயர்த்தினான் அரங்கன்.
'பெண்களின் படத்துக்குத்தான் இப்படிச் சொல்லிவிட்டீர்கள். சரி. குழந்தைகள் படத்தையுந் தான் தவறாகப் பயன்படுத்துகிறார்களாம். அது மட்டும் சரியா? நீங்கள் கூடத்தான் நம் குழந்தைகளின் படத்தைப் பதிவேற்றியுள்ளீர்களே' என்று வினவியவள் முகத்தில் அரங்கனை மடக்கிவிட்டோம் என்கிற பெருமிதம் பொங்கியது. அரங்கனும் அதைக் கவனிக்கத் தவறவில்லை.

உண்மையில், இவள் இப்படிக் கேட்பாள் என்று அவன் நினைக்கவேயில்லை. அவள் கேள்வியில் இருந்த நியாயம் அவன் அடிவயிற்றின் அமிலத்தை அதிகரித்தது. அவள் சொன்னவை முற்றிலும் சரியே எனச் சிந்தனை வயப்பட்டான் அரங்கன்.

இந்தச் சன்னமான இடைவெளியைப் பயன்படுத்தி மீண்டும் அவளே தொடர்ந்தாள். 'சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் பிள்ளைகளின் படத்தைத் தெரிவுசெய்து, அவர்களைக் கடத்திச், சிறுபிள்ளைகளிடம் தம் பாலுணர்வு வெறியைத் தீர்த்துக் கொள்ளும் ஒரு கூட்டம் செயல்படுதாமே.. நீங்கள் கேள்விப் படவில்லையா?' என மீண்டும் ஓர் அதிர்ச்சியை அரங்கனுக்குக் கொடுத்தாள்.

வீட்டிலேயே இருக்கும் இவளுக்கு இதெல்லாம் எப்படித் தெரிகிறது என்று மனத்தினுள்ளே வியந்தவனுக்குப் பதிலிறுப்பதுபோல், 'பள்ளியில் எனது நண்பர்கள் பேசிக் கொண்டார்கள்' எனச் சொல்லியமர்ந்தாள்.

'அடடே... நண்பர்களிடையே இவற்றையெல்லாம் விவாதிக்கிறீர்களா... அருமை... அருமை' என்று உள்ளன்போடு பாராட்டியவன் மேலும் தொடர்ந்தான்.

'மகிழ், நீ சொல்வது அத்தனையும் மறுக்கவியலாத உண்மைகள். நான் செய்திருந்தாலும் யார் செய்திருந்தாலும் அது தவறே என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமேயில்லை. என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள வியலாது. முகநூலில், நான் தனியாக இருக்கிறேன் (am home alone) என்று பதிவேற்றிய (status upload) ஒரு பதின்பருவப் பெண்ணை, அவளின் முகவரியை அறிந்துகொண்ட சமூக விரோதிகள் சிலர், அப்பெண்ணின் வீடுபுகுந்து அவளைச் சீரழித்த நிகழ்வு நடந்துள்ளது. இன்னும் இதுபோன்ற எத்தனையோ நிகழ்வுகள் வெளிச்சத்திற்கு வராமலேயே நடந்துள்ளன. நடந்துகொண்டும் உள்ளன. சிறு பிள்ளைகளிடம் தொலைப்பேசியைத் தராதீர்கள் என்ற எச்சரிக்கையோடு சிறுபிள்ளைகளின் படங்களையும் பதிவேற்றம் செய்யாதீர்கள் என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்' என நீண்ட சொற்பொழிவை ஆற்றினான்.

அவளின் மனநிறைவைக் கண்ணுற்று இவனும் அகமகிழ்ந்தான்.

உள்ளறையில், இவர்களின் ஆறாம் வகுப்புப் படிக்கும் அன்பு மகள் இனியவள், "தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்கிற கணியன் பூங்குன்றனாரின் பாடலைச் சத்தமாகச் சொல்லி மனனம் செய்து கொண்டிருந்தாள்.

மகிழினியின் கண்களும் அரங்கனின் கண்களும் பொருள் பொதிந்த பார்வையைப் பரிமாறிக் கொண்டன.

சேயெனைக் காத்தாலென்ன ?

பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்

பன்னிருசீர்ச் சந்த விருத்தம்

ஆலால கண்டனே நாதவடி வானவா
     ஆதிமுத லானகுருவே !
  அலையாடு நதியோடு பாதிமதி யுஞ்சூடி
        அம்பலத் தாடுமழகே !
சூலாயு தத்தோடு மான்மழுவை யுங்கொண்டு
     துன்பந்து டைக்குமிறையே !
   சூழ்ந்திடும் வினைகளைத் தோற்றோட வைத்திடும்
        தூயனே கருணைவடிவே !
மூலாதி மூலமாய்ச் சோதியுரு வானவா
     முன்னின்று வழிநடத்திடு !
  முப்புரமெ ரித்தவா என்பாட்டு நீகேட்டு
       மும்மலம கற்றியருளே !
சேலாடு விழியாளை இடமாயி ணைத்தவா
     சேயெனைக் காத்தாலென்ன ?
சீர்மிக்க வடியாரை யன்பினா லாண்டிடும்
     தில்லையின் நடராசனே !!!

நானென்ற ஆணவம் சிந்தைதனி லேறாது
    நாதனே எனைமாற்றுவாய் !
  நம்பினே னுன்னையே வாழ்விலொளி ஏற்றவே
     நல்லதோர் வழிகாட்டுவாய் !
வானவர் போற்றிடும் தேவாதி தேவனே
     வடிவேல னின்தந்தையே!
  வளமாக நலமாக குவலயந் தன்னிலே
       வாழவைப் பாயீசனே !
ஏனினுந் தாமதம் கேட்கவே விழைகிறேன்
     இனியனே விடைவாகனா !
  எளியேனை யாட்கொள்ள அட்டியெது முள்ளதோ
       இன்றதனை யுஞ்சொல்லுவாய் !
தேனினிய வாசகம் நித்தமும் பாடியுன்
     திருவருளை நாடிநின்றேன் !
  தில்லையுட் கூத்தனே பார்போற்று மீசனே
       செவிகேட்டு விரைவாகவா !!!

அறஞ்சாரா நல்குரவு

கவிஞர் ஜெகதீசன் முத்துக்கிருஷ்ணன் 

தன் முயற்சியில் சற்றும் மனம் தளரா விக்கிரமாதித்தன், மீண்டும் முருங்கை மரத்தின் மீதேறி, வேதாளத்தை இறக்கித் தன் தோளில் சுமந்துகொண்டு மயானத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

வேதாளம் ஹஹ்ஹா! ஹஹ்ஹா! என்று பலமாகச் சிாித்து, "விக்கிரமா! உன் தளராத முயற்சியைப் பாராட்டுகிறேன்; உனக்கு வழிநடைக் களைப்புத் தொியாமல் இருக்கக் கதையொன்று சொல்கிறேன் கேள்! கதையின் முடிவில் உன்னிடம் ஒரு கேள்வி கேட்பேன்; அதற்குச் சாியான பதில் கூறாவிட்டால், உன் தலை வெடித்து சுக்கு நூறாகச் சிதறிவிடும்" என்று எச்சாிக்கை செய்தது .

விக்கிரமனும், "சாி! வேதாளமே! கதையைச் சொல்!" என்று சொன்னான் .

"காவிாிப்பட்டிணம் என்ற ஊாில் முன்னொரு காலத்தில், சந்திரசேகரன் என்ற செல்வந்தன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்குக் கோடிக் கணக்கான மதிப்புடைய சொத்துகள் இருந்தன. தனசேகரன், குணசேகரன் என்ற இரண்டு மகன்கள் இருந்தனா். தன் மனைவி இலட்சுமியுடன் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தான்.

திடீரென்று சந்திரசேகரன் ஒருநாள் நோய்வாய்ப் பட்டான். வயதான காரணத்தால் மருத்துவா்கள் கொடுத்த மருந்துகளால், பயன் ஏதும் ஏற்பட வில்லை. தன் இறுதிக் காலம் நெருங்கிவிட்டதை அறிந்த சந்திரசேகரன், தன் சொத்துகளைச் சாிபாதியாகப் பிாித்துத் தன் இரு மகன்களுக்கும்  உயில் எழுதி வைத்தான்.

தாயைக் கவனிக்கும் பொறுப்பு, இரு மகன்களுக்கும் உள்ள காரணத்தால், ஒவ்வொரு மகனும் ஆறு மாதங்கள் முறைவைத்துத் தாயைப் பராமாிக்க வேண்டும் என்றும் உயிலில் எழுதி வைத்துவிட்டுக் கண்ணை மூடினான் .

இரண்டு மகன்களும், திருமணம் செய்துகொண்டு நிம்மதியாக வாழ்ந்து வந்தனா். பெற்ற தாயையும், முறைவைத்து, அவளது மனம் நோகாமல் காத்து வந்தனா். இவ்வாறு இருக்கையில், இரண்டு மகன்களுடைய வாழ்க்கையிலும் விதி விளையாட ஆரம்பித்தது.

பொிய மகன் தனசேகரனுக்குத் தீய நண்பா்களுடைய நட்பு ஏற்பட்டது. அதன் காரணமாகக் குடிப்பழக்கத்திற்கு அடிமை யானான். வேசியா் தொடா்பும் ஏற்பட்டதால், குன்றன்ன செல்வம், வேகமாகக் கரைந்தது. கொஞ்ச நஞ்சம் இருந்த சொத்தையும் சூதாடித் தொலைத்தான். மகனின் நிலைகண்டு, தாய் மிகவும் வேதனைப்பட்டாள். அவள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவன் திருந்துவதாக இல்லை. இனி அவனைத் திருத்த முடியாது என்று தொிந்துகொண்ட அவள், அவனுக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை. ஒருநாள் அவனிடம் சொல்லாமலேயே வீட்டைவிட்டு வெளியேறினாள். நேராக இளைய மகன் குணசேகரன் வீட்டுக்கு வந்தாள்.

குணசேகரன் நிலைமையோ, அவன் அண்ணன் தனசேகரனைவிட மோசமாக இருந்தது. மளிகைக் கடை வியாபாரத்தில், கொடுத்த கடனை வசூல் செய்ய முடியாத காரணத்தால், பெருத்த நட்டம் ஏற்பட்டது. நிதி நிறுவனம் ஒன்றில் இலட்சக் கணக்கில் முதலீடு செய்திருந்தான். அந்த நிதி நிறுவனத்தின் முதலாளி, ஒருநாள் இரவோடு இரவாக எல்லோருடைய பணத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டான். மீதியிருந்த பணத்தையும், தன் மனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்காகச் செலவிட்டிருந்தான். இப்போது அவன் அடுத்த வேளைச் சோற்றுக்குக்கூட வழியில்லாமல் அலைந்து கொண்டிருந்தான். அவன் நிலைகண்ட தாய், அவனுக்காக மிகவும் வருந்தினாள். அவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.

