பைந்தமிழரசு பாவலர்
மா. வரதராசனார்
கம்பன் கவிநயம்
நண்பர்களே!
எண்ணியெண்ணி வியக்கும் வண்ணம் எழுதியோச்சிய கம்பரின் கவியாளுமையைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அவ்வகையில் "பாலகாண்டத்திலிருந்து இரண்டு பாடல்களை இப்போது பார்க்கலாம்.
இவ்விரண்டு பாடல்களில் மட்டுமன்றித் தொடர்ந்து வரும் பாடல்களிலும் கம்பர் அயோத்தியின் சிறப்பைக் காட்டுகிறார். (அதன்வழியே தான் கற்பனையில் கண்ட ஒருங்கிணைந்த தமிழ்நாட்டின் சிறப்பையும். ..)
அயோத்தியில் மக்களின் வாழ்வியலாகத் தயிர் கடைதலும் ஒன்றென அறிகிறோம். மகளிர் தயிர்கடையும்போது உண்டாகக் கூடிய காட்சிகளைக் கம்பர்,
தோயும் வெண்டயிர் மத்தொலி துள்ளவும்.
ஆய வெள்வளை வாய்விட் டரற்றவும்.
தேயும் நுண்ணிடை சென்று வணங்கவும்.
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார்.
(கம்ப. பால.நாட்டு.59)
எனச் சிறப்பாகக் கூறுகிறார்.
கம்பரின் பாடல்களை ஆழப் படித்துப் பொருள் கொள்ள வேண்டும். மேலோட்டமாகப் பார்க்காமல் அதன் பின்புலம், பாடுபொருள், உள்ளீடு ஆகிய வற்றையும் நுட்பமாகப் பார்த்தல் வேண்டும்.
மேற்கண்ட பாடலில் நேரடியான பொருளும் அடைப்புக்குள் உள்ளீடான பொருளும் வருமாறு...
தேயும் நுண்ணிடை - சிறிய இடையைக் குறித்தது.
அயோத்தியில்,
• தயிர்கடையும் மத்தின் ஒலி இருந்தது (மக்கள் துன்பக்குரல் இல்லை.)
• வளையல்களின் மோதலால் உண்டான அரற்றல் இருந்தது (மக்கள் அழுது அரற்றுதல் இல்லை)
• நுண்ணிய இடை வளைந்து நெளிந்து கிடந்தது. (மக்கள் யாருக்கும் வணங்கி வாழ்தலில்லை)
• தயிர்கடைதலால் உள்ளங்கை வருந்தும் (மக்கள் வறுமையால் வருந்தலில்லை)
என்பது முதற்பாடலின் பொருள்.
இதேபோல் மற்ற பாடல்களிலும் பெரும்பாலும் உள்ளீடாகவே பொருள்தருமாறு அமைத்திருப்பது கம்பரின் கவியாளுமைக்குச் சான்றாம்.
***
தினைச்சி லம்புவ. தீஞ்சொல் இளங்கிளி;
நனைச்சி லம்புவ. நாகிள வண்டு; பூம்
புனல்சி லம்புவ. புள்ளினம்; வள்ளியோர்
மனைச்சி லம்புவ. மங்கல வள்ளையே.
(கம்ப. பால.நாட்டு...60)
எனவரும் இரண்டாம் பாடலில்,
மனைச்சிலம்புதல் - மனையில் கேட்கும் தயிர்கடையும் ஒலி. "சிலம்புதல் என்பது தயிர்கடைதலைக் குறித்து நின்றது.
கிளி சிலம்பியது - தினையை அசைத்ததைக் குறித்தது.
வண்டு சிலம்பியது மலரை.
பறவை சிலம்பியது நீரில் அலகை நுழைத்துக் குளித்ததை.
இவ்வாறு ஒரே சொல் பலபொருளைத் தருமாறு அமைப்பது கம்பரின் கவியாளுமையே.
மற்றுமொரு பாடல்...
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்...
(கம்ப.பால.அகலிகை.24)
என்ற பாடலில் "வண்ணம்" என்ற சொல் பலபொருள் தருவதாய் அமைத்திருப்பார்.
இப்பாடலில் மிக முக்கியமாக நாம் பார்க்க வேண்டிய உள்ளீடு "மங்கலவள்ளை" என்பதாகும்.
மங்கலவள்ளை :
**************
கோதிலாக் கற்பிற் குலமகளை - நீதிசேர்
மங்கல வள்ளை வகுப்பொடு வெண்பாவால்
இங்காமொன் பானென் றிசை
(வச்சணந்தி மாலை : 55)
என வச்சணந்தி மாலை "மங்கல வள்ளைக்கு" விளக்கம் தருகிறது.
"மங்கல வள்ளை" என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. ஒரு வண்ணப்பாடல், (சந்தப்பாடல்) ஒரு வெண்பா எனப் பதினெட்டுப் பாடல்களால், கற்பில் சிறந்த மகளிரின் சிறப்பை எடுத்து மொழிவதாம்.
கற்பிற் சிறந்த பெண்ணுக்குப் பாட வேண்டிய பாடலை இங்குப் பாடியதேன்? என்றால், இதன் பின்புலமாக அமைவது "சீதையை" உள்ளீடாகக் காட்டவே யென்றறிக.
மகளிர் தயிர் கடையும்போது தங்கள் வலியும், சோர்வும் தெரியாதிருக்கப் பாட்டுப் பாடுவது வழக்கமாம். அவ்விதம் பாடும் பாடலில்கூடக் கம்பர் தன் காப்பியத்தின் தலைவியை உள்ளீடாகக் காட்டும் உத்தியை நினைந்து வியக்கிறோம். வள்ளியோர் - என்றது குறமகளிரை. முன்பாடலில் ஆயரைக் குறித்தவர் இப்பாடலில் குறத்தியைக் குறித்தது திணைவழுவாகுமோ எனின் ஆகாதாம். அஃது "திணைமயக்கம்" என்ப. அயோத்தியில் நானில மக்களும் மகிழ்வுடன் வாழ்ந்தனர் என்பது இதன் பொருள்.
பாலையை விடுத்து நானிலம் என்றது ஏனோவெனின், அயோத்தியில் கள்வர்கள் இல்லையாதலால் அங்குப் பாலைத் திணை யில்லை யென்க... எப்படியெனில்…
தெள்வார் மழையும் திரையாழியும் உட்க நாளும்
வள்வார் முரசம் அதிர்மாநகர் வாழும் மக்கள்
கள்வார் இலாமைப் பொருள்காவலும் இல்லா யாதும்
கொள்வா ரிலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ.
(கம்ப. பால.நகரப். . .73)
எனக் கம்பரே வியந்து கூறும் அயோத்தியில் கள்வரேயில்லையாம். எனவே நானில மக்களும் மகிழ்ந்து வாழ்ந்த செழிப்பான நகராக அயோத்தி விளங்கிற்று. (கம்பர் தான் காண விரும்பிய தமிழகத்தின் செழுமைகளை, வளமைகளை இவ்வாறெலாம் சொற்பந்தலாக்கி அதில் நம்மை இளைப்பாற்றித் தமிழ்ச்சுவையில் மயக்குகிறார். என்னே அவரின் கவிநயம்...!
கம்பனைப்போல் வள்ளுவன்போல் இளங்கோ வைப்போல்... (பாரதி)
No comments:
Post a Comment