'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 15, 2019

புலம்பெயர் நாடும் வாழ்வும் - 4

பைந்தமிழ்ச் செம்மல் இணுவையூர் வ-க-பரமநாதன்

*டென்மார்க்கிலிருந்து...

இளைஞர்க்கான சட்டமும் பயன்பாட்டுப் புலமும்

இந்தச் சட்டத்தின் நோக்கம், சிறார்க் குற்றவியல் வாரியத்தால் சிறார்க்குற்றத்தைத் தடுப்பதாகும். இது 10 முதல் 17 அகவை வரையிலான குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கான தனிப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும், அவர்களுக்கு ஏற்படும் தலையீடுகளைச் செயல் படுத்துவதும் சிறார்க்குற்றமாகக் கருதப்படுகிறது.  குழந்தையின் அல்லது இளைஞரின் சிறந்த நலன்களுக்காக இந்த முயற்சிகள் தீர்மானிக்கப் பட்டுச் செயல்படுத்தப்பட வேண்டும், முழுமையானதாக இருக்க வேண்டும், குழந்தையின் அல்லது இளைஞரின் சொந்த வளங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் குழந்தை அல்லது இளைஞரின் மற்றும் குடும்பச் சூழ்நிலைகள் குறித்த உறுதியான மதிப்பீட்டின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். இது போன்ற சட்ட ஆக்கத்தின் மூலம் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.

ஒரு குழந்தையைப் பெற்றோர் துன்புறுத்துவதாக அறியப்பட்டால் அப்பிள்ளை பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்னுமோர் குடும்பத்தால் வளர்த்தெடுக்கப்படுவார். இந்நாட்டில் 12 அகவையில் அனேகமாக அனைத்துப் பிள்ளைகளுக்கும் பெற்றோர் தன்னிச்சையான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடலாம் என்பதற்கான அனுமதியை அளிக்கிறார்கள். இதைப் பறைசாற்றுவதாக நெருங்கிய உறவினர்களோடு சிறு கொண்டாட்டத் தினையும் ஏற்பாடு செய்வார்கள். எப்படி எங்கள் சமூகத்தில் பெண்பிள்ளைக்கு மஞ்சள் நீராட்டுச் செய்து இவள் பெரியவளாகிவிட்டாள் என்பது போல. இந்த விழாவின்போது பெற்றோர் உறவினர்கள் முன்னிலையில் அப்பிள்ளை மென்மதுபான (Beer) வகைகளை அருந்துவதற்கும் அனுமதிக்கப்படுவது வழமையாகும். 16 அகவை யிலிருந்து 17 அகவையுள்ளவர்கள் மென் மதுபானங்களை வியாபார நிலையங்களில் வாங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். 18 அகவைக்கு மேற்பட்டவர்களுக்கு இக்கட்டுப்பாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

17 அகவைக்கு உட்பட்ட பிள்ளைகள் ஆண் பெண் இருபாலாரும் நண்பர்களாகவோ காதலர்க ளாகவோ ஒருவரோடு இணைந்து வீட்டிற்கு வருவதற்கும் வெளியிடங்களுக்குச் செல்வதற்கும் பெற்றோர் தடைபோடுவதில்லை. பாடசாலையில் படிக்கும் போது பாதுகாப்பான வாழ்வுமுறை பற்றி விரிவாகப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கின்றார்கள். எனினும் 18 அகவைக்கு உட்பட்ட பிள்ளைகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் சிறுவர் நலச் சட்டத்தின் மூலம் நன்னடத்தைப் பாடசாலை அப்பொறுப்பை ஏற்றுப் பிள்ளைகளுக்கான அறிவுரைகளையும் நல்வழி யையும் காட்டிச் செயல்படுத்துகின்றது.

பெரியவளான ஒரு பெண்பிள்ளை காதலன் இல்லாது வாழ்வதைப் பெற்றோர் விரும்புவ தில்லை. வாழ்வு முழுக்க முதற் காதலனுடன் வாழ வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. இங்கு அனேகமானவார்கள் திருமணமின்றிச் சேர்ந்து வாழ்வதனையும் சுட்டிக் காட்டலாம். இவர்களுக் கிடையில் கருத்து வேறுபாடோ அல்லது வேறு பிரச்சனைகள் எழும்போதோ தாமாகவே பிரிவதும் வேறு காதலன் காதலியைத் தேர்ந்தெடுப்பதும் இங்குப் பெரும்பிரச்சனையாகக் கருதப்படுவ தில்லை. 18 அகவை வரை அனைத்துப் பிள்ளைகளும் பெற்றோரின் உதவியுடனேயே வாழ்கின்றார்கள். 18 அகவைக்குப்பின் 99 சதவீதம் பேர் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாகவோ அல்லது காதலன், காதலியுடனோ வாழ்கிறார்கள். இவர்களுக்கான கொடுப்பனவுகளும், தொடர் மாடிக் குடியிருப்புகளும் விரைவாகக் கிடைப்பதற்கான ஒழுங்குகளும் அரசால் மேற்கொள்ளப்படுகின்றது.

12 அகவைக்கு மேற்பட்ட சிறார்கள் தமக்கான செலவுகளை ஈடு செய்வதற்காகச் சிறு வேலைகளைச் செய்வதற்குச் சட்டம் அனுமதிக்கின்றது. பாடசாலை முடிந்தபின் பத்திரிகை, விளம்பரங்கள் போன்றவற்றை ஒவ்வோர் வீட்டிற்கும் சேர்ப்பது, வியாபார நிலையங்களில் சிறிய வேலைகலைச் செய்வது என்ற வகையில் பணத்தினை ஈட்டிக் கொள்கிறார்கள். இத்தொகைக்கு இவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை.

இத்தொகையினை வைத்தே நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறார்கள். இதனைப்பற்றி விரிவாக எழுதவே விரும்புகின்றேன். பெற்றோரின் அனுமதியுடன் தங்கள் வீட்டில் (வீட்டு அளவினைப் பொறுத்து) நண்பர்களுடன் மென் மதுபான விருந்துகளை நடாத்துகின்றார்கள். தேவையான உணவுகளைத் தாமே சமைத்தும் அல்லது உணவகங்கள் மூலமாகப் பெற்றும் தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள். (இதன் தொடர்ச்சி தொடரும்...)

No comments:

Post a Comment