தன் இளைய மகனுக்கும் அவள் பாரமாக இருக்க விரும்பவில்லை. ஒருநாள் அவனிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினாள்.

தனசேகரனும் குணசேகரனும் கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தனா். சொல்லாமல் கொள்ளாமல் போன தாயைப் பல இடங்களிலும் தேடி அலைந்தனா்.

இந்த நிலையில் ஒருநாள், குணசேகரனின் நண்பன் ஒருவன், குணசேகரனைப் பாா்க்க வந்தான்.  அவனைப் பெற்ற தாய், பக்கத்து ஊாில், பிச்சை
எடுப்பதாகச் சொன்னான். இதனைக் கேட்டு அதிா்ச்சியடைந்த குணசேகரன், தன் அண்ணனை அழைத்துக் கொண்டு பக்கத்து ஊருக்குச் சென்றான். அங்கே பேருந்து நிலையத்தில், தங்களைப் பெற்ற தாய், பிச்சையெடுக்கும் காட்சியைக் கண்டு, இருவரும் கண்ணீா் விட்டனா். அவளது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனா். மீண்டும் வீட்டுக்கு வருமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டனா். முதலில் மறுத்த அந்தத் தாய், பிறகு வருவதற்கு ஒப்புக் கொண்டாள். ஆனால்  குணசேகரன் வீட்டிலேயே தங்கியிருப்பதாகவும், பொியவன் தனசேகரன் வீட்டுக்கு எப்போதும் வரமுடியாது என்றும் உறுதியாகத் தொிவித்துவிட்டாள். இந்த நிபந்தனைக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால், தன்னை விட்டுவிடு மாறும், தான் வழக்கம்போல் பிச்சையெடுத்துப் பிழைத்துக் கொள்வதாகவும் தொிவித்துவிட்டாள். வேறு வழியின்றி இருவரும் தாயின் நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டனா்.

கதையைச் சொல்லி முடித்த வேதாளம், "விக்கிரமா! குணசேகரனின் வீட்டுக்கு வருவதாக ஒத்துக்கொண்ட தாய், பொியவன் தனசேகரன் வீட்டுக்குப் போக மறுத்தது ஏன்? இதற்குச் சாியான விடை சொல்லாவிட்டால், உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகச் சிதறிவிடும்" என்றது.

உடனே விக்கிரமன், "வேதாளமே! இருவருமே வறுமையில் வாடினாலும், வறுமை வந்தவிதம் மாறுபட்டது. வியாபாரத்தில் நட்டம், நிதி நிறுவனக் காரனின் மோசடி, மனைவியின் மருத்துவச் செலவு ஆகிய காரணங்களால் குணசேகரனுக்கு வறுமை வந்தது. இந்த வறுமைக்கு அவன் காரணமல்ல. இந்த வறுமை அறத்திற்கு உட்பட்டதே. அவன் யாரையும் ஏமாற்றவில்லை. இந்த வறுமையை ஐயன் திருவள்ளுவா் ‘அறன் சாா்ந்த நல்குரவு’ என்று கூறி, அதை நியாயப்படுத்துகிறாா். ஆனால் தனசேகரனுக்குக் குடிப்பழக்கம், வேசியா் தொடா்பு, சூதாடுதல் ஆகிய அறத்திற்குப் புறம்பான செயல்களால் வறுமை வந்தது. அவனுடைய வறுமையை அவனே தேடிக் கொண்டது. இத்தகு வறுமையை ஐயன் வள்ளுவா் ‘அறஞ்சாரா நல்குரவு’ எனக் குறிப்பிடுகின்றாா். பெற்ற தாய், பலமுறை இடித்துக் கூறியும் தனசேகரன் திருந்தவில்லை. ஆகவே தங்குவதற்கு இளைய மகன் வீட்டை அந்தத் தாய் தோ்ந்தெடுத்ததில் எந்தத் தவறும் இல்லை.

விக்கிரமாதித்தனின் இந்தச் சாியான பதிலால் திருப்தி அடைந்த வேதாளம், மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தின்மீது ஏறிக்கொண்டது.

குறள்:
அறஞ்சாரா நல்குர(வு) ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.

பொருள்:
அறத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்து ஒருவனுக்கு வறுமை வந்தால், அவனைப் பெற்ற தாய்கூட, அவனைச் சொந்தம் கொண்டாட மாட்டாள்.

இவள் இப்படித்தான் (அந்தாதி)

பைந்தமிழ்ச் செம்மல்
நிர்மலா சிவராசசிங்கம்

அன்பினால் ஆள்வேன் என்றும்
    அகிலமும் என்னைப் போற்ற
என்றனின் அன்பை ஏற்க
    இனியன உரைப்பேன் நாளும்
கன்னியாந் தமிழைப் போற்றிக்
    காவியம் படைத்து நாளும்
உன்னத உயர்வு கொள்ள
    உள்ளமும் உவகை காணும் 1

காண்பவர் என்னைப் போற்றக்
    காரிய மெல்லாம் செய்வேன்
வேண்டிய வெல்லாம் ஈசன்
    விருப்புடன் கொடுப்பேன் செய்து
வீண்வழுப் பேசி நின்று
    மெய்யுடல் வருத்த வைத்தால்
நாண்மலர் போன்றே நின்று
    நம்புவேன் துணையி றையே 2

இறைவனின் துணையை ஏற்றே
    எளிதெனச் செயல்கள் செய்வேன்
பெறுமதி யற்ற சொல்லைப்
    பிழையெனச் சுட்டிச் செல்வேன்
முறுவலைக் காட்டி உள்ளம்
    முடக்கினை மறைத்து நிற்பேன்
பிறரது சுமையின் துன்பப்
    பிணியினைப் போக்கு வேனே 3

பிணிகளைப் போக்க நாளும்
    பெருவழி நாடிச் செல்வேன்
துணிவுடன் முன்னே சென்று
    துயரினைத் துடைத்து நிற்பேன்
மனத்தினில் அன்பு பொங்க
    மாற்றமும் வேண்டி நிற்பேன்
உணர்வினி லென்றும் மெய்ம்மை
    உள்ளமும் மகிழ்வெள் ளத்தில் 4

இல்லறம் மகிழ்வில் பொங்க
    ஏற்றமும் வாழ்வில் கூடச்
செல்வமும் நிலைத்து நிற்க
    சிறப்பெனக் கொள்ளும் யாவும்
நல்லின மனிதர் போற்ற
    நன்றிகள் சொல்லி நானும்
மெல்லிதாய்ப் புன்ன கைப்பேன்
    மேதினி இதில்ந கர்ந்தே 5

நகருவேன் உணர்ந்து மண்ணில்
    நகைத்தெனை வீழ்த்த எண்ணும்
முகத்தினில் விழிக்கு முன்னர்
    முயற்சியைத் தொடர்ந்து செய்வேன்
அகத்தினில் நஞ்சை வைத்தே
    அழித்திட நினைக்கும் தீயோர்
அகத்திருள் நீங்க வேண்டி
    அமைதியாய்க் குறைகள் நீக்கி 6

குறைகளை நீக்கி விட்டுக்
    குவலயம் மகிழ வாழ்வேன்
நிறைகளை வளர்த்துச் செல்வேன்
    நிம்மதி மனத்தில் கொள்வேன்
அறவழி தன்னை நாடி
    அடுத்தடி எடுத்து வைப்பேன்
இறையினை வணங்க நாளும்
    இடரெனும் துயரும் நீங்கும் 7

துயரினை மறைத்துத் தாங்கிச்
    சோர்வினை நீக்கி நல்ல
செயலினை முடிக்க நாளும்
    சிந்தையைத் தேற்றி நிற்பேன்
உயரிய முயற்சி செய்து
    உயர்வினை நாடச் செய்வேன்
கயவரின் சூழ்ச்சி யெல்லாம்
    கடிதெனத் தொலைத்து யர்வேன் 8

உயர்வழி இஃதாம் என்றே
    உள்ளமும் ஒப்ப நானும்
வியத்தகு செய்கை யெல்லாம்
    விரைவினில் முடித்து நிற்பேன்
செயலதைத் தடுத்து விட்டால்
    சிலையென நிற்க மாட்டேன்
முயற்சியைத் தொடர்ந்து செய்வேன்
    முடிவினில் வெற்றி தொட்டு 9

உதவுவன் அருகில் நின்றே
    உள்ளமும் மகிழ்வில் பொங்கச்
சதிவலை விரித்துக் கொல்லத்
     தழும்பினை அகற்றி நானும்
எதிர்மொழி யற்றுக் காணும்
     இடர்களைத் தகர்த்தி வீழ்த்தி
எதிர்மறை யாளர் முன்னே
     என்னுடை ஆய்தம் அன்பே! 10

இலக்கியச் சாரல் - 4

முனைவர் த. உமாராணி

அன்பு

இலக்கியங்களை நம் முன்னோர் அகம், புறம் என்று பிரித்து வைத்துள்ளனர். அதில் அக இலக்கியத்தை விரும்பாத மாந்தர்களே இல்லை எனலாம். இதை மறுத்தலும் இயலாது. அன்பு நிறைந்ததுதான் அக வாழ்க்கை. இயற்கையாகவே மனிதன் அன்புக்கு அடிமை என்பது நிதர்சனமான உண்மை. அதனால்தானோ இவ்விலக்கியம் மாந்தர் மனத்தில் நீங்கா இடம் பிடித்துள்ளது என்பதை அறியும் பாடல்:

ஒன்றன்கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை - கலி.

அதாவது, ஓர் ஆடையை இரண்டாகப் பிரித்து உடுத்தும் வறுமைநிலை வந்தாலும் ஒருவரை ஒருவர் பிரியாது ஒன்றி வாழும் வாழ்க்கையே வாழ்க்கை என்று வாழ்க்கைக்கு அழகானதொரு விளக்கத்தை இப்பாடல் வரிகள் விளக்குகின்றன.

