'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 15, 2019

நிலாப் பாட்டி


(ஒரு பக்கக் கதை)

 பைந்தமிழ்ப்பாமணி 
சரஸ்வதிராசேந்திரன்

கப்பல் கவிழ்ந்தது மாதிரி  கன்னத்தில் கைவத்து அமர்ந்திருந்தாள் நிலாப் பாட்டி. இதுவரை அவள் எதற்கும் கவலைப்பட்டதே இல்லை. கணவரை இழந்தபோதுகூட இது இயற்கை என மனசைத் தேற்றிக் கொண்டவள்; யார் தயவும் இல்லாமல் பூமியில் இருக்கப் பிடிக்காமல் நிலவுக்குப் போனவள்; தன்கையே தனக்கு உதவி எனத் தனக்குத் தெரிந்த கைத்தொழிலைச் செய்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தவளுக்கு வந்த சோதனையால் மனம் வெதும்பி அமர்ந்திருந்தாள்.

‘போன்’ போட்டு அவள் விசனத்தைக் கேட்டேன். “நிலாப் பாட்டியா இது? எதற்கும் அஞ்சாத சிங்கம் இன்று சிறுமுயல் போல் குறுகிக் கிடக்கிறது;  நம்ப முடிய வில்லை, என்ன ஆச்சு பாட்டி?”

“அதை ஏன் டா கேட்கிறே பேராண்டி! பூமியைக் கெடுத்தது போறாதென்று இங்கேயும் உங்க ஆளுங்க வந்துட்டாங்கப்பா. இராக்கெட்டை விட்டு  விட்டு மேகத்தைக் கலைத்தால் எப்படியப்பா மழை பெய்யும்? சொல்லு! அங்கே மண்ணை மலடாக்கி விட்டு, உழவைப் புதைச்சுட்டாங்க, எக்கேடோ கெட்டுப் போகட்டும்; இங்கேயும் வந்து, நிலவில உள்ள தண்ணியைக் களவாடப் பார்க்கிறாங்க. ஏன் டா இப்படி அக்கிரமத்துக்கு மேல அக்கிரமா செய்யிறாங்க”

“அதனால் உன் பிழைப்புக்கு என்ன சோதனை, பாட்டி?”

“என்னப்பா இப்படிக் கேட்டுட்டே? காலம் காலமா நான் சுட்டு வித்த வடையை அவன்கள் காணா அடிச்சிடுவாங்களோன்னு பயமா இருக்கு; இங்கே வந்து ‘பர்கர்’, ‘பிஸ்ஸா’ன்னு நுழைச்சு, அப்புறம் கொக்கோ-கோலா என்பான். அப்புறம் என் பிழைப்பு என்னாவது? என் பாட்டியின் கைப்பிடித்து என் அம்மா சமூகத்தைப் பார்த்தாள்; என் அம்மாவின் கைப்பிடித்து நான் சமூகத்தைப் பார்க்கிறேன் என்பதை மறப்பதுதான் இப்போது முற்போக்கு எனச் சொல்லப்படுகிறது. இனி, நான் வடைசுட்டு வியாபாரம் செய்யமுடியாதோன்னு கவலையா இருக்குடா பேராண்டி”, நீண்ட பெருமூச்சு விட்டவாறே சொன்னாள் பாட்டி.

பாட்டியின் கவலை எனக்கும் ஒட்டிக்கொண்டது. இருப்பினும் என்னால் என்ன செய்ய முடியும்? சத்தம் இன்றி மொபைலை ஆப் செய்தேன். கண்டது கனவாகவே இருக்கட்டும். பாவம் பாட்டி.

No comments:

Post a Comment