கவிஞர் பொன் . இனியன்
நிலைமண்டில ஆசிரியப்பா
வானுயர் வாழ்க்கை வசப்பட வேண்டியும்
வள்ளுவர் காட்டிய வகையும் தொகையும்
தெள்ளு தமிழில் திரண்டது குறளாய் !
ஒத்தது பிறப்(பு)இவ் வுலகோர் யாவரும்
ஒக்கலால் உறவால் உரிமைகொள் வாழ்வால்
ஓர்நிறை யென்பதை உணர்த்திய முதல்நூல்!
ஏர்முனை யின்றேல் எவர்க்கும் முனைப்பிலை
உண்டி கொடுக்கும் உழவனை முதல்வனாய்க்
கண்டநூல் இதுவே கோணல் மனத்திற் 10
குறைவற மாசினை அறுத்துக் கொள்வதே
அறமென் றாக்கி அழுத்திச் சொன்னநூல்!
தன்னுயிர்ப் பொறையொடு பிறிதுயிர் போற்றலே
தவமெனக் குறித்த தனித்துவ மறைநூல்!
அறிவுந் திறமும் அனைவரும் பெறவே
கல்வியைக் கண்ணெனக் கொள்ளுமின்; யாவரும்
கடமை யுணர்வொடு கருதுக பிறர்நலம்;
உடைமை யென்ப(து) ஊக்கமே யென்றுநீ
உணர்ந்து முன்னேறு; உழைத்தபின் உண்ணு;
இனத்தோ(டு) இணங்கு; இயல்பை யுணர்ந்தே 20
ஈட்டுக பொருளை; இயன்றதைப் பிறர்க்கும்
ஊட்டுவ(து) உன்கடன்; உலகொ(டு) ஒத்துவாழ்;
வழுக்கினில் நாளை வைக்காது பயன்கொள்;
வாழ்வைப் போற்று; வாழ்ந்து காட்டு;
ஊழ்வினை இறைமை உண்டா மெனினும்
உன்னை உயர்வுசெய் உழைத்து முன்னேறு;
எண்ணம் செயல்சொல் எதனிலும் அறமே
இழையும் படிசெய்; எதனையும் ஆய்க;
அறிவைக் கூர்மைசெய்; அஞ்சுவ தஞ்சு;
வரம்பு மீறாதே; வாழ்ந்து பயன்படு; 30
என்றிவை போல எவர்க்கும் பொருந்த
நன்றாம் நெறிகள் நயமுறக் காட்டும்!
மாந்தர்க்கு வேண்டும் விழுமிய மாண்பெலாம்
ஏந்திய பெருநூல் ஈரடிக் கொருநூல்!
வள்ளுவன் குறளே வாழ்க்கை நெறியாய்
உள்ளுக வையம் உயர்வினை எய்தவே!
No comments:
Post a Comment