அன்பே வாழ்க்கைக்கு உரமிடும் என்ற உண்மைக்கு ஏற்ப இங்கு அன்பே மேலோங்கி யுள்ளது. அன்புக்கு முக்கியத்துவம் கொடுத்திருக் கிறார்கள். இன்றும் அன்பு உள்ளது. அது நிலவை மறைக்கும் மேகக் கூட்டத்தைப் போல மறைக்கப் பட்டுள்ளது. அது வெளியே வருவதற்குள் வாக்குவாதம் அதிகமாகி மனம் புண்படுகின்றது. அன்பே வாழ்க்கைக்கு உரமிடும் என்ற உண்மையை நமக்கு உணர்த்துவது ஏற்கத்தக்கதாகும்.

இன்னுயிர் அன்னார்க்கு எனைத்தொன்றும்
என்னுயிர் காட்டாதே மாற்று - கலி.
   
‘என்னுடைய உடலிற்கு எந்தத் தீங்கும் விளைய வில்லை; நான் உயிரோடுதான் இருக்கிறேன். அதனால் என் தலைவனுக்கு எத்தீங்கும் நேந்ந்திருக்காது. அவர் நன்றாகத்தான் இருப்பார்’ என்று சொல்லும் இப்பாடலானது, நம்பிக்கையாகக் கூடத் தோன்றவில்லை. ஈருடல் ஓருயிர் என்ற காதலர்களின் தாரக மந்திரமாய்த் தோன்றுகிறது. தலைவன் தலைவியின் உண்மையான அன்பிற்கு உவமையாய் விளங்குகிறது இப்பாடல்.

அன்பில் அடைக்கலமாய்
இன்பத்தில் இணைந்து
தன்மையாய்த் தரணியில்
நன்மையென வாழ்ந்திடுக!

விழி விழியே… (அந்தாதி)

பைந்தமிழ்ப் பாமணி
ஜெனிஅசோக்

(நேரிசை வெண்பா)

காலம் வருமென்று காலங் கடத்துங்கால்
ஞால மழிந்தாலும் ஞானமிரா; - பாலமதாய்
வாழ வழிசெய்கும் வாய்மை யுனைக்காக்கும்
சூழல் விரட்டின் துரத்து. 1

துரத்துந் துயரினாற் றூய்மை யிழப்பின்
சிரத்திற் சகதியைச் சேர்ப்பாய் - பரத்தைக்
கரத்திற் கொணருமாம் காசில் மனங்கள்
சிரத்தை யுடன்பணி செய். 2

செய்வதை நாடோறும் செவ்வனே செய்குதல்
செய்வன யாவிலுஞ் சீரலோ - செய்தபின்
உய்யுமுன் னாவியு மூனுமே மண்தொடு
பெய்மழை போற்செழிக்கும் பேறு 3

பேற்றினைக் காத்திரு பெண்மையாய்ச் சிந்தையை
மாற்றிலி யாக்குவாய் மானிடா – மாற்றிடாய்
ஊருளார் வாய்மொழி ஊடறுத் தாலுமே
ஆருளா ரென்றழா யாறு. 4

ஆற்றொணாக் காயமோ ஆற்றுப் படுத்தலாம்
ஏற்றொணா வேணியென் றேதுள – கீற்றொணா
வோவியம் தானிலை ஓவியன் நீயலோ
காவிய மாக்குன் கனா. 5

கனவுக் குயிரூட்டக் கண்சொரியும் சோர்வேன்
கனஞ்செய் கனமடையக் காண்பாய் - நனவில்
குணமுடைப் பன்முகங் கொண்டோங்கக் காண்பாய்
பணத்தாசை விட்டொழித்துப் பார். 6

பார்போற்றும் பெண்மையைப் பக்குவமாய்க் காக்குங்கால்
பேர்சேர்க்கும் பண்பினால் பேறலவோ - மார்தட்டி
ஆணென் றுரைத்துன் அகத்தன்பைக் காட்டுங்கால்
வீணென் றகங்காரம் வீழ்த்து. 7

வீழ்த்தும் பெருமையது விட்டகலத் திட்டமிட்டுத்
தாழ்த்துன் தலைக்கனம் தாழாயே - ஆழ்த்தும்
சலிப்பென்ப வந்துறையச் சாய்க்கும் விழிப்பாய்
வலிக்குள் விளையும் வழி. 8

வழிசொல்லாப் பாருளரின் வஞ்சனையில் மாளாய்
பழிசொல்லும் வாய்மூடார் பாசம் - அழியாமை
அன்பென் றுணர வகத்தொளி கொஞ்சுமே
என்புடைய ராவா ரெவர். 9

எவரா யிருந்து மெரிமலைக் கோப
மவரைக் கொளுத்து மதிலே - தவற்றை
யுணர்வார் செழிப்பா ருடையார் மகிழ்வார்
உணவா யுருக்க முளார். 10

உளரொடு கூடு முலகினி லுள்ளோம்
உளமுடைக் காய முறுவோம் - தளரா
முயற்சியி லுண்டொரு முத்தியென் றின்றே
முயல்வதாற் றோல்விக்கு முற்று. 11

முற்றுகை யிட்டவுன் முற்கோபங் கேடாகும்
பற்றிய விச்சையும் பாழாக்கும் - தொற்றுநோய்
போலவுன் னாயுளைப் போராட வைப்பதெலாம்
வாலாக்கும் வாழ்வில் வரின் 12

வருமென் றறிந்து வருமுன் தடுத்துக்
கருகாதுன் வாழ்வினைக் காப்பாய் - மெருகே
அடிமை விலங்குடைத் தாற்றலைக் காட்டிப்
படியேறப் பாரிற் பழகு. 13

பழகுதல் நன்று பழுதிலா வெல்லாம்
அழகுசே ரீகை யருமை - தொழவெழும்
மற்றவர் கைகள் மகுடஞ் சிரமேறும்
நற்செய லாற்றல் நலம் 14

நலமா னதையே நனவினி லெண்ணி
நலமுறு வாய்நனி நண்ப - நிலமே
உனதடி தேடும் உயர்வுகள் கூடும்
தினமுனை யாய்ந்தே தெளி. 15

தெளிதலின் முன்னர் திரளுமே யின்னல்
ஒளிவரு முன்ன ரொழியாய் - களியுறும்
நாள்வரும் நாடிநல் நாற்றுனைத் தேடிநில்
தோள்தரும் நட்புத் துலங்கு 16

துலங்கவே தூண்டல் சுமக்கவே சோகம்
விலங்கல நீயும் விளங்கு - கலங்கிய
நீரும் தெளியும் நிலவும் வளரும்பார்
சேரும் பலகொற்றம் தேடு 17

தேடலிற் காணொணாச் சேதியென் றொன்றுளதோ
நாடக மேடையே நம்வாழ்க்கை - ஆடுவோம்
நாளை விடியும் நமக்கெனப் பாடுவோம்
காளையர் பூவையர் காத்து 18

காத்துத்தன் கற்பினைக் கன்னியர் வாழ்கவே
ஆத்திரந் தாழ்த்துவீ ராடவர் - மாத்திரை
தப்பினால் மாளுவீர் தண்டனை மாறாநீ
ருப்பிலா வுண்டிக்கே யொப்பு 19

ஒப்பிலா வாழ்க்கை யொருமுறை வாழுங்கால்
வெப்பங் குளிரெலாம் வேண்டுமே - இப்பூவில்
விட்டகண் ணீரெல்லாம் வீணாகா விண்ணீராய்
நட்டத்தைப் போக்குங்கா லம். 20

நடுப்பக்க நயம்

பைந்தமிழரசு பாவலர்
மா. வரதராசனார்

கம்பன் கவிநயம்

நண்பர்களே!

எண்ணியெண்ணி வியக்கும் வண்ணம் எழுதியோச்சிய கம்பரின் கவியாளுமையைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அவ்வகையில் "பாலகாண்டத்திலிருந்து இரண்டு பாடல்களை இப்போது பார்க்கலாம்.

இவ்விரண்டு பாடல்களில் மட்டுமன்றித் தொடர்ந்து வரும் பாடல்களிலும் கம்பர் அயோத்தியின் சிறப்பைக் காட்டுகிறார்.  (அதன்வழியே தான் கற்பனையில் கண்ட ஒருங்கிணைந்த தமிழ்நாட்டின் சிறப்பையும். ..)

அயோத்தியில் மக்களின் வாழ்வியலாகத் தயிர் கடைதலும் ஒன்றென அறிகிறோம். மகளிர் தயிர்கடையும்போது உண்டாகக் கூடிய காட்சிகளைக் கம்பர்,

தோயும் வெண்டயிர் மத்தொலி துள்ளவும்.
ஆய வெள்வளை வாய்விட் டரற்றவும்.
தேயும் நுண்ணிடை சென்று வணங்கவும்.
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார்.
                                                 (கம்ப. பால.நாட்டு.59)
எனச் சிறப்பாகக் கூறுகிறார்.

கம்பரின் பாடல்களை ஆழப் படித்துப் பொருள் கொள்ள வேண்டும்.  மேலோட்டமாகப் பார்க்காமல் அதன் பின்புலம், பாடுபொருள், உள்ளீடு ஆகிய வற்றையும் நுட்பமாகப் பார்த்தல் வேண்டும்.

மேற்கண்ட பாடலில் நேரடியான பொருளும் அடைப்புக்குள் உள்ளீடான பொருளும் வருமாறு...

தேயும் நுண்ணிடை - சிறிய இடையைக் குறித்தது.
அயோத்தியில்,
தயிர்கடையும் மத்தின் ஒலி இருந்தது (மக்கள் துன்பக்குரல் இல்லை.)
வளையல்களின் மோதலால் உண்டான அரற்றல் இருந்தது (மக்கள் அழுது அரற்றுதல் இல்லை)
நுண்ணிய இடை வளைந்து நெளிந்து கிடந்தது. (மக்கள் யாருக்கும் வணங்கி வாழ்தலில்லை)
தயிர்கடைதலால் உள்ளங்கை வருந்தும் (மக்கள் வறுமையால் வருந்தலில்லை)
என்பது முதற்பாடலின் பொருள்.
இதேபோல் மற்ற பாடல்களிலும் பெரும்பாலும் உள்ளீடாகவே பொருள்தருமாறு அமைத்திருப்பது கம்பரின் கவியாளுமைக்குச் சான்றாம்.
***

தினைச்சி லம்புவ. தீஞ்சொல் இளங்கிளி;
நனைச்சி லம்புவ. நாகிள வண்டு; பூம்
புனல்சி லம்புவ. புள்ளினம்; வள்ளியோர்
மனைச்சி லம்புவ. மங்கல வள்ளையே.
                                                    (கம்ப. பால.நாட்டு...60)
எனவரும் இரண்டாம் பாடலில், 
மனைச்சிலம்புதல் - மனையில் கேட்கும் தயிர்கடையும் ஒலி. "சிலம்புதல் என்பது தயிர்கடைதலைக் குறித்து நின்றது.
கிளி சிலம்பியது - தினையை அசைத்ததைக் குறித்தது.
வண்டு சிலம்பியது மலரை.
பறவை சிலம்பியது நீரில் அலகை நுழைத்துக் குளித்ததை.

