அன்பானவர்களே வணக்கம்!
மரபு கவிதைகள், இலக்கண, இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள் எனப் பல பயனுள்ள தகவல்களைத் தாங்கிவரும் தமிழ்க்குதிரின் எட்டாம் மின்னிதழ் வழியாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பன்முகத் தன்மை கொண்டது நம் பாரத நாடு. அதன் ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு மொழி, பண்பாடு, கலையொழுக்கம் கொண்டது என்பது நாம் அறிந்ததே. ஆதலின், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நம் அரசியலமைப்புச் சட்டம் நமக்கு அறிவுறுத்தும் பாடம்.
எல்லாவற்றிலும் வேற்றுமை கொண்ட மக்களிடம் காணும் பல்வேறு முறைமைகளைக் கருத்தில் கொள்ளாமல் ஒற்றுமைப்படுத்துகிறேன் என்று கூறிக்கொண்டு பன்முகத் தன்மையை அழிக்கும் வழிகளை வகுப்பதும், ஒரு சார்புத் தன்மையோடு செயல்படுவதும் அரசனுக்கு அழகன்று. அது சரியான தீர்வாகாது. இது நாட்டில் குழப்பத்தையே ஏற்படுத்தும். குடிகளிடையே பகைமையுணர்வை விதைக்கும். அக்குடிகளையே அழிக்கும். குடிதழீஇக் கோலோச்சாது முறைகோடும் மன்னனால் தமக்குத் தாமே அழிவைத் தேடிக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவோம்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்
என்பது வள்ளுவம். நாம் என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவு நமக்கு வேண்டும். வாழ்க தமிழ். வாழ்க பாரதம்.
தமிழன்புடன்
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்
No comments:
Post a Comment