இவ்வாறு ஒரே சொல் பலபொருளைத் தருமாறு அமைப்பது கம்பரின் கவியாளுமையே.

மற்றுமொரு பாடல்...

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்...
                                               (கம்ப.பால.அகலிகை.24)
என்ற பாடலில் "வண்ணம்" என்ற சொல் பலபொருள் தருவதாய் அமைத்திருப்பார்.

இப்பாடலில் மிக முக்கியமாக நாம் பார்க்க வேண்டிய உள்ளீடு "மங்கலவள்ளை" என்பதாகும்.

மங்கலவள்ளை :
**************
கோதிலாக் கற்பிற் குலமகளை - நீதிசேர்
மங்கல வள்ளை வகுப்பொடு வெண்பாவால்
இங்காமொன் பானென் றிசை
                                           (வச்சணந்தி மாலை : 55)
என வச்சணந்தி மாலை "மங்கல வள்ளைக்கு" விளக்கம் தருகிறது.

"மங்கல வள்ளை" என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. ஒரு வண்ணப்பாடல், (சந்தப்பாடல்) ஒரு வெண்பா எனப் பதினெட்டுப் பாடல்களால், கற்பில் சிறந்த மகளிரின் சிறப்பை எடுத்து மொழிவதாம்.

கற்பிற் சிறந்த பெண்ணுக்குப் பாட வேண்டிய பாடலை இங்குப் பாடியதேன்? என்றால்,  இதன் பின்புலமாக அமைவது "சீதையை" உள்ளீடாகக் காட்டவே யென்றறிக.

மகளிர் தயிர் கடையும்போது தங்கள் வலியும், சோர்வும் தெரியாதிருக்கப் பாட்டுப் பாடுவது வழக்கமாம். அவ்விதம் பாடும் பாடலில்கூடக் கம்பர் தன் காப்பியத்தின் தலைவியை உள்ளீடாகக் காட்டும் உத்தியை நினைந்து வியக்கிறோம். வள்ளியோர் - என்றது குறமகளிரை. முன்பாடலில் ஆயரைக் குறித்தவர் இப்பாடலில் குறத்தியைக் குறித்தது திணைவழுவாகுமோ எனின் ஆகாதாம். அஃது "திணைமயக்கம்" என்ப. அயோத்தியில் நானில மக்களும் மகிழ்வுடன் வாழ்ந்தனர் என்பது இதன் பொருள்.

பாலையை விடுத்து நானிலம் என்றது ஏனோவெனின், அயோத்தியில் கள்வர்கள் இல்லையாதலால் அங்குப் பாலைத் திணை யில்லை யென்க... எப்படியெனில்…

தெள்வார் மழையும் திரையாழியும் உட்க நாளும்
வள்வார் முரசம் அதிர்மாநகர் வாழும் மக்கள்
கள்வார் இலாமைப் பொருள்காவலும் இல்லா யாதும்
கொள்வா ரிலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ.
                                             (கம்ப. பால.நகரப். . .73)

எனக் கம்பரே வியந்து கூறும் அயோத்தியில் கள்வரேயில்லையாம்.  எனவே நானில மக்களும் மகிழ்ந்து வாழ்ந்த செழிப்பான நகராக அயோத்தி விளங்கிற்று. (கம்பர் தான் காண விரும்பிய தமிழகத்தின் செழுமைகளை, வளமைகளை இவ்வாறெலாம் சொற்பந்தலாக்கி அதில் நம்மை இளைப்பாற்றித் தமிழ்ச்சுவையில் மயக்குகிறார். என்னே அவரின் கவிநயம்...!

கம்பனைப்போல் வள்ளுவன்போல் இளங்கோ வைப்போல்... (பாரதி)

வாழ்வியல் நூலாம் வள்ளுவம்

கவிஞர் பொன் . இனியன்

நிலைமண்டில  ஆசிரியப்பா

மானுடம் வெல்லவும் மண்பய னுறவும்
வானுயர் வாழ்க்கை வசப்பட வேண்டியும்
வள்ளுவர் காட்டிய வகையும் தொகையும்
தெள்ளு  தமிழில் திரண்டது குறளாய் !
ஒத்தது பிறப்(பு)இவ் வுலகோர் யாவரும்
ஒக்கலால் உறவால் உரிமைகொள் வாழ்வால்
ஓர்நிறை யென்பதை உணர்த்திய முதல்நூல்!
ஏர்முனை யின்றேல் எவர்க்கும் முனைப்பிலை
உண்டி  கொடுக்கும் உழவனை முதல்வனாய்க்
கண்டநூல் இதுவே கோணல்  மனத்திற்             10
குறைவற மாசினை அறுத்துக் கொள்வதே
அறமென் றாக்கி அழுத்திச் சொன்னநூல்!
தன்னுயிர்ப் பொறையொடு பிறிதுயிர் போற்றலே
தவமெனக் குறித்த தனித்துவ மறைநூல்!
அறிவுந் திறமும் அனைவரும் பெறவே
கல்வியைக் கண்ணெனக் கொள்ளுமின்; யாவரும்
கடமை யுணர்வொடு கருதுக பிறர்நலம்;
உடைமை யென்ப(து) ஊக்கமே யென்றுநீ
உணர்ந்து  முன்னேறு; உழைத்தபின் உண்ணு;
இனத்தோ(டு) இணங்கு; இயல்பை யுணர்ந்தே       20
ஈட்டுக பொருளை; இயன்றதைப் பிறர்க்கும்
ஊட்டுவ(து) உன்கடன்; உலகொ(டு) ஒத்துவாழ்;
வழுக்கினில் நாளை வைக்காது பயன்கொள்;
வாழ்வைப் போற்று; வாழ்ந்து காட்டு;
 ஊழ்வினை இறைமை உண்டா மெனினும்
உன்னை உயர்வுசெய் உழைத்து முன்னேறு;
எண்ணம் செயல்சொல் எதனிலும் அறமே
இழையும் படிசெய்; எதனையும் ஆய்க;
அறிவைக் கூர்மைசெய்; அஞ்சுவ தஞ்சு;
வரம்பு மீறாதே; வாழ்ந்து பயன்படு;               30
என்றிவை  போல  எவர்க்கும் பொருந்த
நன்றாம் நெறிகள் நயமுறக் காட்டும்!
மாந்தர்க்கு வேண்டும் விழுமிய மாண்பெலாம்
ஏந்திய பெருநூல் ஈரடிக் கொருநூல்!
வள்ளுவன் குறளே வாழ்க்கை நெறியாய்
உள்ளுக வையம் உயர்வினை எய்தவே!

இற்றைத் திங்கள் இவரைப் பற்றி

செந்தமிழ்ப் பாடினி
பாவலர் மணிமேகலை குப்புசாமி

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!

எனத் தமிழ்த்தாயின் மீது அளவில்லா அன்பு வைத்தவர் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனார். பாவேந்தர் பரம்பரைக் கவிஞர்கள் என உலகெங்கும் கவிஞர் பலருளர். பாவேந்தர் பரம்பரையிலேயே தோன்றிய கவிஞர் ஒருவர் உள்ளார். ஆம். பாவேந்தர் பாரதிதாசனாரின் மகள்வழிப் பேர்த்தி செந்தமிழ்ப் பாடினி பாவலர் மணிமேகலை குப்புசாமி அவர்கள்.

அவர் 1956-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 25-ஆம் நாள் பிறந்தார். அவர் நாமக்கல் மாவட்டம் மணப்பள்ளி என்னும் சிற்றூரின் பெருநிலக்கிழார் திரு. இராமசாமி முதலியார் அவர்களின் தலைமகன் ஆசிரியர் இராம.சிவசுப்பிரமணியம்,  புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனார் அவர்களின் மூன்றாம் மகள் இரமணி இணையரின் மூத்த மகள் ஆவார். இவர் 1984-ஆம் ஆண்டிலிருந்து எழுத்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

சிறப்புகள்:

தமிழிலக்கிய வரலாற்றில் ‘பிள்ளைத்தமிழ்’ சிற்றிலக்கியம்  படைத்த முதல் பெண் கவிஞர்.
கடந்த இரு நூற்றாண்டுகளில் ‘அந்தாதி’ சிற்றிலக்கியம் படைத்த சில பெண் பாவலர்களுள் ஒருவர்.
சித்திரக் கவிதைகள் எழுதி நூலாக்கி வெளியிட்ட முதல் பெண்பாவலர் என்ற பெருமையும் இவருக்குண்டு.
ஏறக்குறைய 61 இதழ்களில் இவர் எழுதிய செய்யுள்கள் இடம் பெற்றுள்ளன.
23 தொகுப்புகளில் இவர் எழுதிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
முகம், மீண்டும் கவிக்கொண்டல், தாழம்பூ, இனிய நந்தவனம் ஆகிய இதழ்கள் முன்னட்டையில் இவருடைய நிழற்படத்தை வெளியிட்டுப் பெருமைப்படுத்தின.
புதுச்சேரி பெரும்புலவர் தமிழ் மாமணி அரங்க. நடராசனார் அவர்களால் செந்தமிழ்ப்பாடினி என அழைக்கப் பட்டவர்.
சாகித்திய அகாதெமி பொறுப்பு அலுவலர் முனைவர் அ.சு.இளங்கோவன் அவர்களால் இன்சொல் வலவர் என்று போற்றப்பட்டவர்.
செய்யுள் எழுதும் போட்டிகளில் கலந்து கொண்டு நாற்பத்தேழு பரிசுகளைப் பெற்றுள்ளார்.
தன்னுடைய மகனின் திருமண அழைப்பிதழைப் பாவேந்தரின் ‘குடும்ப விளக்கு’ (ஐந்து தொகுதிகள்) நூலோடு இணைத்து அனைவரையும் அழைத்தார்.

எழுதிய நூல்கள்

இவர் மரபு பா நூல்கள், சித்திரக் கவிதைகள், சிற்றிலக்கிய நூல்கள், சிறுவர் பாடல்கள், உரைநடை நூல்கள், கட்டுரைகள் எனப் பல படைப்புகளை உருவாக்கியுள்ளார். இவருடைய நூல்களின் பட்டியலைக் கீழே காணலாம்

கவிதை நூல்கள்:
o தோப்பு
o அன்ன வயல்
o பாவேந்தர் பிள்ளைத்தமிழ்
o சித்தெறும்பே!... சித்தெறும்பே!...
o கவிஞரேறு வாணிதாசனார் பிள்ளைத்தமிழ்
o தந்தை பெரியாரின் தோழர் வே.ஆனைமுத்து அந்தாதி
o சித்திரக்கவிப் பேழை
o கலைமாமணி முனைவர்
வி.முத்து புகழ்மாலை.
o பாட்டரங்கப் பாடல்கள்

உரைநடை நூல்கள்:
o சிட்டுக் குருவியின் சின்ன கவலை
o அழகியல்
o செந்நெற் பயன்மழை
o பேர் பாதி
o இறையின் முகவரி
o கவிஞரேறு வாணிதாசனாரின் கவிதைகளில் பாவேந்தர் பாரதிதாசனாரின் தாக்கம்

பெற்ற பரிசுகள்

o ‘நேரு குழந்தைகள் இலக்கியப் பரிசு. (புதுச்சேரி அரசு)
o கம்பன் புகழ் இலக்கியப் பரிசு. (புதுச்சேரி அரசு)
o சிந்துப்பாவிற்கு இலக்கணம் கண்ட, இலக்கணச்சுடர் முனைவர் திருமுருகனார் அவர்கள் நடத்திய ‘தெளிதமிழ்’ இதழ் நடத்திய மரபு பா எழுதும் போட்டியில் இருமுறை பரிசு பெற்ற பெண்பாவலர் இவர். இப்பரிசு அரசு தரும் பரிசுக்கு இணையாகக் கருதக் கூடியது.

பெற்ற விருதுகள்.

o புதுச்சேரி அரசின் உயரிய விருதான ‘தமிழ் மாமணி’ விருது.
o தமிழகம், புதுச்சேரியில் செயல்பட்டு வருகின்ற 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளன.

இவரது முகவரி:
பாவலர் மணிமேகலை குப்புசாமி,
44, நான்காம் குறுக்குத் தெரு,
குறிஞ்சி நகர்,
புதுச்சேரி – 605 008.
தொ.பேசி: 94421 86802

நிலாப் பாட்டி


(ஒரு பக்கக் கதை)

 பைந்தமிழ்ப்பாமணி 
சரஸ்வதிராசேந்திரன்

கப்பல் கவிழ்ந்தது மாதிரி  கன்னத்தில் கைவத்து அமர்ந்திருந்தாள் நிலாப் பாட்டி. இதுவரை அவள் எதற்கும் கவலைப்பட்டதே இல்லை. கணவரை இழந்தபோதுகூட இது இயற்கை என மனசைத் தேற்றிக் கொண்டவள்; யார் தயவும் இல்லாமல் பூமியில் இருக்கப் பிடிக்காமல் நிலவுக்குப் போனவள்; தன்கையே தனக்கு உதவி எனத் தனக்குத் தெரிந்த கைத்தொழிலைச் செய்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தவளுக்கு வந்த சோதனையால் மனம் வெதும்பி அமர்ந்திருந்தாள்.

‘போன்’ போட்டு அவள் விசனத்தைக் கேட்டேன். “நிலாப் பாட்டியா இது? எதற்கும் அஞ்சாத சிங்கம் இன்று சிறுமுயல் போல் குறுகிக் கிடக்கிறது;  நம்ப முடிய வில்லை, என்ன ஆச்சு பாட்டி?”

“அதை ஏன் டா கேட்கிறே பேராண்டி! பூமியைக் கெடுத்தது போறாதென்று இங்கேயும் உங்க ஆளுங்க வந்துட்டாங்கப்பா. இராக்கெட்டை விட்டு  விட்டு மேகத்தைக் கலைத்தால் எப்படியப்பா மழை பெய்யும்? சொல்லு! அங்கே மண்ணை மலடாக்கி விட்டு, உழவைப் புதைச்சுட்டாங்க, எக்கேடோ கெட்டுப் போகட்டும்; இங்கேயும் வந்து, நிலவில உள்ள தண்ணியைக் களவாடப் பார்க்கிறாங்க. ஏன் டா இப்படி அக்கிரமத்துக்கு மேல அக்கிரமா செய்யிறாங்க”

“அதனால் உன் பிழைப்புக்கு என்ன சோதனை, பாட்டி?”

“என்னப்பா இப்படிக் கேட்டுட்டே? காலம் காலமா நான் சுட்டு வித்த வடையை அவன்கள் காணா அடிச்சிடுவாங்களோன்னு பயமா இருக்கு; இங்கே வந்து ‘பர்கர்’, ‘பிஸ்ஸா’ன்னு நுழைச்சு, அப்புறம் கொக்கோ-கோலா என்பான். அப்புறம் என் பிழைப்பு என்னாவது? என் பாட்டியின் கைப்பிடித்து என் அம்மா சமூகத்தைப் பார்த்தாள்; என் அம்மாவின் கைப்பிடித்து நான் சமூகத்தைப் பார்க்கிறேன் என்பதை மறப்பதுதான் இப்போது முற்போக்கு எனச் சொல்லப்படுகிறது. இனி, நான் வடைசுட்டு வியாபாரம் செய்யமுடியாதோன்னு கவலையா இருக்குடா பேராண்டி”, நீண்ட பெருமூச்சு விட்டவாறே சொன்னாள் பாட்டி.

பாட்டியின் கவலை எனக்கும் ஒட்டிக்கொண்டது. இருப்பினும் என்னால் என்ன செய்ய முடியும்? சத்தம் இன்றி மொபைலை ஆப் செய்தேன். கண்டது கனவாகவே இருக்கட்டும். பாவம் பாட்டி.

தமிழில் பெயர் வைப்பது எப்படி? - சில கருத்துகள்


பைந்தமிழ்ச் செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணி

1. தமிழ்ப்பெயரிட விரும்பாத தமிழர்கள்

அன்னைத் தமிழே! அமிழ்தத் தமிழே!
உன்னை யன்றி ஒன்றும் அறியேன்!

வடசொற் கலப்பின்றி அழகான தமிழ்ப்பெயரைத் தம் குழந்தைக்கு வைக்க, இக்காலத் தமிழர்களுக்குத் துணிவில்லை.

அழகாய்த் தமிழில் பெயர்வைத்தல்
    ஆகா(து) என்றே திரிகின்ற
பழகாத் தமிழன் பெருமையெலாம்
    பாருக்(கு) உரைக்க நான்வருவேன்
அழகே தமிழாம் அதைவிட்டெங்(கு)
    அழகைத் தேடிச் செல்கின்றீர்
பழகப் பழகத் தான்தெரியும்
    பழமும் பாலும் தமிழென்றே

முதலில் 'நல்ல தமிழ்ப்பெயர் சொல்லுங்கள்' என்பார்கள். ‘இரண்டு, மூன்று எழுத்துகளில் வருமாறு சிறிய பெயராக இருக்க வேண்டும்’ என்பார்கள். மூன்று எழுத்துகளுக்கு மேலுள்ள பெயர்களை வைத்தால் அவர்களது வாயில் நுழையாமல் போய்விடுமா? பெயர் புதுமையாக இருக்க வேண்டும் என்பார்கள். என்ன பெயர் சொன்னாலும் அது பழையதாக இருக்கிறதே என்பார்கள். தமிழ்மொழி பழைமையானதே என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. அவர்கள் புதுமை என்று, பெயரில் எதிர்பார்ப்பதெல்லாம் ஷ, ஹ, ஜ, ஸ, க்ஷ, ஶ்ரீ என்ற ஆறில் ஓரெழுத்தாவது இருக்க வேண்டும் என்பதே. அப்படி அமைந்தாலும் அமையாவிட்டாலும், இணையத்தில் தேடி எப்படியாவது ஒரு வடசொல்லையே தேர்ந்தெடுப் பார்கள். மக்களுக்குப் புரிகின்ற எளிய தமிழ்ச் சொற்கள் எல்லாம் பழையதாய்ப் போய்விட்டன. புரியாத சமற்கிருதச் சொற்களெல்லாம் புதியதாய்த் தென்படுகின்றன. இப்படித்தான் இருக்கிறது இன்றைய தமிழ்நாட்டின் நிலை.

"எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்" என்று பேசுபவரை, 'நடைமுறைக்கு ஒத்துவராத ஏதோ செயலைச் செய்கின்றார்' என்னும் நோக்கில் நோக்கு கின்றனரோ? அந்நியத் தாக்கத்தால் அந்த அளவுக்கா வழக்கொழிந்து போய்விட்டது தமிழ்? பேச்சளவில் நின்றுவிடாமல், செயலில் காட்டுவோர் எத்தனை பேர்? தமிழா! எப்போது விழிக்கப் போகிறாய்?

தொல்காப்பியரும், நன்னூலாரும் சொல்லும் மொழிமுதல் எழுத்துகளை மதியாமல், சோதிடம் கூறுகின்ற மொழிமுதல் எழுத்துகளை ஏற்றுக் கொள்ளும் அந்த நொடியில், நீங்கள் தமிழர் என்பதை மறந்துவிடுகின்றீர்.

அங்ஙனம் மொழிமுதல் எழுத்துகளை மறந்து, சோதிடம் குறிப்பிடும் பெயருக்கான முதல் எழுத்துகளைக் கொண்டே பெயர்வைக்கும் பழக்கம் தோன்றியதும், அந்நிய ஆதிக்கம் மேலோங்கியதற்குக் காரணம் ஆகும். இப்போது தமிழில் பெயர் வைப்பது எப்படி எனக் கட்டுரை எழுதும் நிலைக்கு நாம் வந்துவிட்டோம்.

2. தமிழில் பெயர் வைப்பது எப்படி?

தமிழில் பெயரிட விரும்புவோர் பின்வருவன வற்றைக் கருத்தில் கொள்ளலாம்.

தமிழ்ச் சொல்தானா என்பதை உறுதி செய்ய, சொல்லின் வேர்ச்சொல்லைத் தேடிப் பாருங்கள்.
பெயர்ச்சொற்களுக்கான விகுதிகளைக் கருத்தில் கொள்ளுங்கள்.
தமிழிலக்கியங்களில் இடம்பெற்ற பெயர்களின் அமைப்பையும் அழகையும் கருத்தில் கொள்ளுங்கள்.
மொழிமுதல் எழுத்துகள், மொழி இறுதி எழுத்துகள், மெய்ம்மயக்கம் போன்ற விதிகளைக் கருத்தில் கொள்ளுங்கள்.
இவ்விதிகளை அடிப்படையாய்க் கொண்டு நன்னூலார் செய்த வடமொழியாக்கப் பகுதிகளைக் கருத்தில் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, ஆகாரத்தில் பெயர் முடிவது, தமிழ்ப்பெயர் முறைமையாக இருக்காது என்பது என் எண்ணம். தமிழ்ச்சொற்கள் பலவற்றை வடமொழிப் படுத்த, இந்த ஆகார நீட்சி பயன்பட் டிருக்கிறது. இகரம், ஐகாரத்தில் முடிவது போலப் பெண்களுக்கான பெயர்களைத் தேர்ந்தெடுக்கலாம். எழிலி (இகர இறுதி); ஆதிரை, மேகலை (ஐகார இறுதி) என்பன போல.

3. 27 விண்மீன்களுக்கும் வரையறுக்கப் பட்டுள்ள தமிழ் எழுத்துகள்

தொல்காப்பியமும், நன்னூலும் எடுத்துச் சொன்ன, வடசொற்களைத் தமிழ்ப்படுத்தும் விதிகளுக்கு உட்பட்டுச் ‘சோதிட கிரக சிந்தாமணி’ என்னும் நூல் பல சொற்களைத் தமிழ்ப்படுத்தி நமக்கு வழங்கி இருக்கிறது. சோதிடத்தில் ஒவ்வொரு விண்மீன் கூட்டத்திற்கும் நந்நான்கு எழுத்துகளைக் கொடுத்து, மொழிமுதலாக வைத்துக்கொள்வது வழக்கம். அவற்றில் வடவெழுத்துகளும் கலந்திருப்பதனால், தமிழ் எழுத்துகளை மட்டுமே கொண்ட பட்டியலை இந்நூல்  பரிந்துரைக்கிறது. சோதிட முறைப்படித்தான் பெயர்வைக்க வேண்டுமென்று எண்ணுவோர் இந்தப் பட்டியலைக் கருத்தில் கொள்ளலாம்.


கார்த்திகை
அ, ஆ, இ, ஈ
உரோகிணி
வ, வா, வி, வீ
மிருகசீரிடம்
வெ, வே, வை, வௌ
திருவாதிரை
கு, கூ
புனர்பூசம்
கெ, கே, கை
பூசம்
கொ, கோ, கௌ
ஆயிலியம்
மெ, மே, மை
மகம்
ம, மா, மி, மீ, மு, மூ
பூரம்
மொ, மோ, மௌ
உத்திரம்
ப, பா, பி, பீ
அத்தம்
பு, பூ
சித்திரை
பெ, பே, பை, பொ, போ, பௌ
சுவாதி
த, தா
விசாகம்
தி, தீ, து, தூ, தெ, தே, தை
அனுடம்
ந, நா, நி, நீ, நு, நூ
கேட்டை
நெ, நே, நை
மூலம்
யு, யூ
பூராடம்
உ, ஊ, எ, ஏ, ஐ
உத்திராடம்
ஒ, ஓ, ஔ
திருவோணம்
க, கா, கி, கீ
அவிட்டம்
ஞ, ஞா, ஞி
சதயம்
தொ, தோ, தௌ
பூரட்டாதி
நொ, நோ, நௌ
உத்திரட்டாதி
யா
இரேவதி
ச, சா, சி, சீ
அச்சுவினி
சி, சூ, செ, சே, சை
பரணி
சொ, சோ, சௌ

ஆசுகவிச்சுழல்

                              அமர்வு 4

தலைவர்: கவிஞர் விவேக்பாரதி
தலைப்பு: நாளை நமக்கான நாள்
வாய்பாடு: காய் காய் காய் காய் மா தேமா

முத்திரைகள் பதிக்கின்ற பிள்ளைகளாற் றானுலகம்
முன்னே செல்லும்!
நித்திரையில் வருங்கனவு கனவல்ல! கனவுறக்கம்
நீக்கி நம்மைப்
பொத்துவரும் உற்சாக ஊற்றோடு முன்னேறப்
புதுக்கும்! கல்வி
வித்தைகளைத் தெளிவாக்கும் நாளைநமக் கெனச்சேரும்
விந்தை காண்போம்! 1

காண்கின்ற காட்சிக்குள் வாய்ப்புகளைக் காண்பவரே
கடையில் வெற்றி
பூண்கின்ற நிலைகொள்வார் புறஞ்சொல்வார் தம்வாக்கில்
புரள்வார் மாய்வார்!
தூண்நின்று தம்பலத்தைத் தருதல்போற் பெற்றோர்கள்
துணையும் சேர
மாண்புற்ற பலநிலைகள் பெற்றிடுவார்! நாளையெனும்
மதிப்பை வெல்வார்! 2

வென்றிடவும் வெற்றியுடன் நின்றிடவும் பணிவென்னும்
வித்தே தேவை!
மன்றதனில் புகழ்சேர்ந்தும் மாறாத உயர்பண்பு
மனத்தே தேவை!
வென்றதனால் உயர்வில்லை விளையாட்டில் பங்குகொளல்
வெற்றி காண்பாய்!
சென்றிடுவாய் என்பிள்ளாய் வாய்ப்புகளைத் தேடிப்போ
செகத்தைக் கொள்வாய்! 3

வாய்ச்சொல்லில் வீரர்களாய் வாழுவதில் பயனில்லை!
வாழ்க்கை யோடைப்
பாய்ச்சலதில் எதிர்நீச்சல் போட்டழுந்தி முத்தெடுத்தல்
பலமாம் காண்பாய்!
வாய்த்தனவும் வாய்ப்பனவும் நிலையல்ல நம்பண்பே
வன்மை என்னும்
சாய்த்திடவே முடியாத எண்ணம்நம் நெஞ்சத்தில்
சதங்கள் சேர்க்கும்! 4

சேருங்கள் கனவுகளைச் சேருங்கள் அவையாவும்
செம்மை நோக்கி
நீருங்கள் அடிவைத்துப் பாட்டையிடப் போதிக்கும்!
நிறைவில் எண்ணிப்
பாருங்கள் அதுவரைக்கும் ஓயாமல் உழையுங்கள்
பாரை ஆள
வாருங்கள் பிள்ளைகளே நாளைநாள் நமக்கென்றே
வருவீர் முன்னே! 5

----------------

அழகர் சண்முகம்

வருவீர்முன் னேஒன்றாய் வாடாமல் உள்ளமொன்ற
வாகை யுண்டு
தருவீர்தான் எண்ணத்தைத் தட்டாமல் தாழ்வகற்றித்
தடையை வெல்ல
உருவாக்கு புதுப்பாதை உண்டாக்கி ப் பகுத்துவாழ்வாய்
உலகம் காண
நெருப்பாய்நீ இருந்தாலே நிழலென்ற இருளோடும்
நாளை நாமே 1

நாமெல்லாம் ஒன்றுபட்டால் நலமெல்லாம் தேடிவரும்
நாளும் தானே
பூமெல்ல நெகிழ்ந்துவிடும் புரட்டெல்லாம் பறந்துவிடும்
புதுமை பொங்க
வாய்மெல்லும் கடையருக்கு வாய்ப்பூட்டுப் போட்டுவிட்டால்
வாய்மை துள்ளும்
பாமெல்லப் பாடிடுவோம் பாட்டாளி படுகின்ற
பாட்டைத் தானே 2

பாட்டைத்தான் பாடுகின்றோம் பாரெங்கும் சீரோங்கப்
பாடு பட்டே
நாட்டைத்தான் காத்திடுவோம் நன்மையுற வேண்டுமென்றே
நாளும் நாளும்
கேட்டைத்தான் போக்கிடுவோம் கெட்டவரின் கொட்டமதைக்
கட்டிப் போட்டே
ஏட்டைத்தான் படித்திடுவோம் எண்ணமெல்லாம் எழில்பூக்க
எண்ணி நாமே 3

----------------
கவிஞர் சோமு சக்தி

எண்ணிநாமே எங்கள் பிள்ளை
என்றுளத்துள் எண்ணும் போதே
விண்ணிலாடும் திங்கள் போல
மின்னியாடும் செல்வம் அன்றோ
கண்ணிலாடிக் கருத்தில் என்றும்
கன்னமெலாம் முத்தம் சிந்தி
மண்ணிலாடு மகவு என்றும்
மனத்திலாடு மகிழ்ச்சி யன்றோ! 1

மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தால்
மங்கலங்கள் எங்கும் தங்கும்
நெகிழ்ச்சியாகத் துள்ளும் உள்ளம்
நேயமுள்ள மாந்த ராக்கும்
வகிடெடுத்து தலையும் கோதி
வசந்தவாழ்வை மண்ணில் காணும்
முகில்விலக்கும் மதியைப் போல
முகநூலில் கவிதை யாக்கும்! 2

கவிதையாலே கண்ட தெல்லாம்
களிப்புடனே காட்சி வைப்போம்
புவியிலாளும் புதுமை யெல்லாம்
புகழ்படைத்த செல்வத் தாலே
தெவிட்டலில்லாத் தேனும் பிள்ளை
தெய்வமென்று கொள்ளும் கிள்ளை
அவிசொரிந்து வேண்டல் என்ன
அதைவிஞ்சும் மழலை யன்றோ! 3

மழலைதானே நாளும் செல்வம்
மயக்கமென்ன மனமே கேளாய்!
உழலுநெஞ்சம் உண்மை பேசும்
உலகுதோறும் உணர்ந்து பார்க்கும்
சுழலுநெஞ்சில் சுருதி சேர்க்கும்
சுட்டிசெய்யும் பிள்ளை தானே!
கழலிலாடும் கொலுசு நாளைக்
கவின்மழலை யென்று போற்றும்! 4

----------------
கவிஞர் தர்மா

ஏட்டைத்தான் படித்திடுவோம் எண்ணமெலாம் எழில்பூக்க
எண்ணி நாமே
பாட்டாகப் பாடிவந்தும் பாராமல் ஓடுதல்நற்
பண்பு தானா
ஆட்டுக்கும் மாட்டுக்கும் அரணாக நின்றுவரும்
அருமை நண்பா
நாட்டுக்கும் வீட்டுக்கும் காவலாக இருக்குமென்றும்
நல்ல கல்வி 1

கல்வியறி வுற்றுவிட்டால் கவலையெலாம் பறந்தோடும்
கண்டு கற்போம்
எல்லையிலாப் பரம்பொருளாய் எண்ணிவந்த மண்டுகளிங்
கேற்றி வைத்த
தொல்லைதரும் கேடுகளால் துன்பமெனும் கூடையினைத்
தூக்கி வந்த
நல்லவர்கள் எல்லோரும் நானிலத்தில் ஒன்றிவிட்டால்
நன்மை தானே 2

நன்மையென்றும் தீமையென்றும் பகுத்தறிந்து வாழ்ந்துவந்தால்
நலிவு மாறும்
உண்மைகளை உறங்கவைத்த ஆள்களுக்குச் சரியான
உணர்வு வேண்டும்
கண்மூடி வழக்கமெலாம் காலத்தால் அழிவதனால்
கவலை யில்லை
நன்றிமறந் துள்ளோரும் நயமாகத் திருந்தவேண்டும்
நாட்டில் தானே 3

----------------

கவிஞர் ஷேக் அப்துல்லாஹ் அ

நாட்டில்தான் வாழுகிறோம் நம்பிக்கை யுறுதியுடன்
நமதாய் நாளும்
வீட்டில்யார் உறங்கினாலும் முன்னேற்றம் கிட்டாதே
வெல்ல வாழ்க்கை
காட்டில்தான் அழைந்தாலும் கவனங்கள் சிதறாதே
கண்டு கொள்ளும்
ஊட்டியதன் நம்பிக்கை விலங்கினுள்ளே நாளெல்லாம்
ஊனை வென்று! 1

வென்றுவாழ்தல் யாருக்கும் வீரமென்ற வெண்ணமதில்
விளைந்து வாழு
குன்றுக்குள் இருக்கின்ற தேரைக்கும் உணவுவரும்
குறிக்கோள் கொள்ளக்
குன்றிவிடும் மாந்தரைத்தான் என்னவென்று சொல்லுவது?
குரைத்தாற் கிட்டும் !
நன்றுவாழ இன்றேகொள் நம்பிக்கை பலமாக
நமதே நாளும் 2

நாளும்நீ திண்ணமெனத் துணிந்துசெல்ல நாட்டங்கள்
நடக்கும் நம்பு
வீழுமேழ்மை வெற்றிகளே உனைச்சூழும் வெறுப்பாரும்
விரைவார் கூடப்
பாலுமூறும் கைப்படவென் பாரேபார் பகட்டல்ல
பண்பு காணு
நாளுமினி சுகந்தம்தான் நம்பிக்கை தானுண்மை
நாடிப் பேணே! 3

----------------
கவிஞர் விஜய்

நாடிப்பே ணிவந்தால்தான் உம்முடைய நல்லநிலை
நாட்கள் தோன்றும்
கூடியிருந் தால்தானிங்(கு) உன்னையென்றும் கொல்லுகின்ற
கொடுமை மாயும்
பாடிவைத்தார் அத்தனைபேர் அவற்றையெல்லாம் குப்பையெனப்
பார்த்து விட்டு
ஓடுகின்ற மாந்தர்காள் நான்சொல்லும் உண்மையினை
உடனே கேட்பீர் 1

கேட்பதற்குத் தைரியத்தை வரவழை!ஆம் உன்னையெங்கும்
கெடுப்பார் உண்டு
நாட்குறிப்பைக் கிழிப்பதிலே உம்முடைய பொன்னான
நாட்கள் போனால்
ஆட்சியாளர் அனைவருடை மனத்தினுள்ளும் நானென்ற
அகந்தை கூடும்
கூட்டாக நீசென்று நேரெதிர்த்தால் அவர்களுக்குக்
குருதி கொட்டும் 2

கொட்டுகின்ற முரசடங்கும் முன்னேநீ ஆட்சியென்னும்
கோட்டை கண்டால்
எட்டுத்தி சையெங்கும் உன்புகழே கொடிக்கம்பம்
ஏறக் காண்பாய்!
விட்டுவிட்டே நீயிருந்தால் உன்கரத்தில் விரல்கூட
மிச்சம் இல்லை
எட்டுவைத்து முன்நடந்தால் உன்னுரிமை கிட்டிவிடும்
எழடா தோழா! 3

----------------

கவிஞர் மஹ்மூத்பந்தர் நியாஸ் மரைக்காயர்

எழுதோழா இவ்வுலகம் இனிதாக வாழ்த்தட்டும்
ஏற்றம் பெற்றே
அழகான நாளையென அதிசயங்கள் கொட்டட்டும்
அமைதி பெற்றே
பொழுதெல்லாம் நாம்வடித்த பொற்கலசக் கண்ணீரும்
போகும் நன்றே
தொழுவோமே அதுவரையில் தோற்றிடாத நாளைஇனி
தொடங்கும் நன்றே 1

நன்றெல்லாம் தேடிவரும் நாளதுவும் இனிதெனவே
நமக்கு வெற்றி
குன்றெல்லாம் தமிழ்படிக்கும் கூட்டமெலாம் பொங்கிவரும்
கோட்டை நாட்டில்
இன்றிரவே ஈரென்னும் ஏற்றமிகு நற்செய்தி
இங்கே ஒலிக்க
நின்றுவிடாப் புகழ்பெற்று நிலைகொள்வோம் என்றினிமே
நிற்கும் வெற்றி 2

வெற்றியதால் வரலாற்றை வெற்றிடமே இல்லாமல்
வேங்கை போலே
குற்றமில்லாச் சங்கம்கொள் கோட்டைநா(டு) அதைமீண்டும்
கொட்டிச் சேர்ப்போம்
ஒற்றைநோக்கம் கொண்டிங்கே ஓரணியில் திரண்டுவந்து
ஓங்கும் நாட்டில்
பொற்காலம் இனிவரவே போதுமென்ற சொல்வரையில்
போற்றிக் காப்போம் 3

காப்பெல்லாம் நன்றாகும் கவியெல்லாம் அதைப்பாடும்
காணும் நாளில்
மூப்பெல்லாம் இளந்தளிராய் முக்காலம் பொற்காலம்
முடிவே இல்லாத்
தீப்பொறியைப் போலெங்கும் சிறக்கட்டும் பொழுதெல்லாம்
சிறப்புச் சேர்த்தே
கோப்பெல்லாம் அதைநினைக்கும் கோட்டையைப்போல் நம்நாட்டைக்
குவிக்க நாமே 4

விரிஞாலத்து வேண்டிலம் இரவே!

(மாறுரையும் - நேருரையும்)

பொன் இனியன்

இரந்து முயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்              (1062)

‘இரவச்சம்’ அதிகாரத்துள் இரண்டாவதாக அமைந்த இக்குறட்பாவுக்கெழுந்த உரைகளின் கருத்தாக, ‘இரந்தும் ஒருவன் உயிர்வாழுமாறு வேண்டியிருப்பின் அவ்வாறு படைத்தவன் அலைந்து கெட்டு அழிவானாக’ என்றே இருக்கக் காண்கிறோம்.

இதுவே இக்குறட்பாவின் கூறுபொருளாகுமா என்பது நம் ஆய்வுக்குரியதாகிறது. குறளில் பயிலப்பட்டுள்ள தொடர்களின் சொற்பொருள் காணல் மற்றும் குறளின் ஒட்டுமொத்த உட்பொருள் காணல் என இருவகையானும் இதைக் கொண்டு செலுத்தலாம்.

வேள் என்பதை வேரடியாகக் கொண்ட சொல் வேண்டல். ‘வேண்டின் எனற்கு விரும்புவதாயின் என்பதே நேர்ப்பொருளாம். தாம்வேண்டின் நல்குவர் யாம்வேண்டும் கௌவை (1150) என்பதிற் போல இக்குறளிலும் ‘விருப்பம்’ எனப் பொருள்படுவதாகிறது. இதனை, ‘வேண்டி யிருப்பின், வேண்டும் நிலை உண்டாயின்,  வேண்டி (இறைவன்) விதித்தானாயின் என்றெல்லாம் உரைகளில்  விரித்துக் காட்டினர்.
 
முந்தை உரைகள் யாவும், ‘பரந்து கெடுக’ என்பதை ஒற்றைத் தொடராகக் கொண்டு ‘எங்கும் அலைந்து திரிந்து கெடுவானாக’ எனக் காட்டின. ‘பரத்தல்’ எனற்குப் பரவுதல், அகலுதல், விரிதல் என்பன பொருளாம். காண்க: நின் பரத்த மார்பு (1311).  கெடுதல் எனற்கு அழிதல், பழுதுபடல், குன்றுதல்,  என்பன பொருளாம். பரத்தல், கெடுதல் ஆகிய இரண்டும் ஒன்றற்கொன்று எதிர்ப்பொருள் காட்டுவனவாதலை உன்னுக. பொருள்கோள் வைப்பில் இவை பிரித்துக் கூட்டப்பட வேண்டுவன.

கல்வி, ஒழுக்கம், அறம், அறிவு, ஊக்கம், மானம் ஆகிய வாழ்வியல் விழுமியங்களை முன்னிருத்திக் காட்டுவது குறளியல். வையத்து வாழ்வாங்கு வாழும் வகைகாட்ட எழுந்த நூல் வள்ளுவம்.  தனிமனித ஒழுக்கத்தையும் தளராத ஊக்கத்தையும் தாங்கி நின்று அறம் ஓவாது வாழ்தலை அறிவுறுத்த எழுந்தது குறள். இலமென்று அசைஇ இராதே (104), செய்க பொருளை (759), அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் (611), உடையரெனப்படுவது ஊக்கமே (591) எனப் பலவாறாய் மனித ஆற்றலை ஒல்லுமாறெல்லாம் உயர்த்திக் காட்டியவர் வள்ளுவர்.

‘சிவிகை ஊர்ந்தானோடு பொறுத்தான் என இடை இது வேண்டா அறத்தாறு’ (37) என்பதில், சமூக  ஏற்றத் தாழ்வுகளுக்கு அறம், ஊழ் ஆகியவற்றைக் காரணங் காட்டுதல், தன் கடமைப் பொறுப்பை மனிதன் தட்டிக்கழிப்பதாகும் என்பதைக் காட்டும். வள்ளுவர், தனியொருவனுக்கு உணவில்லை யெனில் அதைப் படைப்பின் குற்றமாகக் குறித்திருப்பாரா  என்பது  ஐயத்துக்குரியதாம்.

சில மானமில்லாச் சோம்பேறிகள் “இது எம் தலை யெழுத்து” என்றும், “அன்றெழுதினவன் அழித்தெழுதான்” என்றும் சொல்லிக்கொண்டு திரிந்தனர். அச்சோம்பேறிகள் கூற்றை யொப்புக் கொள்வதுபோல், இறைவன்மேல் வைத்து வன்மையாகக் கண்டித்தார் எனத் தம் உரை விரிவில் குறிக்கிறார் பாவாணர்.

தாம் கண்டன, கருதுவன, உணர்ந்தன, ஒப்பாதன என்பவற்றை இனங் காட்டுமாறு பன்னூல் துணிவு (21), நூலோர் எண்ணிய (941), என்ப அறியார் (76), யாமறிவதில்லை (61), யாமெய்யாக் கண்டவற்றுள் (300) என்பன போன்ற முன்னொட்டுகளை வைத்துச் செலுத்தும் குறளின் மொழிநடையை நோக்கின் வள்ளுவர் எவர் கூற்றையும் ஒப்புக் கொள்வதுபோல் காட்டிக்கொண்டாரில்லை என்பது துணியலாம்.
 
வறுமையில் உழன்று யாசித்துத்தான் உயிர்வாழ வேண்டியிருப்பின் அவ்வாறு படைத்த இறைவனே கெடுதற்குரியவன் என்றது வள்ளுவர் இறைவன்பாற் கொண்ட அறச்சீற்றம் எனக் குறித்தாருமுளர்.

வள்ளுவர் இறை மறுப்பாளர் அல்லராயினும், ‘பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல் (505)’ என நாட்டியவர்.   மெய்வருத்த முயற்சி தன் கூலி(யைத்) தரும் (619) என உறுதி காட்டியவர்; ஒல்லானை ஒல்லாது ஒளி (870); அதனால் முயலுதலே வாழ்வில் தலையாயது (47) என்பதை  அறிவுறுத்தியவர்.

இக்குறளில், உலகியற்றியான் என்பதை ‘உலகைப் படைத்தவனாகிய’ இறைவன் எனக் கொண்டமைந்த உரைகளே பெரும்பான்மையின. சிலரதை ‘உலகியலை நடத்துபவனாகிய’ அரசன் எனக் காட்டியதும் உண்டு. அரசன் நடத்துவது ஆட்சியியலேயாகும். இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் (385) எனும் பொருளியல் (மட்டும்) அரசனுக்கு உரியதாம். உலகின் விரிவு கொண்டு கருதின் அஃதியற்றுதல் அரசனுக்கு எவ்வாற்றானும் ஏலுவதில்லை என்பதும் அது இறைவனைச் சுட்டுவதாகக் கொள்வதே இயல்பாம் என்பதும் பெறப்படும். ஆயினும் குறளின் கருத்து அதுவுமின்றாம். 

உலகியற்றியான் என்பது யாரைக் குறித்ததெனத் தெளியச் சுட்டாமலேயே, அதற்குக் காரணமாக இருந்தவன் எனப் பொதுப்பட அமைந்த உரைகளும் உள. அது யார் என்பது விளக்கக் கூடாததாயினும்  ‘கெடுக உலகியற்றியான்’ எனும் தொடர் அப்படி ஒருவன் இருப்பதை உறுதி காட்டுவதாகவே  உரைகள் அமைந்தன. அதனை, இவ்வுலகைப் ‘படைத்தவன் என ஒருவன் இருந்தால்’ என வேண்டாது நீட்டித்துத் தம் இறைமறுப்புச் சிந்தனையை வலிந்து திணித்துரை செய்தனர் நன்னன் போன்றோர்.

படைப்புகள் யாவும் இருமைத் திறத்தன; எந்த ஒன்றும் அதன் எதிரதா இல்லாதது இல்லை என்பதே இயற்பு. உலகத்தியற்கை இருவேறு (374) எனக் குறள் குறிப்பது காண்க. நிலையாமையைப் போல இருமைப்பண்பும் இயற்பின் பெருவன்மை யுடையதொன்றாகும். இரந்துயிர் வாழ்தற்கு இறைவனைப் பொறுப்பாக்கி உரைசெய்தா ரெல்லாம், கரவாது உவந்து ஈவாரைப் படைத்தவனும் அவனே என்பதை எண்ணாது போதல் என்? இருமை வகைதெரிந்து (23) நிற்பார் எவரும் ‘இறைவன்பால்’ அறச்சீற்றம் காட்டினார் வள்ளுவர் எனக் கருதுதற் கிடமில்லையாம்.

அடுபுற்கை தெள்நீர் ஆயினும் தாள்தந்தது உணலே இனிது (1065) என்றும் உலைவு இன்றித் தாழாது உஞற்றுபவர் ஊழையும் உப்பக்கம் காண்பர் (620) எனவும் தன்மான உணர்வையும் தன்முயற்சியின் வலிவையும் எடுத்துகாட்டிய குறளாசான், வறிய(வன்) நிலைக்கு இறைவனை வசைபாடுவார் என எண்ணுதற் கிடமில்லை என்க.

‘உலகியற்று பரந்தியான், இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், கெடுக’ எனும் வைப்பில் இக்குறட்பொருள் சிறந்து விளங்குதல் காண்க.

உலகம் பரந்துபட இயற்றப் பட்டிருத்தலான் இரந்து வாழ்வேம் என விரும்புபவன் ஒழியக்கடவன் என்பதே இதன் பொருளாம்.

‘இது, இரக்குமதனின் இறத்தல் அமையும் என்றது’ என இக்குறட்பாவின் கருதுகோளை மிகத் தெளிவாகக் குறித்துக் காட்டுகிறார் மணக்குடவர். ஆயினும், இதனை இரந்துண்டு வாழ்வானை நோக்கியது எனக் கொள்ளாமல், உலக நடையை இவ்வாறாகக் கற்பித்த முதல்வன் மிகக் கெடுவானாக என உரையில் பிறழ்வு காட்டியது குறளின் நுவல் நோக்கத்துக்கு மாறுபட்டது.

வேண்டுதலாய் இதில் குறிக்கப்பட்டது ‘இரந்தும் உயிர்வாழ்தலை’. வாழ்தல் வேண்டி இரத்தலை மேற்கொள்பவன் முயற்றுதல் அற்றவனேயாவான். ‘ஆள்வினையின்மையே’ (618) பழித்தற்குரிதாய்க் குறள் காட்டுகிறது. இன்மை யிடும்பை இரந்து தீர்வாம் எனும் வன்மையின் வன்பாட்டது என இரப்பானுக்கு (ஏற்கனவே) எடுத்துரைத்திருப்பதும்  எண்ணத் தக்கது.

காண்க: பின்குறிப்பு: இக்குறட்பாவில்,  பரந்துபட இயற்றப்பட்டுள்ளது இவ்வுலகம் என்பதைத் தெரியக் காட்டினார். அதில் பல்லாற்றான் வாய்ப்புகளும் பலப்பலவாதலைக் குறிப்பா லுணர்த்தினார். அவரவர் அறிவுக்கும் திறனுக்கும் தக்க வினைசெய்து பொருளீட்டவும் பொருந்தி வாழவும் வகையுண்டு என்பதை அருத்தாபத்தி யாக்கினார்.

உள்ள வெறுக்கையே ஒருவர்க்கு உரமாவது, அஃதின்றி இரந்துண்டு ஊனோம்புதலை ஒருவன் விரும்புவானாகில் அவன் இழிந்து கெடத்தக்கவன் எனக் காட்டுகிறார்.

‘ஒட்டார் பின் சென்று வாழ்தலின் அந்நிலையே ஒருவன் கெட்டான் எனப்படுதல் நன்று’ (967) என்னுமாப் போல இலம் என்று உளம்பொன்றி இரந்துயிர் வாழ்தலின் கெடுதல் நன்று என்றவாறு. வள்ளுவர் இக்குறளில், படைத்தவனையும் பழிக்கவில்லை; பாராள்பவனையும் இழித்தா ரில்லை; உழைத்துண்டு வாழப் பழகுமாறு உணர்த்தக் காட்டியதா மன்றி உலகைப் படைத்தவனைப் பழிக்குமாறான அறச்சீற்றமாகா.

பின்குறிப்பு: கட்டுரையில் குறிக்கப்பட்டுள்ள எண்கள் பரிமேலழகர் கொண்டு குறித்தபடியான குறள்வரிசை எண்கள்.  மணக்குடவர் காட்டியுள்ள குறள் வரிசையில் இவ்வதிகாரம் ‘இரப்பாரை யெல்லாம் இரவன்மின் என்று இரப்பன் (1) எனும் தோற்றுவாய் கொண்டும், எந்நிலையிலும் இரப்புக்கு இடந்தராமை சால்புடையது (10) எனும் ஈற்றினைக் கொண்டும் அமைந்துள்ளது. (தனக்காக என்றில்லாமல்) ஆவிற்கு நீரென் றிரப்பதும் இளித்தக்கது (2), இன்மையை இரந்து தீர்வாம் என்றெண்ணுவதே கொடிது (3), இரப்பு ஏமாப்பில்லது (4), உவந்தீவார் கண்ணும் இரவாமை நன்று (7) என்றெல்லாம் குறித்துக் காட்டிய பின்னரும் அவற்றை உள்வாங்காமலும் உற்று உணராமலும், இரந்தும் உயிர் வாழ்தலை ஒருவன் விரும்புவா னாயின் அவன் கெடுக (8) என்கிறார்.

இதனை, அழச்சொல்ல இடித்துரைக்கும் பெரியார் தம் பான்மையதாக் கொள்ளலாகும். இவ்வாறு கடிதோச்சிய வள்ளுவர் அடுத்த இருபாக்களில், தன்னுழைப்பால் பெற்ற உணவு எத்துணை எளியதாயினும் அதுவே இனிமையுடையது (9), எந்நிலையிலும் இரப்புக்கு இடந்தராமை சால்புடையது (10) எனச் சொல்லி மெல்ல எறிவதைக் காணலாம். 

இவற்றோடு, பிறர் நம் முன் நின்று இரக்கும்நிலை மனம் இளகத்தக்கது. (அந்நிலையில்) ஈயாது கரப்பார்க்கு இருப்பதும் கெடும் (5); அவ்வாறு கரப்பவர் கூற்றுவன் வரும்போது தம் உயிரை மறைத்தற்கேலுவதில்லை (6) என்று கரப்புடைய செல்வர்க்கு உரைக்கிறார். இவ்வதிகாரப் பாடல்கள் யாவும் இல்லென்றிரப்பாரையும் ஈயாத கரப்பாரையும் நோக்கியும் நோக்கி உரைக்கப் பட்டவையே.